"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 29, 2019

கலையார் அரிகேசரியாய் போற்றி! போற்றி!!


அரிகேசரிநல்லூர்

தென்றல் தவிழும் தேனி மாவட்டத்தில் உள்ள அழகிய ஊர் அரிகேசரிநல்லூர். தேனியில் இப்படி பெயர் கொண்ட ஊரா? என்று திகைக்க வேண்டாம். தற்போது சின்னமனூர் என்றழைக்கப்படும் ஊரே அரிகேசரிநல்லூர். பெயரில் என்ன இருக்கின்றது என்று எண்ண வேண்டாம் . நம் பெருமை நாம் பேச வேண்டும். சின்னமனூர் என்று சொன்னால் அனைவர்க்கும் தெரியும். அரிகேசரிநல்லூர் என்றால் கேள்விக்குறியே? தற்போதைய காலகட்டத்தில் நம் உறவுகளும், நட்புகளும் சுருங்கி விட்ட நிலையில், நம் குடும்ப உறவுகள் பெயர் மட்டும் தான் தெரியும். நம் தாத்தா வழி உறவுகள், பெயர்கள் தெரியும், பாட்டன்,முப்பாட்டன் என்று முன்னே சென்றால் தெரியாது என்ற பதிலே வரும். அது போலத் தான் ஊரின் பெயர்களும். நம்முடைய பெயர் கேட்டாலே, நம் ஊரில் உள்ள கோயிலின் பெயரைச் சொல்லி, நான் இந்த ஊர் என்று சொல்வது மரபு. அதில் இது போன்ற பழம்பெருமை கொண்ட ஊரின் பெயர்களை சொல்வது இன்னும் சிறப்பாகும். 
காரணமின்றி காரியமில்லை என்பதை நாம் அரிகேசரிநல்லூர் பூலாநந்தீஸ்வரர் தரிசனத்தில் உணர்ந்தோம். இன்றைய பதிவில் பூலாநந்தீஸ்வரர் பற்றி அறிய உள்ளோம்.முன்னரே சொன்னபடி, தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இவர் சரியாக சின்னமனூரில் அமர்ந்து, சின்னமனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும் அருள் பாலித்து வருகின்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க செய்தியாம். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது.

இறைவன் பெயர்: அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் 
இறைவி பெயர்: அருள்மிகு சிவகாமியம்மன் 
தல தீர்த்தம் : சுரபி நதி தீர்த்தம் 
தல விருட்சம் : பூலா மரம் 
கால பூஜைகள் : ஆறு கால பூஜைகள் 


திருக்கோயிலின் கோபுரம் பார்த்தீர்களா? சற்று உயரம் அதிகமே. நம் கண்ணிலும் அடங்க வில்லை. காமிராவின் கண்ணிலும் அடக்க முடியவில்லை.


படிப்பதற்கே இன்பம்.  கலையார் அரிகேசரியாய் போற்றி! போற்றி!! என்று மனதில் சொல்லிக்கொண்டே கோபுர தரிசனம் பெற்றோம்.


தல புராணம் இல்லாத ஆலய தரிசனம், வாசமில்லா மலரைப் போன்றது. இதோ தல புராணம்.
பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியர்களில் குலபூமண பாண்டிய மன்னனின் இளைய குமாரன் ராசசிங்க பாண்டியன் அளநாட்டை, வீரபாண்டியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். அப்போது அங்கே வாழ்ந்த குடிமக்கள் மிருகங்களால் கஷ்டப்பட்டனர். இதன் பொருட்டு, வேட்டை மார்க்கமாய் பூலாவனத்தின் மேற்கே சுரபி நதிப்பக்கம் வந்து சேர்ந்தார். வீரபாண்டியில் நிலையாய் தான் இருக்க வேண்டியது, ஆனால் தற்போது அது நிறைவேறாமல் இங்கே வந்துள்ளது எம்பெருமானின் திருவருள் என்று நினைத்தார். அங்கே இருந்த பூலா மரக்காட்டை கண்டார்.
அரசன் அங்கேயே தங்கி விட்டார். பின்பு ஆயர்குலத்தலைவனை வருவித்து,தமக்கு தினமும் பால் கொணருமாறு உரைத்தார். ஆயர்குலத்தலைவரும் அவ்வாறே செய்தார், அப்போது சில நாட்களில் பால் கொண்டு வரும் வேளையில் பூலாமர வேர் தடுக்கி நிலத்தில் விழுந்தார். பால் முழுதும் பூலா மரத்தின் அடியில் கொட்டியது.இந்நிகழ்வு தினமும் வாடிக்கையாகிப் போனது.
ஒரு நாள் இதே நிகழ்வு நடந்ததும், சினத்துடன் எழுந்து, இடறிய வேரை, பூலா மரத்தோடு சேர்த்து வெட்டினார்.


என்ன ஆச்சரியம் ! பூலாமரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் முடியில் பட்டு செங்குருதி வெள்ளம் போல் வெளியேறியது. உடனே அரசரிடம் செய்தி சொல்லப் பட்டது. உடனே அரசன் அவ்விடத்திற்கு புறப்பட்டு சென்றார். அந்த நிகழ்வை நேரில் கண்டு மயங்கி "இக்கோலம் காணவோ பிறந்தேன்" என்று துதித்தார். உடனே செங்குருதி மாறி ஆகாயம் ஊடுருவும்படி ஜோதி மலையாய் நின்றது. உடனே அரசர் ஆனந்த வெள்ளத்தில் ஆடினார்.  என்னை ஆட்கொள்ள வந்த இறைவா ! நீவீர் இவ்வாறு விஸ்வரூப தரிசனத்தில் நின்றாள் நாம் எப்படி பூசிப்பது? ஏது தொழுவேன் ? என்று தொழுதார். உடனே நம் அன்பின் உருவம் , அரசனின் அளவிற்கு நின்றது.
அரசனின் அளவிற்கு நின்றதும், அரசர் நம் பெருமானை ஆரத் தழுவி, கட்டிக் கொண்டார். முகம் புதைத்து அழுதார். அவ்வாறு ஆரத்தழுவிய போது, அரசனின் முகம், மார்பில் அணிந்து இருந்த ஆரமும், அவரது கைக்கடங்களும் இன்றளவும் அடையாளங்களாக மூலவரின் திருமேனியில் தெள்ளத் தெளிவாக உள்ளது.


மேலே உள்ள தகவல் செய்தியில் இவை அனைத்தும் குறிப்பால் எழுதப்பட்டுள்ளது சிவனார் பூலா ஆரண்யத்தில் இருந்தமையால் "பூலாவனேசா" மற்றும் பூலாநந்தீஸ்வரர் என்று அழைக்கப் படுகின்றார்.


கோயிலை அணு அணுவாக ரசித்தோம். பழந் திருக்கோயில் அன்றோ? ஈர்த்து நம்மை ஆட்கொண்டு இருக்கின்றார் என்பது உண்மை.


கோயிலின் ஆங்காங்கே, திருமந்திரம் போன்ற பாடல்கள் பொறித்து இருந்தார்கள். படிக்க படிக்க ஆனந்தம், கோயிலைப் பார்க்க பார்க்க பேரானந்தம். இன்னும் பூலாநந்தீஸ்வரர் தரிசனத்தில் நாம் என்ன பேறு பெற இருக்கின்றோம். நாம் அறியாது , அவர் அறிவாரன்றோ?

இக்கோயிலைப் பற்றி பற்பல கல்வெட்டுச் செய்திகள் உண்டு. பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோயிலுக்கு நிலம்,பொன் ,ஆடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இது போல் , பண்ணை செய்ய, வேலி செய்ய சுங்கம், வரி ,பொருள் விற்பனை நடந்துள்ளது. துர்கா பரமேஸ்வரியின் சந்நிதியில் நந்தா விளக்கு எரிப்பதற்காக, நில தானம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.




