அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று வைகாசி மாத ரோஹிணி நட்சத்திரம். நாம் தமிழ் மாதத்தை நாள்காட்டியாக கொண்டு வருகின்றோம். இதனால் நாம் தமிழ் மாதத்தின் மகிமை அறிந்து வருகின்றோம். அறிந்து என்று கூறுவதை விட உணர்ந்து வருகின்றோம் என்பதே உண்மை. தளத்தின் ஆரம்ப பதிவுகளில் அமாவாசை, ஆயில்யம் என்று மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால் தற்போது ஷஷ்டி, கிருத்திகை, ரோஹிணி , அஷ்டமி, சதுர்த்தி என ஒவ்வொரு திதி, நட்சத்திரம் என பார்த்து வருகின்றோம். இதற்கு முன் நாம் சொன்னது போல், நேற்றைய அமாவாசை மோட்ச தீபம் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய ரோஹிணி நட்சத்திர நன்னாளில் ஒரு ஆயுட்கால வழிபாட்டுத் தலம் காண இருக்கின்றோம்.
இந்த திருத்தலம் தரிசனம் நாம் எப்போது பெற்றோம் என்று தற்போது நினைத்துப் பார்த்தாலும், இது குருவின் அருளால் மட்டுமே சாத்தியம் ஆகும். தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் தொடர்பை நாம் பெற பல ஆண்டுகள் தவமாய் தவமிருந்தோம். அப்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் சித்தர் அருட்குடில் சத்சங்கம் நடைபெற்றது. அன்றைய தினம் நாம் காஞ்சிபுரம் சென்று சத்சங்கத்தில் கலந்து கொண்டோம். அப்போது நாம் பெற்ற தரிசனம் "திருப்பாடகம் திருக்கோயில் " தரிசனம் ஆகும்.
எனவே இன்றைய பதிவிற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் நடத்திய காஞ்சிபுரம் சத்சங்கமே ஆகும். இது போன்று தான் நம் தளத்தில் வெளியாகும் பதிவுகள் அனைத்தும் குருநாதர்களின் பரிபூரண ஆசியால் வழங்கப்படுகின்றது.
திருப்பாடகம்!
பெயரிலேயே உயிர்ப்பு உள்ள ஊர். திரு என்றாலே உயர்ந்த, இறை ஆசி பெற்ற, கடவுள் வந்திறங்கி
அருள் காட்டிய என்ற பொருள். எந்த ஊரின் பெயரோடு "திரு" என்று சேர்கின்றதோ அந்த ஊரில் சைவத்தலமாயின் சிவனும், வைணவத் தளமாயின் பெருமாளும் வந்திறங்கி அருள் காட்டிய ஊர் என்று பொருள். ஆனால் இவை கால ஓட்டத்தில் மறந்து வருகின்றது.
திருத்தணிகை
திருச்செந்தூர்
திருமயிலை
திரு ஆலங்காடு
திரு அண்ணாமலை
திருப்பெரும்புதூர்
திருமயிலை
திருமுடிவாக்கம்
திருஒற்றியூர்
என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் திருப்பாடகம் என்ற ஊரு. ஊரின் பெயர் கேட்டதும் இந்த ஊர் மிக மிக தொலைவில் உள்ளது என கருத வேண்டாம். சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் தான் இந்த திருப்பாடகம் திருத்தலம் உள்ளது. காஞ்சி சங்கர மடம் செல்பவர்கள் கண்டிப்பாக இங்கே சென்று வருவது மிகச் சிறப்பு ஆகும்.
திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.
சங்கர மடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் உள்ளது.
எம் பெருமாளே என்று கன்னத்தில் ஒற்றிக் கொண்டு நடந்து சென்று கொண்டே இருந்தோம். கோபுரம் தரிசனம் கண்டதும் மிகவும் மகிழ்வுற்றோம். இத்தலத்தின் பெருமையாக சொல்லப்படுவது
- திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.
- ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள்.
காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களுள் கிழக்கு நோக்கியபடி அபூர்வமாக அமைந்துள்ள திருக்கோயில், இது ஒன்றே! ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு அருகில், தென்மேற்கே அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரமும், ஒரு பிரகாரமும் கொண்ட அழகிய ஆலயம். காஞ்சிபுரத்தின் பாடகம் என்று அழைக்கப்படுகிறது.
தூது சென்ற அந்த மாயவனின் 25 அடி உயரத் திருமேனியைக் கருவறையில் காணும்போது மெய்சிலிர்க்கிறது.அரவு நாள் கொடியோனவையுளாசனத்தை ஆஞ்சிடாதேயிட, அதற்கு பெரிய மாமேனி அண்டம் உடுறுவப் பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன்! என்று திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வார் செய்த பாசுரத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று பெரிய திருஉருவாய்க் காட்சி தருகிறார் பாண்டவதூதர்.அர்ச்சாவதாரங்களுள் இவ்வளவு பெரிய திருஉருவை வேறு எந்த திவ்ய தேசத்திலும் காண இயலாது.
பெருமான் தன்னுடைய ஸெளசீல்யம் எனும் குணத்தைப் பாண்டவர்களுக்காகக் காட்டிய தலமிது... அதனால் திருப்பாடகம் என்பர்.
பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு என பூதத்தாழ்வாரும்.மறைபாடக மனந்தன் வண்குழாய்க் கண்ணி இறை பாடியாய விவை என்று பேயாழ்வாரும்.
பாடகத்து மூரகத்தும் நின்றிருந்து வெஃகனைக் கிடந்தது என்ன நீர்மையே! என்று திருமழிசை ஆழ்வாரும் போற்றிப் பாடியுள்ளனர்.
(இடம்: அருள்மிகு பாண்டவ பெருமாள் திருக்கோவில், திருப்பாடகம், 28,பி, பாண்டவ பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம் 631502. தொலைபேசி எண் 044-27231899.)
இந்த திருத்தலம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறந்திருக்கும்.
அஷ்டமி திதி,8-ம் தேதியில்…எனவே, ரோகிணி நட்சத்திரக் காரர்கள் புதன், சனிக்கிழமை களிலும், அஷ்டமி திதி எட்டாம் தேதிகளில் இங்கு வந்து அர்ச்சனை செய்தால், அபரிமிதமான பலன்கள் கிட்டும்.
அங்கிங்கு ஓடிக் கொண்டிருந்த மனம் , 25 ஆதி உயர எம் பெருமாளை தரிசித்ததும் ஒடுங்கத் தொடங்கியது.
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம்
என்று மனதில் பாடிக் கொண்டே கோயிலை வலம் வந்தோம்.
நாராயணா என்னும் நாமம் நெஞ்சில் ஏற்றுவோம். நாளும் நலம் பெறுவோம்.
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
மீள்பதிவாக:-
திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html
சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html
No comments:
Post a Comment