அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவரும் மாசி மக வழிபாட்டிற்கு தயாராகி கொண்டு இருப்பீர்கள் என்று நாம்
விரும்புகின்றோம்.மாசி மக வழிபாட்டை யாரும் மறக்க வேண்டாம். அன்றைய தினம் சிறப்பு வழிபாடாக வீட்டில் வழிபாடு செய்யுங்கள். உங்கள் மனதை தூய்மைப்படுத்தி இறையிடம் வேண்டுங்கள். கேட்பது கிடைக்கும் . நினைப்பது நடக்கும் என்பது
எவ்வளவு பெரிய உண்மை. கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்
என்பதும் ஆன்றோர் வாக்காக கொள்கின்றோம்.
நம் குழுவில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வின் குருவின் அருளாலே என்பது
மீண்டும் மீண்டும் உறுதியாகி உள்ளது. சென்ற ஆண்டில் நம்
குழுவில் திரு.கோகுல் மதுரை பசுமலை ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில்
அருள்பாலிக்கும் நம் குருநாதர் அருள் நிலையை பகிர்ந்து இருந்தார். குழு
அன்பர்கள் குருநாதரின் கோயில் எங்கே என்று விசாரிக்க, நாம் மதுரையில்
உள்ளது என்று பேசிக் கொண்டு இருந்தோம். இந்த எண்ணம் நம் அனைவரையும்
குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் வழியில் ஒன்றாக்கி , எத்தனை அன்பர்கள் மதுரை
ஸ்ரீ அகத்தியர் கோயில் பற்றி போற்றினார்களோ, அப்படியே சித்தனருள்
வலைத்தளத்தில் பதிவாக வெளியானது. அப்போது தான் நாம் நேரத்தை
கவனித்தோம்.மேற்கொண்டு உரையாடல் நேரம், சித்தனருள் வலைப் பதிவின் நேரம்
சரிபார்க்கும் போது இரண்டும் ஒன்றாக இருந்தது. இது குருவின் பரிபூரண அருள்
தான். குருவின் அற்புதம் தான். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம் .
குருவைப் பற்றுங்கள். குருவைப் போற்றுங்கள்.சரி...இனி ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் தரிசனம் பெற அனைவரும் தயாரா? பதிவின் இறுதியில் அழைப்பிதழ் பகிர்ந்துள்ளோம்.
எவரேனும் இவரிடம் பணமோ, பொருளோ கொடுக்க வந்தால், முதலில் அவர்களை விரட்டி விடுவார். எவரிடம் இருந்தும் சல்லிக் காசு வாங்க மாட்டார். யாரிடமும் எதுவும் கேட்கவும் மாட்டார். இப்போது கூட இவரின் சில பக்தர்கள், இதே கணக்கன்பட்டியில் இவர் தங்குவதற்காக ஒரு 'சித்சபை' கட்டி வருகிறார்கள். அதற்கு இவர் முறையாக ஒப்புதல் தரவில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கியே இருப்பார்.
இதே கணக்கன்பட்டியில், அவரது சகோதரரின் குடிசையில் வசிக்கிறார் இவர். எப்போதாவது சாப்பிடுவார். சகோதரர் வீட்டில் இருப்பவர்களே, ஏதாவது ஒரு ஓட்டலில் இருந்து (அவர் கேட்கும்போது) உணவு வாங்கி வந்து தருவார்கள்.
ஆனால், இந்த ஐம்பது வருடங்களில் மூட்டை சுவாமிகளிடம் கார்களிலும் வேன்களிலும் வந்து, பணத்தைக் கொட்ட முயன்ற கோடீஸ்வரர்கள் பல பேர். அப்படிப்பட்ட ஆசாமிகள் வந்தாலே, எரித்து விடுவது போல் இவர் பார்ப்பார். அடுத்த கணம் அந்த ஆசாமிகள் கிளம்பிப் போய் விடுவார்கள். இவருக்கு காசு, பணம், உணவு, உடை, இடம் இப்படி எதுவுமே முக்கியம் இல்லை. இவருடைய அவதார நோக்கமே வேறு. அதனால்தான், இவர் பலரிடம் இருந்தும் தனித்துத் தெரிகிறார்'' என்றார் கணக்கன்பட்டிவாசி ஒருவர்.