சுருங்கக் கூறின், பதினெண் புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில் சங்கர சங்கிதையில், சிறந்த சிவத்தலமாக சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் இடம் பெற்றுள்ளது. சிவபெருமானை நிந்தித்து, தக்கன் செய்த யாகத்தில் பங்கேற்ற வானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். காமதேனுவும், கற்பகத்தருவும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டன. தெய்வீகப் பசுவான காமதேனுவை நாட்டுப் பசுவாகவும், கற்பகத் தருவை முட்பூலாமரமாகவும் வீரபத்திரர் சபித்தார். இரண்டும் சாபவிமோசனம் கேட்க, “கற்பகத்தருவே! நீ முட்பூலாமரமாய் முளைத்த இடத்தில் சிவபெருமான் சுயம்புவாய் தோன்றுவார்.

உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்றும், ”காமதேனுவே! நீ நாட்டுப் பசுவாய் பிறந்து, ஒரு புலியால் உனக்கும், உன்னால் புலிக்கும் ஞானம் உண்டாகிட சாபம் நீங்கும்” என்றும் அருளினார். இதன்படியே இந்த பூலாநந்தீஸ்வரர் கோயில் பகுதியில் காமதேனுவும், கற்பகத்தருவும் விமோசனம் பெற்றன. வீரபாண்டியை தலைநகராக கொண்டு ஆண்ட ராசசிங்க பாண்டியன் எனும் அரசன், விமோசனம் அருளிய இத்தலத்தில் பின்னாளில் கட்டியதே இக்கோயில். பூலாநந்தீஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் கொடிமரம், அடுத்து நந்தி பகவான், அடுத்து மண்டபம், தொடர்ந்து சன்னதி என கோயில் அழகுற கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலின் இடதுபுறம் சிவகாமி அம்மன் கோயிலும் உள்ளது. கோயில் வளாகத்தில் சந்திரசேகரர், காங்காளர், சுப்பிரமணிய சுவாமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, காளி, பைரவர் போன்ற துணை தெய்வங்களும் காட்சி தருகின்றனர். கோயிலின் வலதுபுறம் நவக்கிரகங்கள் உள்ளன. கோயில் கிழக்குப் பகுதியில் திருமால் வேண்டுகோளுக்காக சிவபெருமான் உருவாக்கிய சிவகங்கைத் தீர்த்தம் எனப்படும் குளம் உள்ளது. பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடந்து வருகின்றன. சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் சித்திரையில் 15 நாட்கள் தீர்த்தவாரி சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

வைகாசி விசாக நட்சத்திரத்தன்று முருகன் பால்குட விழா, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் முளைக்கொட்டுத் திருநாள், அம்மன் தபசு, ஆவணியில் புட்டுத் திருவிழா, விறகு விற்றல் லீலை, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்த சஷ்டி, கார்த்திகையில் திருக்கார்த்திகை, மார்கழியில் ஆரூத்ரா தரிசனம், படியளத்தல், தையில் தீர்த்தவாரி, தைப்பூசத் தெப்பத் திருவிழா, மாசியில் மகாசிவராத்திரி மற்றும் பங்குனியில் பங்குனி உத்திரம் என மாதந்தோறும் விழாக்கள் களை கட்டுகின்றன. இவை தவிர 63 நாயன்மார்களுக்கும் அவர்களது நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கின்றன. ராணி மங்கம்மாள் காலத்தில் சின்னமநாயக்கர் என்ற அரசியல் அதிகாரி உருவாக்கியதால் அவர் பெயரால் சின்னமனூர் என பெயர் பெற்றது இந்த ஊர். புராணத்தில் இந்த ஊர் ‘அரிகேசரிநல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் முக்தி கொடுக்கும் தலங்கள் ஐந்து. அவை காசி, திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர் மற்றும் அரிகேசரிநல்லூர் என்ற இந்த சின்னமனூர்.



அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவானை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள், இங்கே வந்து பூலாநந்தீஸ்வரர் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தால் நேர்த்திக்கடன் பூர்த்தியாகும் என்பது கண்கூடு.




