"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, November 16, 2020

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கந்த ஷஷ்டி விரதம் பற்றிய பதிவுகள் நம் தளத்தில் கண்டு வருவீர்கள் என்று நாம் விரும்புகின்றோம். இதற்கு முந்தைய பதிவில் முருகப் பெருமானின் முதல்  படை வீடாகிய திருப்பரங்குன்றம் பற்றியும், இரண்டாம் படை வீடாகிய திருச்செந்தூர்  பற்றியும் சிறிது கண்டோம். மேலும் திருப்பரங்குன்றம் கவசமும், திருச்செந்தூர் கவசமும் படித்தோம். இன்றைய பதிவில் முருகப் பெருமானின் மூன்றாம்  படை வீடான திருவாவினன்குடி  பற்றி அறிய இருக்கின்றோம். திருவாவினன்குடி என்ற பெயர் புதிதாக உள்ளதா? 

முருகப்பெருமானை பற்றி ஒரு பதிவில் உணர்த்த முடியுமா? என்றால் அது முடியாது. அது போலவே திருவாவினன்குடி   தலத்தை பற்றியும் நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம்.

அனைவருக்கும் தெரிந்த பழம் நீ தலத்தினை பற்றி சித்திரக் கதை மூலம் கீழே தருகின்றோம்.கைலாயத்தை விட்டு பழனி மலைக்கு முருகப் பெருமான் ஏன் வந்தார் என்பதையும் பழனி மலைக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பதையும் விளக்கும் சித்திரக் கதை. 


வானவரும் முனிவர்களும் சிவபெருமான் வாழும் கயிலை மலைக்குச் சென்று அவரை வழிபடுவது வழக்கம். ஒருநாள் அமைதி குழவிக் கொண்டு இருந்த திருக் கைலாய மலையில் முனிவர்கள் தியானத்தில் இருக்க, நந்தி தேவர் சிவன் பார்வதியின் அருளை வேண்டி நின்றிருக்க, முருகப் பெருமான் இறைவனின் பாதத்தின் அடியில் அமர்ந்திருக்க, கணபதியோ தனது துதிக்கையை அசைத்து நர்த்தனம் அடிக் கொண்டு இருக்க அந்தக் காட்சியைக் கண்டு பரமசிவனும் பார்வதியும் ஆனந்தக் களிப்பில் உள்ளம் பறி கொடுத்தவண்ணம் இருந்தார்கள். அப்போது வீணையின் நாதத்துடன் நாரதர் '' அரகர சம்போ மகாதேவா' என்று கூறிக்கொண்டே அங்கு வந்தார். சிவபெருமான் நாரதாரை அருள் கனிந்த பார்வையுடன் வரவேற்றவுடன் இறைவனையும் அம்மையையும் வணங்கிய நாரதர் அவர்களிடம் ஒரு மாம்பழத்தை சமர்பித்தார். 


மஞ்சள் பொன் போன்ற பளபளக்கும் மாம்பழத்தை தங்களுக்கு இறைவன் தரமாட்டாரா என்று ஆவலுடன் வினாயகரும், முருகப் பெருமானும் காத்திருந்தார்கள். அந்தக் கனியோ தன் மீது தனது அடியார்கள் வைத்திருந்த அன்பின் கனிவை எடுத்துக் காட்டுவதாகவும் இணையில்லாத சுவையும் கொண்டதாக இருந்ததினால் தனது இரு மகன்களுக்கும் ஒரு சோதனை வைத்து அதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பரிசாக அதைத் தருவதாக முடிவு செய்தார். அந்தப் போட்டி என்ன என்றால் ஒரு நொடிப் பொழுதில் இந்த உலகை வலம் வந்து தன் முன் நிற்க வேண்டும் என்பதே. தந்தை இட்டக் கட்டளைக் கேட்ட மைந்தர்கள் ஒருகணம் வியந்தாலும் மறுகணம் உலகை சுற்றி வரச் சென்றார்கள். அதை புன்முறுவலோடு உமையவள் பார்த்துக் கொண்டு நின்றார். 


இளமையின் ஆற்றலும், தீரமும், வேகமும் கொண்ட கந்தவேல் எனும் முருகன் 'ஒரு நொடிப் பொழுதில்தானே இந்த உலகத்தை சுற்றி வர வேண்டும். இதோ என் நீல மயில் மீது அமர்ந்து சுற்றி விட்டு வருகிறேன்' என எண்ணியபடி உடனே தனது பயணத்தைத் துவங்கினார். தங்க ரதம் போல ரத்தத்தைப் போல இருந்த அந்த நீல மயிலோ தனது சிறகை விரித்துப் அகில உலகையும் சுற்றி வளைத்துப் பறந்தது. 


பிரணவ மந்திரத்தின் சொரூபமாய் விளங்கும் மூஷிக வாகனனோ இந்த உலகின் அனைத்து உயிர்களிலும் உள்ளவரே இறைவன் என்பதினால் அம்மையப்பராக அமர்ந்திருந்த தந்தையையும், தாயையும் நொடிப் பொழுதில் சுற்றி வந்து அவர்கள் முன் சென்று அவர்களை வணங்கி நின்றார். 'விநாயகா, நீ செய்தது என்ன?' என்று பரமன் கேட்க, கணபதியோ 'தாங்களே இந்த உலகமாக இருக்கின்றீர்கள். உங்களிடத்தில் இருந்துதான் அனைத்து உயிர்களும் பிறப்பு எடுத்து அழிவையும் சந்திக்கின்றன. அதனால் தங்களை வலம் வருவதும் உலகை சுற்றுவதும் ஒன்றே' என்றார். அதைக் கேட்ட அங்கிருந்த தேவர்களும், பிற கடவுட்களும் அதை பாராட்ட, அம்மையப்பன் உவகை அடைந்து மாம்பழத்தை வினாயகருக்குக் பரிசாகக் கொடுத்து வாழ்த்தினார். 


ஆனைமுகன் கனி பெற்று ஆனந்தம் பெற்ற நேரத்தில் ஆண்ட உலகையும் நொடிப் பொழுதில் வலங் கொண்டு வெகு வேகமாக வந்த வேலன் அந்தப் பழத்தை பெற்றிட தந்தையின் முன்னால் சென்று நின்றார். ஆனால் அதை ஏற்கனவே கணபதிக்கு கொடுத்து விட்டார்கள் என்பதைக் கண்டு மனதில் கோபமுற்ற முருகன் திடுக்கிட்டார். அப்போது சிவபெருமான் ஏற்கனவே நொடிப் பொழுதில் உலகை விநாயகர் வலம் வந்து விட்ட சிறப்பை எடுத்துக் கூறினார். ஆனால் குமரனின் இதயம் இந்த விளக்கத்தை ஏற்காமல் குமுறியது. துடிதுடித்த அவருடைய செவ்விதழ்கள் துடித்துச் குங்குமம் போலச் சிவந்தன. 


முருகப் பெருமான் கோபத்தோடு மயில் மீது ஏறி அமரச் சென்றார். அதைக் கண்ட பார்வதி அம்மையின் தாய்மை உள்ளம் பதைபதைத்தது. அதை கண்டு அவர் அருகில் ஓடி வந்த பார்வதி ''கண்ணே, கதிர்வேலா நில்'' என்று அழைத்தபடி கையேந்தி முருகனை தனது மார்புடன் தவிழ வந்தாள். அதே சமயம் விநாயகர் என்ன செய்வது எனக் குழம்பித் தடுமாறி நின்றார். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் குமரனோ மயில்மீது ஏறி அமர்ந்து கொண்டு அங்கிருந்து பறந்து சென்றார். நடந்த நாடகம் உலக மக்களின் நன்மைக்காக நடந்த நிகழ்ச்சி. அது கடவுளின் ஒரு 'அருள் விளையாட்டு'. இக்கோபத்தை 'அருட் கோபம்' என்று கூடக் கூறலாம். 


கயிலையில் இருந்து புறப்பட்ட முருகன் தென் கோடியில் இருந்த திருவானினன் எனும் திருததலத்தில் உள்ள குன்றின் மீது குடி அமர்ந்தார். ஷண்முகனின் சினத்தைத் தணித்து சமாதானப்படுத்த சிவனும்,சக்தியும் திருவாவினன் குடிலில் வந்து எழுந்தருளினார்கள். 'நீயே பழம், நீயே பழம்...ஆகவே இனி அந்தப் பழத்தைக் குறித்து நீ நினைக்காதே' என்று கூறி அவரை சமாதானப் படுத்தினார்கள். அதைக் கேட்டு சமாதானம் அடைந்த முருகனும் அங்கிருந்தபடியே அனைவருக்கும் அருள் புரிந்து வரலானார். 



திருவானினன்குடியில் 'எனக்கு எதுவுமே தேவை இல்லை இல்லை' என்று ஆண்டியைப் போன்ற கோலத்தில் நின்றவண்ணம் அனைவருக்கும் அருள் மழையைப் பொழிகிறார். அவருடைய முகமோ ஆயிரம் சூரிய ஒளியைப் போன்று பிரகாசிக்கின்றது . அருள் மழை பொழிந்த வண்ணம் அங்குள்ளவர் நெற்றியில் திலகமும், சந்தனமும், திருநீறும் பூசி நிற்கையில் அழகு செறியும் அவருடைய மார்போ நம்மைப் பாதுகாக்கும் அரண் போல காணப்படுகின்றது. அற்புதமான காட்சியில் இடது தொடைமீது இடது கையை வைத்தபடி நின்றிருக்க, கணுக்கால் மூட்டுகளில் தங்க நகைகள் மினுமினுக்க, ஞான வேலும் சேவல் கொடியையும், நீல மயிலையும் தன் பக்கத்தில் வைத்திருந்து இடையில் உடுத்திய துணியுடன் அற்புதமாக காட்சி அளிக்கும் முருகப் பெருமானை "பழம் நீ...பழம் நீ" என வாழ்த்தியதினால் பழனி மலையில் பழனி ஆண்டவராக காட்சி அளிக்கின்றார். 




"முருகா...உன்னை நாங்கள் உளமாற விரும்புகிறோம் " 

அப்பப்பா ..படிக்கவே தித்திப்பாக உள்ளது அல்லவா? இது தான் முருகன் அருள். நம்மை என்றும் முன்னின்று நடத்தும் அருள். 


முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி. மீ, தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருஆவினன்குடி சிறப்பு

குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், "திருஆவினன்குடி' என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார் .பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம் .இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டுமும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை .பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.

முருகனுக்கு அன்னாபிஷேகம்

பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. 

முருகனைப் பல வழிகளிலும் வழிபடலாம் என்றாலும் பக்தி மார்க்க வழிபாடே சிறந்த மார்க்கம். பாத யாத்திரை என்ற நடைப் பயணம் அதில் ஒரு மார்க்கம். கடவுளின் அருளைப் பெறுவதற்காகவே உண்மையில் பாத யாத்திரை செய்கின்றனர்.  ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அவரை வணங்குவதின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற அவரை வணங்குகின்றனர்.

மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை.

பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.

முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியது   என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.
 

அமைவிடம் :

மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.

இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாக  அகநானூறு கூறுகிறது.

திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும்  வரலாற்றை விளக்குகின்றன.

பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.

முருகனின் திருவிளையாடல் :

பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தபடியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும்,   இடும்பனுக்கு  அருளவும்  விரும்பி   திருவிளையாடலை   நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது,முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு  அழைத்து   வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார். இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப்புறப்படும் போது காவடியைத்தூக்க   முடியாமல் திண்டாடினான்.ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு  சிறுவன்  கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக்  கண்டான்.  இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று  உரிமை கொண்டாட,கோபமுற்ற இடும்பன்    அச்சிறுவனைத்  தாக்க முயன்றான்.    
அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.இதைக் கண்ட  அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட,  முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத்  தனது காவல் தெய்வமாக நியமித்தார்.அப்போது முருகன்,இடும்பன் போல்    
காவடியேந்தி  சந்தனம்,பால்,மலர்  போன்ற  அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு  எடுத்து  வருபவர்களுக்கு  அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.இடும்பன் சன்னதி  பழனி மலைமேல் உள்ள கோயிலுக்கு மலை ஏறும் நடைவழிப்பாதையில் உள்ளது.

அப்போது முதல் முருகனுக்கு  இந்த காவடி எடுக்கும் பழக்கம்  வழக்கமாகி  விட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும்  இரண்டு    சுமைகளாக  சரிசமமாக இருக்கிறது.மனிதனாகப்  பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கத்தான் வேண்டும்.இதற்கு கடவுள்    பக்தி இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக்கோலாக உள்ளது.

திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி கோவிலில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார்.   குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்ன்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள்.   பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.    மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. இப்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தபடை வீட்டில்   இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.  ஒவ்வொரு  அபிசேகத்துக்கும்   அலங்காரம்   மாறிக்கொண்டு  இருக்கும்;   விபூதி  காப்பு   அல்லது  ராஜஅலங்காரம்   பார்த்து  வீட்டுக்கு  திரும்புவது  சிறப்பானதாகும்.  

திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.  சென்னையிலிருந்தும்  பாத யாத்திரை  செல்கிறார்கள். 

பழனிக்கு வருபவர்கள் சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தத்தை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.

இது போன்று இத்தல முருகப் பெருமானை பற்றி மீண்டும் தனிப்பதிவில் உணர்வோம். பதிவின் நீளம் கருதி, அடுத்து திருவாவினன்குடி சஷ்டி கவசம் காண இருக்கின்றோம்.

காப்பு

அமரர்இடர்தீர அமரம் புரிந்த 

குமரன் அடி நெஞ்சே குறி,


துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 

பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 

சஷ்டி கவசந்தனை


திருவா வினன்குடி சிறக்கும் முருகா

குருபரா குமரா குழந்தைவே லாயுதா

சரவணை சண்முகா சதாசிவன் பாலா

இரவலர் தயாபரா ஏழைபங் காளா

பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா

வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா

இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா

திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா

இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்

பட்சத்துடனே பராசக்தி வேலதாய்


வீர வாகு மிகுதள கர்த்தனாய்

சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா

கயிலாய மேவும் கனகசிம் மாசனா

மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா

அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா

சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய

நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்

கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா

திருவரு ணகிரி திருப்புகழ் பாட

இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா


ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்

பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா

எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி

விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா

குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து

உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்

சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்

அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்

வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்

தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்


சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்

ஆரணம் ஓதும் அருமறை யடியார்

தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்

ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி

திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம

பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம

ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம

கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம

சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம

உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம


எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம

சல்லாப மாகச் சண்முகத் துடனே

எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி

உல்லா சத்துறும் ஓங்கார வடிவே

மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை

சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை

வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்

சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை

கைலாச மேருவா காசத்தில் கண்டு

பைலாம் பூமியும் பங்கய பார்வதி


மேலும் பகலும் விண்ணுரு வேத்தி

நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை

கங்கை யீசன் கருதிய நீர்புரை

செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை

அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்

முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி

வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி

ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்

ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்

பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை


தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு

மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி

அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி

மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்

பாகமாய் ரதமும் பகல்வழி யாரை

சாகா வகையும் தன்னை அறிந்து

ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்

விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி

சந்திர சூரியர் தம்முடன் அக்கினி

அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்


சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை

மந்திர அர்ச்சனை வாசிவ என்று

தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்

ஆறு முகமாய் அகத்துளே நின்று

வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து

யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி

மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு

வாலைக் குழந்தை வடிவையும் காட்டி

நரைதிரை மாற்றி நாலையும் காட்டி

உரைசிவ யோகம் உபதேசம் செப்பி


மனத்தில் பிரியா வங்கண மாக

நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து

அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி

மதியருள் வேலும் மயிலுடன் வந்து

நானே நீயெனும் லட்சணத் துடனே

தேனே என்னுளம் சிவகிரி எனவே

ஆறா தாரத்(து) ஆறு முகமும்

மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்

கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க

தனதென வந்து தயவுடன் இரங்கிச்


சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்

எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து

அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்

தட்டாத வாக்கு சர்வா பரணமும்

இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்

துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்

எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்

வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே

அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்

சமுசார சாரமும் தானேநிசமென


வச்சிர சரீரம் மந்திர வசீகரம்

அட்சரம் யாவும் அடியேனுக் குதவி

வல்லமை யோகம் வசீகர சக்தி

நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்

சகலகலை ஞானமும் தானெனக் கருளி

செகதல வசீகரம் திருவருள் செய்து

வந்த கலிபிணி வல்வினை மாற்றி

இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்

கிட்டவே வந்து கிருபை பாலிக்க

அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்


துட்டதே வதையும் துட்டப் பிசாசும்

வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்

வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை

பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க

பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க

பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி

உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்

சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி

வேலா யுதத்தால் வீசிப் பருகி

மழுவிட் டேவி வடவாக் கினிபோல்


தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்

சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்

மதம்பெறும் காளி வல்ல சக்கரம்

மதியணி சம்பு சதாசிவ சக்கரம்

பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்

திருவை குண்டம் திருமால் சக்கரம்

அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்

சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்

விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்


ஏக ரூபமாய் என்முனே நின்று

வாகனத் துடன்என் மனத்துள் இருந்து

தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்

இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்

வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்

உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்

தந்திர மந்திரம் தருமணி அட்சரம்

உந்தன் விபூதி உடனே சபித்து

கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க

எந்தன் மனத்துள் எதுவேண் டினும்


தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்

சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்

சரணம் சரணம் சட்கோண இறைவா

சரணம் சரணம் சத்துரு சம்காரா!

சரணம் சரணம் சரவண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்!



இன்றைய சஷ்டி விரத மூன்றாம்  நாளில் திருவாவினன்குடி   கவசம் ஓதி முருகப் பெருமான் அருளை அனைவரும் பெறுவோம். இன்னும் கந்தனைப் பற்றுவோம் ...போற்றுவோம். இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் வாழ்வில் குருவருளும் திருவருளும் பெற அறுபடை வீடு கந்தக் கடவுளிடம் வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருச்சீரலைவாய் மாசித் திருவிழா அழைப்பிதழ் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/02/2020_27.html

 திருச்சீரலைவாய் ஆவணித் திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_20.html

 திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (7) - https://tut-temples.blogspot.com/2019/11/7.html

 திருச்செந்தூரின் கடலோரத்தில்... குருநாதரின் அரசாங்கம் ! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_5.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_12.html

No comments:

Post a Comment