பழநி மலைக்கு எதிரே உள்ள இடும்பன் மலை யில் சில காலம் தங்கி இருந்தாராம். பல நேரங்களில் இவர் எங்கு இருக்கிறார் என்பதை பக்தர்கள் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. உச்சி வேளையில் கொளுத்துகிற வெயிலில் மலைக்கு மேலே தகிக்கிற ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் இருப்பார்; பேயெனக் கொட்டுகிற மழையில் முழுக்க நனைந்தபடி அதே பாறையில் படுத்திருப்பாராம். இயற்கையின் எந்த ஒரு சக்தியும் இவரை பாதித்ததே இல்லையாம்.
மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள் என்று ஒரு பக்தர் நம்மிடம் சொன்னவை: ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...
சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.
பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...
சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி சித்தியாகி விட்டார்.
இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்... கன்னாபின்னாவென்று கத்தி விட்டு, அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார் இவர்.
அன்றைய தினம் மதிய உணவை அங்கே அன்னதானத்தில் பெற்றோம். அருள் நிறை மகான் கால் பட்ட இடத்தில் நாம் கால் பதித்ததே பெரும் பாக்கியம். அருமையான அருள் நிறை தரிசனம் நம் உணர்வை மாற்றியது. அங்கே கிடைத்த உணவும் நம்மை உயிர்க்க வைக்கின்றது. சுவாமிகளுக்கு இரண்டு இடத்தில கோயில் இருக்கின்றது. இதோ அடுத்த கோயிலுக்கு செல்கின்றோம்.
நமக்கு அன்று ஒரு சித்திரக்கவி கிடைத்தது. சுவாமிகளின் அடியார் ஒருவர் கொடுத்தார்.இணையத்தில் வெளியிட நமக்கு உத்திரவு கிடைக்கவில்லை. கிடைத்தால் பகிர்வோம். இதுவரை அதனை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றோம்.
பழநி கலைக் கல்லூரியின் வாயிலில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றின் நிழலில் இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். சில நேரங்கள் திடீரென்று காணாமல் போய் விடுவார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 'சாமீ மலைக்கு மேலே போயிருக்கு' என்பார்கள். அவர் இருக்கும் இடம் இதுதான் என்று பிறரால் அடையாளம் சொல்லக் கேட்டு, அவரைத் தேடி அங்கே போனால் - அவர் இருக்க மாட்டார்.
இன்றைக்கும் இந்த நிலை உண்டு. ஸ்வாமிகள் கணக்கன்பட்டியில் இருக்கிறார் என்று ஒரு கூட்டம் இவரைத் தேடி வரும். வந்து பார்த்தால், 'சாமி, உள்ளே போயி ஏழு நாள் ஆச்சு' என்று ஏதாவது ஒரு மலைப் பகுதியை நோக்கிக் கையைக் காண்பிப்பார்கள் ஊர்க்காரர்கள். சுவாமிகள் எப்போதாவதுதான் தமிழ் பேசுகிறார். மற்ற நேரங்களில் சித்தர்கள் பேசும் ஒரு பாஷையைப் பேசுவதாகச் சொல்கிறார்கள். சாதாரணமான ஆசாமிகளுக்கு அந்த பாஷை புரிவதில்லை.
கும்பகோணத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவர், பழநி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பதினெட்டு சித்தர்களையும் தன் கண்களுக்கு நேரே தரிசிக்கும் பெரும் பேற்றைப் பெற்றவர் இவர். அந்த அனுபவம் பற்றி நம்மிடம் சொன்னார் கண்ணன்.
ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்தார் சுவாமிகள். நான் சும்மா இருக்காமல் 'சாமீ, சாப்பிடறீங்களா?' என்று கேட்டேன். 'என்ன இருக்கு?' என்று பதிலுக்குக் கேட்டார். என் மனைவி மகாலட்சுமி, 'பூரி பண்ணி இருக்கேன் சாமீ' என்று சொல்லிக் கொண்டே அவருக்கு ஒரு வாழை இலையைக் கொண்டு வந்து போட்டாள். சுவாமிகளும் சாப்பிட உட்கார்ந்தார். உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுக் கொள்ள வைத்து, பூரிகளைச் சுடச் சுட இட்டுப் பரிமாற ஆரம்பித்தாள் என் மனைவி. ஐந்து, ஆறு, ஏழு, எட்டு... என பூரிகள் போய்க் கொண்டிருந்ததே தவிர, சுவாமிகள் எழுவதாகக் காணோம்.
