"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, June 13, 2023

தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தேடிக் கண்டுகொண்டேன் என்ற வாக்கியம் நம்மை வெகுவாக ஈர்த்த ஒன்று. முதன்முதலில் இந்த தலைப்பில் பாலகுமாரன் ஐயா அவர்கள் எழுதிய புத்தகம் நமக்கு கிடைக்கப் பெற்றது. புத்தகத்தை படித்த போது நம் நாட்டில் உள்ள சிவ தலங்களைப் பற்றியும், சில திருவிழாக்கள் பற்றியும் எழுதி இருந்தார். படிக்கும் போது நாம் எப்போது அந்த திருத்தலங்களுக்கு செல்வது என்றே நம்மை நினைக்க வைத்தது. பின்னர் குருவருளால் அவ்வப்போது திருமுறைகளை படித்த போது தலையே நீ வணங்காய் என்ற பதிகம் நம்மை வெகுவாக ஈர்த்தது. இன்றைய பதிவில் தேடிக் கண்டுகொண்டேன் என்ற தலைப்பில் திருஅங்கமாலை பதிகம் படிக்க இருக்கின்றோம்.

தலைப்பை பார்க்கும் போது நாம் தேட துவங்க வேண்டும். எதை தேட உள்ளோம். தேடுவதற்கு நமக்கு துணையாக உள்ளது எது? இந்த உயிர் நிலை பெற உதவும் உடல் தானே உதவுகின்றது. சரி இந்த உடல் நமக்கு தினமும் தேட உதவுகின்றது என்றால் நம் உடலில் உள்ள தலை,கண்கள், காதுகள், மூக்கு, வாய், நெஞ்சம், கைகள், யாக்கை,கால்கள்  என சொல்லலாம் அன்றோ? எனவே இந்த உடலைக் கொண்டு நாம் என்ன தேடுகின்றோம். தினம் தினம் தேடிச் சோறு தான் திண்கின்றோம். பல சின்னஞ்சிறு கதைகள் பேசியே பொழுதை கழிக்கின்றோம். இதற்குத் தான் இந்த உடல் நமக்கு கொடுக்கப்பட்டதா? 

திருஅங்கமாலை என்பது திருநாவுக்கரசரால் திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் வைத்து சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்ற பாடல் ஆகும். 

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் இறைவனையே நாட வேண்டும் என்று சொல்லி நல்வழிப்படுத்தும் வண்ணம் பாடப்பட்டது திருஅங்கமாலை.

இதை இரவில் கோயில்களில் பள்ளியறை பூஜையின் போது பாடுகின்றார்கள். பெரும்பாலான பக்தர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு இதைப் பாடுகிறார்கள்.




 சோழ நாட்டில் பல தலங்கள் சென்று உழவாரப் பணி செய்த அப்பர் பிரான் பூந்துருத்தி தலம் வந்தடைந்த போது அங்கே ஒரு மடத்தினை நிறுவி, அதிகமான நாட்கள் அங்கே தங்கி உழவாரப் பணி புரிந்தார். அப்போது பல பதிகங்கள் பாடினார். அத்தகைய பாடல்களில் ஒன்று தான், அங்கமாலை என்று அழைக்கப்படும் இந்த பதிகம். 

உடலின் உள்ள உறுப்புகளை எவ்வாறு நல்வழிப்படுத்தி இறை பணியில் ஈடுபடுத்துவது என்பதை கூறுவதால், இந்த பதிகத்திற்கு அங்கமாலை என்ற பெயர் வந்தது. உயிர் தனது வினைகளைத் தானே கழித்துக் கொள்ள முடியாததால், தான் சார்ந்துள்ள உடலிலுள்ள கருவிகளை இறைப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் வினைகளை கழிக்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு வினைகளைக் கழிப்பதன் மூலம் உயிர் நல்வழிக்குச் செல்ல இயலும் என்பதால், உடலிலுள்ள கருவிகள் செய்யவேண்டிய செயல்களை எடுத்துரைக்கும் இந்த பதிகத்தினை சேக்கிழார், செல் கதிக்கு வழிகாட்டும் பதிகம் என்று பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். 


தலையே நீவணங்காய் - தலை

மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்.


தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.


கண்காள் காண்மின்களோ - கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்

கண்காள் காண்மின்களோ. 


கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.


செவிகாள் கேண்மின்களோ - சிவன்

எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்

செவிகாள் கேண்மின்களோ.


செவிகளே! சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள்.


மூக்கே நீமுரலாய் - முது

காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை

மூக்கே நீமுரலாய். 


மூக்கே! சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.


வாயே வாழ்த்துகண்டாய் - மத

யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை

வாயே வாழ்த்துகண்டாய். 


வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக.


நெஞ்சே நீநினையாய் - நிமிர்

புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

நெஞ்சே நீநினையாய். 


நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக.


கைகாள் கூப்பித்தொழீர் - கடி

மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

கைகாள் கூப்பித்தொழீர். 


கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.


ஆக்கை யாற்பயனென் - அரன்

கோயில் வலம்வந்து

பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்

ஆக்கை யாற்பயனென். 


எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்?


கால்க ளாற்பயனென் - கறைக்

கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்

கால்க ளாற்பயனென்.


நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்?


உற்றா ராருளரோ - வுயிர்

கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

குற்றா ராருளரோ.


கூற்றுவன் நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?


இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்

பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு

இறுமாந் திருப்பன்கொலோ.


எல்லோரையும் அடக்கி ஆளும் எம்பெருமானுடைய பலவாகிய சிவகணத்தவருள் ஒருவனாகிச் சிறிய மானை ஏந்திய அப்பெருமானுடைய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று அங்கு இன்பச் செருக்கோடு இருப்பேனோ?


தேடிக் கண்டுகொண்டேன் - திரு

மாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்.


திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி அவன் என் நெஞ்சத்துள்ளேயே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.








திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.



மீள்பதிவாக:-

ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html



No comments:

Post a Comment