அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று கிருஷ்ண ஜெயந்தி.இந்து தர்மத்தில் தெய்வங்களுக்கு பஞ்சமில்லை. எனினும், சில தெய்வங்களை நாம் தெய்வங்களாக மட்டும் பார்க்கிறோம். சில தெய்வங்களையோ, தோழனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, குருவாக, காதலனாக, குழந்தையாக என பல வடிவங்களிலும் கற்பனை செய்து கொள்கிறோம். அப்படி அனைத்து வகைகளிலும் நம் மனங்களில் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வம்தான் கண்ணன்!!
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வடும் தேய்பிறை அஷ்டமி கிருஷ்ணாஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி என்று பல பெயர்களில் கண்ணனின் பிறந்தநாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகின்றது.
தேவகிக்கும் வசுதேவருக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணன், கோகுலத்தில் யசோதைக்கும் நந்தகோபருக்கும் மகனாக வளர்ந்தார். கன்ணனின் வாழ்க்கையே ஒரு பாடம்தான். வாழ்வின் அனைத்து சிக்கல்களிலும் இருந்து எப்படி வெளி வருவது என்பதையும், தர்மமும், கடமை உணர்ச்சியும் என்றும் தவறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் பகவத் கீதையில் உபதேசம் செய்தார்.
இன்றைய நன்னாளில் இன்றைய பதிவில் ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்காக நாம் படித்து ரசித்த கதை ஒன்றை இங்கே பகிர்கிறோம். தினமலர் ஆன்மீக மலரில் வெளியான தொடர் ஒன்றில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய கதை இது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த ஆன்மீக எழுத்தாளர். அடக்கமே உருவானவர். அவரை பற்றி நேரம் வரும்போது நிறைய பகிர்கிறோம்.
உள்ளம் உருகி குருவாயூர் கண்ணனை வழிபட்ட பக்தர்கள் வரிசையில் குரூரம்மைக்கும், பில்வமங்களனுக்கும் சிறப்பான இடம் உண்டு. ஒருவர் பெண். இன்னொருவர்ஆண்.
குருவாயூரில் இந்த இருவரது பக்தியும் பிரசித்தம். கண்ணனை நேரில் கண்டவர்கள் என்று, இந்த இருவரைப் பார்த்ததும் மக்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதுண்டு.
காலில் கொலுசு கொஞ்ச கொஞ்ச குரூரம்மை வீட்டிற்கு நடந்து செல்லும் சின்னக் கண்ணன் உரிமையோடு அவள் மடியில் ஏறி அமர்ந்து கொள்வான். அவள் ஊட்டிவிட்டால்தான் உண்பேன் என்று அடம் பிடிப்பான். அவளும் கண்ணன் வந்து தன் கையால் சாப்பிடாதவரை, தான் சாப்பிட மாட்டாள்.
மற்ற இடங்களில் நைவேத்யம் என்பது கண்ணன் முன்னால் உணவை வைத்து அவன் உண்பதாக எண்ணும் பாவனை தானே! ஆனால், குரூரம்மை வீட்டில் கண்ணன் உண்மையாகவே வெண்ணெயும், நாவல் பழமும் கேட்டுக் கேட்டு உண்பான். "போதும்! உன் வயிற்றுக்கு ஆகாது. எத்தனை சாப்பிட்டு விட்டாய்!'' என்று அவன் கையில் உள்ளதைப் பிடுங்கி எடுத்து வைத்து அவனுக்கு முத்தம் கொடுப்பாள் குரூரம்மை.
அவள் தன்னை யசோதை போல நினைத்துக் கண்ணனிடம் பக்தி செலுத்தினாள். குரூரம்மை போல் கண்ணனை நேரில் காணும் பாக்கியத்தைப் பெறாவிட்டாலும், மூவுலகையும் ஈரடியால் அளந்த கண்ணன், தன் சின்னஞ்சிறு அடிகளை வைத்துக் கொலுசு கொஞ்சக் கொஞ்ச அவள் வீட்டில் நடக்கும் சப்தத்தைப் பலர் கேட்டதுண்டு.
பில்வமங்களனது கிருஷ்ண பக்தி குரூரம்மையின் பக்திக்குச் சிறிதும் சளைத்ததல்ல. ஆனால், அவன் பக்தி சற்று ஆக்ரோஷமான பக்தி. கண்ணனையே உரிமையோடு அதட்டும் பக்தி.
"என்ன ஓயாமல் புல்லாங்குழல் வாசிக்கிறாய்? வாய் வலிக்காதா? அந்தப் பிஞ்சு உதடுகளுக்குச் சற்றேனும் ஓய்வு வேண்டாமா?'' என்று புல்லாங்குழலைப் பிடுங்கி வைத்துக் கொள்வான். புல்லாங்குழலைத் தருமாறு கண்ணன் கெஞ்சியவாறு பில்வமங்களன் பின்னால் ஓட, "நீ ஓய்வில்லாமல் ஊதுவதை அனுமதிக்க மாட்டேன்,'' என்று பில்வமங்களன் புல்லாங்குழலோடு ஓட குருவாயூர்க் கோயில் முழுவதும் இந்த இருவரின் ஓட்டத்தால் ஒரே அமர்க்களம் தான்.
பக்தர்கள் பில்வமங்களனின் பரவசத்தைப் பார்ப்பார்கள்.
கண்ணன் ஓடும் சப்தத்தைக் கேட்பார்கள். கண்ணனை தரிசிக்க இயலாவிட்டாலும், கண்ணனின் கால் கொலுசின் ஒலியைக் கேட்டதே பாக்கியம் எனக் கண்ணீர் வடிப்பார்கள்.
அதே காலத்தில் குருவாயூரில் வசித்த ஒருவனுக்குத் தாளாத வயிற்று வலி. அவன் போகாத மருத்துவரில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனால், வயிற்று வலி அவனைப் படுத்தியெடுத்துக் கொண்டிருந்தது. துடிதுடித்துக் கதறியவாறு அவன் அவஸ்தைப்படுவதைப் பார்த்தார்கள் உறவினர்கள். "நாராயண பட்டத்திரியின் வாதநோயைப் போக்கிய கண்ணன் உன் வயிற்று வலியைப் போக்கமாட்டானா? போய் குரூரம்மையிடமும் பில்வ மங்களனிடமும் விண்ணப்பித்துக் கொள். இருவரில் யாரேனும் ஒருவர் உன் வயிற்று வலியைக் கண்ணன் அருளால் கட்டாயம் குணப்படுத்தி விடுவர்,'' என்று அறிவுரை சொன்னார்கள்.
அவனுக்கும் அதுதான் ஒரே வழி என்று பட்டது. முதலில் பில்வ மங்களனைப் போய்ப் பார்த்தான். வயிற்று வலி தீர ஒரு வழிசெய்ய வேண்டும் என்று அவன் காலைப் பிடித்துக் கொண்டான்.
பில்வமங்களனின் கருணைப் பார்வை அவன்மேல் விழுந்தது. ''இன்று மாலை கண்ணன் என்னோடு விளையாட வருவான். அப்போது அவனிடம் உன் பிரச்னையைச் சொல்கிறேன், அவன் மனம் வைத்தால் உன் வயிற்று வலி தீரும் என்று தான் தோன்றுகிறது,'' என்றான்.
மாலை நேரம். சின்னஞ்சிறிய பட்டுப் பீதாம்பரத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, மயில் பீலியை ஒழுங்கு செய்துகொண்டு, "ஓடிப்பிடித்து விளையாடலாமா, இல்லை கண்ணாமூச்சி விளையாடலாமா?'' என்று கேட்டவாறே பில்வமங்களன் முன் தோன்றினான் கண்ணன்.
"கிருஷ்ணா! விளையாட்டெல்லாம் இருக்கட்டும். உன்னால் இன்று ஒரு காரியம் ஆகவேண்டும்?''
"என்ன வேண்டும் உனக்கு?''
"இதோ! என் அருகே நிற்கும் இவனின் தீராத வயிற்று வலியை நீ குணப்படுத்தக் கூடாதா? என்னைச் சரணடைந்திருக்கிறான். இவனது வயிற்று வலியைப் பார்த்தால் என் மனம் சங்கடத்தில் ஆழ்கிறது''.
கண்ணன் கலகலவென நகைத்தான்.
"பில்வமங்களா! அது அவனது கர்மவினை. அவனின் முந்தைய வினை தான் இந்த ஜன்மத்தில் வயிற்று வலியாய் வந்து சேர்ந்திருக்கிறது. பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தின் பலனை அவன் அனுபவித்துத்தானே ஆகவேண்டும்? அது இருக்கட்டும். விளையாட நேரமாகிவிட்டது. வா!''
கண்ணன் பில்வமங்களனின் கையைப் பிடித்து இழுத்தான். பில்வ மங்களனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தன்னைச் சரணடைந்தவனைப் பார்த்து, "அன்பனே! உன் முந்தைய கர்மவினையின் பலன் உன் வயிற்று வலி. அது குணமாகாது. அதை சகித்துக் கொள். உன் வினை கழிகிறது என்று நினைத்துக் கொள். கண்ணன் சொன்னதைத்தான் உனக்கு நான் சொல்கிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கண்ணனோடு விளையாடப் போய்விட்டான் பில்வ மங்களன்.
வயிற்று வலிக்காரனின் மனம் சோர்வடைந்தது. "இது ஒரு பதிலா? முதலையைச் சக்கரத்தால் அறுத்தவனுக்கு முன் வினையை அதே சக்கரத்தால் அறுப்பது சிரமமா? இந்த வயிற்று வலியுடன் இனியும் எத்தனை ஆண்டுகள் துடிதுடிப்பது? சரி. போய் குரூரம்மையிடம் விண்ணப்பிப்போம். அவன் விறுவிறுவென்று நடந்து குரூரம்மை இல்லத்திற்குச் சென்றான். அவள் பாதங்களில் விழுந்து தன் பிரச்னையைச்சொல்லி அழுதான்.
குரூரம்மை அவனைக் கனிவோடு பார்த்தாள். "மகனே! என் கண்ணனால் ஆகாதது ஒன்றுமில்லை. இன்று அவன் உணவுண்ண வருவான். அவனிடம் உன் பிரச்னையைச் சொல்வேன். உன் வயிற்றுவலி இப்போதே தீர்ந்ததாக வைத்துக் கொள். நிம்மதியாகப் போய்வா!'' என்றாள்.
இரவு... "எனக்குச் சாப்பிட என்ன வைத்திருக்கிறாய்?'' என்று கேட்டவாறே அவள் மடியில் ஏறி அமர்ந்துகொண்டான் சின்னக்கண்ணன். சர்க்கரை கலந்த பாலை அவனின் சிவந்த வாயில் புகட்டியவாறே குரூரம்மை சொல்லலானாள்:
"என் கண்ணே! அந்த வயிற்று வலிக்காரனும் உன் படைப்புத்தானே? அவனுக்கு நீ அருள் புரியத்தான் வேண்டும். அவனது வயிற்று வலியைப் பார்க்கும்போது என் வயிறு துடிக்கிறது. இந்தப் பாலை நீ குடித்து முடிப்பதற்குள் அவன் வயிற்று வலி குணமாக வேண்டும். கம்சனையே அழித்த உன் அருள் அவன் வயிற்று வலியையும் அழிக்கட்டும். பால் உன் உதட்டின் ஓரத்தில் சிந்தியிருக்கிறது பார். இரு. துடைத்துவிடுகிறேன்.''
''சரி. அவன் வயிற்றுவலியைக் குணப்படுத்தி விட்டாயல்லவா? இனி நான் தாலாட்டுப் பாடுகிறேன். என் மடியிலேயே படுத்துத் தூங்கு. ஓயாமல் குருவாயூர் சந்நிதியில் ஓடி ஓடி விளையாடினால் கால் வலிக்காதா? ஏற்கெனவே பதினாலு வருஷம் ராமாவதாரத்தில் காட்டில் நடந்த கால்களாயிற்றே? இரு. உன் கால்களைப் பிடித்து விடுகிறேன்''.
