அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் சென்ற ஆண்டில் நாம் பெற்ற கந்த ஷஷ்டி விரத மகிமையால் மருதமலை தரிசனம் பெற்றோம். அந்த தரிசனத்தை இங்கே பகிர விரும்புகின்றோம். ஆம். சென்ற ஆண்டு ஷஷ்டி விரத சூரசம்ஹாரம் முருகனருளால் சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தில் நாமும் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து. அந்த நிகழ்வில் மனம் முழுதும் முருக சிந்தனையில் ஆழ்ந்தது. வாய் முழுதும் சரண கோஷத்தில் திளைத்தது. அன்றைய தினம் முருகன் அருள் பெற்ற பிறகு, கோயம்புத்தூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மருதமலை செல்லும் வாய்ப்பு என்றால் எப்படி இருக்கும்? தேனில் ஊறிய பலாச்சுளைகளை சுவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. என்னப்பா? புற அனுபவம் பற்றி சொல்கின்றோம் என்று நினைக்க வேண்டாம். இந்த உதாரணம் நம் அக அனுபவம் தான். இனி மருதமலை மாமணி பற்றி மனதுள் நிறைப்போம்.
முருகனின் திருப்பாதங்களைப் பற்றுங்கள், கர்ம வினைகள் காணாமல் போகும், முருகனின் அகராதியில் தண்டித்தல் என்பதே கிடையாது. தண்டிப்பதற்கு பதிலாக நம்மை சோதித்துப் பார்ப்பார்.நாம் சோதனைகளை கடந்து விட்டால், பிறகென்ன..முருகனின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.அசுரர்கள் அனைவரும் வதம் செய்யப்பட்டதாக நாம் அறிவோம். ஆனால் முருகன் என்ன செய்தார்? வதம் செய்யாது சூரபத்மனுக்கு அருள் செய்தார். நம்பிக்கையோடு சரண் அடையுங்கள், அருள் செய்வார் நம் முருகப் பெருமான்.
உங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் சரி..உடனே ஏதேனும் ஒரு குன்று உள்ள குமரனை சென்று வழிபடுங்கள். வலியுடன் குன்றில் ஏறும் போது ...முருகா..முருகா..என்று அவன் சரணம் கூறி, நீங்கள் செய்த பிழைகளை உணர்ந்து , உணர்ந்து மலை ஏறுங்கள். அவன் சன்னிதியில் உங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் சமர்ப்பியுங்கள். நீங்கள் செய்த பாவத்தையும் முறையிட்டு அழுங்கள்..அவரிடம் தானே நாம் அழுது,தொழுது பெற முடியும். இனி நடக்கப் போவது நன்மையாக இருக்க அருள் செய் முருகா என்று வேண்டுங்கள். திருநீற்றுப் பிரசாதத்தை நெற்றி நிறைய பூசுங்கள். ஆலயத்தை மூன்று முறை வலம் வாருங்கள். முருக..முருகா..என உருகுங்கள்..
ஆலயத்தில் வழிபடுவதோடு நிறுத்தி விடாமல் வீட்டில் தினமும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் போன்றவை படித்து அவனை வழிபடுங்கள்.
சரி,,அப்படியே மருதமலை முருகன் பாதம் பற்றுவோம்...
மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.
மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment