அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளம் சார்பில் குருபூர்ணிமா சிறப்பாக அமைந்தது. அன்றைய தினம் அன்னசேவையும் குருவருளால் அமையப்பெற்றது. இது ஒரு புறமிருக்க பெருந்தொற்று இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொருவருக்கும் இறை கொடுத்துள்ள நிலையை பார்த்தால் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று புரியும். குறை சொல்லும் வாழ்வில் இருந்து வெளியே வாருங்கள். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியிலும் நிறைவை காணுங்கள்.காலையில் எழுந்த போதும், இரவில் உறங்க செல்லும் முன்னும் இறையை வணங்குங்கள். இந்த வாழ்வில் நாம் உயிரோடு இருப்பதற்கு இது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றி. இந்த பெருந்தொற்று காலத்திலும் நம்மை பாதுகாத்து அருள் செய்கின்ற இறைக்கு நன்றி சொல்லுங்கள். இதனையொட்டியே நாம் தினமும் மாலை 6 -7 மணி அளவில் கூட்டுப் பிரார்த்தனை சில பதிகங்கள் பாடி செய்து வருகின்றோம். இந்த எண்ணத்தில் நின்று இன்று வழித்துணையாக வரும் முருகப் பெருமானை பற்ற இருக்கின்றோம்.
குரவு என்றால் திருக்குராவடி என்று பொருள் கொண்டு, குராவடியில் அருளும் குமரன் தரிசனம் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். குராவடியில் அருளும் குமரன் என்றால் திருவிடைக்கழி குமரன். ஆம்.திருவிடைக்கழி பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.
முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்றது, திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலம், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலம், ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமை பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.
தமிழ்கடவுள் முருகப்பெருமானை தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கையின்
அடையாளமாகக் கூறலாம். இந்து மதத்தினர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் ஆறு
பிரிவாக பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொருவரை கடவுளாக வரித்துக்கொண்டு
வழிபாடு மேற்கொண்டனர். இவர்களில் முருகப்பெருமானை கடவுளாக வழிபட்ட
அமைப்புக்கு ‘கவுமாரம்’ என்று பெயர். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு
திருவேரகம் என்னும் பழனி மலையேறிய பெருமானுக்கு அவரது பக்தர்கள்
குன்றுதோறும் கோவில்களை கட்டி வழிபட்டனர். குன்றுகள் இல்லாத இடங்களிலும்
கூட முருகப்பெருமானுக்கு சிறப்பு மிக்க பல ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில்
ஒன்றுதான் திருவிடைக்கழி முருகப்பெருமான் கோவில்.
முருகப்பெருமான், தான்செய்த பாவத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, சிவனை
வழிபட்டு பேறுபெற்ற தலம் இதுவாகும். இந்தத் திருத்தலம் நாகப்பட்டினம்
மாவட்டம் திருக்கடவூர் மற்றும் தில்லையாடிக்கு அருகிலுள்ளது. புரட்டாசி
மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் இருந்து பாதயாத்திரையாக இந்த
முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் வழக்கம் கடந்த 38 ஆண்டுகளாக
நடைமுறையில் உள்ளது.
முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாக
தலவரலாறு கூறுகிறது. ஆனால் காலத்தை சரியாக கூறமுடியவில்லை. இத்தலம்
முற்காலத்தில் ‘மகிழ்வனம்’ என்றும், ‘குராப்பள்ளி’ என்றும்
அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றின் வாயிலாக இந்தப் பகுதியில் பல மடங்கள் இருந்த விவரமும், அதன்மூலம்
நாள்தோறும் அன்னதானம் பல ஆண்டுகள் நடைபெற்று வந்ததும், வேதம் ஓதும்
அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதும் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டில் முருகப்பெருமானுடைய பெயர் ‘திருக்குராத்துடையார்’ என்று
பொறிக்கப்பட்டுள்ளது.
தலவரலாறு :
திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான்.
அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி
போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து
மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம்
செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற
முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது.
அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள
சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து
அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே
இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு
பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற
பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு ‘விடைக்கழி’ என்று பெயர் வந்ததாக
சொல்லப்படுகிறது.
திருப்புகழ் 794 பகரு முத்தமிழ் (திருவிடைக்கழி)
பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் ...... தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் ...... பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் ...... திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் ...... குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப்
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன்
உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
தில்லையில் இருந்து திருக்குராவடி :
சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர
பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில்
புறப்படுகிறது. வெள்ளிக்கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக்கிழமை இரவு
திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின்
எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று
முருகப்பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும்.
தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இந்த பாதயாத்திரை வழிபாட்டில் கடலூர்
மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்
சிதம்பரம் வருகை தந்து இங்கிருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை
வழிபடுகின்றனர்.
அமைவிடம் :
சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து மேற்குறிப்பிட்ட வழியாகவும், செம்பொன்னார்கோயில் வழியாகவும் இயக்கப்படும் பேருந்துகள் ஆலய வாசல் வரை செல்லும்.
முருகன் அருள் முன்னிற்க மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment