"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, November 17, 2020

அழகென்ற சொல்லுக்கு முருகா - கந்த சஷ்டி சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் முருகனின் அருளில் இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். அனைவருக்கும் கந்த ஷஷ்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். எத்தனை பதிவுகள் கொடுத்தாலும் முருகன் அருள் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள குமரனின் தரிசனம் பெற இங்கே விரும்புகின்றோம். மேலும் முருகனின் அன்புக்கடலில் நீந்த இந்தப் பதிவில் விரும்புகின்றோம். அழகென்ற சொல்லுக்கு முருகா என்று பதிவின் தலைப்பு இந்தப் பதிவிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம். ஆம். கண்களுக்கும் விருந்தும், நம் மனதிற்கும் விருந்தும் நம் முருகப் பெருமான் தர இருக்கின்றார்.




கந்த ஷஷ்டி வழிபாடு மிக மிக உயரிய வழிபாடு ஆகும். ஷஷ்டி காலத்தில் 6 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வது நம் ஆன்ம வளர்ச்சிக்கு உகந்தது. இதில் ஆரோக்கியமும் மேம்படும். நம் ஆன்மிக நிலையும் மேம்படும். இந்த விரதம் நம் ஊனினை உருக்கி, நம் உள்ளொளி பெருக செய்கின்றது. இதுவே விரதத்தின் அடிப்படை செய்தி ஆகும். இதனை உணர்த்தவே நம் முன்னோர்கள் மாதம் முழுதும் ஏகாதசி விரதம், வெள்ளிக்கிழமை விரதம், முருகனுக்கு என ஷஷ்டி, கிருத்திகை விரதம், அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம் என வகுத்துள்ளனர். அவரவர் வசதிக்கேற்ப இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். இவற்றுள் முருகப் பெருமானுக்கான விரதம் நம்மை மற்றொரு வழியில் சிந்திக்க வைக்கின்றது.

ஆம். நம் வீட்டில் தாயிடம் உணவு கேட்கின்றோம், தந்தையிடம் பொருள் பெறுகின்றோம். இது போன்ற குடும்ப உறவுகளிடம் ஒவ்வொன்று பெறுகின்றோம். இது போலவே நம் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு இறையிடம் ஒவ்வொன்றை வேண்டி பெறுகின்றோம். இல்வாழ்விற்கு பெருமாள், முக்தி பெற சிவம், அருள் பெற சக்தி என்று சொல்லும் போது , முருகப் பெருமானிடம் மட்டுமே நாம் ஞானத்தை வேண்டுகின்றோம். இந்த ஞானத்தை பெறும் போது அனைத்தும் அடங்கும். எனவே முருகப் பெருமான் விரதம் இந்த வழியில்  சிந்தித்து பார்க்கும் போது உயரிய ஒன்றாக கூறுகின்றோம்.

 கூடுவாஞ்சேரி குமரனின் இரண்டாம் நாள் தரிசனம் பெறலாமே 



 கூடுவாஞ்சேரி குமரனின் மூன்றாம்  நாள் தரிசனம் பெறலாமே 




அப்பப்பா..என்ன அழகு நம் முருகப் பெருமான். இந்த அலங்காரம் நம் அகங்காரத்தை வேரோடு நீக்கட்டும். இந்த அலங்கார தரிசனம் நம்மை கந்தர் அலங்காரம் நோக்கி சிந்திக்க வைக்கின்றது. நாம் நம்மை புறத்தே அலங்கரிக்கின்றோம். பொன் நகைகளை கொண்டு வெளியே அலங்காரம் செய்கின்றோம். அதே போல் அகந்தை உள்ள அகத்தையும் அலங்கரிக்க வேண்டும். இதற்கு பொன் முதலான நகைகள் பயன்படா. அக அலங்காரம் சஷ்டி விரதம் மூலம் கிடைக்கும். சஷ்டி விரத கடைசி நாளான சூரசம்ஹாரம் அன்று நம் மனதில் உள்ள ஆணவம் ,கன்மம், மாயை போன்ற சூரர்களை அழிக்க வேண்டும். இந்த வகையில் சிந்தித்து. பார்த்தால் நாம் கோயில்களில் இறைக்கு பூக்கள், பட்டாடை, நகைகள் கொண்டு அலங்காரம் செய்கின்றோம். இது நம் விருப்பத்தின் பேரில் தான் செய்யப்பட்டு வருகின்றது.இந்த அலங்காரம் நம் கண்களுக்கு மட்டுமே விருந்தாகும். ஆனால் நம் கருத்திற்கு விருந்தாக அமைவது கந்தர் அலங்காரம். இது தமிழால் செய்ய அலங்காரம். இது என்றுமே நிலைத்து நிற்கும் அலங்காரம். அனைத்துமே நமக்கு கொடுக்கும் அலங்காரம்.நம் புறத்தையும், அகத்தையும் அழகாக்கும் அலங்காரம். ஆம்.இதுவே கந்தர் அலங்காரம். 

கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகப் பெருமானின்  பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன. இந்த 108 பாட்டில் ஒரே ஒரு பாடலை மட்டுமே நாம் இங்கே காண இருக்கின்றோம்.


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத சொல்லுக்குத் துணையாவது 'முருகா' என்று கூறும் திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது திருமுருகப்பெருமானின்
பன்னிரண்டு  தோள்களும் ஆகும். அஞ்சுந்தன்மையுடைய தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான வேலாயுதமும் மயிலுமேயாகும். இந்தப் பொருளில் நாம் இரண்டு செய்திகளை சிந்திக்க இருக்கின்றோம். முதலாவது முருகா எனும் நாமம் பற்றியது ஆகும்.

முருகா!

மு’ என்றால் ” முகுந்தன்

‘ரு’ என்றால் ” ருத்ரன் ”

‘கா’ என்றால் ” பிரம்மா ”

இதனால் “முருகா ” என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.

இது மட்டுமல்ல.

” முகுந்தன் ” தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

” ருத்ரன் ” எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.

 ” பிரம்மா ” தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் ” முருகா ” என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

முருகா என்று கூறிக்கொண்டே அடுத்த செய்தி பார்ப்போம். அது "வேலை வணங்குவதே நம் வேலை" என்றும் கூறலாம். ஆம்! முருகப்பெருமான் அருள் நம்மை காக்கும் முன்பு வேல் நம்மை காக்கும்.அதனால் தான் வேலும் மயிலும் துணை என்று நாம் சொல்கின்றோம்.








வேலும் மயிலும் துணை 

வேலுண்டு வினையில்லை 
குகனுண்டு குறைவில்லை 
மயிலுண்டு பயமில்லை 
துணையுண்டு துன்பமில்லை 

இங்கு பார்க்கும் போது வேல் தான் முக்கியம். வேல் வழிபாடு வெற்றியைத் தரும். அது போல் மயிலும் துணை என்று காண முடிகின்றது. இதனைதான் நாம் மேற்சொன்ன பாட்டில் அருணகிரிநாதர் மொழியில் காண்கின்றோம்.

ஒரே ஒரு பாட்டில் பல செய்திகளை கந்தர் அலங்காரத்தில் உள்ள ஒரு பாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மீண்டும் முருகா..முருகா..முருகா..என்று கூறி, வேலை எப்போதும் வணங்கி, முருகன் அருளை நாம் பெறுவோம். இன்னும் சில தரிசனப் பதிவுகளை இங்கே தருகின்றோம்.


               செங்கற்பட்டு உயர் ஞான கோட்டத்தில் இரண்டாம் நாள் முருகப்பெருமான் தரிசனம்






அடுத்து சென்னை கந்தாஸ்ரமம் கந்தஷஷ்டி 2ஆம்நாள் காலை 10.மணிக்கு ஸ்ரீமுருகன் அபிஷேகம் மாலை  6.மணிக்கு"ராஜ அலங்காரம்" ஓம்முருகா அரோகரா  என்று கூறி தரிசனம் பெறுவோம்.






இந்த தரிசனத்தோடு, பதிவின் தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அழகென்ற சொல்லுக்கு முருகப் பெருமான் தான். இன்று வரை முருகப் பெருமானின் மூன்று தலங்களின் ஷஷ்டி கவசம் படித்துள்ளோம். 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

வேலை வணங்குவதே நம் வேலை! - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_23.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருச்சீரலைவாய் மாசித் திருவிழா அழைப்பிதழ் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/02/2020_27.html

 திருச்சீரலைவாய் ஆவணித் திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_20.html

 திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (7) - https://tut-temples.blogspot.com/2019/11/7.html

 திருச்செந்தூரின் கடலோரத்தில்... குருநாதரின் அரசாங்கம் ! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_5.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_12.html






No comments:

Post a Comment