"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 25, 2019

பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சென்ற பதிவில் மூலிகை வனம் - தாணிப்பாறை என்ற வரவேற்பு வளைவு நம்மை வரவேற்பதோடு நாம்
சதுரகிரி பயணம் பற்றி பேசி இருந்தோம். இதோ அங்கிருந்து இந்த பதிவில் தொடர்கின்றோம்.







என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த வரவேற்பு வலைவிலேயே நமக்கு ஒரு அமானுஷ்யம் கிடைக்கப்போகிறது என்பதை அங்கிருந்த மலையும், மரங்களும், பசுமையும் நமக்கு உணர்த்தின. நம்முடைய இரண்டாவது சதுரகிரி யாத்திரை. முதலாவது பள்ளி பருவத்தில் சென்றது.

சதுரகிரி நடைபாதையிலுள்ள கோவில்கள்

1. கருப்பண்ண சாமிக் கோவில்
2. பேச்சியம்மன் கோவில்
3. கோரக்கர் குகை
4. இரட்டை லிங்கம்
5. பலாவடிக் கருப்பண்ண சாமிக் கோவில்
6. சுந்தர மகாலிங்கக் கோவில்
7. சந்தன மகாலிங்கக் கோவில் என்று நமக்கு ஒரு பட்டியல் கிடைத்தது. நமது நண்பர்களும் சில குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டு தொடர்ந்தார்கள். சுமார் 12 பேர் கொண்ட குழுவாக சென்றோம்.





இதோ நம் யாத்திரை ஆரம்பம். சிமெண்ட் கொண்டும், கற்கள் கொண்டும் பாதை அமைத்து இருந்தார்கள். எனவே கொஞ்சம் இங்கே எளிதாக இருந்தது. பாதையின் இரு புறமும் சாதுக்கள் இருந்தார்கள். அந்த பச்சை நிற உலகில் செய்த பயணம் நம் மனதிலும் பசுமையை விதைத்தது. வறண்டு கிடக்கின்ற உள்ளத்திற்கு இந்த பச்சை போர்வை, கடவுளின் மேல் இச்சை ஊட்டியது உண்மையே.









செல்லும் போதே, இந்த மலையாக இருக்குமோ, அந்த மலையாக இருக்குமோ என்று மனத்தில் நிறுத்திக் கொண்டு நடை தொடர்ந்தது. இது போல் ஒரு யாத்திரை வாய்க்கும் என்று நாம் கனவிலும் நம்பவில்லை. முதல் 2 கிமீ க்கு நல்ல பாதை போடப்பட்டுள்ளது. அதற்குப் பின் சற்று கடினமே!
கருப்பண்ண சாமிக் கோவில் போன்ற நடைபாதை கோயில்களை தரிசித்தோம். இதோ உங்கள் பார்வைக்கு.






ஆசீவாத விநாயகர் கோயிலில் ஆசிகள் பெற்றோம். முதல்வன் அருள் இன்றி எதுவும் நடக்காது அன்றோ? சற்று தூரம் நடந்த பின்பு, தாயின் அருள் பெற்றோம் ,சப்த கன்னியர் என்று கோயில் இருந்தது. தாணிப்பாறை பேச்சியம்மன் , ஸ்ரீ கருப்பண்ண சாமி என்று காவல் தெய்வங்களை வழிபட்டு யாத்திரை தொடர்ந்தோம்.





பாதையின் ஓரங்களில் சல ,சல என்று நீர் சுனைகளின் சப்தம் கேட்டது. மனதிற்கு ரம்மியமாய் இருந்தது.



அடுத்து நாம் அடைந்தது வழுக்குப் பாறை. நன்றாக ஒரு பெரிய பாறையில் சிறு, சிறு படிக்கட்டுகளாக செதுக்கி வைத்து இருந்தார்கள். இங்கே நாம் கவனமாக என்ற வேண்டும், அவசரமின்றி, நிதானமாக  படிகளில் நன்கு கால் ஊன்றி ஏற வேண்டும்.





இந்த வழுக்குப் பாறை ஏறியதும், மீண்டும் கற்கள், மண்களால் ஆன பாதை, இங்கே இருந்து நாம் கரடு,முரடான பாதையில்  தான் பயணத்தை தொடர வேண்டும். அடுத்து நாம் சங்கிலிப் பாறையை அடைந்தோம்.



இங்கே சங்கிலி போட்டு கட்டி வைத்து இருந்தார்கள், நீரோடையைக் கடந்து செல்வதற்கு இந்த சங்கிலியைப் பற்றி நாம் நடக்கலாம். இந்த சங்கிலிப் பாறை ஏறுவதும் சற்று கடினமே. தங்களை பயமுறுத்துவது நம் நோக்கமன்று, சற்று எச்சரிக்கையாய் இருக்கவே நாம் கூறுகின்றோம். மழைக் காலங்களில் இங்கே கடந்து செல்வதும் மிகக் கடினமே, இந்த நீரோடை தாண்டி சரியான ஏற்றம் உண்டு. அதனைத் தாண்டி சென்றாலும் கரடு முரடான பாதையே.











கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று மனதில் பாடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.  நேரம் செல்ல செல்ல, சற்று கால் வலி தோன்ற ஆரம்பித்தது.







சும்மா சொல்லக்கூடாது, நம் TUT குழுவினர் அனைவரும் நன்கு ஒத்துழைத்தார்கள், சிரமம் பாராது , சதுரகிரி ஆண்டவரை தரிசனம் செய்வதே நோக்கம் என்று நடக்க ஆரம்பித்தார்கள், அமாவாசை ஆதலால், கூட்டமும் இருந்தது, மிக அதிகம் என்று சொல்ல முடியாது.












மேலே நீங்கள் பார்ப்பது போன்று தான் பாதை இருக்கும், திடீரனென கற்கள் இருக்கும், முட்கள் கூட இருக்கும், நாம் தான் பார்த்து கால் வைத்து நடந்து செல்ல வேண்டும்.  செல்லும் போதே சாலையின் மறுபுறத்தில் இருந்த மலையின் அழகை கண்டோம், மதி மயங்கினோம். இயற்கையின் படைப்பு..ஆஹா.என்ன அழகு.எத்தனை அழகு !!








இங்கும் மரங்களின் செறிவு குறைந்து காணப் பட்டது. நாம் செய்த தவறு தான் இது போன்ற மரங்களின் அளவு குறைய காரணம். பின்னே..இது போன்ற ஆன்மிக தலங்களுக்கு செல்லும் போது  பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு செல்ல கூடாது. யாராவது அதிகாரிகள் வந்து நம்மை சோதனை செய்து, நம்மை நெறிப்படுத்த வேண்டும் என்று நாம் முடிவு செய்ய கூடாது, நாமாகவே இதனை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். நாம் பூஜை பொருட்களை இது போன்ற கவர்களில் கொண்டு செல்லாமல், துணிப்பைகளில் தான் கொண்டு சென்றோம்.




சுமார் இரண்டு மணி நேரம் கடந்திருப்போம், கோரக்கர் குண்டா வந்து விட்டதா? என்று கேட்டோம். இன்னும் சற்று தூரத்தில் வரும் என்றார்கள்.வழி நெடுக கடைகள் இருந்தது. சில கடைக்கருகில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டே பயணித்தோம்.



இதோ கோரக்கர் குண்டா அடைந்து விட்டோம். அழகோவியமாய் எம் பெருமான்...மனதில் சரணம் சொல்லி அப்படியே தொடர்ந்தோம்.



கோரக்கர்  குண்டாவிலிருந்து மீண்டும் யாத்திரை அடுத்த பதிவில் தொடரும் .

No comments:

Post a Comment