"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, July 4, 2019

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019)

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 

உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும்,அறிவு ஒளி பெருகவும்,ஆன்ம ஒளி நல்கிடவும் சித்தர்களும்,மகான்களும் அவ்வப்போது தோன்றி மக்களை வழி நடத்திக் கொண்டு 
வருகின்றார்கள். இந்த புண்ணிய பூமியாம் தமிழ் நாட்டிலே பிறந்ததற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். ஓரளவேனும் புண்ணியம் இருந்தால் தான் நாம் தென்னாட்டிலே பிறக்க 
முடியும். அப்படி பிறந்த நாம், வாழ்கின்ற நாட்களில் சித்தர்கள்,மகான்கள் பற்றியும்,அவர்களது அருளாசி பற்றியும் அறிந்து இருளகற்றி , அறிவு ஒளி பெருக்கிட வேண்டும்.

சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலுள்ள சித்தர்கள் மற்றும் மகான்கள் வரிசையில் 
இவருக்கு தனி இடம் உண்டு.சொல்ல சொல்ல இனிக்குதடா என்பதற்கேற்ப இந்த சித்தரின் பெயரை சொல்ல சொல்ல நம்மிடம் குரு பக்தி உயரும். தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி 
சாதிக்கும். அதனை ஒட்டிய பதிவு ஏற்கனவே நம் தளத்தில் பதிவாகி உள்ளது.மீண்டும் ஒரு முறை 
படித்து குருவின் அருமை.பெருமைகளை உள்வாங்கினால் தான் சே! என்னடா வாழ்க்கை இது 
என்று நாம் துயருறும் போது,குருமார்கள் நம்மை வழி நடத்துவார்கள்.

மாதா,பிதா,குரு,தெய்வம் என்று கேட்டிருப்போம். நம்மை பத்து மாதங்கள் சுமந்து பெற்ற அன்னை தான் தந்தையை காட்டுகின்றார். தந்தையானவர் குருவினை காட்டுகின்றார். குருவானவர் மட்டுமே 
இறையை,தெய்வத்தை காட்டுகின்றார்.தெய்வத்தை அடைய குரு வழிகாட்டல் தேவை.குருவின் தாள் பணிவோம். இறைவனை அடைவோம்.



தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் ! என்ற பதிவை இங்கே காணலாம்.

https://tut-temples.blogspot.com/2024/01/102.html




ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்குமே ஒரு காரணம் இருக்கும். ஆனால் அந்த பிறப்பிற்கான காரணத்தை உணராமலே பல மனிதர்கள் வாழ்ந்து மடிகிறார்கள். தன்னை வென்றவன் இந்த உலகையே வென்ற வீரனை விட உயர்வானவன். தன்னை தானே வென்ற பல வீர துறவிகளை நாம் பார்த்து கொண்டு வருகிறோம்.

இவர் தஞ்சையில் உதித்த ஞானமனி. இவர் ஒரு பெரிய ராஜ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குடும்பம் ராயல் குடும்பம் மட்டுமல்ல. ராயர் குடும்பமும் கூட. ரங்கராயர் என்பவருக்கு மகனாக சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் அவதாரம் செய்தார். நன்றாக படித்தார். மிக புத்திசாலி மாணவர் என்று பெயர் வாங்கினார். பள்ளிகளில் நடந்த விளையாட்டு போட்டிகள், வீர போட்டிகள் என அனைத்திலும் இவர் ஒப்பார், மிக்கார் இல்லாதவராக திகழ்ந்தார். படித்த பின் ரயில்வே துறையில் உயர் அதிகாரி ஆனார்.

இவர் 3,4 வயது குழந்தையாக இருக்கும் பொழுது எல்லாம் கொட்டாவி விட்டு சுடக்கு போட்டால். இவர் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாள் யாராவது எஜமான் கூப்டீங்களா என்று ஓடி வந்து இவர் முன் கை கட்டி பவ்யத்துடனும், பயத்துடனும் நிற்பானாம். சதானந்தர் நான் ஒன்னும் உன்னை கூப்பிடவில்லை. இது அதிகார சுடக்கு அல்ல, கொட்டாவி சுடக்கு என்பாராம்.

அன்று பெரும்பாலான வீடுகளில் வேலையாட்களை பெயர் சொல்லி கூட அழைக்க மாட்டார்கள். சுடக்கு போட்டு தான் அழைப்பார்கள். எஜமான் 3 வயது. வேலையாள் 35 வயது என்றாலும் 35 வயது உள்ள வேலையாள் மரியாதையாக கை கட்டி கூனி, குறுகி பயந்து நடுங்கி கொண்டு தான் தனது எஜமானரிடம் பேசுவான். அன்று எஜமானர்கள் வார்த்தைகளில் வேலையாட்களை அதிகாரம் செய்தல் ரொம்ப கம்மி. பார்வையாலேயே அதிகாரம் செய்வார்கள். அந்த பார்வையை பார்த்தே வேலையாட்கள் எஜமானருக்கு பயந்து நடுங்கி கொண்டு சேவகம் செய்வார்கள்.

அது போன்ற ஒரு கால கட்டத்தில் அதுவும் ராஜ குடும்பத்தில் சதானந்தர் அவர்கள் பிறந்து. பின்னர் கவெர்மென்ட் உத்யோகம். ரயில்வே அதிகாரினா சும்மாவா. அந்த ராஜ வாழ்க்கை, அரசாங்க உத்யோகம் அனைத்தையும் உதறி தள்ளி விட்டு அவர் ஒருநாள் சன்யாசி ஆனார். இறைவன் இந்த உலகில் ஒவ்வோர் உயிரையும் ஒரு காரணத்திற்காக படைத்து உள்ளார். சதானந்த சுவாமிகள் இந்த புவியில் அவதாரம் செய்ததன் நோக்கம். ராஜ போகத்தை அனுபவிக்க அல்ல. அதனினும் உயர்ந்த ராஜ யோகத்தை அனுபவிக்க என்பதை இறைவன் இவருக்கு உணர்த்தினார்.
நாம் சந்நியாசியாக ஆக வேண்டும் என்றால் நமக்கு சந்யாச தீட்ஷை கொடுக்க ஒரு தகுதியான குரு தேவை. அத்தகைய தகுதியான குருவிற்கு நாம் எங்கே? போவது. அவரை எப்படி? கண்டு பிடிப்பது.

அனைத்து வினாக்களுக்கும் விடை ஆழ்மனதில் உண்டு. உண்மையில் Google Search சில் கிடைக்காத பல விடைகள் ஆழ்மன தியானம் மூலமாக கிடைக்கும். சுவாமிகள் சிறு வயதில் இருந்தே ஆழ்மன தியானத்தில் மிக வல்லவர். அவர் தனது கண்களை மூடி கொண்டு ஆழ்மன தியானம் செய்தார். அந்த ஆழ்மன தியானத்தின் மூலம் கிடைத்த பதிலின் வாயிலாக அவர் சேந்தமங்கலம் சென்று. அங்கே இருக்கும் அவதூத் சுயம் பிரகாச மௌன சுவாமிகளின் பாதார விந்தங்களில் சரண் அடைந்தார். என்னை தங்களது சீடனாக ஏற்று கொள்ள வேண்டும் என்றார். மௌன சுவாமிகள் நீ இங்கு வருவாய் என்பது எனக்கு முன்பாகவே தெரியும். உன்னை யாம் எனது சீடனாக ஏற்று கொண்டோம் என்றார்.


சதானந்த சுவாமிகளின் குருவான அவதூத் ஸ்வயம் பிரகாச மௌன சுவாமிகள் 


நாமக்கல் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சேந்தமங்கலம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தத்தாத்ரேயர் ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் சன்னியாசி கரடு என்றும் சன்னியாசி குன்று என்றும் அழைக்கப்பட்ட இந்த ஸ்தலம், தற்போது தத்தகிரி முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

ஞானம் பெற்ற பல முனிவர்கள், தவசிகள், யோகிகள், அருளாளர்கள், ஆன்மீகவாதிகள், சித்தர்கள் எனப் பலர் இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இத்திருக்கோயிலில் 29.12.1948 அன்று சதானந்தரின் குரு அவதூத் சுயம் பிரகாச மௌன சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.
ஏற்கனவே அம்பத்தூர் மௌன சுவாமிகள் பற்றிய பதிவில் சொல்லியிருக்கிறேன். மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே பிரும்மா, விஷ்ணு, சிவன் என மூவரின் சொரூபமாய் விளங்கும் தத்தாத்ரேயரை வழிபடும் பாக்யம் கிடைக்கும். அதனால் தான் வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி தாத்தாத்ரேயர் கோவில்கள் கம்மியாகவே இருக்கு. சென்னை சேலையூரில் அமைந்துள்ள ஸ்கந்தாஸ்ரமத்தில் 18 அடி உயர பிரும்மாண்ட தத்தாத்ரேயரை நாம் கண்டு வழிபடலாம்.


 சதானந்த ஸ்வாமிகள்  பற்றி அறிய வேண்டும் என்றால் நாம் நாராயண ஸ்வாமி  பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் சில குருமார்களின் புனிதம் அறிய அவர்களின் சீடர்களின் மகத்துவம் போதும்.சீடர் தயாராக இருந்தால்,குரு தானாக வந்து வழிகாட்டுவார்.அது போன்ற ஒரு நிகழ்வுகளில் தான் சதானந்த சுவாமிகளின் அருள் நிலை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


நாராயண ஸ்வாமி என்பவர் தான் சுவாமிகளை 1909 ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். சாது திரு நாராயணஸ்வாமி சில ஆண்டுகளுக்குப் பின்னால் தானும் வேலையை ராஜினமா செய்து விட்டு தனது குருவான திரு சதானந்த ஸ்வாமி அவர்களை அழைத்துக் கொண்டு ஆலப்பாக்கத்திற்கு வந்து விட்டாராம்.திரு நாராயணஸ்வாமிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான  திரு துளசிங்கம் மூலமாகவே நமக்கு ஆலப்பாக்கம் திரு சதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கைப் பற்றிய செய்தி கிடைத்து உள்ளது.  தற்போது திரு துளசிங்கம் அவர்களும் சமாதி அடைந்து விட்டார்.


