"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, May 20, 2020

போகர் சித்தர் குரு பூஜை - 21.05.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளை வைகாசி மாதம் பரணி நட்சத்திரம் வருகின்றது. வைகாசி பரணி நட்சத்திரம் அன்று போகர் குருபூஜை ஆகும். மகான்களை வணங்குவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? 

 பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள்.பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.

ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 5ஐ தருகிறார் .

என்ன நடந்தது ..? இப்போதும் அதே ஐந்தாயிரம் தான் அவரிடம் இருக்கிறதுஆனால் சுமை தெரியவில்லை ..! பாரம் குறைந்து விட்டது.இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்...!!

கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி விடுகிறார்கள். நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.பாவ புண்ணியங்களில் சம நிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ வினை ஒழியும் என்பது மற்றுமோர் அசைக்க முடியாத உண்மை அவர்கள் சமாதியிலும் கூட இன்றும் இது நிகழ்கிறது ..!

இதை வார்த்தைகளால் சொன்னால் புரியாது.அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும் ..!

சித்தர்களை, மகான்களை தரிசிப்பதால் எவ்வளவு பெரிய மாற்றம் நம்மில் உருவாகின்றது என பார்த்தீர்களா?

சரி...இனி போகர் பற்றி சிறிது உணர்வோம். சகலத்திலும் உச்சம் தொட்டவர் போகர் என்று சொல்லலாம்.



போகர் (Bogar, Boyang Wei) பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று தமிழர்களால் நம்பப்படுகிறது. இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற என்னற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் நமக்கு கிடைக்கப்பெருகின்றன. உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவர் திருவுருவச்சிலையை நவபாடாணங்களை கொண்டு போகர் வடிவமைத்தார் என்று நம்பப்படுகிறது. 




 பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன்சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.

மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில்பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள்.

இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகி விட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார்.

அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார்.

 அந்த முனிவர் ” போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும்துணையாக இருக்கும் என்று கூறி பேசும்சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார். 



சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது, ஆச்சரியத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விட்டு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது.

சிவன் சித்தத்தை தெளியவைத்தார், என்று நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின்கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார்.

பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர்.

மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். 



வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார்.

இன்றும் பழனிமலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி நல்அருள் பெறுவர்.

சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும். அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும். கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.

செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும். 




இதோ..போகர் குருபூஜை பற்றிய தகவல் கீழே 



போகர் தமிழில் இயற்றியுள்ள எழுத்து படைப்புகளுக்குள் ஒருசிலவற்றே அறியப்பட்டுள்ளன.

போகர் தமிழில் இயற்றியதாக சுமார் 64 நூல்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவர் எழுதியதாக சுமார் 26,307 பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதுவரை 23 நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,000 பாடல்கள் வெளிவந்தமை தெளிவாகிறது.

இவர் தம் சுவடிகள் பெரும்பாலும் சென்னை சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால், சென்னை சித்தமருத்துவ மேம்பாட்டு குழு, புதுச்சேரி பிரெஞ்சு கழகம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, கேரள பல்கலைக்கழக சுவடி மையம், முதலிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

போகர் தமிழில் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர் பட்டியல்;

    போகர் 7000 (சப்த காண்டம்)
    ஜெனன சாகரம் 550
    நிகண்டு 1700
    வைத்தியம் 1000
    சரக்குவைப்பு 800
    கற்பம் 360
    உபதேசம் 150
    இரணவாகமம் 100
    ஞானசாராம்சம் 100
    கற்ப சூத்திரம் 54
    வைத்திய சூத்திரம் 77
    முப்பு சூத்திரம் 51
    ஞான சூத்திரம் 37
    அட்டாங்க யோகம் 24
    பூசா விதி 20
    வாண சாஸ்திரம்

மேலே சொல்லியுள்ளவை சில நூல்களே ஆகும். இன்னும் எத்தனை நூற்கள் உள்ளன என்று யாம் அறிந்திலோம். இதனை பார்க்கும் போது போகர் - சகலத்திலும் உச்சம் தொட்டவர் ஆவார். 

பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.

அனைவரும் வீட்டிலேயே ஒரு நெய் விளக்கேற்றி வைத்து சித்தர்கள் போற்றியை துதித்து, 
ஓம் ஸ்ரீ போக சித்தரே போற்றி என்று உங்களால் முடிந்தவரை உருவேற்றி வழிபாடு செய்யுங்கள்.

மீண்டும் சிந்திப்போம் 

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_28.html

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_90.html

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment