"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 15, 2019

குரு பூர்ணிமா (16/7/2018) சிறப்புப் பதிவு (2)

 அனைவருக்கும் வணக்கம்.

இரண்டு, மூன்று பதிவுகளுக்கு முன்னர் ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு ஒன்றை அளித்து இருந்தோம். அனைவரும் குரு பற்றி உணர்ந்து தெளிந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இன்றும் தொடர்கின்றோம். குரு பூர்ணிமா பற்றி சிறிது அறிந்துவிட்டு  இம்முறை சீடர்கள் செய்ய வேண்டிய செயல்கள் அதாவது விலக்க வேண்டிய பாவங்கள் என்னென்ன என்று அறிய தருகின்றோம். இவை எம் குருவின் வாயிலாக நமக்கு தெரிவிக்கப்பட்டவை ஆகும்.

குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.




இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

பௌத்தர்களும், புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.

தருவழி யாகிய தத்துவ ஞானங்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை யறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே. என்று திருமந்திரம் கூறுகின்றது.

வீடுபேற்றினைத் தருதற்குத் திருவடியுணர்வு - சிவஞானம் கைவருதல்வேண்டும். அது 'தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தக்' கைகூடும். குருவருள் கிடைத்ததும் சிவபெருமானின் எண் குணங்களும் ஆருயிர்மாட்டு மேம்பட்டுத் திகழும். திகழவே பிறப்புக்குக் காரணமாகிய வினைத்தொடக்கு அறும். வினைத்தொடக்கறப் பெருவழியாகிய செல்லாத செந்நெறிச் செல்வர். செல்லவே திருவருட் பேரொளி முன்னிற்கும்.




சரி.. அடுத்து சிஷ்யர்கள் விலக்க வேண்டிய பாபங்கள் (பூர்ண வித்யா - என்ற நூலில் இருந்து தட்டச்சு செய்தது)

பல சிஷ்யர்கள் அனேக சமயங்களில் குருவிடம் செயல்படும் தன்மை, பழகும் விதம், பேசுகின்ற முறை, தனித்து சொல்கின்ற சொற்கள், கேட்கின்ற விதம் முதலியன ஸத்சிஷ்யர்களுக்கு உகந்தவைகளாக காணப்படவில்லை.

ஆதலின் சிஷ்யர்கள் விலக்க வேண்டிய சில தவறான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன:

1.குருவை கேலி அல்லது தூஷணை செய்தல்

2.குருவை தன் மனம்படி செயல்பட கட்டளையிடல்

3. குருவுடன் கொடுக்கல் வாங்கல் முதலியவை செய்தல்

4.குருவின் எதிரியோடு பழகுதல். குரு தூஷணையை காதால் கேட்டல்

5. குருவின் சொல்லும் செயலும் - உலக இயல்புக்கு மாறாக உள்ளதே என்று நினைத்தல்; சொல்லுதல்

6. குருவும் மனிதப்பிறவிதானே அதனால் குறைகள் இருக்கும் என்று எண்ணுதல்

7. பகவானே குருவாக எழுந்தருளி இருக்கிறார் என்பதில் சந்தேகம்

8. குரு ஸமர்ப்பணத்தில் லோபமான எண்ணம்

9. குருவின் கட்டளையை உலகுக்கு பயந்து செய்யாமல் இருத்தல்

10. பிறர் பார்க்கிறார்களே என்று குருவுக்கு நமஸ்காரம் செய்ய வெட்கப்படுதல்

11. குருவை நீண்ட நாட்கள் பார்க்காது இருத்தல்

12. குருபாதுகை தான் கிடைத்து விட்டதே இனி ஸ்தூலமாக குரு எதற்கு என்ற எண்னம்

13. குருவிடம் இன்ன பலன் பெறுவதற்கு இன்ன மந்த்ரங்கள் கொடுங்கள் என்று கேட்பது. இந்த மந்த்ரம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று அவரிடம் கூறுதல்

14. எனக்கு ஒரு விதமாகவும் அவனுக்கு ஒருவிதமாகவும் கொடுத்தீர்களே என்று குருவிடம் கேட்டல்; மந்த்ரம் இவ்வளவு சின்னது தானா? என்று கேட்டல்

15. வேறு சிஷ்யர்கள் குருவிடம் நெருங்கி பழகுதல் கண்டும், அவர்களுக்கு குரு செய்யும் அதிக சலுகைகள், உபசாரங்களைக் கண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அஸூயை(பொறாமை) கொள்ளுதல்

16. பிறர் குருவிடம் பேசும் போது அது என்ன என்று அறிந்து கொள்ள முயற்சி செய்தல்

17. எல்லா மந்த்ரங்களும் உபதேசம் பெற்றாகி விட்டது; இனி என்ன பயம் என்ற எண்ணம்

18. (குரு உறவினரக இருப்பின்) உபதேசம் செய்து கொண்ட பின்னரும் உறவு கொண்டாடுதல்

19. உபாஸனைகள் பல இருக்கும் போது, தான் செய்வதே சிறந்தது அல்லது முக்யமானது எனக் கூறிக் கொள்ளல்

20. தான் இதை இவ்வாறு செய்து முடித்தேன் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளுதல்

21. வாழ்கை நடத்த வேண்டிய பணம் இல்லாத நபர்களையும், உபாஸனைக்கு பணம் செலவழிக்க முடியாதவர்களையும் கேலி செய்தல்

