"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 2, 2021

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆடி கிருத்திகை. அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களும் இன்று திருவிழாக்கோலம் நடைபெறும். ஆனால் தற்போதைய சூழ்நிலையால் வழக்கமாக கொண்டாட்டங்கள் ஊரடங்கால் எங்கும் காண இயலவில்லை. நாமும் இன்றைய ஆடி கிருத்திகை தரிசனம் பதிவு பற்றி யோசித்த போது, நமக்கு கந்தர் அனுபூதியில் இருந்து எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ என்ற பதமே உணர்த்தப்பட்டது.


இதனையொட்டியே இன்று முருகப்பெருமான் அருளைப் பெற இருக்கின்றோம். பொதுவாக கிருத்திகை என்றாலே நமக்கு சிறப்பு தான். இருந்தாலும் ஆடிக் கிருத்திகை என்றால் சிறப்பிலும் சிறப்பு. நமக்கு ஆடி கிருத்திகை என்றாலே வேல் மாறல் பாராயணம் தான் நினைவிற்கு வரும். இரண்டு முறை பொங்கி மடாலயத்தில் நடைபெற்று வரும் வேல்மாறல் அகண்ட பாராயணத்தில் நாம் கலந்து கொள்ளும் வாய்ப்பு முருகனருளால் நமக்கு கிடைத்தது.

வேல்மாறல் என்று இணைய வெளியில் கிடைத்த தொகுப்புகளில் இருந்த ஒரு முக்கியமான,அடிக்கோடிட்டு உணரவேண்டிய வார்த்தை - வினைகள் தீர்க்கும் வேல்மாறல் என்ற பதமே. நாம் செய்த தீவினையை அறுப்பதற்கு வேல்மாறல் என்ற சர்வ ரோக நிவாரணி உதவும் என்பது இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இது கவசமாய் இருந்து நம்மை காக்கும்.கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரமே ஆகும்.மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.



"திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை
விருத்தன் எனது உளத்தில் உறை
கருத்தன் மயில் நடத்து குகன் வேலே."

கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது "வேல் மாறல்"

வேல்மாறல் என்பது முருகனை போற்றி அருணகிரிநாதர் பாடியது. எப்படியான கடும் துன்பங்களில் இருந்தும் உடனடி நிவாரணியாக செயல்படுவது வேல்மாறல் பாராயணம். வேல்மாறல் பாராயணம் பாடி தங்களின் பிரச்சனைகளில் இருந்து இன்றும் விடுபட்ட பக்தர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கடும் வீரியமுடைய மந்திரம்தான் வேல்மாறல்.அருணகிரி நாதர் பாடிய ஒன்பது நூல்களுல் ஒன்றுதான் திருவகுப்பு. அந்த திருவகுப்பில் வேல் பற்றி கூறப்படும் 16 அடிகளை வேலூரின் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அவர்கள் திரும்ப திரும்ப முன்னும் பின்னும் வருமாறு கொஞ்சம் மாற்றி இன்னும் சக்தி ஏற்றப்பட்ட மந்திரம்தான் வேல்மாறல். தொடக்கத்திலும் முடிவிலும் கந்தரலங்கார பாடலை முன்னும் பின்னும் சேர்த்து பாடலின் பலனை பல மடங்கு பெருக்கியுள்ளார் சுவாமிகள்.

எந்த ஒரு பாராயண முறைக்கும் பலன் தெரியவேண்டும் என்றால் சிறிது அவகாசம் பிடிக்கும். குறைந்தது அரை மண்டலமோ அல்லது ஒரு மண்டலமோ அவகாசம் தேவை.வேல்மாறல் ஒரு பரம ஔஷதம். நமது அத்தனை பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு உள்ளது. வேல்மாறல் வரிகளை சற்று ஊன்றிப் பார்த்தாலே அது புரியும். எத்தனை பேர் ஊன்றிப் பார்த்தீர்கள்?நோய், பகை, கடன், உறவுகளில் பிரச்னை என அனைத்திற்கும் அதில் தீர்வாக வரிகள் உண்டு. அது தான் அதன் சிறப்பு.

துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் |

இதன் அர்த்தம் பார்த்தாலே புரியும். முருகனை வணங்கும் அடியார்களுக்கு யாரேனும் தீமை நினைத்தால், அவர்களுடைய குலத்தையே வேல் சென்று அழித்துவிடுமாம். இந்த வரிகளை எழுதியது அருணகிரிநாதர். வேல் வகுப்பில் இதை அவர் கூறியிருக்கிறார்.

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிற்காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில், சேஷாத்திரி ஸ்வாமிகளின் கட்டளையையடுத்து சச்சிதானந்த சுவாமிகள் வள்ளிமலைக்கு வந்தபோது இதன் சக்தியை உணர்ந்து இதன் வரிகளை முன்னும்பின்னும் மாற்றிப்போட்டு இதை உருவாக்கினார். அப்படி மாற்றிப் போட மாற்றிப்போட இதற்கு சக்தி பன்மடங்காகிவிட்டது. (சூரியனுக்குள் ஏற்படும் அணுப்பிளவு, அணுசேர்க்கை போல!)

இதற்கு யந்த்ர வடிவம் கொடுத்து வேல்மாறல் யந்த்ரத்தை அறிமுகப்படுத்தியது ஸாதுராம் ஸ்வாமிகள். இவர் வள்ளிமலை சுவாமிகளின் நேரடி சீடர். வேல்மாறல் யந்திரம் தங்களுக்காக !




வேலமாறல் யந்திரம்(velmaral yanthra)


வேல்மாறல் மஹாமந்த்ர பாராயணப் பலன்!

கால்மாறி ஆடும் இறை கால்முளையாம் கந்தர்கைவேல் வகுப்பைக் கண்டு
நூல்மாரி வரத்தொகுத்து நோய்பிலிபேய் ஸுனியம்எலாம் நூற வேண்டி
'வேல்மாறல்' எனும்பேரால் வகுத்தருளி வள்ளிமலை மேதை வள்ளல்
பால்மாறல் இன்றிஉத(வு) அரிய மந்த்ரஜபப் பயன்மிக் காமே!
- ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகள்

இதன் பொருள் என்ன தெரியுமா?

மதுரையில் ராஜசேகரப் பாண்டியனுக்காக இடது காலை கீழே வலது காலை மேலே தூக்கி, காலை மாற்றி நடனம் ஆடிய நடராஜப் பெருமானின் (கால் முளை) மைந்தனாகிய கந்தப் பெருமானின் கையில் உள்ள வேலைப் புகழ்ந்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். அந்த வேல் வகுப்பில் உள்ள அடிகள் மாறி மாறி வரும்படியாகத் தயக்கமின்றி தொகுத்து வியாதிகள், பேய், பில்லி, சூனியம், போன்றவையால் வரும் கஷ்டங்கள் எல்லாம் பொடிப் பொடியாக ஆகுமாறு வகுத்து, அதற்கு 'வேல் மாறல்' என்று பெயரிட்டார் மகாமேதையாம் வள்ளிமலைத் திருப்புகழ் ஸச்சிதாநந்த ஸ்வாமிகள். அந்த அருமையான யந்த்ர மந்த்ரத்தை ஜெபிப்பதால் வரும் பயன் மிக மிக அதிகமாகும். * நூற வேண்டி என்றால் - சுக்கு நூறாக வேண்டி என்று பொருள்.

ஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

இந்த அற்புதத் திருநாளில் அனைவரும் வேல்மாறல் பாராயணம் செய்து முருகப் பெருமானின் அருள் பெற வேண்டுகின்றோம்.

பதிவின் ஆரம்பத்திலே நாம் பெற்ற தரிசனம், கூடுவாஞ்சேரி முருகப் பெருமான் தரிசனம் ஆகும். அடுத்து அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற இருக்கின்றோம்.



நமக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் முருகப் பெருமானின் பதத்தை பற்றுவோம். இந்தப் பற்று ஒன்றே போதும். இந்த கலியுக துன்பங்களில் இருந்து நாம் விடுபட கந்தன் பாதம் பற்றி, போற்றுவதை தவிர வேறு உபாயம் நமக்கில்லை. 

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொல்வார்கள். அது போல் பிள்ளை எப்படி இருந்தாலும் தாயன்பு தான் அன்பின் ஊற்று. தாயின் அன்பின் மூலம் தான் தந்தையை பற்றி அறிகின்றோம். மாதா, பிதா, குரு ,தெய்வம் என்ற வரிசையில் நமக்கு முருகப்பெருமான் தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக இருக்கின்றார். 

    உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
    கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா! செந்தில் வாழ்வே!

    அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
    'முருகா!' என்று ஓதுவார் முன்.

    முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
    மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
    தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான்." 

என்று அனுதினமும்  முருகப் பெருமானை போற்றி வழிபடுவோம். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாம் தினமும் கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றோம். இன்றைய நிகழ்வில் முருகன் அருள் முன்னிற்க வேல்மாறல் பாராயணம் செய்ய உள்ளோம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. வெற்றிவேல். முருகனுக்கு அரோகரா....

முருகா! முருகா!! முருகா!!!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

No comments:

Post a Comment