திரு நாராயணஸ்வாமி எதற்காக போலிஸ் உத்தியோகத்தை ராஜினமா செய்து விட்டு வந்து அவரும் ஒரு சாதுவாக மாறினார் ?  அதற்கு ஒரு பின்னணி கதை உண்டு.  போலிஸ் உத்தியோகத்தில் இருந்தபோது  திரு நாராயணஸ்வாமி திருவிலக்கேணிப் பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைகள் எதுவும் இல்லை.
திரு நாராயணஸ்வாமி போலிஸ் உத்தியோகத்தில் இருந்தபோது சென்னையில் நிறைய இடங்களில் திருட்டுக்கள்  நடந்து வந்தன. திருடர்களை கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது.  அந்த திருடர்கள் கோஷ்டியில் ஆறு நபர்கள் இருந்தனராம். அவர்கள் ஒருமுறை ஒரு வீட்டில் துணிமணிகள் மற்றும் சாமான்களை திருடிக் கொண்டு வந்து அவற்றை பின்னர் எடுத்துச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு  சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் இருந்த ஒரு தாழம்பூ புதரில் புதைத்து வைத்து விட்டார்கள்  .

அதே நேரத்தில் அந்தத் திருட்டு நடந்ததும் திரு நாராயணஸ்வாமியின் மேல் அதிகாரியாக இருந்தவர் திரு நாராயணஸ்வாமி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு போலிஸ்காரரிடம் என இருவரிடமும் 'நீங்கள் அந்த திருடர்களைப் உடனடியாக  கண்டு பிடிக்காவிடில் உங்களை பணியில் இருந்து நீக்கி விடுவேன்' எனக் கடிந்து  கொள்ள  இருவரும் மன வருத்தத்துடன் அது பற்றி  பேசிக் கொண்டே சென்னையில் எக்மோர் எனும் பகுதியில் உள்ள  கண் சிகிச்சை மருத்துவ மனை வழியே நடந்து கொண்டு வருகையில் கன்னிமாரா வாசகசாலை அருகில் உள்ள ஆற்றங்கரை பாலத்தின் மீது அமர்ந்து இருந்த ஒரு சாமியார் அவர்களுக்கு  மிகவும் பழக்கமானவரைப் போல 'நாராயணா....நாராயணா..இங்கே வா'  என திரு நாராயணஸ்வாமியை அழைத்தார். அதைக் கேட்ட அவருடைய போலிஸ் நண்பரான முஸ்லிம் பாய் 'யாரோ ஒரு கிழவன் உன்னை பேர் சொல்லி அழைக்கின்றான் பார்' எனக் கேலியாகக் கூற அடுத்த கணம் அந்த சாமியார் அந்த முஸ்லிம் பாயின் பெயரையும் கூறி இருவரையும் தன் அருகில் வருமாறு செய்கை காட்டினார். அவர்களும் அவர் அருகில் சென்று 'எங்களை உனக்கு எப்படித் தெரியும்?. எங்களை எதற்காக  அழைத்தாய்?'  என்று கோபமாகக் கேட்க அவர் தயங்காமல் 'உடனே நீங்கள் இருவரும் இங்கிருந்து கிளம்பிச் சென்று நீங்கள் தேடும் திருடனை பிடியுங்கள். அவர்கள் இப்போது சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் ஒரு தாழம்பூ புதரில் திருடிய பொருட்களை புதைத்து வைத்து விட்டு அமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் . உடனே சென்றால் அவர்களைப் அங்கு பிடித்து விடலாம்' என்றார்.




அதைக் கேட்ட அவர்கள் அவர் மீது சந்தேகம் அடைந்து  'சரி நீங்கள் கூறியது நிஜம் என்றால் உடனே அந்த  இடத்துக்கு நாங்கள் கிளம்பிச் சென்று அவர்களைப் பிடித்து வருகிறோம். ஆனால் அதுவரை நீங்கள் இங்கேயே இருப்பீர்களா' எனக் கேட்க அந்த சாமியார் கூறினார் 'நான் இங்கே இருந்தாலும் இருப்பேன், இல்லை என்றால் இல்லை. அதற்கு உறுதி தர முடியாது.  உங்களுக்கு தேவை என்றால் அவர்களை உடனே சென்று பிடித்துச் செல்லுங்கள்.  இல்லை என்றால் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு அதனால் ஒன்றும் ஆகப் போவது இல்லை ' என்று கூறி விட்டார்.

ஆகவே எதோ ஒரு உந்துதலில் அவர்கள் அந்த சாமியார் கூறிய இடத்துக்கு சென்று பார்க்க முடிவு செய்தார்கள். அந்த காலங்களில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது. பஸ்களும் இல்லை. ட்ராம் வண்டியே இருந்தது. ஆகவே அந்த இரண்டு போலிஸ்காரர்களும் ஒரு ஜட்கா வண்டியை எடுத்துக் கொண்டு அந்த சாமியார் கூறிய இடத்துக்குப் போய் அங்கிருந்த ஆறு திருடர்களையும் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். வேலையில் நல்ல பெயரும் பெற்றார்கள். அடுத்து அவர்கள் எக்மோருக்கு அருகில் இருந்த ஆற்றின் கரைக்கு வந்து அந்த  இடத்தில் சாமியாரை தேடினார்கள். ஆனால் அவரைக் காணவில்லை. அது முதல் திரு நாராயணஸ்வாமிக்கு அந்த சாமியாரை எப்படியாவதுக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

 காந்தம் இரும்பை இழுப்பதை போல் நாராயண சுவாமிகளை சதானந்தர் அவர்கள் இழுத்தார்.
ஞான குருவின் தொடர்பு ஒரு ஜென்மத்தில் வருவதல்ல. நாராயண சுவாமி அவர்களின் முன் ஜென்ம தவ தொடர்பினால் விட்ட குறை, தொட்ட குறை என அவருக்கு சதானந்தரை காணும் பாக்கியம் கிடைத்தது.

சென்னை மயிலாப்பூரில் சதானந்த சுவாமிகள் தங்கியிருந்த பொழுது நாராயண சுவாமி சதானந்தரை தரிசனம் செய்தார். சுவாமி தங்கள் அருள் இல்லை என்றால் எங்களால் அன்று திருடர்களை பிடித்து இருக்க முடியாது உங்களுக்கு நன்றி என்றார்



 சதானந்த சுவாமிகள் சிரித்தவாறே. நீ உலகின் மிகப்பெரிய திருடர்களான வெள்ளைக்கார அரசாங்கத்திற்கு அடியாள் வேலை பார்த்து சம்பாதிக்கிறாயே. இதைப்பற்றி நீ என்றாவது சிந்தித்தது உண்டா என்று சதானந்த சுவாமிகள் கேட்க. நாராயண சுவாமிகள் அது குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்.

 சதானந்த சுவாமிகள் திருமயிலாப்பூரில் தங்கி இருந்த பொழுது நாராயண சாமி திருவல்லிக்கேணியில் குடி இருந்தார். தினமும் ஒருவேளையாவது நாராயண சாமி சதானந்த சுவாமிகளை தரிசித்து கொண்டிருந்தார். நாராயண சாமிக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.




சுமார் 130 ஆண்டுகளுக்கு முன். திருமணம் ஆன அடுத்த வருடமே மனைவி ஒரு அழகான ஆண் குழந்தை பெற்று கொடுத்தாலும் அதற்கு அடுத்த வருடமே ஆண் விருப்பப்பட்டால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம். ஏன்? நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று கணவனை கேள்வி கேட்கும் அதிகாரமே அன்று மனைவிக்கு இல்லை. குழந்தை பிறக்காமல் இருக்க பெண் மட்டும் காரணம் அல்ல. ஆண்களிடம் குறை இருந்தாலும் குழந்தை பிறக்காது என்கிற அறிவுலாம் அன்று இல்லை. அதுபோல் குறைபாடு உள்ள ஒருவனை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் மலடி என்னும் பட்டமும் பெண்ணிற்கு கிடைக்கும். ஆனால் குறைபாடு உள்ள ஒரு ஆணை மலடன் என்றெல்லாம் அழைக்க மாட்டார்கள்.

அது போன்ற கால கட்டத்திலும் திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகி தனக்கு என்று ஒரு வாரிசு உருவாகாத நிலையிலும் நாராயண சாமி ஏக பத்தினி விருதனாக வாழ்ந்தார். நாராயண சாமி திருவல்லிக்கேணியில் இருந்து மயிலாப்பூருக்கு தினமும் சதானந்த சுவாமிகளை பார்க்க வருவார். சதானந்த சுவாமிகளோடு நெடு நேரம் அமர்ந்து பேசுவார். தனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதற்கு சுவாமிகள் அருள்புரிய வேண்டும் என்று சொல்ல வாய் எடுப்பார். ஆனால் அவருக்கு ஏனோ தயக்கம். இப்டியே ஒரு 4, 5 நாட்கள் நாராயண சாமிக்கு நடந்து கொண்டு இருந்தது.ஒருநாள் சதானந்தர் அவராகவே கேட்டார்.

உனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. உன் குறை என் அருளால் தீரும் என்கிற நம்பிக்கை உனக்கு இருக்கு. ஆனால் அதை கேட்க உனக்கு என்ன? தயக்கம். என்று சதானந்தர் நாராயண சாமியை பார்த்து கேட்க. சுவாமி என்று சொன்னவாரே நாராயண சாமி சதானந்தரின் பாதம் பணிந்தார்.

நாராயணா நீ நாளை வரும் பொழுது உன் மனைவியையும் இங்கே அழைத்து வா என்றார். அதன்படி அவர் மறுநாள் தனது இல்லத்தரசியோடு வந்து சுவாமிகளை தரிசித்தார். சுவாமிகள் 3 பிடி சோறை கொடுத்து அதை கணவன், மனைவி இருவரையும் சாப்பிட சொன்னார்.
சதானந்த சுவாமிகள் லேசாக தழுதழுத்த குரலில் நாராயணா நான் சொல்ல போவதை கேட்டு நீ உன் மனதை தேற்றிக்கொள். உனக்கு மொத்தம் 3 குழந்தைகள் பிறப்பார்கள். 2 ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை ஆனால் என்று சதானந்த சுவாமிகள் இழுத்தார். சதானந்த சுவாமிகளின் கண்கள் லேசாக கலங்கியது.





                                     இந்த ஆண்டு குரு பூஜையில் ஆசிரமத்தின் அழகு

நாராயண சாமி சதானந்தரிடம். சுவாமி . 10 ஆண்டுகள் குழந்தைக்காக இன்னொரு திருமணம் கூட செய்யாமல் நான் பொறுமையாக இருக்கவில்லையா. அடியேனுக்கு எத்தகைய துன்பங்கள் வந்தாலும். என் முற்பிறவி கர்ம வினை, மற்றும் இப்பிறவியில் வெள்ளைக்கார அரசில் காவல் துறையில் சேர்ந்த பாவத்தால் வரும் வினை என்பதை புரிந்து கொண்டு. துன்பங்களை தாங்கும் மனப்பக்குவம் அடியேனுக்கு இருக்கிறது. என் இதையம் எதையும் தாங்கும் இதையம். என் இல்லத்து அரசி மரகதமும் அவ்வாறே. நீங்கள் தயங்காமல் சொல்லுங்கள் என்று நாராயண சுவாமி சதானந்தரிடம் சொல்ல.

 சதானந்த சுவாமிகள் சொன்னபடியே முதலில் பிறந்த குழந்தை கால் ஊனமாக கிரஹண நேரத்தில் பிறந்தது. ஆனால் அந்த குழந்தையின் மனம் ஊனம் இன்றி நாராயண சுவாமி வளர்த்தார்.

 நாராயண சாமிக்கு முதலில் பிறந்த குழந்தை ஊனமாக பிறந்தாலும் அதன் பின் பிறந்த மகனும், மகளும் ஆரோக்யமாக பிறந்தார்கள். நாராயண சாமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக இல்லறத்தில் நாட்டம் குறைய ஆரபித்தது. துறவறத்தை நோக்கி அவரின் கவனம் திரும்பியது. சாதாரண நாராயண சுவாமி நாராயண சுவாமிகளாக மாறி கொண்டு வந்தார்.

நாராயண சுவாமி பெருங்குளத்தூர் அருகே உள்ள தனது கிராமத்திற்கு செல்ல திட்டம் இட்டார்.அவர் திட்டம் இடும் முன்பே சதானந்த சுவாமிகள் தான் ஜீவ சமாதி அடைய போகும் இடம் அது தான் என தேர்வு செய்து விட்டார்.சதானந்த சுவாமிகளிடம் வந்த நாராயண சுவாமிகள். நான் எனது பாவப்பட்ட வேலையை விடப்போகிறேன். என் சொந்த கிராமத்திற்கு போய் விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னார். சதானந்த சுவாமிகள் நல்ல விஷயம். நானும் உன்னோடு வருகிறேன். இனி இறுதிவரை நான் அங்கு தான் இருப்பேன். எனது அனைத்து சக்திகளும் அந்த மண்ணில் இருக்கும் என்று சொல்ல.

அப்பொழுது நாராயண சாமி அடைந்த அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சதானந்த சுவாமிகள் நாராயண சாமியின் குடும்பத்தோடு பெருங்குளத்தூர் சென்றார். அங்கு உள்ள கிராம மக்களோடு மக்களாக அவர் வாழ்ந்தார். பலரது தீராத வினைகள் அவரின் அருளால் தீர்ந்தது.
ஒருநாள் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக சதானந்தரை பார்க்க வந்தார்கள். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லை தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று சொல்ல சுவாமிகள் உடனே அருகில் உள்ள பிள்ளையாரை பார்த்தார்.பிள்ளையார் விக்ரகத்தை தலைகீழாக வையுங்கள் என்று கிராம மக்களிடம் சொன்னார்.

 பல ஆண்டுகளாக மழை இந்த கிராமத்திற்கு மழை இல்லை என்று சதானந்த சுவாமிகளிடம் வந்து முறையிட. அவர் அங்கு உள்ள விநாயகர் விக்ரகத்தை தலைக்கீழாக வைக்க சொல்லி சொன்னார். அந்த கிராம மக்களும் அவ்வாறே வைத்தார்கள். வைத்த சில நிமிடங்களில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பின் மழையால் தெரு எங்கும் வெள்ளம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது. கிராம மக்கள் மீண்டும் வந்தார்கள். சுவாமி மழை போதும். மழை நிற்க அருள் புரியுங்கள் என்று வேண்டினார்கள். சதானந்த சுவாமிகள் தலைகீழாக இருக்கும் விநாயகரை நேராக வைக்க சொன்னார். நேராக வைத்த அடுத்த 2 நிமிடங்களில் மழை நின்றது. என்ன? ஆச்சர்யம்.

ஆசிரமம் அமைந்ததும் திரு நாராயணஸ்வாமிக்கு அந்த சாமியார் ஒரு கடுமையான உத்தரவு போட்டார். ' உன்னுடைய மகள் திருமணம் ஆகும்வரை எனக்கு இங்கு வந்து தொண்டு செய்யக் கூடாது. நடு இரவில் வீட்டை விட்டு வரக் கூடாது' .
சாமியார் கூறிய கட்டளையை சிரத்தையுடன் மேற்கொண்ட  சாது திரு நாராயணஸ்வாமி தனது மகளை திருமணம் செய்து கொடுத்தப் பின் வீட்டை துறந்து விட்டு அவருடைய நண்பரான சாது திரு வேல்சாமி என்பவருடன் சேர்ந்து ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி பணிவிடைகள் செய்து கொண்டு இருந்தார்.


                           
                                     கண்ணைக் கவரும் பூக்களின் சோலையில் ஆசிரமம்

அந்த காலங்களில் திருமணங்கள் மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடும். ஆகவேதான் சாது திரு நாராயணஸ்வாமியின் மகளுக்கும் விவாகம் விரைவில் நடந்தது. அப்போது திரு துளசிங்கத்திற்கு வயது ஒன்பதாகியது. அவருடைய தம்பியின்  வயது ஆறு ஆயிற்று. ஆண்டுகள் கடந்தன. 1935 ஆம் ஆண்டு சாதுவாகி விட்ட திரு நாராயணஸ்வாமியும் ஜீவ சமாதி அடைந்தார்.

அவர் ஜீவ சமாதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தான்  சமாதி அடையப் போகும் விஷயத்தை தன் வீட்டாரிடம் கூறினார். அப்போது சாது திரு நாராயணஸ்வாமியை சந்தித்த அவரது சகோதரி 'அண்ணா நீ வீட்டில் வந்து சமாதி அடைய வேண்டும் . உன் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் போட வேண்டும்' என தன் விருப்பத்தைக் கூறினாள். அதற்கு சம்மதித்த சாது திரு நாராயணஸ்வாமி அங்கு செல்ல  ஒரு நிபந்தனைப் போட்டார்.   'வீட்டிற்கு வந்து சமாதி அடைந்தால் தனக்காக யாரும் ஒரு சொட்டு கண்ணீர் விடக் கூடாது. மேலும் எந்தவிதமான காரியங்களையும் செய்யாமல் கற்பூரம் மட்டுமே ஏற்றி வைத்து சமாதி செய்ய வேண்டும்'  என்பதே நிபந்தனை.

அதைத் தவிர தன்னை எப்படி சமாதி செய்ய வேண்டும் என்பதையும் அவருடைய சகோதரிக்கும் கடைசி மகனுக்கும் எடுத்துக் கூறினார். அவர் விருப்பத்தை ஏற்று சமாதி அடைய இருந்த தினத்தன்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அன்று இரவு 12 மணி இருக்கும். வெளிச் சாலையில் இருந்து 'நாராயணா...நாராயணா' என மூன்று முறை யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. வெளியில் சென்று பார்த்தால் அங்கு யாருமே தென்படவில்லை. அவர்கள் உடனே உள்ளே சென்று சாது  திரு நாராயணஸ்வாமியைப் பார்க்க உட்கார்ந்து இருந்தவர் தனது வாயை இரண்டு முறை திறந்து மூடிக் கொள்ள அப்படியே அமர்ந்த நிலையிலேயே 1935 ஆம் வருடம்  ஜீவ சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்ததை நேரிலேயே இருந்து பார்த்தார் அவருடைய இரண்டாம் மகனான திரு துளசிங்கம் அவர்கள் .
சாது திரு நாராயண ஸ்வாமி விருப்பபடியே யாருமே ஒரு சொட்டு கண்ணீரும் விடவில்லை. அவர் கூறி இருந்தபடியே கற்பூரம் மட்டுமே ஏற்றி விட்டு அவரை சமாதி செய்தார்கள். ஒரு பண்டாரத்தைக் கொண்டு நாற்பது நாட்கள் பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் அமைத்தார்கள்.



