"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 26, 2019

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3)

 அனைவருக்கும் வணக்கம்.

வள்ளிமலை அற்புதங்கள் என்ற தொடர்பதிவில் இன்று மூன்றாம் பதிவை தொடர நமக்கு குருவருள் கூட்டியுள்ளது. சென்ற இரண்டாம் பதிவில் நாம் வள்ளிமலை கிரிவலம் சென்றோம். கிரிவல பாதையில் வள்ளியம்மை தவப்பீடம் கண்டோம். இனி தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் பெற உள்ளோம்.




அறுபடைவீட்டு முருகப்பெருமானையும் தவக்கோலத்தில் அமர்ந்துள்ள வள்ளி நாயகியையும் வழிபட்டோம். இந்த தவ பீடம் வாரியார் ஸ்வாமிகள் கட்டியது. வள்ளி அமர்ந்து தவம் புரிந்த இடம் இது. அந்த தவ பீடத்தில் ஆறுபடை முருகன் சன்னதி ஒன்றும் உள்ளது.

சுப்ரமணிய சுவாமி வள்ளியை மணமுடித்து அழைத்து ஸ்கந்தகிரி அழைத்துச் சென்றபோது தெய்வானை எதிர்கொண்டு வரவேற்றாள். வள்ளியை நோக்கி, “நீ எனக்கு நல்ல துணையாக வந்தாய்” என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டாள்.

தனது சிம்மாசனத்தில் இருவருடனும் அமர்ந்தார் சுப்ரமணிய சுவாமி. அப்போது தெய்வானை, “சுவாமி… வள்ளியின் சரிதத்தை எனக்கு கூறியருளவேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொண்டாள்.

முருகப் பெருமான் திருவாய் மலர்ந்து, “தேவி, நீங்கள் இருவரும் முன்ஜென்மத்தில் மகாவிஷ்ணுவின் புதல்விகளாக அவரது கண்களில் இருந்து தோன்றினீர்கள். என்னை மணந்து கொள்ள விரும்பி இருவும் தவமியிற்றினீர்கள். நான் சூரசம்ஹாரம் முடித்தபிறகு இருவரையும் மணம் புரிந்துகொள்வதாக வரமளித்தேன். அதன்படி வள்ளியை பூவுலகிலும், உன்னை இந்திரனிடத்திலும் பிறக்கும்படி செய்தேன்.

நீங்கள் அவ்வாறே பிறந்து வளர்ந்தீர்கள். இந்திரனின் மகளான உன்னை முதலில் மணம்செய்துகொண்டேன். ஆனால், வள்ளியோ தன் தேகத்தை அக்னியில் அற்பணித்துவிட்டு சூட்சும சரீரம் பெற்று காஞ்சியை ஒட்டியுள்ள ‘லவலீ’ என்னும் அழகான மலையில் அமர்ந்து என்னை நோக்கி தவம் செய்துகொண்டிருந்தாள். (புராண காலத்து லவலீ மலை தான் இன்றைய வள்ளிமலை!)



அப்போது மகாவிஷ்ணு, கன்வ மகரிஷியின் சாபத்தினால் சிவமுனி என்னும் முனிவராக மாறி, அங்கு வனத்தில் கடும் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அப்போது லக்ஷ்மி தேவியானவள், ஒரு மான் போல வடிவம் கொண்டு அவர் எதிரே துள்ளித் திரிந்தாள். மானின் அழகில் வசப்பட்ட சிவமுனி அதை பார்க்க, அந்த பார்வையின் தீட்சன்யத்தினால் அந்த அழகிய பெண் மான் கருத்தரித்தது. அங்கு லவலீ என்று அழைக்கப்படும் வள்ளி கொடியின் புதரில் ஒரு அழகிய குழந்தையை ஈன்றது. அக்குழந்தை தான் இந்த வள்ளி.

புத்திரப் பேறில்லாத அந்த பகுதியின் வேடுவர்குலத் தலைவன், அக்குழந்தையின் அழுகுரலை கேட்டு அதை கண்டு எடுத்து வாஞ்சையுடன் வளர்த்து வரலானான். இவளை சாஸ்திர முறைப்படி மணந்து, திருத்தணிகை சென்று சில காலம் இருந்துவிட்டு இங்கு அழைத்து வந்திருக்கிறேன்!” என்று கூறி முடித்தார்.

அதைக் கேட்டு பேரானந்தம் அடைந்த தெய்வானை, “வெவ்வேறு இடத்தில் பிறந்த எங்களை ஒன்று சேர்த்துவிட்டீர்கள் சுவாமி” என்று கூறி நெகிழ்ச்சியடைந்தாள்.

வள்ளியும் தெய்வானையை நோக்கி, “அக்கா.. இன்று முதல் நீங்கள் என்னை ஆதரித்து வரவேண்டும்” என்று கூறி வணங்கினாள். தெய்வானையும் தனது சகோதரியை கட்டியணைத்துக்கொண்டு தனது ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினாள்.

வள்ளியின் பிறப்பு வளர்ப்பு தெரிந்துவிட்டது. அடுத்து தெய்வானை?

முருகப் பெருமான் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும் சுந்தரவல்லியும் தங்களுக்கு பார்வதி மைந்தனுடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணப் பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அவர்கள் முன் தோன்றி அமுதவல்லியிடம் ”நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்” என்றார்.

அமுதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த தேவேந்திரனிடம் சென்று “நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன்” என்றாள். மாலவன் மகளை வளர்க்கும் பொறுப்பு என்றால் சும்மாவா? மிகவும் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் தேவருலகத்தின் பட்டத்து யானை ஐராவதத்தை அழைத்து “இந்த குழந்தையை வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது” என்று கூறினான். ஐராவதமும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தது. இவ்வாறு யானையினால் வளர்க்கப்பட்ட பெண் என்பதால் அவளுக்கு ‘தெய்வயானை’ (தெய்வானை) என்ற பெயர் ஏற்பட்டது. அவளுக்கு திருமண வயது வந்தபோது, அசுரர்களை அழித்து தேவர்களை காப்பற்றியதன் நன்றிக்கடனாக சுப்ரமணியருக்கு தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து வைத்தான் இந்திரன்.

சுப்ரமணிய சுவாமியின் தோற்றம் ஒரு மாபெரும் சூட்சுமம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகிய மூன்று சக்திகளின் சங்கமே வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி ஆகும்!

வள்ளியின் திவ்ய சரிதத்தை அறிந்து கொண்டோம். இனி தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் பெற இருக்கின்றோம்.



















முதலில் விநாயகர் தரிசனம் பெற்றோம்.




ஏற்கனவே சொல்லியபடி இங்கு அறுபடை வீட்டு முருகபபெருமான் தரிசனம் இங்கே பெறலாம்.ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் தரிசனம். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..என்று பாடி பரவசப்பட்டோம்.





அடுத்து திங்கட்கிழமை தரிசனமாக திருச்செந்தூர் முருகப் பெருமான் தரிசனம். திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம். இங்கு மட்டுமா? உலகு முழுதும் அவனுக்கே சொந்தம் அன்றோ?





செவாய்க்கிழமை பழநி முருகன் தரிசனம்.

பழம் நீ அப்பா... ஞானப் பழம் நீ அப்பா...
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ! என்று மனதில் பாடினோம்.





புதன் கிழமை சுவாமிமலை அப்பன் தரிசனம்.

 நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை

ஆம். எத்துணையோ மலைகளுக்கு சென்றாலும் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா இருக்கும் மலை சுவாமி மலை.

அடுத்து வியாழக் கிழமை  குன்றுதோறாடல்  தரிசனம்.




திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்


காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ என்று பாடினோம். 

இந்தப்பாடல் இன்னும் நம்மை முருகனருள் பெற முன்னிற்க செய்கின்றது.




பழமுதிர்ச்சோலை தரிசனம் வெள்ளிக்கிழமை பெறலாம்.
அடுத்து சனிக்கிழமை தரிசனம். யாராவது கண்டுபிடித்து விட்டீர்களா? இந்த தவப்பீடம் வாரியார் ஸ்வாமிகள் கட்டியது. அவருக்கும் இனி வர இருக்கும் சனிக்கிழமை தலத்திற்கும் சம்பந்தம் உண்டு. ஆம். வயலூர் தான் அது.



தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் எப்படி உள்ளது? மெய் மறக்க செய்கின்றது. உணர்ச்சி நிலையிலிருந்து நம்மை உணர்வு நிலை நோக்கி நகர்த்துகிறது.

2019 ஆம் ஆண்டை நாம் இங்கே தான் வள்ளிமலை கிரிவலத்தோடு ஆரம்பித்துள்ளோம். முதல் தீபமும் இங்கே தான் ஏற்றினோம். அனைத்தும் குகன் அருளால் தான். இனி நம் தல அன்பர்களுக்கு குறையில்லை. குறை இருந்தாலும் அதனை நிறையாக மாற்றித்தரும் படி இங்கே அன்னையிடம் வேண்டினோம்.







தரிசனம் . முடித்து மீண்டும் கிரிவலம் ஆரம்பித்தோம்.




இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் என்று நமக்கு தெரியவில்லை. காலைக் கதிரவன் கண் சிமிட்ட ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் வேகமாக நடந்தோம்.






இன்னும் கொஞ்ச நேரத்தில் வள்ளிமலை அடிவாரம் அடைந்து விடலாம் என்று மனதுள் தோன்றியது.







அருள்மிகு இடும்பன் ஆலயம் கண்டோம். அடுத்த முறை உள்ளே சென்று வழிபட மனதுள் சங்கல்பம் செய்தோம்.இதோ. கிரிவலம் முழுமை பெற உள்ளது.





மீண்டும் மூத்தோனை கண்டு வழிபட்டு நன்றி கூறினோம். முதல் முதலாக வள்ளிமலை கிரிவலம் முத்தாய்ப்பாக அமைந்தது.





மீண்டும் நம் குழுவோடு ஒரு முறை வள்ளிமலை கிரிவலம் செல்ல வேண்டினோம். வேண்டுதல் வேண்டாமை இலாதவனிடம் இது போன்ற சில விஷயங்களை வேண்டித்தான் பெற வேண்டும்.



 - வள்ளிமலை அற்புதங்கள் தொடரும்.

No comments:

Post a Comment