"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, November 19, 2020

குன்றுதோறாடும் குமரா போற்றி (5)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கந்த ஷஷ்டி விரதம் பற்றிய பதிவுகள் நம் தளத்தில் கண்டு வருவீர்கள் என்று நாம் விரும்புகின்றோம். இதற்கு முந்தைய பதிவுகளில்  முருகப் பெருமானின் முதல் நான்கு படைவீடுகள் பற்றி சிறிது கண்டோம். மேலும் அந்த நான்கு படை வீடுகளின் கந்த  சஷ்டி கவசமும் படித்தோம். இன்றைய பதிவில் முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான குன்றுதோறாடல்  பற்றி அறிய இருக்கின்றோம். குன்று இருக்கும் இடமெல்லாம் நம்  குமரன் இருக்கும் இடம். அது போல் தான் இந்த ஐந்தாம் படை வீடு. குன்றுதோறாடல் என்ற பெயர் புதிதாக உள்ளதா? ஆமாங்க.. திருத்தணி திருத்தலம் தான் குன்றுதோறாடல் ஆகும்.

முருகப்பெருமானை பற்றி ஒரு பதிவில் உணர்த்த முடியுமா? என்றால் அது முடியாது. அது போலவே குன்றுதோறாடல் தலத்தை பற்றியும் நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம்.


அறுபடை வீடுகளில் சென்னைக்கு மிகவும் அருகில் உள்ள ஆலயம் திருத்தணிகை. சென்னையிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தமிழகத்தின் வடக்கு எல்லையாகத் திருவேங்கடத்தைப் பண்டைய நூல்கள் குறிப்பிட்டிருந்தாலும் தற்போது அந்தத் திக்கின் எல்லையாக விளங்கும் தலம் திருத்தணிகை. சூரனுடன் செய்த போரின் போதும் வள்ளியம்மைக்காக வேடுவர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு கோபமும் தணிந்து அமர்ந்த மலை. ‘குன்றுதோறாடல்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

மலையின் சிறப்பு

தணிகை என்ற சொல்லுக்குப் பொறுத்தல் என்ற பொருளும் உண்டு. அடியவர்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம் தணிகை. ‘திருத்தணிகை மலை மேலே குமார தேவன்’என்னும் பாடலில் பாரதியின் கற்பனை சிறகடிப்பில் திருத்தணி மிளிரும்.

தணிகை 

முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், “அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை” என்று கொள்ளுதலும் பொருந்தும்.

திருத்தணிகை மலை

இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் “பச்சரிசி மலை” என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் “பிண்ணாக்கு மலை” என்றும் கூறப்படுகின்றன.

ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. “சரவணப் பொய்கை” என வழங்கும் புகழ்மிக்க “குமார தீர்த்தம்” என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு “மடம் கிராமம்” என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.

திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

அருணகிரிநாதர் தனது பாடலில் “அழகுத் திருத்தணிமலை” என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.

தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு 

திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் “மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே” என்று பாடியுள்ளார்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் “கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்” என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

திருவிழா

மாசிப் பெருந்திருவிழா – வள்ளி கல்யாணம் – 10 நாட்கள் திருவிழா – இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பெறுவர். சித்திரைப் பெருந்திருவிழா – தெய்வானை உற்சவம் -10 நாட்கள் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். ஆடிக் கிருத்திகை -10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகா ஆந்திரா, மற்றும் ஆற்காடு பக்தர்கள் வரும்போது திருத்தணியே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கும். இத்தலத்தில் இது ரொம்பவும் விசேசமான திருவிழா ஆகும். இவை தவிர கிருத்திகை அன்றும் தமிழ் ,ஆங்கிலபுத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

ஆடி கிருத்திகை விசேஷம்

முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் இவ்விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.

தலச்சிறப்பு 

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சந்நிதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம்.இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.

இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன்

இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.

வள்ளலார் பெற்ற அருள் 

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்.

சூரசம்ஹாரம் இல்லை

முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. தற்போது, ஆயிரம் கிலோ பூக்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

கஜவள்ளி

திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் ஒரே அம்பிகையாக “கஜவள்ளி’ என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.

புத்தாண்டில் படிபூஜை

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது,புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.

வெந்நீர் அபிஷேகம்

மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

நோய் தீர்க்கும் சந்தனம்

திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்

மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல்,பொங்கல் படைத்தல் ,சுவாமிக்கு சந்தனகாப்பு ,பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் ,அன்னதானம் வழங்குவது , நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல் ,அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

சில தகவல்கள்

* சித்திரை, மாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சித்திரையில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. திருமணத்தில் நம்பிராஜன் தம்பதியர் பங்கேற்கின்றனர்.

* பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் தெய்வானையும், ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள்செய்கின்றனர்.

* வள்ளியை யானை ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

* வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

* திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர். 

இனி நாம் இதற்கு முன்னர் பெற்ற தரிசனக் காட்சிகளை அனைவரின் பார்வைக்கு அறிய தருகின்றோம்.

















தரிசனம் எப்படி இருந்தது? வார்த்தைகளில் அடக்க முடியவில்லை அல்லவா? அடுத்து குன்றுதோறாடல் சஷ்டி கவசம் காண இருக்கின்றோம். 

காப்பு

 அமரர்இடர்தீர அமரம் புரிந்த 

 குமரன் அடி நெஞ்சே குறி,

 துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 

 பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

 நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 

 சஷ்டி கவசந்தனை

கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமர குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா        ... ... 4

அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியனு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா        ... ... 8

சண்முகநதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழனிக்கு இறைவா
ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா        ... ... 12

ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறு முகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்        ... ... 16

வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணதீறணி திருநுதல் அழகும்
கருணைபொழியும் கண்ணான்கு மூன்றும்        ... ... 20

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்        ... ... 24

காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபோலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்        ... ... 28

முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட
ஈஸ்வரன் பார்வதி எடுத்து முத்தாடி
ஈஸ்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்        ... ... 32

கையால் எடுத்து கனமார் (பு) அணைத்தே
ஐயா ... குமரா ... அப்பனே ... என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி        ... ... 36

முன்னே கொட்டி முருகா ... வருகவென் (று)
அந்நேரம் வட்டமிட்டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக        ... ... 40

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவல் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக        ... ... 44

அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணைப் புண்ணியா வருக
அழகில் சிவனொளி அய்யனே வருக
கலபம் அணியுமென் கந்தனே வருக        ... ... 48

மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக
திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக        ... ... 52

சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலில்சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்        ... ... 56

அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி        ... ... 60

பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திரவாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்        ... ... 64

ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமுடி அணியுமா பரணமும்        ... ... 68

வாயில்நன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோம பந்தியும்
மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்        ... ... 72

ஒழுகிய சந்தனம் உயர்கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்        ... ... 76

ஆணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணி பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்        ... ... 80

கருணைபொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்        ... ... 84

ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேல்குடை ஒருகை தண்டாயுதம்        ... ... 88

ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை        ... ... 92

இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்துகொண் டாடத்
தானவர் அடியர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்ய        ... ... 96

சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சத்த ரிஷிகள் சாந்தக மென்னச்        ... ... 100

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்        ... ... 104

நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய        ... ... 108

ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன
ஏவல் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தர்வர் பாடிக் கவரிகள் வீசிச்        ... ... 112

சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க        ... ... 116

குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல் உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேந்த        ... ... 120

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க        ... ... 124

மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்        ... ... 128

வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்        ... ... 132

சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலறக் குலத்தை அறுத்துச் சயித்து        ... ... 136

விடுத்தவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்பதி செந்தூர்        ... ... 140

திருவாவி நன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலிமலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை        ... ... 144

கண்ணிய மாவூற்றுக் கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்        ... ... 148

பதினா லுகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந் (து) அடியர்தம்
பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க ...
கேட்ட வரமும் கிருபைப் படியே        ... ... 152

தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக் (கு) அருள்சண் முகனே        ... ... 155

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 157

இன்றைய சஷ்டி விரத ஐந்தாம் நாளில் குன்றுதோறாடும் கவசம் ஓதி முருகப் பெருமான் அருளை அனைவரும் பெறுவோம். இன்னும் கந்தனைப் பற்றுவோம் ...போற்றுவோம். இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் வாழ்வில் குருவருளும் திருவருளும் பெற அறுபடை வீடு கந்தக் கடவுளிடம் வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

 திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருச்சீரலைவாய் மாசித் திருவிழா அழைப்பிதழ் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/02/2020_27.html

 திருச்சீரலைவாய் ஆவணித் திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_20.html

 திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (7) - https://tut-temples.blogspot.com/2019/11/7.html

 திருச்செந்தூரின் கடலோரத்தில்... குருநாதரின் அரசாங்கம் ! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_5.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_12.html

No comments:

Post a Comment