22. தன் அனுபவங்களை குருவிடம் கூறாமல் பிறரிடம் கூறுதல்

23. மந்த்ர சாஸ்த்ர ரஹஸ்யங்களை ப்ரஸித்தமாக வெளியே பேசுதல்

24 அங்க ஹீனர்களை கேலி செய்தல்

25 ஸ்த்ரீகளை தூஷித்தல், துன்பம் உண்டாக்குதல் - மரியாதையின்றி அடி என்று அழைத்தல்

26 ஸ்த்ரீகளை அடிமையாக நினைத்தல் கேலியாக பேசி சிரித்தல்

27. எல்லா ஸ்த்ரீகளும் தேவியின் வடிவங்களே என்ற அடிப்படை உண்மையை நம்பாமை

28. நான்தான் குருவிற்கு அத்யந்தம், ப்ரியமானவன் என்று கூறல்


இத்தகு சிறப்பு வாய்ந்த குரு பூர்ணிமா செவ்வாய்   15/07/2018 காலை 02:43 மணி முதல் புதன்  16/07/2018 அன்று காலை 03:34  மணி வரை உள்ளது. இந்த நாளில் மேலும் சந்திர கிரகணம் சேருகின்றது.

2019-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஜூலை 16-ம் தேதி நடுநிசி அதாவது 17-ம் தேதி அதிகாலை 12.12 மணிக்கு தொடங்கி காலை சுமார் 6 மணி வரை நீடிக்கிறது. இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் (அருணாச்சல் தவிர) தென்படும். மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா (வடகிழக்கு பகுதிகள் தவிர) ஆப்ரிக்கா, ஐரோப்பா (வடக்கு ஸ்கேன்டிநேவியன் தவிர), தென் அமெரிக்க நாடுகளில் தென்படும்.


அறிவியல் சொல்வது என்ன?

அறிவியல் படி, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதாவது சூரியனில் இருந்து வரும் கதிர்கள், சந்திரன் மீது விழாமல் அதை பூமி இடையில் வந்து தடுக்கிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். இதுவே சந்திர கிரகணம் ஆகும்.


ஜோதிடம் சொல்வது என்ன?

நிழல் என்பது இருள். இது சந்திரன் மீது விழுவதால் இதை கிரகணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களில் சாயா கிரகங்கள் என்றும் நிழல் கிரகங்கள் எனவும் வர்ணிக்கப்படுபவை ராகு - கேது கிரகங்கள். உண்மையில் இவற்றுக்கு வடிவம் கிடையாது. கிரகங்களின் மீது விழும் இந்த நிழலே ராகுவாகவும், கேதுவாகவும் நமது ஜோதிட சாஸ்திர முன்னோர்களால் வர்ணிக்கப்பட்டன.

அதற்கேற்ப, கிரகண காலங்களில், சூரியன் மற்றும் சந்திரனோடு, ராகு மற்றும் கேது  ஒரே ராசி வீட்டில் அமர்ந்திருப்பதைக் காண முடியும். (ஒரே வீட்டில் இல்லையென்றாலும்,  அடுத்த ராசி வீட்டில் அமர்ந்தாலும் பாகை அடிப்படையில் கிரகணமாகவே கருதப்படும் என்பது ஜோதிட விதி).

அடிப்படையில், நமது வாழ்வியல் முறைகளில் இருள் என்பது அபசகுணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவிர்க்கப்பட முடியாதது.  அவ்வாறு நேரும் இத்தகைய கிரகணங்களின்போது, மேற்கொள்ள வேண்டிய அடிப்படை செயல்பாடுகளை நமது முன்னோர்கள் துல்லியமாக கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பிணிகள், குழந்தைகள் கிரகணங்களின்போது சந்திரனை காணக்கூடாது.

கிரகணம் பிடிக்கும் காலங்களில் திருக்கோயில்களின் நடை சாத்துதல், உண்ணா நோன்பிருந்தல், மௌன விரதம் கடைபிடித்தல், (பேசும்போதும் செயல்களில் ஈடுபடும்போதும் நமது உடல், கிரகங்களில் இருந்து பரவும் விண்வெளி ஆற்றலை உட்கிரகிக்கும். கிரகண காலங்களில் அந்த செயல்பாட்டை தடுப்பதற்காகவே உண்ணா நோன்பு மற்றும் மௌன விரதத்தை முன்னோர்கள் வலியுறுத்தினர்.) அசைவ உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ளுதல், கிரகணம் முடிந்த மறுநாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கிரகணங்களின் போது வரும் பீடைகள் மற்றும் அசுப பலன்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

கிரகணம் முடிந்த பிறகு, திதி கொடுத்தல், கோ-மாதா வழிபாடு செய்தல், பசுவிற்கு பழம் நல்குதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட வேண்டும். திருக்கோயில் மற்றும் வீடுகளை தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். கிரகணத்துக்கு முன்பாகவோ, மறுநாளா கோயில்களுக்கு செல்லலாம்.

எனவே, அன்பர்கள் அனைவரும் இக்காலகட்டத்தில் முன்னோர்கள் கூறியுள்ள மேற்கண்ட எளிய பரிகாரங்களை கடைபிடித்து தோஷ நிவர்த்தி அடையுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


 இந்த பௌர்ணமி நாளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொருவரும் தங்களில் குருவை நேரிலோ, மானசீகமாகவோ வணங்கவும். இன்றைய தினம் செய்யும் எந்த ஒரு மந்திரமும் கோடிக்கணக்கில் வரவு வைக்கப்படும். பூசை,சாதனை , பிரார்த்தனை போன்றவற்றை சிறப்பாக செய்து குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

மீள்பதிவாக:-

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

No comments:

Post a Comment