"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 12, 2019

வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (2) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

மாதத்தின் பாதி  நாட்களை கடந்து விட்டோம். வாழ்வாங்கு வாழ தொடர் பதிவு இன்றி நாம் கடக்க இயலாது. வாழ்வாங்கு வாழ என்ற தொடர்பதிவு இன்று இரண்டாம்  பதிவை தருகின்றோம். இந்த தொடர்பதிவை தொடர்ந்து வாசித்து அதனை கருத்தில் கொள்பவர்கள் கண்டிப்பாக ஆன்மிகத்தில் புதிய நிலை தொடுவார்கள் என்பது உறுதி. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் புது நிலை அடைவார்கள். நாமும் இங்கேதான் உளியால் செதுக்கப்பட்டு வருகின்றோம். இன்றைய பதிவில் நாம் வேதாத்திரியம் சார்ந்த கேள்விகளை பார்ப்போம். 



கேள்வி- வேதாத்திரியத்தில் தியானத்திற்குத் தரப்படும் முக்கியத்துவம் பிரத்தியாகாரம், தாரணை போன்ற பயிற்சிகளுக்குத் தரவில்லையே ஏன் ? பிரத்தியாகாரத்திற்கும் தாரணைக்கும் என்ன வித்தியாசம் ?

இராம் மனோகர் - அகத்தாய்வு பயிற்சியில் புலனடக்கம், தாரணை எல்லாம் உள்ளடங்கியுள்ளது. எண்ணங்களை ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல் போன்ற பயிற்சிகளெல்லாம் புலனடக்கத்திற்காகவே. ஆரம்ப நிலை தியானப் பயிற்சிகள்தான் தாரணையாக அமைகிறது. உதாரணமாக மகரிஷியின் ஒலிப்பதிவுகளையோ அல்லது பேராசியர்கள், அருள்நிதிகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டோ நாம் தியானம் செய்யக் கற்றுக் கொள்வதுதான் தாரணை முயற்சி. அவர்கள் சொல்வதை மட்டும் கவனத்தில் கொண்டு, வேறு எந்த எண்ணமுமில்லாமல் தியானம் செய்ய முயற்சிப்பதுதான் தாரணை. மனதை ஒரே புள்ளியில் குவித்துப் பழகுவது.
மனதை புலன்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போக விடாமல் கட்டுப்படுத்தும் முயற்சி அல்லது பயிற்சி பிரத்தியாகாரம். மனதளவில் அந்த பயிற்சியில் ஒருவர் மேம்படும் பொழுதுதான் புலன்கள் கட்டுக்குள் வரும். அப்படி புலன் வழியே செல்லாமல் தன் கட்டுக்குள் புலன்களை இயங்கச் செய்யும் வல்லமை பெற்ற மனதை ஒரு நிலையில், ஒரே புள்ளியில் நிலை நிறுத்தும் முயற்சி தாரணை. கடுகு டப்பா கவிழ்ந்து விட்டால் எல்லா திசைகளிலும் சிதறி ஓடும் கடுகுகளைப் போல, நம் மனதை நாம் புலன் வழியே போக விட்டால் அது பலப்பல எண்ணங்களாகச் சிதறி ஓடும். இந்தக் கவனச் சிதறலை தடுத்தால்தான் மனமானது ஒருமுகப்படும்.

ஆமையானது தனக்கு துன்பம் வருவது போலத் தோன்றினால் எப்படித் தன்னை ஓட்டுக்குள் ஓடுக்கிக் கொள்கிறதோ, அது போல ஐம்பொறிகளும் நம்மை தளைப்படுத்தித் துன்பங்களில் தள்ளுவதற்கு முன்பே அவற்றை அடக்கிக் கொள்வது பிரத்தியாகாரம். மனதை வலிமைப்படுத்தி, அதைப் புலன் வழிப் போகாமல் செய்வது பிரத்தியாகாரம். சரி புலன்களை அடக்கியாயிற்று, மனதை வலிமைப்படுத்தியாயிற்று. அப்படியே வாழ்ந்து விட்டுப் போய் விடலாம்தானே ? அது அவ்வாறு அல்ல. வாழ்க்கை என்பது கடந்து போவது. ஒவ்வொன்றாகக் கடந்து உயர் நிலைக்குப் போவது. அதுதான் வாழ்க்கை. அதுதான் பிறவின் பயன்.