                                                      கற்பக விநாயகர் தரிசனம்






இதோ எம் பெருமான் தரிசனம். 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே
என்ற திருநாவுக்கரசரின் பாடல் நினைவிற்கு வருகின்றது. 


அன்னையின் சந்நிதி இங்கே அருகிலேயே இல்லை. தலைவருடன் சில நிமிடங்கள் கழிந்த பிறகு, வெளியே சுற்றுப் பிரகாரம் வந்தோம்.







ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

அடடா ! நாம் பெறும் பேறு இதுதானே. இதற்குத்தானே இத்தனைப் பிறவிகள் கடந்து வந்தோம். என்று திருக்கோயில் கண்டு மனம் உருகினோம். மனம் மட்டுமல்ல..மெய்யும் உருகியது.











பிரகாரத்தின் ஒரு முடிவில் தனியாக கண்ணீசுவரமுடையார், கன்னிமூல கணபதி இருந்தார்கள். வீரபாண்டியிலும் கண்ணீசுவரமுடையார் இருக்கின்றார். அளநாடு அன்றோ? அனைத்து தெய்வங்களும் இங்கே அடக்கம். தேடி அலைய வேண்டாம். அப்படியே பிரகாரம் சுற்றி வந்தோம்.அடுத்து தல விருட்சம் தான்.





ஏற்கனவே நாம் தல புராணத்தில் அறிந்ததை இங்கே ஓவியமாக தீட்டி இருந்தார்கள். 



இதோ அன்னையின் அருள் பெறும் வழி !





சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு, வெளியே வந்தோம். தலைவருடன் ஒரு சந்திப்பு ! தித்திப்பாய் இருந்தது. இப்படியொரு தரிசனம் நமக்கு கிடைக்கும் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஏனெனில் அன்றைய தினம் உடல் தொந்திரவாக சுரம் ஏற்பட்டது. சின்னமனூரில் உள்ள இயற்கை நல்வாழ்வியல் ஆசான் திரு. செல்வக்குமார் ஐயா அவர்களை சந்திக்கச் சென்றோம். சந்திப்பின் நீட்சி பூலாநந்தீஸ்வரர் தரிசனத்தில் தொடர்ந்தது. இதுதான் காரணமின்றி காரியங்கள் இல்லை என்பது. 





திருக்கோயிலின் வெளியே பல மரங்கன்றுகள் நட்டு உள்ளார்கள். மேலும் குளத்தையும் தூர் வாரி சுத்தம் செய்துள்ளார்கள். பார்ப்பதற்கே பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாய் இனிமையாய் உள்ளது. மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பினோம்.


வரும் வழியில் ஸ்ரீ பிடாரியம்மன் திருக்கோயில் கண்டோம். அப்படியே வணங்கி விட்டு வந்தோம்.




பின்பு மாணிக்கவாசகர் சுவாமி திருக்கோயில் கண்டோம். நடை சாற்றி இருந்தார்கள். 

நானார்என் உள்ளமார் ஞானங்க ளார்என்னை யாரறிவார்
வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

என்று மனதில் நிறுத்தி, வணங்கி, மீண்டும் எப்போ அழைப்பீரோ? என்ற ஏக்கத்துடன் அங்கிருந்து கிளம்பினோம்.

அருமையான ஆலய தரிசனம் பெற, வாய்ப்புக் கொடுத்த திரு செல்வகுமார் ஐயாவிற்கு இங்கே TUT தளம் சார்பாக நன்றி சொல்வதில் மகிழ்வுறுகின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

2 comments:

  1. இந்த கோவிலில் எங்கும் காணாத ஒரு அதிசயம் உண்டு. அதை கண்டீர்களா..... சந்தானம் 9176012104

    ReplyDelete
    Replies
    1. பார்வையின் உயரம்.. லிங்கத்தின் உயரம் :

      தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்மன் என்பதாகும். இந்த அம்மனின் முகம் எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்குமாம். அதே போல் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் பார்ப்பவர்களின் பார்வை எந்த உயரமோ, அந்த அளவுக்கு உயரமாக காட்சி தருவதும் அதிசயங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

      கண்டோம் ஐயா

      Delete