தயார் செய்திருந்த உருளைக்கிழங்கு மசாலா காலி ஆகி விடவே, ஊறுகாய் போன்ற இதர அயிட்டங்களைத் தொட்டுக் கொள்ள பரிமாறி னாள். ஒரு கட்டத்தில் பூரி மாவும் காலி ஆகவே, சட்டென்று மாவு பிசைந்தாள். எனக்கோ குழப் பம். 'சுவாமிகள் நம்மைத் தண்டிக்கிறாரோ!' என்று தவித்தேன். நாற்பத்தேழு பூரிகளைத் தாண் டிய பிறகும் எந்த வித களைப்பும் இல்லாமல், 'என்னம்மா... இதோட நான் நிறுத்திக்கவா?' என்றார் சுவாமிகள், என் மனைவியைப் பார்த்து. முகமெல்லாம் வியர்த்து, களைப்பின் உச்சத்தில் இருந்த என் மனைவி, 'சரிங்க சாமீ' என்றாள் சந்தோஷமாக. உணவை ஒரு பொருட்டாக நினைக்காத மூட்டை சுவாமிகள், அன்று என் வீட்டில் அப்படி சாப்பிட்டது ஏன் என்று இன்று வரை புரியவில்லை.
ஒரு நாள் கல்லூரிக்கு எதிரே அதிகாலை வேளையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். முட்புதர்கள் அடர்ந்திருந்த காடு அது. சட்டென்று
அந்த இடத்துக்கு சுவாமிகள் வந்தார். வணங்கினேன். என் கையில் இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து விட்டு, 'இங்கே ஒரு பிள்ளையார் கோயில் கட்டுப்பா' என்று முட்புதர் அடர்ந்திருந்த இடத்தைக் காண்பித்தார். எனக்கோ பிரமிப்பு. 'ரெண்டு ரூபாயை வெச்சு இந்த இடத்துல எப்படிக் கோயில் கட்ட முடியும் சாமீ?' என்று கேட்டேன். பிறகு, சொன்னார்: 'கொஞ்ச நேரத்துல வெள்ளை கார்ல ஒரு பஞ்சு வியாபாரி வருவார். அவர்கிட்ட கேள்.'
சுவாமிகள் போய் விட்டார். சொல்லி வைத்தாற்போல் அடுத்த சில நிமிடங்களில் ஒரு பஞ்சு வியாபாரி வெள்ளை கண்டஸா காரில் வந்தார். என் அருகே நின்று ஏதோ ஓரிடத்துக்குப் போக வழி விசாரித்தார். என்னைப் பற்றிப் பேச்சு வர... மூட்டை சுவாமிகள் விவரத்தையும் அவரிடம் சொன்னேன். இரண்டு நாட்களில் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.
எதற்கு வரச் சொல்கிறார் என்று தெரியாமல் பஞ்சு மில் அதிபர் சொன்ன நாளில் அவரைச் சந்திக்கப் போனேன். 'கோயிலுக்கு அஸ்திவாரம் முதல் விமான கலசம் வரை நான்தான் பணம் தருவேன்!' என்று உறுதியுடன் சொல்லி, அதுபோலவே செய்தார். அடுத்து, இதே போல் சுவாமிகளின் அருளால் ஒருவர் காம்பௌண்ட் கட்டித் தந்தார். நடப்பது எல்லாமே அதிசயமாக இருந்தது. சுவாமிகளின் அருளுடனும், அந்தப் பகுதிவாசிகளின் ஒத்துழைப்புடனும் அந்தப் பிள்ளையார் கோயிலைக் கட்டி முடித்தேன். கும்பாபிஷேகமும் முடிந்தது. சுவாமிகளும் அதற்கு வந்திருந்தார். கோயில் பணி தொடங்குவதற்கு முன் அவர் என்னிடம் கொடுத்த இரண்டு ரூபாய் நாணயத்தை நினைவாகக் கேட்டு வாங்கிக் கொண்டார்.
