அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று ஆடி மாத பௌர்ணமி ஆகும். ஆடி மாத பௌர்ணமி குரு பூர்ணிமா என்று கொண்டாடப்பட்டு வருகின்றது.குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
இன்றைய நாளில் நாமும் குருவை போற்ற உள்ளோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே
என்று திருமந்திரம் குருவின் மகிமையை சொல்கின்றது. மேம்போக்காக பார்த்தால் குருவின் திருமேனி காண்பது, குருவின் திருநாமம் சொல்வது, குருவின் வார்த்தை கேட்டல், குருவின் திரு உரு சிந்தித்தால் தெளிவு பிறக்கும் என்பது தெளிவாக நமக்கு புரிகின்றது. மீண்டும் முதல் வரியையும், நான்காம் வரியையும் பாருங்கள். குருவின் திருமேனி, குருவின் திரு உரு வேறு விதமாக பொருள் வருகின்றது அல்லவா? இங்கே குருவின் திருஉரு என்பது குருவின் உபதேசம் ஆகும். இது மிக மிக கடினம் ஆகும். ஆம். முதலில் குருவை காண்பது , அவர் நாமம் சொல்வது, அவரது திருவார்த்தை கேட்பது என அனைத்தும் எளிதாக பெறலாம். ஆனால் குருவின் திருஉரு கிடைப்பது அரிதினும் அரிதாம். அவ்வாறு கிடைத்த குருவின் திருஉருவை சிந்திப்பது அதனினும் அரிதாம்.
மேலும் குரு வழிபாட்டின் சிறப்பு பற்றி மஹா பெரியவர் கூறும் செய்திகளை இங்கே காண உள்ளோம்.
ஈச்வரன் என்று தனியாக ஒருவனை வைத்துக்கொண்டு உபாஸிக்காமல் குருவையே அப்படி உபாஸிப்பதற்கு ஆதரவாகச் சில காரணங்கள் உண்டு.
முக்யமாக, ஈச்வரன் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவனை மஹான்களின் வர்ணனைகளிலிருந்து பாவனையாகத்தான் மனஸில் கல்பித்துப் பார்க்க முடிகிறது. குருவோ கண்ணுக்குத் தெரிகிறார். அவரோடு நாம் கலந்து பழக முடிகிறது. நேருக்கு நேர் கேட்டுக்கொள்ள முடிகிறது. ஈச்வரனால் நமக்கு நடக்கவேண்டிய கர்ம நாசம், ஞான ப்ராப்தி எல்லாம் இவரே நடத்திக் கொடுக்கிறார்.
நாமே நேரே ஈச்வரனிடம் ப்ரார்த்தித்துக்கொண்டால் அவன் நமக்குச் செய்கிற அநுக்ரஹத்தைவிட ஜாஸ்தியாகவே நாம் அவனை ப்ரார்த்திக்காமல் குருவையே ப்ரார்த்திக்கும்போது, அந்த குருவின் மூலம் பெற்று விடலாம்! எப்படி என்கிறீர்களா? நாமே நேராக ஈச்வரனிடம் ப்ரார்த்திக்கிறோம் என்றால், நம்முடைய ப்ரார்த்தனா சக்தி எவ்வளவு? ரொம்பக் கொஞ்சந்தான். மனஸின் ஆழத்திலிருந்து தீவிரமாகப் பிரார்த்திக்கவே நமக்குத் தெரியாது. அதோடு நமக்கேதான் நாம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். நம்முடைய ஸொந்த நலனையேதான் ஈச்வரனிடம் வேண்டுகிறோம். இதற்கு அவன் செவி சாய்க்க மாட்டானென்றில்லை. ஆனாலும் நம்முடைய அல்ப ப்ரார்த்தனா பலத்தில் நமக்காகவே நாம் வேண்டிக் கொள்வதற்கு அவன் பெரிசாக எப்படி ஒரு பலன் தருவான்? ஆனால் நாம் குருவே எல்லாம் என்று இருந்து விட்டால், ‘அவர் இந்தக் குழந்தைக்காக நாம்தான் ப்ரார்த்திச்சுக்கணும்’ என்று ஈச்வரனிடம் நம் சார்பில் ப்ரார்த்தனை செய்வார். அவர் நம்மைப்போல ஈச்வரனை நேரில் தெரிந்துகொள்ளாதவரில்லை. அவருடைய ப்ரார்த்தனா சக்தி மிகவும் பலமானது. நமக்கு எட்டாக்கையனாக இருக்கும் ஈச்வரனுக்கு ஸமீபத்திலேயே இருப்பவர் அவர். தன்னுடைய வலுவாய்ந்த பிரார்த்தனா சக்தியோடு அவர் நமக்காக அவனிடம் வேண்டிக்கொண்டு, எடுத்துச் சொல்லி கேட்டுக் கொள்கிறபோது அவன் அதை நிச்சயம் கேட்கத்தானே கேட்பான்? நாம் எக்கேடு கெட்டுப் போனாலும் குருவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அப்படியிருந்தும் அவர் பரம கருணையோடு நமக்கு உபதேசம் பண்ணி, நம் அழுக்கைப் போக்குவதற்காகப் பாடுபட்டு, ஸ்வய நலமே கொஞ்சங்கூடக் கலக்காமல் நம் பொருட்டாகவே ஈச்வரனிடம் வேண்டிக் கொள்கிறாரென்றால் அதற்கு வால்யூ ரொம்ப ஜாஸ்திதானே? நம்முடைய ஸாதனை, ப்ரார்த்தனை ஆகியவற்றுக்காக ஈச்வரன் ஏதோ கால் பங்கு, வீசம் பங்கு அநுக்ரஹம் பண்ணுவானென்றால், நமக்காக குரு ப்ரார்த்திக்கும்போது முழுப் பங்கும் பண்ணிவிடுவான். லௌகிகத்திலேயே பார்க்கிறோமோல்லியோ? கவர்னர், மந்திரி மாதிரி ஒருவரால் நமக்கு ஒரு கார்யம் நடக்குமென்றால் நாமே அவரிடம் போய் நிற்க முடியுமா? நமக்குப் பேட்டி கிடைக்குமா? அவரிடம் சாய்கால் உள்ளவராக இருக்கிற நமக்குத் தெரிந்த ஒருவரிடம் நாம் போய் முறையிட்டாலே போதுமானதாக இருக்கிறதல்லவா? இவருடைய சிபாரிசுக்காகவே கவர்னர் நம்மைப் பார்க்கக்கூடப் பார்க்காமல் நமக்கு வேண்டிய கார்யம் ஆவதற்கு உத்தரவு போட்டு விடுகிறாரல்லவா?
ஈச்வரனிடம் நாம் போகவேண்டாம். நாம் போய் நடத்திக்கொள்வதைவிட இன்னம் நூறு பங்கு நன்றாக நமக்கு அவனிடம் சொல்லி நடத்திக் கொடுப்பதற்காக இருக்கிற குருவிடம் போய் அவரிடமே முறையிட்டுவிட்டால் போதும்.
நாமாக நம் கர்மாவைக் கழித்துக்கொள்வது கஷ்டம். குருவுக்கு ஈச்வரன் கொடுத்திருக்கிற விசேஷ சக்தியால் அவர் நம் கர்மாவிலே எவ்வளவோ பங்கு கழிந்து போவதற்கு ஸஹாயம் செய்வார். தம்முடைய தபோ சக்தியைக் கூட அதற்குச் செலவழிப்பார். பரம கருணாமூர்த்தியாகவும் த்யாகியாகவும் இருக்கப்பட்ட அவர் ஓரளவுக்குத் தாமே கூட நம் கர்மாவை வாங்கிக்கொண்டு அநுபவித்து, நமக்கு பாரத்தைக் குறைப்பார். இப்படி அவர் தம்மை வருத்திக் கொண்டுதான் நமக்கு ஈச்வரனிடமிருந்து உய்வு பெற்றுத்தரவேண்டுமென்றில்லை. அவர் அவனிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பவரானால் ஸ்வாதீனமாகவே அவன்கிட்டே, “இவனுக்காக இந்த அநுக்ரஹம் பண்ணு. பண்ணியே ஆகணும். [குரலை உயர்த்தி மிரட்டுவது போல:] என்ன, பண்றயா, இல்லையா?” என்பார். “ஆஹா, பண்றேன்” என்று ஈச்வரனும் அவர் சொன்னபடியே செய்து விடுவான்.
குரு வழிபாட்டை நிறைவாக செய்வோம். இன்றைய குரு பூர்ணிமா நாளில் குருவின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து, குருவின் தரிசனம் இனி பெற உள்ளோம்.
குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html
ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html















No comments:
Post a Comment