எனவே வலிமை பெற்ற மனதை அப்படியே விட்டு விட்டால், அது மீண்டும் சிதறி ஓடி விடக் கூடும். அதை ஒரு நிலையில், ஒரே எண்ணத்தில் நிலை நிறுத்திப் பழக வேண்டும். அப்பொழுதுதான் மன வலிமை நிலைத்து நிற்கும். அதற்கு நாம் நம் மனதை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தில், புள்ளியில் குவித்துப் பழக வேண்டும். இதுதான் தாரணை. தாரணை வலுத்தால் அது தியானம். தியானம் என்பது ஏகாக்ரதை. எனவே தியானத்தை அடைவதற்கான முயற்சிகளில் இவையிரண்டும் முக்கியமான படித்தரங்களாக அமைகின்றன. மனதில் ஒருமுனைப் பாங்கு அமைந்து விட்டால், எடுத்த காரியங்கள் யாவும் செம்மையாக நடைபெறும். இது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, லௌகீக வாழ்க்கையிலும் அவசியமான ஒன்றுதான்.

பல திசைகளில் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தோடும் நீரை ஒருமுகப்படுத்தி, ஒரே இடத்தை நோக்கிச் செலுத்தும் பொழுது அந்த நீரின் வேகமும், திறனும் அதிகரிக்கிறதல்லவா ? அதுதான் இந்த இரண்டு பயிற்சிகளிலும் நடக்கிறது. ஐம்புலன்கள் வழியாக வெளியேறும் மனதை ஒருமுகப்படுத்தி, மற்ற புலன்களின் வழியே செல்ல விடாமல் ஏதேனும் ஒரு புலன் வழியாக செலுத்தும் பொழுது மனதின் சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. இதை எப்படி நம்புவது ? சொல்கிறேன் கேளுங்கள். மனதை கண் மீது மட்டும் செலுத்தி ஒரு பொருளை நாம் உற்றுப் பார்க்கும் பொழுது அந்தப் பொருளைப் பற்றி பல விஷயங்கள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகின்றன. மனதின் இந்த செயலைத்தான் நாம் உற்றுப் பார் அல்லது உற்று கவனித்தல் என்று சொல்கிறோம்.

அது போலவே காது. கூர்ந்து கவனி அல்லது கேள் என்று சொன்னால், அது மனதை செவியில் மட்டும் செலுத்துவதாகும். அப்பொழுது என்ன நடக்கிறது ? சாதாரண நிலையில் கேட்காத மெல்லிய ஓசைகள் கூடத் துள்ளியமாகக் கேட்கிறது. கண் பார்க்கிறது, காது கேட்கிறது, மூக்கு நுகர்கிறது இவ்வாறாக புலன்களின் செயல்கள் அனைத்தையும் செய்வது அந்தப் புலன்களல்ல, மனம்தான். மனம் வேறு எங்கோ அலைந்து கொண்டிருக்கும் பொழுது நாம் ஏதோ ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அது நம் பிரக்ஞைக்குள் வருவதில்லை. காரணம் மனம் அதை உணரவில்லை. ஆக மனம்தான் அனைத்திற்கும் அடிப்படை.

எனவே அந்த மனதை கண்டபடி புலன்கள் வழியே வெளியே அலைய விடாமல் செய்து, ஒரே ஒரு புலனில் மட்டும் செலுத்திப் பழகி அதை வலிமைப்படுத்துவது பிரத்தியாகாரத்தின் வேளை. இப்படி புலன்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற மனதை ஒரே எண்ணத்தில் நிலை நிறுத்தப் பயிற்சி செய்வது தாரணை. புலனடக்கம் இல்லாதவர்களால் மனதை ஒருமுகப்படுத்துவது இயலாத காரியம். அதனால்தான் வரிசைக்கிரமமாக தீயன உணர்ந்து அவற்றை விலக்குதல், நல்லனவற்றைக் கடைபிடித்தல், உடலை ஓரிடத்தில் சற்று நேரம் அமரும் அளவிற்காவது வலிமைப்படுத்துதல், பிராண சக்தியை மேம்படுத்துதல், பிறகு புலன்களை வசப்படுத்துதல், அதன் மூலம் மனதை ஒரு புள்ளில் குவித்துப் பழகுதல், அதே முனைப்போடு மனதை ஒரே எண்ணத்தில் நிலை நிறுத்துதல் இறுதியாக எண்ணமற்ற நிலையை அடைதல் என்று வரிசைப்படுத்தி வைத்துள்ளார்கள்.



இவையனைத்துமே மனவளக் கலையில் அமைந்துள்ளன. எதையுமே ஒரு மனதோடு, முனைப்புடன், உணர்ந்து செய்யும் பொழுதுதான் அதிலுள்ள நுட்பங்கள் விளங்க வரும். அவர்கள் சொன்னார்கள், நான் செய்கிறேன் என்று செய்தால் கால விரையமும், ஐயப்பாடுகளும் தடைகளாகி நிற்கும்.

வினா: சித்தர் பாடல்களுக்கு தெளிவான, எளிமையான விளக்கம் எழுத வேண்டுகிறேன்.

வேதாத்திரி மகரிஷி: யான் பேசி வரும், கற்பிக்கும், எழுதும் தத்துவங்கள், விளக்கங்கள் அனைத்துமே சித்தர் பாடல்களுக்கு விளக்கம்தான். சித்தர்களது பாடல் புரியாத புதிர் போன்ற வார்த்தைகளால் இருப்பதால் அதன் பொருளை அறிய ஆவல் கொள்கிறீர்கள். நான் வெட்ட வெளிச்சமாக, தெளிவாக அதே உண்மையை விளக்கி எழுதுவதால் இவ்வளவுதானே என்று நினைக்க தோன்றுகிறது. வாழ்க வளமுடன்!

 கேள்வி: சுவாமிஜி! சித்தர்கள் துறவிகளா அல்லது இல்லறவாசிகளா?

பதில்: இல்லற, துறவறம் என்பதன் பொருள் பற்றி முதலில் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் இல்லறம் கொண்டு பொருளீட்டி, காத்து, தானும் துய்த்து, பிறருக்கும் கொடுப்பது இல்லறம். இல்லறம் என்றால் பொருளை அடிப்படையாகக் கொண்டது.
பொருளீட்டிக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு இடம் வேண்டும். “திருமணம் செய்து கொண்டு இருவரும் வாழ்ந்தால்தான் இல்லறம்” என்பார்கள். அது தவறான கருத்து. பொருளீட்டிக் காத்து அளவுமுறையோடு துய்த்து, அறம் செய்தல் இல்லறமாகும்.
பொருளீட்டும் தொழிலை விட்டு அகத்தவத்தின் சாதனையால் பிரபஞ்ச ரகசியம் அறிந்து, உடல், உயிர், மனம், அறிவு, சீவகாந்தம் உணர்ந்து, அறநிலை தெளிந்து, அறிவுத்துறையில் முழுமை பெற்று, நேர்மை தவறாது ஒழுக்கவழி வாழும் அறிவை மக்களுக்குப் புகட்டி, அதன்மூலமாகத் தொண்டு செய்து வாழக்கூடியவர்கள் “துறவறம்” என்ற நிலையை உடையவர்கள்.
துறவறத்தான் என்றால் பொருளீட்டிக் காப்பது தவிர்த்து, அறிவுத்துறையிலுயர்ந்து தொண்டாற்றிக் கொண்டு இருப்பவன்.
ஆனால் சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டிலுமே இருந்தார்கள். தங்களுக்கு வேண்டிய பொருட்களை அவர்களே ஈட்டி, பிறருக்கும் உதவினார்கள். அதே போன்று அறிவுத்துறையிலும் மேன்மையடைந்து எல்லோருக்கும் அறிவுத்தொண்டாற்றினார்கள்.
அன்றும், இன்றும், என்றும் அவர்கள் தொண்டு எங்கும் ஏற்புடையதாயிருக்கின்றது. எனவே சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டுமிணைந்த நல்லற ஞானிகள் ஆவர்.

வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி



தோழி - பெண்கள் சந்தியா வந்தனம், ஹோமம், சிரார்த்தமெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்களே ஏன் ?

இராம் மனோகர் - எனக்குத் தெரிந்து பெண்கள் சந்தியாவந்தனம் செய்யக் கூடாது என்று சொல்வது மிகப் பெரிய பாவம் என்றே நான் சொல்லுவேன். பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் ஆண்களையும், பெண்களையும் சமமாகவே கருதினார்கள். தராசின் ஒரு பக்கம் தாழ்ந்து, ஒரு பக்கம் உயர்ந்து இருந்தால் அது எப்படிச் சமநிலையாகும். அது போல வாழ்வில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்றிருந்தால் வாழ்க்கை எப்படி அமைதியாக, நேர்மையாக நடக்கும் ? நான்கு ஆச்ரம தர்மங்களும் பெண்களுக்கும் உண்டு. பெண்கள் ஏழு வயதில் குரு குல வாசம் செய்து, பூணூல் அணிந்து, பிரம்மச்சரிய விரதம் பூண்டு மேன்மையாக வாழ்ந்தார்கள். இதில் சிலர் கிரஹஸ்த தர்மத்தில் நுழையாமலேயே நேரடியாக வானப் பிரஸ்தம், சந்நியாசம் புகுந்து தவ சீலர்களாக, ஜீவன் முக்தர்களாக, நீதி, வேதாந்த வித்தகர்களாக வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கு புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல அத்தாட்சிகள் உள்ளன.
ஆனால், பண்டைய சந்தியா வந்தனம், பிரம்மச்சரியம் இவற்றை தற்காலத்தில் முழுவதுமாக பெண்கள் விஷயத்தில் செய்விப்பது சற்று கடினம். எனவே பெண்கள் பத்து வயது முதல் ஆரம்பித்து இந்த சரீரம் விழும் வரை பிராணாயாமம் செய்யலாம். மாதாந்திர விலக்கு காலங்களில் பிராணாயாம சாதனையை நிறுத்தி விட வேண்டும். கர்ப்ப காலத்தில் மூன்று மாதத்திற்கு மேல் கும்பகம் செய்யக் கூடாது. ரேசகம், பூரகம் பிரசவம் ஆகும் வரை செய்யலாம். பிரசவமாகி ஒரு மாதம் ஆன பிறகு கும்பகத்தைத் தொடரலாம். முடிந்த வரை தினமும் காலந் தவறாமல் பிராணாயமத்தைச் செய்ய வேண்டும். ஒன்றிரண்டு நாட்கள் விடுவதில் தோசமொன்றுமில்லை, மீண்டும் தொடரலாம். பல நாட்கள் விட்டு விட்டால் மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதாவது கும்பகக் காலத்தைக் குறைத்து, ஆவர்த்தங்களைக் குறைத்து பழகி வர வர பழைய நிலைக்கு மீண்டு விடலாம். நோய்களால் தடை ஏற்பட்டாலும் இந்த முறையை கையாளவும்.
அது போலவே பெண்களும் சிரார்த்தம் கொடுக்கலாம், ஹோமம் செய்விக்கலாம். ஆனால், செய்து வைக்கக் கூடாது. அதாவது சிரார்த்தம் கொடுக்கலாம், ஹோமங்களில் கலந்து கொள்ளலாம் ஆனால், அவற்றை செய்து வைப்பது அவர்களுக்கு நல்லதல்ல. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் பெண்களோடு கூட உள்ள ஆண்தான் ஹோமத்திற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். ஆணாதிக்கம் மேலோங்கி நின்ற காலங்களில், சுத்தமாகப் பெண்கள் இவற்றில் கலந்து கொள்வது பாவம் என்று திரித்து விட்டார்கள். உண்மையில் ரிஷிகள், முனிவர்கள் அனைவரும் பெண்களைத் துணை கொண்டே யாகங்கள், வேள்விகள் நடத்தியிருக்கிறார்கள். பெண்கள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. விளக்கு ஏற்றவோ, உயர்த்தவோ ஆணுக்கு உரிமை இல்லை. அதைப் பெண்கள்தான் செய்ய வேண்டும். ஆனால், எல்லாம் மாறி விட்டது.