அவர் சமாதி ஆன இரண்டு ஆண்டுகளில் அவர் நண்பராக இருந்த சாது திரு வேல்முருகனும் சமாதி அடைந்தார். அதன் பின் 19.12.2003 ஆம் ஆண்டு திரு துளசிங்கமும் சமாதி அடைந்தார்.

 நாராயண சாமிகள் சதானந்தரின் பிரதான சீடராகி அவரிடம் ஏக ஸ்வாசம் முதல் நவகண்ட யோகம் வரை அனைத்தையும் கற்று அதை பயிற்சி செய்தாலும் அவர் துறவற தீட்ஷையை ஜீவ சமாதி ஆவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன் தான் வாங்கினார்.
நாராயண சாமி, நாராயண சுவாமிகள் ஆனார். அவரின் மகளை பகவத் கீதை படிக்க சொல்ல. நாராயண சுவாமிகளின் மகள் பகவத் கீதை படித்து கொண்டு இருக்கும் பொழுதே நாராயண சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.
சதானந்த சுவாமிகள் தை மாதம் மகம் நட்சத்திரத்தில். ஜீவ சமாதி அடைந்தார். ஊரே ஒன்று திரண்டு வந்தது. சுவாமிகள் நம்மை விட்டு பிரிய போகிறாரே என்று பலர் அழ. சுவாமிகள் எனக்கு இறப்பு என்பதே கிடையாது. இருப்பு மட்டுமே. என்று சொல்லி விட்டு பக்தர்களுக்கு சதானந்த சுவாமிகள் சில அமுத மொழிகளையும் வழங்கினார்.

1]என்னை நம்பிக்கையோடு வழிபடும் அடியார்களின் இடர்களை நான் களைவேன்.

2]தனது சித்தத்தை சிவன் பால் வைத்து வணங்கும் அடியார்கள் எனக்கு பிரியமானவர்கள்.

3] மக்கள் சேவை, மகேசன் சேவை இரண்டையும் இரண்டு கண்களாக பாவிப்பவர்களே உண்மையான சிவன் அடியார்கள்.

4]காக்கைக்கு உணவு இடுதல் எவ்வளவு புண்ணியமோ அதைவிட புண்ணியம் நடைபாதையில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு இடுதல்

5] உங்களுக்கு மிகப்பெரிய மன பாரம் வரும் நேரத்தில் உங்கள் மனம் என்னை நினைத்தால். நான் உங்களது மன பாரத்தை தாங்குவேன்.

6] நான் இறந்து விட்டேன் என்று நினைப்போர் யாரும் இனி இந்த பக்கமே வர வேண்டாம். என்னை நம்பிக்கையோடு நீங்கள் வழிபட்டால் நான் உங்களோடு பேசுவேன்.

7] இறைவனை என்றும் மறக்காது இருங்கள். அவனை மறக்காது இருந்தால். இனி பிறக்காத, இறக்காத நிலை வரும்.

8] சுய ஒழுக்கமே உண்மை ஆன்மீகம், அந்த சுய ஒழுக்கத்தை கடை பிடிக்காத ஒருவனுக்கு சிவனையோ, திருமாலையோ வேறு எந்த தெய்வத்தையும் வணங்கும் தகுதி இல்லை.

9] மன ஒருமைப்பாடு இன்றி பல மணி நேரங்கள் மந்திரங்கள் சொல்வதை விட. சில நிமிடங்கள் சித்தத்தை சிவன் பால் செலுத்தி தியானம் செய்தல் இன்னும் சிறந்தது.

10] ஞான மார்க்கம், தியான மார்க்கம் என்னும் இரண்டு பாதைகளும் ஒன்றாக இணைந்தால் தான் அதன் மூலம் நாம் கடவுளை அடைய முடியும்.

11] மனம் என்னும் பெட்டியை திறக்கும் மந்திர சாவி தான் தியானம். தியானத்தை முறையாக பழகுங்கள்.

போன்ற பல உபதேச மொழிகளை அடியார்களுக்கு அருளி விட்டு சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.





சதானந்த சுவாமிகளின் ஜீவ சமாதி எங்கே இருக்கிறது?

தாம்பரத்தை அடுத்து உள்ள பெருங்குளத்தூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சதானந்தபுரத்தில் இவரின் உயிர்நிலை கோவில் இருக்கிறது. இவரின் கோவில் இருக்கும் பகுதி
இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.பெருங்குளத்தூர் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாண்டு அருகே இருக்கும் தெருவில் நுழைந்து அந்த தெருவில் லாஸ்ட் லெப்ட் எடுத்து செல்ல வேண்டும். அதன் பின் ஒரு 7,8 தெருவை தாண்டி மீண்டும் லெப்ட் எடுத்தால் இவரின் கோவிலை அடையலாம். சதானந்தரின் உயிர்நிலை கோவில் இருக்கும் தெருவிற்கு அருகில் ஷீரடி சாய் பாபா கோவில் உள்ளது. அந்த ஷீரடி பாபா கோவில் தெருவிற்கு ஒரு தெரு முன்பாக இவரின் கோவில் உள்ள தெருவிற்கு திரும்ப வேண்டும்.




அந்த தெருவின் உள் நுழைந்தால் முதலில் ஒரு துர்கை கோவில் வரும். அந்த துர்கை அம்மனை தரிசித்து அந்த கோவிலில் இருந்து வலது புறமாக திரும்பி மீண்டும் இடது புறமாக திரும்ப வேண்டும். திரும்பினால் அந்த தெருவின் கார்னரில் ஒரு டௌன் வரும்.
அங்கே தான் அதீத அதிர்வலைகளோடு அருட் சுரக்கும் மிகப்பெரிய நவகண்ட யோகியான சதானந்தரின் உயிர்நிலை கோவில் இருக்கிறது.



சுவாமிகளின் ஜீவ சமாதி 




மழலையின் தியானம் 


ஆலப்பாக்கம் என்று வழங்கப்பட்ட ஊர் இன்று சதானந்தபுரம் என்று வழங்கப்படுகிறது என்றால் புரிந்து கொள்ள வேண்டும் சதானந்த ஸ்வாமிகளின் மகிமைகளை. நாராயண சுவாமி என்ற சீடரை தயாரித்து, பக்குவம் ஊட்டி, இறை நிலை உணர்த்தினார் என்றால் என் சொல்வேன் நம் குருவின் பெருமையை.


சென்ற வாரம் சுவாமிகளை தரிசித்தோம். பரந்த விரிந்த இடம். பார்க்கும் இடம் எல்லாம் அமைதி என்று சொல்வதை விட பேரமைதி. நேரே சென்றால் சுவாமிகளின் கோவில் தான்.
கோவிலின்ஓ அருகில் சென்றதும்  ஓம் -தத்-சத்-குரு பரப்பிரம்மனே நம என்று உதடுகள் உச்சரிக்க ஆரம்பித்து விட்டது. கீழ்க்காணும் ஒளிப்படங்கள் இந்த ஆண்டு குரு பூஜையின் போது எடுக்கப்பட்டது.



                                                     ஆசிரமம் உள்ளே நுழைந்ததும்



                                                         வரவேற்புக் கோலம்















(நாராயண சுவாமிகள் ஒடுக்கம் )



                                                      ( சுவாமி கண்டிராஜ் ஒடுக்கம் )



(சுவாமி துளசிலிங்கம் ஒடுக்கம் )




                                                       (தியான இடம் )

குரு பூஜை அழைப்பிதழ் தங்களின் பார்வைக்காக:








குரு சதானந்த ஸ்வாமிகள்,திரு நாராயண ஸ்வாமிகள்,திரு வேலு ஸ்வாமிகள்,திரு பிச்சை ஸ்வாமிகள்,திரு அகண்டபுரி ஸ்வாமிகள்,திரு மாயா ஸ்வாமிகள்,திரு கோபால் ஸ்வாமிகள்

என அனைவரின் தரிசனம் பெற சதானந்தபுரம் செல்வோம்.
ஆலயம் செல்லும் வழி

சென்னையில் இருந்து தாம்பரத்துக்கு அடுத்த ரயில் நிலையமான புதிய பெருங்குளத்தூர் ரெயில் சென்று இறங்கவும். அங்கிருந்து ஒரு வண்டியில் பெருங்குளத்தூர் போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கிருந்து ஆலம்பாக்கம் ஜீவா சமாதி ஆலயம் உள்ள இடத்தைக் கேட்டால் அங்கு செல்லும் வழியை யாரும் கூறுவார்கள். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் சமாதி ஆலயம் உள்ளது . தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சதானந்தபுரம் செல்ல நேரடியாக M55G, 55D, M118A பஸ்கள் உள்ளன.

ஆலய விலாசம்

Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal temple
Sadhanandapuram (near to New Perungalathur)
New Perungalathur
Chennai – 600 063

" Sath-Guru-Potri"
Ohm-thath-sath guruparabramane namaha: 
********* 
"SRI SADHANANDHA MUTT" 
             invites you
Devotee's please come & contribute monthly magam Pooja and get sath-guru blessings

  DATE : 06-07-2019
  DAY   : SATURDAY
  TIME : 9.00 a.m (pooja)





Sponcer:

THIRU: RAJENDIRAN & FAMILY,.VILLIANUR,
PUDUCHERRY.

 - மீண்டும் அடுத்த பதிவில் தரிசிப்போம்.

மீள்பதிவாக :-


 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html


அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html


சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

No comments:

Post a Comment