அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம்மை எப்பொழுதும் முன்னின்று நடத்தும் முருகப் பெருமான் அருளால் கந்த ஷஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. அடுத்து திருக்கார்த்திகை தீப விழா வருகின்றது. ஒவ்வொரு விழாவும் அடுத்தடுத்து வருவது கண்டு சலிப்படைய வேண்டாம். திருவிழாக்கள் அன்பின் வெளிப்பாடு என்று பார்க்கும் போது அடுத்தடுத்து வருவது சரி தான். சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் 30.11.2019 அன்று மகேஸ்வர பூஜை செய்தோம். இந்த ஆண்டில் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டால் இன்னும் நாம் திருஅண்ணாமலை தரிசனம் பெறவில்லை. ஆனால் டிசம்பர் மாதம் கிரிவலம் மற்றும் மகேஸ்வர பூஜைக்கு நம் குருவிடம் வேண்டியுள்ளோம்.
நமது புண்ணிய பாரத தேசத்தில் - எண்ணற்ற தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளது. பல ஆலயங்கள் வனங்களில், நதியோரம், கடலோரம், ஏரிக்கரை மீது, மலைகள், குன்றுகள் மீதும், மலை அடிவாரம் என்று பல இடங்களிலும், புராதன சிறப்புகளுடன் அமைந்துள்ளன.அப்படி அமைந்துள்ள ஆலயங்களில் நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழும், மகிமையும் பெற்று அருள்கின்றன. இவற்றில் பாடல் பெற்றதும், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என அக்னி தலமாக போற்றப்படுவதும் திருஅண்ணாமலை ஆகும். நம் தளத்தில் சிறிய அளவில் திருஅண்ணாமலை பற்றி தொட்டுக் காட்டியுள்ளோம். கிரிவலம் பற்றியும் சிறிய அளவிலே பதிவுகள் உள்ளது. இந்த தலம் மூர்த்தி,தலம் ,தீர்த்தம் என்றளவில் பெருமை உடையது. ஏன் இங்கு கிரிவலம் பிரசித்தம்..அந்த அண்ணாமலையார் இங்கே மலை ரூபத்தில் அல்லவா காட்சி தருகின்றார். சிவனாகநினைத்தால் அவர் சிவனாக இருப்பார். மலையாக நினைத்தால் அவர் அங்கே மலையாக இருப்பார். பார்ப்பவரின் கண்களுக்குத் தான் இவை புலப்படும். கிரிவலம் முடித்து கண்ணார் அமுதக் கடலை அன்னையுடன் காண ஒன்பது ராஜ கோபுரங்களுடன், ஆறு பிரகாரங்கள் அங்கே உள.
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.
மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இனி தித்திக்கும் திருஅண்ணாமலை தரிசனம் காண இருக்கின்றோம்.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2020
மூன்றாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் அலங்காரம் 22..11..2020. ஓம் நமசிவாய வாழ்க
தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html
மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html
No comments:
Post a Comment