ஒரு நாள் இரவு மணி பதினொன்னரை இருக்கும். சுவாமிகள் என்னைக் கூட்டிக் கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச் சென்றார். ஒரு பாறையைக் காண்பித்து அதில் என்னை உட்காரச் சொன்னார். அரை மணி நேரம் ஓடிற்று. 'பதினெட்டு சித்தர்களை உனக்கு தரிசனம் செய்து வைக்கப் போகிறேன். இப்போது நீ உன் கண்களை மூடிக்கொள்' என்றார். அதன்படி மூடிக் கொண்டேன். சுமார் பத்து விநாடிகள் கடந்திருக்கும். 'கண்களைத் திற' என்றார் சுவாமிகள். திறந்தேன். என் கண் முன்னே நான் காணும் காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை. வெவ்வேறு விதமான உடல்வாகுடன் பதினெட்டு பேர் என் முன்னால் காட்சி தந்தனர். இன்றைக்கு இருக்கிற மனிதர்கள் மாதிரி அவர்கள் இல்லை. அவர்களுக்குப் பின்னால் ஒரு வால் தெரிந்தது.
'எல்லாம் ராமாயண காலத்துப் பசங்க' என்று என்னைப் பார்த்துச் சொன்னவர், ஏதோ சைகை செய்தார். அவ்வளவுதான். அடுத்த விநாடி, அந்தப் பதினெட்டு பேரும் அந்தரத்தில் மேல்நோக்கித் தாவித் தாவிச் சென்று காணாமல் போய் விட்டார்கள். அன்றைய தினம் சுமார் இரண்டு நிமிட நேரங்களுக்கு நான் பார்த்த இந்தக் காட்சி இன்னும் என் மனதில் இருக்கிறது'' என்று குரல் ததும்ப நம்மிடம் சொன்னார் கண்ணன்.
மூட்டை சுவாமிகளைப் பற்றி நன்கு அறிந்த ஒரு அன்பர் நம்மிடம் சொன்னது: ''சுவாமிகளைச் சந்தித்து எலுமிச்சம்பழம் வாங்கலாம், அவர் கையால் திருநீறு வாங்கலாம், குழந்தை இல்லாத பிரச்னைக்குத் தீர்வு கேட்கலாம், பையனுக்கு வேலை கிடைக்க தாயத்து வாங்கலாம் என்கிற எண்ணத்துடன் எவரும் இந்தப் பக்கம் வரக் கூடாது. மனிதர்களுக்குள் ஆயிரம் பிரச்னை இருக்கும்தான். ஆனால், இவரது பார்வை நம் மேல் பட்டு விட்டாலே நம்மிடம் உள்ள பிரச்னை நம்மை விட்டு ஓடி விடும்.
தெருவில் சுவாமிகள் அவர்பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் உட்காருவார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் உள்ள குறைபாடுகளை அவர் சூட்சுமமாக உணர்வார். வந்திருப்பவர்களின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் வெறும் வாயில் போட்டு மென்று, அதை வெளியே துப்பி விடுவார். சுவாமிகள் சஞ்சரித்துக் கொண்டிருக்கிற உலகமே வேறு. எனவே, அவரின் அருகே போனால் அது அவருக்குத் தொந்தரவு தருவதாகவே அமையும்.
தவிர, சுவாமிகள் சில நேரங்களில் வந்திருப்பவர்களை விரட்டியும் விடு வார். உடனே, அங்கிருந்து அவர்கள் போய் விட வேண்டும். ரொம்ப நேரம் இவரை தரிசனம் பண்ணிக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று இருக்கக் கூடாது. வந்தோமா, தரிசனம் பண்ணினோமா என்று நகர்ந்து விட வேண்டும்.
சிலரை ஏதோ வேலைகள் செய்யச் சொல்வார். என்ன வேலை தெரியுமா? மண்ணை அள்ளிக் குவிக்கச் சொல் வார். சாக்கடைத் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி ஊற்றச் சொல்வார். இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் அவர்களது வினையை சுவாமிகள் விரட்டுகிறார். அதுதான் நிஜம்.
சிங்கப்பூர், கனடாவில் இருந்தெல் லாம் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, கணக்கன்பட்டி வருகிறார்கள்'' என்றவர் தொடர்ந்து சொன்னார்:
''ராசிபுரத்துக்கு அருகே இருக்கிற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவங்களுக்கு சுவாமிகள்தான் குலதெய்வம். வருடத்தில் ஒரு நாள் சுவாமிகளின் ஆசியுடன் அவர்களது கிராமத்தில் விழா கொண்டாடுகிறார்கள். சுவாமிகளின் படத்தை வைத்து அதற்கு ஆராதனம் நடத்தி, விமரிசையாக நடத்துகிறார்கள். அவர்களுக்கு சுவாமிகள்தான் எல்லாமே!
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
No comments:
Post a Comment