"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 10, 2020

கோவிந்தா...கோவிந்தா...கோவிந்தா!

அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

நம் தளத்தில்  "பூலோக வைகுண்டம்" என்ற தலைப்பில் திருவரங்கம் பெருமாளின் அருமை,பெருமைகளை படித்தோம் இன்றைய பதிவும் அதன் தொடர் பதிவே.  பெருமாளின் தரிசனம் பெற இந்த பதிவினைத் தொடர்ந்து வாருங்கள். அதற்கு முன்பாக 7 ன் சிறப்பாக ஸ்ரீரங்கம் விளங்குகின்றது என்பது  ஆச்சர்யப்படும் செய்தி ஆகும்.

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.
பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்! காரியங்கள் அணைத்தும் கைகூடும் பாரீர்




திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

தல வரலாறு :-

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.
ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.


மஹாவிஷ்ணு தான் தோன்றியருளிய எட்டு திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள்) பெரும்புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஶ்ரீரங்கம் ஆகும். இது, 108 பிரதான விஷ்ணு கோயில் ஶ்ரீரங்கம் ஆகும். இது 108 பிரதான விஷ்ணு கோயில்களில் (திவ்யதேசங்கள்) முதலானதாகவும், மிகவும் புகழ்பெற்ற முதன்மையானதாகவும் மற்றும் மிகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இரு திருவரங்க திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் வழங்கப் பெறுகிறது. வைஷ்ணவ பேச்சுவழக்கில் “கோயில்” என்ற சொல் இந்தக் கோயிலை மட்டுமே குறிக்கிறது. இக் கோயில் பிரமிக்கத்தக்க மிகப் பெரிய அளவு கொண்டது. இக்கோயில் வளாகத்தின் பரப்பளவு 156 ஏக்கர் ஆகும். இதில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரங்கள் கருவறையைச் சுற்றி வரக்கூடிய மிகவும் கனமான மிகவும் பெரிய மதில் சுவர்களால் அமைத்துவருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரகாரங்களிலும், தரிசனம் பெற காணவரும் எவருக்கும் ஒரு தனித்துவமிக்க காட்சி வழங்கும்வகையில், 21 பிரமிக்கத்தக்க அற்புதமான கோபுரங்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது.

ஶ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீரங்கநாத சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைமிக்க ஒரு நாகரிகப் பண்பாடும் மற்றும் பேரரசுகளை கண்ட, கடந்த கால வரலாறும் உண்டு. பல்லவர்கள் ஆட்சியில், உறுதியான சமய அடித்தளம் உருவாக்கப்பட்டதைக் காணலாம். எடுத்துக்காட்டிற்கு, பல்லவ அரசு வம்சத்தால் கொடுக்கப்பட்ட ஊக்குவிப்பு, தென்னிந்தியாவில், இன்னும் குறிப்பாக கர்நாடகத்தில் ஆரியநிறுவனங்கள் வளர்ச்சிக்குப் பங்களித்ததாகத் தோன்றுகிறது. சோழர்கள் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குமேல் கிழக்கு கடற்கரைப் பகுதி மற்றும் கிழக்கு தக்காணத்தின் பெரும்பகுதியை ஆட்சி புரிந்தனர். இங்கு இவர்கள் மேம்பட்ட இந்து பண்பாடு தழைத்தோங்குவதற்கு உதவினர்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் மதுரை பாண்டியர்களாலும் மற்றும் மைசூர் ஹொய்சாளர்களாலும் சோழர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கல்வெட்டுகள் மற்றும் கட்டடங்கள் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு ஶ்ரீரங்கம் கோயிலைக் கட்டுவதில் ஹொய்சாளர்கள் ஆர்வம் செலுத்தினர். அதன்பிறகு பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் பாண்டியர்களால் ஹொய்சாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர், 1336ல் விஜயநகரில் நிறுவப்பட்ட இந்து ராச்சியத்திடமிருந்து கடும் எதிர்ப்பை மேற்கொண்ட முகமதியர்கள் தக்காணம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்து ராச்சியம் 1565 வரை தனது சுதந்திரத்தை பேணிவந்தது.
இந்த சமயத்தில், இந்தியாவின் தெற்குப் பகுதியில் ஐரோப்பியர்கள் தோன்றினர். பதினொன்றாம் நூற்றாண்டில், பல வெளிநாட்டு பயணிகள் மற்றும் வணிகர்கள், விஜயநகர் பேரரசுடன் தங்கள் வணிகம் செய்வதற்கு சென்றுவரும் வழித்தடமாக உட்பகுதியைப் பயன்படுத்தினரே தவிர மற்றபடி ஆர்வம் செலுத்தவில்லை. 1600ல், ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியும் மற்றும் 1664ல் பிரெஞ்சு கம்பெனியும் அமைத்துருவாக்கப்பட்டது.

1680ல், ஔரங்கசீப் மன்னன் (1658-1707)ல் மேற்கு தக்காணத்தில் ஒரு தாக்குதல் தொடங்கினான். நீண்ட சுற்றிவளைப்பு முற்றுகை மற்றும் பெரும் உயிரிழப்பிற்குப் பிறகு. பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா கோட்டை நகரங்கள் அவன் பிடியில் விழுந்தன மற்றும் அவனது இறப்பு வரை படையெடுப்பு தாக்குதல் நீடித்தது.

ஐரோப்பாவில், அடுத்து யார் பிடிப்பது என்ற ஆஸ்திரியப் போர், ஆங்கிலேயருக்கும் மற்றும் பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையே நேரடி மோதலை ஏற்படுத்தியது. டியூப்ளே சென்னையை (மதராஸ்) (1746) கைப்பற்றினார். இது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. 1752ல் பிரெஞ்சுகாரர்கள் சரணடையச் செய்யப்பட்டனர் மற்றும் 1754ல் டியூப்ளேயின் செயல்பாடுகளை பிரெஞ்சு அரசு ஏற்கமறுத்தது. அத்துடன் 1754ம் ஆண்டு டியூப்ளே பிரெஞ்சு அரசால் திரும்ப வரவழைக்கப்பட்டார்

1760ல், லாலி-டாலண்டல் தலைமையிலான, மேலும் ஒரு பிரெஞ்சு முயற்சி வெற்றிபெறவில்லை மற்றும் 1763ல் பிரெஞ்சு வணிக அமைப்பு கலைக்கப்பட்டது. அது முதற்கொண்டு, ஆங்கிலேய கம்பெனி இந்திய எல்லை முழுவதையும் படிப்படியாக கைப்பற்றியது. பிரெஞ்சுகாரர்கள் வெற்றிக்கு அருகே வந்தபோதிலும், பின்னர் அவர்கள் 1798ல் வெல்லெஸ்லி தலைமையிலான ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டனர். வெல்லெஸ்லி மைசூர் மீது படையெடுத்து 1799ல் ஶ்ரீரங்கப்பட்டிணம் கோட்டையை கைப்பற்றினான். அதற்குப் பிறகு தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதியும் இங்கிலாந்து கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. கர்நாடகம், அது முன்னாள் இருந்து மெட்ராஸ் மாகாணத்தின் நேரடி ஆட்சியின் கீழ் சேர்க்கப்பட்டது.






இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. 




இக்கோயிலின்  ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.


மதில் சுற்றுகள் ஏழு உலகங்கள்
மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று பூலோகம்
திரிவிக்ரம சோழன் திருச்சுற்று புவர்லோகம்
அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று ஸுவர்லோகம்
திருமங்கை மன்னன் திருச்சுற்று மஹர்லோகம்
குலசேகரன் திருச்சுற்று ஜநோலோகம்
ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று தபோலோகம்
தர்ம வர்ம சோழன் திருச்சுற்று ஸத்யலோகம்

அதே போல் இங்கு நவ தீர்த்தங்கள் உண்டு.

  1. சந்திர புஷ்கரணி
  2. வில்வ தீர்த்தம்
  3. சம்பு தீர்த்தம்
  4. பகுள தீர்த்தம்
  5. பலாச தீர்த்தம்
  6. அசுவ தீர்த்தம்
  7. ஆம்ர தீர்த்தம்
  8. கதம்ப தீர்த்தம்
  9. புன்னாக தீர்த்தம்



தெற்கு ராஜகோபுரம்
கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ராஜகோபுரம் கட்டுமானம்கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:
    1.7 கோடி செங்கற்கள்
    20,000 டன் மணல்
    1,000 டன் கருங்கல்
    12 ஆயிரம் டன் சிமெண்ட்
    130 டன் இரும்பு கம்பிகள்
    8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள் 
மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப – சன்னதிகளும் உள்ளன.
கோயிலில் உள்ள இதர சன்னதிகள்:
  • தாயார் சன்னதி
  • சக்கரத்தாழ்வார் சன்னதி
  • உடையவர் (இராமனுஜர் சன்னதி)
  • கருடாழ்வார் சன்னதி
  • தன்வந்திரி சன்னதி
  • ஹயக்கிரீவர் சன்னதி 






அட...பரமபத வாசல்...கோவிந்தா...கோவிந்தா...கோவிந்தா!
ஶ்ரீரங்கம் திருக்கோயிலானது, இந்தியாவின் தென் முனையை நோக்கியவாறு 10 டிகிரி 52’ வடக்கிலும் மற்றும் 78 டிகிரி 42’ கிழக்கிலும் காவிரிநதியின் இரு கிளைகளால் உருவாக்கப்பட்ட ஒரு தீவில் அமைந்திருக்கிறது. இக்கோயில் ஏறக்குறைய 6,31,000 சதுரமீட்டர் (156 ஏக்கர்) கொண்ட ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கோயிலில் மூலஸ்தானத்தைச் (கருவறை, கர்ப்பகிரகம்) சுற்றி ஏழு அடர்ந்த செவ்வகப் பிரகாரங்கள் உள்ளன. ஏழு பிரகாரங்கள் கொண்ட இந்தியாவில் உள்ள ஒரேவொரு கோயில் ஶ்ரீரங்கக் கோயில் மட்டுமே ஆகும். இன்றைய வைணவர்களுக்கு ஒரு புனித அடையாள எண்ணான ஏழு, யோகாவின் ஏழு மையங்களைக் குறிப்பதாக அல்லது மத்தியில் உயிர் (ஆத்மா) குடியிருக்கக்கூடிய மனித உடலின் ஏழு கூறுகளைக் குறிப்பதாக இருக்கிறது.

ஏழாவது பிரகாரம்

ஏழாவது பிரகாரத்தின் கோபுரங்கள் முடிக்கப்படவில்லை. இவை ராய (ஜ) கோபுரம் எனப்படுகின்றன. இவை முடிக்கப்படும்போது, அதன் உயரம் குறைந்தது 50 மீட்டராவது இருக்கும் என்பதை அவற்றின் அடிப்பரிமாணங்களிலிருந்து நிரூபணமாகிறது.

ஆறாவது பிரகாரம்

ஆறாவது பிரகாரத்தில் நான்கு கோபுரங்கள் உள்ளன: கிழக்கு கோபுரத்தில், பதிமூன்றாம் நூற்றாண்டு குறியீடுகளில் உள்ள கல்வெட்டுகளின் அளவு காரணமாக அது மற்ற எல்லாவற்றையும்விட மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. பவனிசெல்லும் தேர்கள் இந்தப் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஐந்தாவது பிரகாரம்

ஐந்தாவது பிரகாரத்தில் சோழர் பாணியில் மணவாள மாமுனிகள் கோயில் உள்ளது.

நான்காவது பிரகாரம்

நான்காவது பிரகாரத்தில், அதன் தெற்குப் பிரிவில், இந்துக்கள் அல்லாதவர்கள் விரும்பக்கூடிய வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. இதன் வெளிப்புற சுவர்களில் ஒரு இளம்பெண் வீணை வாசிப்பது போன்ற அல்லது ஒரு கிளியுடன் இருப்பது போன்ற மற்றும் பார்க்கும் கண்ணாடி முன்பு அவர்களின் நெற்றித் திலகத்தை சீர்செய்து தோற்றத்திற்கு மெருகூட்டுவது போன்ற மிகவும் அழகிய சிற்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்கு மேல் ஒட்டியிருக்கக்கூடிய சமதளத்தில் ஏறிப்பார்த்தால் ஶ்ரீரங்கம் கோயிலின் ஒரு பொது காட்சி கிடைக்கும். வெள்ளை கோபுரம் உள்ள இந்தப் பிரகாரத்தின் கிழக்கு முற்றத்தில் இந்து அல்லாதவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். தெற்கில், புகழ்பெற்ற சேஷராயர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு எதிரே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இதில், டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறும் மாபெரும் ஏகாதசி திருவிழாவில் சுவாமி மற்றும் தேவியர்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் சிலைகள் வைக்கப்படும்.

மூன்றாவது பிரகாரம்

மூன்றாவது பிரகாரத்தில் கருட மண்டபத்திற்கு வழிநடத்திச் செல்லக்கூடிய கார்த்திகை கோபுரம் உள்ளது. இதில் 14 வரிசைகள் உள்ளன மற்றும் இதுவே கோயிலில் உள்ள மிகவும் அழகிய மண்டபம் ஆகும். மேற்குப் பக்கப் பகுதியில் சமையலறைகளும் மற்றும் சேமிப்பு கிடங்குகளும் காணப்படுகின்றன. இந்தப் பிரிவின் கிழக்குப் பகுதியில் புனித குளம் (சந்திர புஷ்கரணி) உள்ளது. இது கிழக்கு மற்றும் மேற்கில் வரிசையாக படிகளுடன், வட்ட வடிவில் தோண்டப்பட்டுள்ளது. கிழக்குப் பக்கப்பகுதியில் பல தனியாக ஒதுக்கப்பட்ட சரணாலயங்களும் மற்றும் மண்டபங்களும் உள்ளன.

இரண்டாவது பிரகாரம்

ஒருவர் இரண்டாவது பிரகாரத்தை அடைவதற்கு தெற்கு ஆர்யபட்டால் வழியே செல்லுதல் வேண்டும். மற்றவற்றோடு ஒப்பிடும்போது முழுவதும் குறுகிய இரண்டாவது பிரகாரம், அங்கு பெரும்பாலும் உடைந்த மண்டபங்கள் வரிசை இருப்பதால், அங்கு ஊடுருவிப் பரவும் முழு ஒளியைக் கொண்டு வருகை புரிபவர்களை தாக்குகிறது. வடகிழக்கு மூலையை நோக்கி பெருமாளின் சமையல் வளாகங்கள் உள்ளன; கடந்த காலத்தில் இங்கு பால் மற்றும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் உணவு வைக்கப்பட்டிருந்தன.

முதல் பிரகாரம்

பார்வையாளர்கள் கடைசியாக முதல் பிரகாரத்தை அடைவார். இதற்கும் இரண்டாவது பிரகாரத்தைப் போன்றே, அதன் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வாயிற்கதவு வழியாக, ஒரேவொரு நுழைவு வழி மட்டுமே உள்ளது; மற்றும் இரண்டு பக்கத்திலும் விஷ்ணுவின் இயற்பண்புகளைக் குறிக்கும் சங்கநிதி மற்றும் பத்மநிதி எனப்படும் சங்கு மற்றும் தாமரையின் உருவப்படங்கள் உள்ளன. தென்மேற்கில் சேமிப்பு அறைகள் பொருத்தப்பட்டுள்ளன. கருவறையிலிருந்து கடவுள் சிலையைப் பிரதிபலிப்பதற்காக மூலைகளில் பெரிய கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. வடமேற்கு மூலையில் யாகசாலை மற்றும் தொண்டைமான் மண்டபம் உள்ளன. இவற்றின் உட்கூரைப் பகுதி ஓவியப் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் அர்ஜூனா மண்டபம் மற்றும் கிளி மண்டபம் என இரண்டு மண்டபங்கள் உள்ளன.








சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.

  1.     திருமங்கை ஆழ்வார் 73
  2.     தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
  3.     பெரியாழ்வார் 35
  4.     குலசேகராழ்வார் 31
  5.     திருமழிசையாழ்வார் 14
  6.     நம்மாழ்வார் 12
  7.     திருப்பாணாழ்வார் 10
  8.     ஆண்டாள் 10
  9.     பூதத்தாழ்வார் 4
  10.     பேயாழ்வார் 2
  11.     பொய்கையாழ்வார் 1





9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.

105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.

இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (கி.பி.1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது.

திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது கிபி 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே”

இங்கு நடைபெறும் திருவிழாக்கள் பற்றி எழுதினாலே தனிப்பதிவு வேண்டும். இருக்கட்டும்.இங்கேயே பகிர்கின்றோம்.

ஜேஸ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்)

சேர்ந்திருக்கும் அசுத்தங்களை நீக்கிவிடுவிப்பதற்காக ஆனி தமிழ்மாதத்தில் (ஜீன் – ஜீலை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மூலஸ்தான கருவறை சுத்தம் செய்யப்படும், கோயிலில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மூலிகை எண்ணெய் அபிஷேகம் பெரிய பெருமாளுக்குச் செய்யப்படும். உற்சவர் நம்பெருமாள் மற்றும் தேவியர்களின் தங்கக் கவசம் (தங்கதட்டுகள் பொற்கொல்லரால் சுத்தம் செய்யப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் புனித காவிரித் தீர்த்தம் எடுத்துக் காண்டு வருவதற்கு நிறைய பூசாரிகளும், பக்தர்களும் காவிரி ஆற்றுக்குச் செல்வார்கள். தங்கக்குடம் யானை மீது வைத்து கொண்டுவரப்படும். தங்கக்குடம், விஜயரங்க சொக்க நாயக்கரால் 1734ல் நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கிடையே இது, சில கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது, அதற்குப் பிறகு கடவுள்களின் கிருபையில் இது மீட்கப்பட்டது. இந்தத் தங்கக்குடத்தில் தெலுங்கு மொழியில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறைய வெள்ளிக் குடங்களில் புனித காவிரித்தீர்த்தம நிரப்பப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்படும். காவிரியிலிருந்து கோயிலுக்கு வரும் வழியில் வேதங்கள் ஓதப்படும். அதன்பிறகு, மேற்குப் பக்கத்தில் குடங்கள் வைக்கப்பட்டு, அனைத்து விக்கிரகங்களும் ‘திருவெண்ணெயாழி பிரகாரத்தில்’ உரிய ஸ்தானத்தில் அமர்த்தப் (வைக்கப்) படும். தங்கக் கவசங்கள் விக்கிரகஙிகளிலிருந்து களையப்பட்டு ஜீயர் சுவாமிஜி மற்றும் வதுலா தேசிகர் சுவாமியிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு கவசங்கள் பொற்கொல்லரால் சுத்தம் செய்யப்படும். பொது வழிபாட்டிற்குப் பிறகு மாலையில் கவசங்கள் அணிவிக்கப்படும்.

பவித்ரோத்ஸவம்

தமிழ் மாதம் ஆனியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) ரங்கநாத சுவாமி பெருமாள் அணியும் புனித நூல் (போர்வை) போற்றியும் மற்றும் தினசரி பூஜை சடங்குகளில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் இது, தமிழ் மாதம் ஆனியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது. முதல் நாளன்று யாகசாலையில் உற்சவருக்கு 365 முறை திருவராதனம் நடத்தப்படுகிறது மற்றும் இரண்டாவது நாளன்று மூலஸ்தான கர்ப்பக்கிருஹத்தில் (கருவறையில்) அனைத்து தெய்வங்களுக்கும் 1008 முறை திருவராதனம் நடத்தப்பட்டு, பூகண்டி சேவை (அங்கோபங்க சேவை) எனப்படும் புனித நூல் போர்வை கொண்டு மறைக்கச் செய்யப்படுகிறது. இந்த விழா, பெருமாளுக்கு செய்யப்படும் தினசரி பூஜையில் நிகழும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த விழா சேரனை வென்றான் மண்டபம் என்கிற பவித்ர மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இந்த மண்டபம் ஜடவர்ம சுந்தரபாண்டியனால் நிறுவப்பட்டது. முஸ்லிம் படையெடுப்பிற்குப் பிறகு, 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1371-ல் பெருமாளும் மற்றும் தேவியர்களும் நுழைந்தனர். மேற்குறிப்பிட்ட மண்டபத்தில் தேவியர் கருவறை (கர்ப்பக்கிருஹம்) நிறுவப்பட்டது. இந்த விழா முதலில் பிரம்மாவால் தொடங்கப்பட்டது. இந்த விழாவின் காரணமாக அனைத்து விக்கிரங்களுக்கும் புனித பருத்திநூல் போர்வை (பவித்ரம்) அணிவிக்கப்படுகிறது.

ஶ்ரீ ஜெயந்தி

ஶ்ரீ ரங்கநாதசாமி கோயில் வளாகத்திற்குள் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் கிருஷ்ண பெருமானின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கிளி மண்டப கிருஷ்ணர் கோயிலில், தனது தந்தை நந்தகோபன் மற்றும் தனது தாயார் யசோதா மற்றும் ரோஹினி ஆகிய பொற்றோருடன் கிருஷ்ணர் சிலை கோயில் முன்னிலையில் நிறுவப்படும். புனித தீர்த்தம் சுபிஷேகம் செய்யப்படும். நான்கு சித்திரை தெருக்களில் கிருஷ்ணர் மற்றும் நம்பெருமாள் பவனி வரும். இந்த விழாவின் காரணமாக ஶ்ரீ பண்டாரத்திற்கு நம்பெருமாள் விஜயம் செய்வார். இவர்களுடைய திருமஞ்சனம் நம்பெருமாளுக்கு செய்யப்படும்.

ஊஞ்சல்

ஊஞ்சலில் சாத்தியமான குறைபாடுகளை நீக்கி நிவர்த்திசெய்வதற்காக தமிழ் மாதம் ஐப்பசியில் இவ்விழா (அக்டோபர் – டிசம்பர்) நடைபெறும். இவ்விழா டோலோத்ஸ்வம் என வழங்கப்பெறுகிறது. இவ்விழா கந்தடை இராமானுஜரால் 1489ல் தொடங்கப்பட்டது. இது இப்போது 9 நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. 1வது மற்றும் 7வது நாளில் தேவியுடன் தொட்டிலுக்கு பெருமாள் வருவார், எஞ்சிய நாட்களில் தனியாகத் தொட்டிலில் இருப்பார். பெருமாள் முன்னிலையில் ஆரயார் தினசரி பாட்டு பாடுவார். கடைசி நாள் சந்திரபுஷ்கரணிக்கு பெருமாள் விஜயம் செய்வார், தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அதன்பிறகு ஊஞ்சல் மண்டபத்திற்கு நம்பெருமாள் வருவார். திருமஞ்சனம் நடத்தப்படும். அதன்பிறகு இரவில் மூலஸ்தான கர்ப்பகிருஹதிற்கு சென்றுவிடுவார். இந்த ஊஞ்சல் திருவிழா, ஐப்பசி மாதத்தின் தேய்பிறைக்காலத்தில் (கிருஷ்ணபக்‌ஷம்) ஏகாதசிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு ஊஞ்சல் திருவிழா தொடங்கும். ஏகாதரி நாளில் கடைசி நாள் விழா வரும்.