குரூரம்மை தாலாட்டுப் பாடிக்கொண்டே கண்ணனின் பிஞ்சுக் கால்களைப் பிடித்துவிட்டாள். சொக்கும் கண்களுடன், மெல்லிய ரோஜா உதடுகளைத் திறந்து கொட்டாவி விட்டவாறு ஒரு சிறு முறுவலுடன் தூங்கலானான்.
என்ன ஆச்சரியம்! வயிற்று வலிக்காரனின் வயிற்று வலி ஒரே கணத்தில் குணமாகி விட்டது! ஊரெங்கும் குரூரம்மையின் வேண்டுதலால் அவனது வயிற்று வலி குணமானது பற்றித்தான் பேச்சு!....
இதையறிந்த பில்வமங்களனுக்கு வந்த ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. மறுநாள் தன் முன் கண்ணன் வந்தபோது, உரிமையுடன் அதட்டிக் கேட்டான்.
"நான் கேட்கும்போது முன்வினை என்றாய். ஆனால், குரூரம்மை கேட்டபோது வயிற்று வலியைக் குணப்படுத்தி விட்டாயே? ஏன் இப்படி?'' கலகலவெனச் சிரித்த கண்ணன் பின் சொல்லலானான்:
"அன்பனே! ஆழ்ந்த நம்பிக்கை தான், வேண்டுதல் பலிப்பதின் பின்னணியில் உள்ள சூட்சுமம். கொஞ்சம் அவநம்பிக்கை கொண்டாலும் வேண்டுதல் பலிக்காது. நீ என்ன சொன்னாய்? இவனின் தீராத வயிற்று வலியை குணப்படுத்தக் கூடாதா என்றாய். குணப்படுத்தக் கூடாதா என்று ஏன் சொல்ல வேண்டும்? குணப்படுத்து என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? உன் நம்பிக்கைக் குறைவு எனக்கு அலுப்பைத் தந்தது. அதனால் முன்வினை என்று சால்ஜாப்புச் சொன்னேன். கடவுளின் அருளிருந்தால் முன்வினை என்ன செய்யும்? முன்வினையை உன் அருளால் போக்கு என்று நீ என்னிடம் கேட்கவும் இல்லை. ஆனால், குரூரம்மை என்ன சொன்னாள் தெரியுமா? இந்தப் பாலை நீ குடித்து முடிப்பதற்குள் அவன் வயிற்று வலி குணமாக வேண்டும். அவன் வயிற்று வலியைக் குணப்படுத்தி விட்டாயல்லவா? என் மடியிலேயே படுத்துத் தூங்கு என்றாள்! அவள் என் அருள்மேல் வைத்த அளவற்ற நம்பிக்கையால் என் அருள் உடனே செயல்பட்டு அவன் வயிற்றுவலி குணமாகிவிட்டது.''
பில்வமங்களா! நீ, குரூரம்மை இருவருமே எனக்கு இரு விழிகள்! உங்கள் இருவரின் பக்தி காரணமாக உங்கள் இருவரிடமுமே எனக்கு சமமான அளவு பாசமிருக்கிறது. வா., நேரமாகிறது. விளையாடலாம்''.
வேண்டுதல் எப்படி இருக்கவேண்டும் என்பதன் சூட்சுமத்தை விளக்கிய கண்ணனை இழுத்து அணைத்து முத்தமிட்ட பில்வமங்களனின் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு தன்னைப் பிடிக்கச் சொல்லி ஓடினான் கண்ணன். அவனது கால் கொலுசின் சப்தம் குருவாயூர் சந்நிதியில் கலகலவென ஒலிக்கத் தொடங்கியது.
நன்றி - திருப்பூர் கிருஷ்ணன் - தினமலர் ஆகஸ்டு 2012
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
நெற்றிக்கண்ணுடன் ஐஸ்வர்யங்கள் அருளும் ஸ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹ பெருமாள் திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_13.html
கோவிந்தா...கோவிந்தா...கோவிந்தா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_82.html
பூலோக வைகுண்டம் தரிசனம் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_63.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html
No comments:
Post a Comment