அதே சமயம் பெண்கள் சிரார்த்தம், ஹோமம் போன்றவற்றை செய்து வைக்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இவற்றில் வேத மந்திரங்கள் வருகின்றன. அந்த மந்திரங்களை சரியான உச்சரிப்புடன், சப்தத்துடன் சொல்ல வேண்டும். அந்த நாதமானது அடிவயிற்றிலிருந்து, நாபியிலிருந்து வர வேண்டும். பெண்களுக்கு அந்த இடத்தில் கர்பப்பை இருக்கிறது. அப்படி அவர்கள் செய்யப் புகுந்தால் கர்பப்பை பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் பெண்கள் மற்ற பிற காரியங்களை கவனிக்க வேண்டும் என்றும், ஆண்கள் மந்திரங்களைச் சொல்லி ஹோமங்களை நடந்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதையே சாதகமாக வைத்துக் கொண்டு, பெண்கள் இவற்றில் கலந்து கொள்ளவே கூடாது என்று அடிமைத்தனம் செய்தார்கள் பாவிகள். நம் நாட்டில்தான் பெண்கள் நிலை இவ்வாறு உள்ளது. வெளி நாட்டில் உள்ள பெண்கள் நம் சாதனங்களை ஒன்று விடாமல் அனைத்தையும் கடை பிடிக்கிறார்கள். எனினும் பரவாயில்லை இப்போது இங்கேயும் எல்லாம் சரியாகிக் கொண்டே வருகிறது.

கேள்வி - என்னை சுற்றிச் சுற்றி அதர்மம் குத்தாட்டம் போடும் பொழுது நான் மட்டும் தர்மத்தோடு கும்மியடித்துக் கொண்டிருக்க வேண்டுமோ? நல்லாயிருக்குதே உங்கள் நியாயம்?

இராம் மனோகர் - நீயும் போய் குத்தாட்டம் போட வேண்டியதுதானே !!! உன்னை யார் கேட்கப் போகிறார்கள் ? ஆனால், நீ குத்தாட்டம் போட்டால் சற்று நேரத்தில் எல்லாம் சோர்ந்து போவாய். கும்மியடிப்பது அவ்வாறல்ல. அது யோகாசனம் கலந்ததொரு நடனமாகும். உடல் வலிமையடைவதுடன், வனப்பும் மிகும். 

சரி விஷயத்திற்கு வருவோம். தம்பி சுற்றிலும் நடப்பதையெல்லாம் நம்மால் சரி செய்ய முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் நம்மை நாம் சரி செய்து கொள்வது மட்டுமே. உன்னை நீ சரி செய்து கொண்டால், உன்னைச் சுற்றி நடக்கும் அதர்மங்கள் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அதர்மம் என்பது இருள். தர்மம் ஒளி. ஒளியை இருளால் விலக்க முடியாது. இருள் சூழும் அளவுக்கு ஒளியின் ப்ரகாசம் கூடுமே தவிர இருளால் ஒளியை பாதிக்க முடியாது. உன் எண்ணத்தை, செயலை, வாழ்க்கையை ஒளி மிகுந்ததாக நீ ஆக்கிக் கொள். இருள் உன்னை பாதிப்பதில்லை. அறவாழ்க்கையின் தேவை இதுதான்.



சுற்றிலும் நடக்கும் அதர்மத்தை பார்த்துக் கொண்டிருந்தாலோ, அதோடு போராடிக் கொண்டிருந்தாலோ, ஒன்று நீயும் அதர்மத்தின் பாற்படுவாய் அல்லது சோர்ந்து போவாய். ஆனால் நீ வேடிக்கை பார்ப்பதை விட்டு விட்டு உன்னை வலுப்படுத்திக் கொண்டால் எதுவும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அதோடு போராடிக் கொண்டேயிருந்தால் அது முடிவே இல்லாத யுத்தமாகப் போய் விடும். அதை இறைவன் பார்த்துக் கொள்வார். நீ செய்ய வேண்டியதெல்லாம் நீ அதர்ம வழியில் செல்லாமல் இருப்பதுதான்.

த்ருதி; க்ஷமா தமோ அஸ்தேயம்
ஸௌசம் இந்திரிய நிக்ரஹ
தீ; வித்யா ஸத்யம் அக்ரோத;
தசகம் தர்மலக்ஷணம்; - மநுஸ்மிருதி.

இதுதான் அறம். இவ்வளவுதான். வெறும் பத்து நெறிகள்தான். கோடாணு கோடி எண்ணங்கள், கர்ம வினைகள், பிறவிகள், வாஸனைகளை வெல்வதற்கு நீ கடைபிடிக்க வேண்டிய அறநெறிகள் வெறும் பத்துதான். இவற்றை கடைபிடித்தால் இறைவனே உன் பக்கம் இருப்பார். பிறகு அதர்மம் உன்னை என்ன செய்து விட முடியும் ? ஒளியைக் கண்ட இருள் போல அதர்மம் உன்னை விட்டு விலகி ஓடிப் போய் விடும்.

1. த்ருதி - சஞ்சலமில்லாத திட சித்தம். சோர்வு, சலிப்பு இல்லாமல் தன் கடமையைச் செய்வது.

2. க்ஷமா - பொறுமை. அறிந்தோ, அறியாமலோ பிறர் செய்த குற்றங்களைப் பொறுப்பது.
மன்னிப்பது. பழிவாங்காமல் இருப்பது. கோபத்தை அடக்குவது. அமைதி காப்பது.

3. தம - உணர்ச்சிவயப்படாமல் தன்னடக்கத்தோடு இருப்பது. வாழ்வில் ஏற்படும் துன்பங்களை சகித்துக் கொண்டு, மனமயக்கம் கொள்ளாமல் தெளிவாக இருப்பது.

4. அஸ்தேய - பிறர் பொருளுக்கு ஆசைப் படாமல், களவாடாமல் அல்லது பிறர் பொருளை அபகரிக்காமல், பொறாமைப்படாமல் இருப்பது.

5. ஸௌசம் - உணவில் அசுத்தம் சேராமல் பார்த்துக் கொள்வதோடு, உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது.

6. இந்திரிய நிக்ரஹ - புலன்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் மனதை ஓடவிடாமல், சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது.

7. தீ - எதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல். அதாவது பகுத்தறிவை வளர்த்துக் கொள்வது.

8. வித்யா - மனித வாழ்வின் மேன்மைக்கு வழி காட்டும் நூல்களைக் கற்றுத் தெளிந்து, அதன்படி நிற்பது.

9. ஸத்யம் - பொய் பேசாமல் இருப்பது. உண்மையை மட்டுமே பேசுவது.

10. அக்ரோத - குரோத மனப்பான்மை கொள்ளாமல் இருப்பது.

இவ்வளவு எளிதான பத்து நெறிமுறைகளைக் கடைபிடித்தால் போதும், அதர்மம் நீ இருக்கும் திசைக்கே வராது. வேறு எங்காவது போய்தான் குத்தாட்டம் போடும். தர்மமோ உன்னைப் பாதுகாத்து, நல்வழியில் செலுத்தி, நலமோடு வாழ வைத்திடும்.

கூடுவாஞ்சேரி மனவளக்கலை மன்றம், ஜி.எஸ். டி ரோடு, கூடுவாஞ்சேரி
கூடுவாஞ்சேரியில் இருவிழாக்கள்.

ஒன்று: 

14.08.2019 அன்று புதன் காலை 7 மணி முதல் 8 மணி வரை 'உலகநலவேள்வி' 

இரண்டு:
      
15.8.2019 அன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை 

'மகரிஷி பிறந்த நாள் விழா',
           
            மற்றும்

 'ஞானாசிரியர் தின விழாவும்', SKY பேரா. நக்கீரன் அவர்கள்  தலைமையில நடைபெறும்.

நடைபெறும் இரு விழாக்களிலும் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
                   
நிர்வாக அறங்காவலர் ரா.பிரமுக்குட்டி அம்மா அவர்கள் மற்றும் அறங்காவலர் குழு கூடுவாஞ்சேரி


நன்றி : திரு.இராம் மனோகர் ஐயா 
மீள்பதிவாக :-

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_40.html

2 comments:

  1. Replies
    1. தமிழ் மொழி ஐயா வணக்கம்.
      தங்களின் கருத்திற்கு நன்றி. தங்களின் வலைத்தளம் கண்டோம். சிறப்பாக உள்ளது.
      வழக்கம் போல் இங்கே வருகை தந்து தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகின்றோம்.

      நன்றி
      ரா.ராகேஷ்

      கூடுவாஞ்சேரி

      Delete