கைசிக ஏகாதசி

இந்த விழா, ஏகாதசிக்கு முப்பது நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும். சந்தான மண்டபத்திற்கு பெருமாள் வருவார், திருமஞ்சனம் நடத்தப்படும். அதற்குப் பிறகு மாலையில் கர்ப்பகிருஹத்திற்கு திரும்பிச் சென்றுவிடுவார். மறுபடியும் இரவில் அர்ஜூண மண்டபத்திற்கு பெருமாள் வருவார். இங்கு 365 பூஜைகள் நடத்தப்படும். பெருமாளுக்கு 365 ஆடைகள் அணிவிக்கப்படும். நள்ளிரவில் கைசிக புராணம் ஒப்புவிக்கப்படும். கர்ப்பகிருஹத்திற்கு திரும்பும்போது பச்சை கற்பூரம் (சுத்திகரிக்கப்பட்ட கற்பூரம்) தூவப்படும் மற்றும் அதன்பிறகு கர்ப்பகிருஹத்திற்குள் நுழைந்துவிடுவார்.

ஏகாதசி

இந்த மிகவும் முக்கியமான திருவிழா, தமிழ் மாதம் மார்கழியில் (டிசம்பர் – ஜனவரி) முழு இருபத்தொரு நாட்கள் பகல் பத்து, இரவு பத்து என இரண்டாகப் பிரிந்து ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி தினத்தில், ரங்கநாதப் பெருமாள் அற்புதமான அலங்கார ஆடையணிந்து, பரமபத வாசல் வழியாக ஒரு மகத்தான ஊர்வலத்தில் பவனி வந்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் மற்றும் பரவசத்திற்கிடையே ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை அடைகிறார். இந்த தருணம், கோயிலில் நடத்தப்படும் அனைத்து திருவிழாக்களிலும் உச்சித் தருணமாகும். எல்லா நாட்களில் இந்த நாளில் மட்டுமே ரங்கநாத பெருமாள் உண்மையான, நிஜமான இராஜாவாகிறார் மற்றும் இவர், ஶ்ரீ ரங்கராஜர் எனப்படுகிறார். பிரத்யேகமாக எழுப்பப்பட்டு, அருமையாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல் மூலம் விஸ்தரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆயிரங்கால் மண்டபத்தில் தனது தெய்வத்திரு தர்பாரை ரங்கராஜா நடத்துகிறார், நாள் முழுக்க நாளாயிர திவ்யப்பிரபந்தம் ஓதப்படுகிறது மற்றும் பின்னிரவில் மட்டுமே அவர் கோயிலுக்கு திரும்புகிறார். அலைமோதும் பக்தர்கள் கூட்டம், விடியற்காலை முதல் நள்ளிரவு வரை விடாமல் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். இடைவிடாமல் பஜனைகளில் ஈடுபட்டுக்கொண்டும், நாள்முழுக்க உண்ணா நோண்பிருந்து கொண்டும் மற்றும் இரவு முழுக்க இடையறாமல் தூங்காமல் விழித்துக் கொண்டுமிருக்கும் பக்தர்கள் குழுவின் துடிப்புமிக்க ஜால்ரா இசைக்கு பாடிக்கொண்டும் மற்றும் ஆடிக்கொண்டும் இருந்தனர். உண்மையிலேயே, இது கடவுள்கள் காணவேண்டிய காட்சியாகும். உண்மையிலேயே மண்ணுலகில் ஒரு சொர்க்கலோகமாகும்!

விருப்பன் (சித்திரைத் தேர்)

இது தொழில் குறைபாடுகளை சீர்செய்யக்கூடிய மற்றும் தமிழ் மாதம் பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) நடைபெறக்கூடிய மாபெரும் திருவிழா ஆகும். விஜயநகர அரசவம்சத்தைச் சேர்ந்த விருப்பண்ண உடையார் என்ற பெயர் கொண்ட ஒரு அரசன் சித்திரைத் திருவிழாவை 1383ல் நிறுவினார். முஸ்லிம்கள் படையெடுப்புக்குப் பிறகு, 1371ல் (வைகாசி மாம் 17ம் நாள்) கர்ப்பக் கிரஹத்திற்கு ரங்கநாத பெருமாள் கொண்டுவரப்பாட்டார். அந்த நேரத்தில் மிகவும் சீரழிந்த நிலையில் கோயில் இருந்தது. 1377ல், இக்கோயிலை புதுப்பிப்பதற்காக பதினேழாயிரம் தங்க நாணயங்களை விருப்பண்ணன் அரசன் கொடுத்தான். 60 ஆண்டுகள் கழித்து, கோயில் புதுப்பிக்கப்பட்ட பிறகு 1383ம் ஆண்டில் சித்திரைத் திருவிழா தொடங்கியது. இந்த திருக்கோயிலின் நலன் கருதி 52க்கும் மேற்பட்ட கிராமங்களை மன்னன் விருப்பண்ணன் ஒப்படைத்தான். 1383ல் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. அருகிலிருந்த கிராம மக்கள் ஶ்ரீரங்கத்திற்கு திரண்டுவந்தனர். இந்தத் திருவிழாவில் 8வது மற்றும் 9வது நாட்களை கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். கிராம மக்கள் தங்கள் வயல் பண்ணைகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் மற்றும் தானியங்களை நன்கொடையாகக் கொடுத்து வந்தனர். இந்தத்திருவிழா, ரேவதி நட்சத்திரத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. அந்த நாளில் சித்திரைத் தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அங்குரார்பணம் (விதைகளை முளைக்க விடுதல்)

விஷ்வக்சேனர் (திருமாலின் சேனாதிபதி) மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் குருக்கள் புடைசூழ தாயார் சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். குருக்கள் வில்வ மரத்தின் கீழ் உள்ள மணலில் பூஜைகளை மேற்கொள்கின்றனர். சில குருக்கள் ஆற்றங்கரைக்குச் சென்று மணலை எடுக்கின்றனர். அவர்கள் “பூசுத்தம்” சொல்லி வில்வ மரத்தின் கீழிருந்து எடுத்துச் சென்ற மணலையும் ஆற்றங்கரை மணலையும் சுத்தமான நீரில் நனைத்து சுத்தி செய்யப்பட்ட மண் பானைகளுக்குள் ஒன்றாக போட்டு கலக்குகின்றனர். அந்த பானைகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டு அதன் பிறகு அவை யாகசாலையில் வைக்கப்படுகின்றன. ஒரு சில நாட்களில் விதைகள் முளைவிடுகின்றன.

நகரசோதனை (வீதி ஆய்வு)

விஷ்வக்சேனர் அனைத்து நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருகிறார். அவர் திருமால் வருகை தருவதற்கு முன்னதாக அனைத்து நான்கு வீதிகளையும் ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வு விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு நடத்தப்படுகிறது. இது, நகரசோதனை என அழைக்கப்படுகிறது

முதல் நாள் (கொடியேற்றம்)

முதல் நாள் அதிகாலையில் நான்கு சித்திரை வீதிகளுக்கு கொடி (கேன்வாஸ் துணியில் கருடர் படம் வரையப்பட்டது) கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு, திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதை குறிக்கும் வகையில் திருமாலின் முன்னிலையில் கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றத்திற்குப் பிறகு, திருமால் கண்ணாடி அறை சேர்கிறார் (பொதுமக்கள் வழிபாடு திருவிழாவின் 1வது மற்றும் 7வது நாளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது). மாலையில் திருமால் உபயநாச்சியாருடன் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில்
பொய்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

இரண்டாம் நாள்

காலையில் நம்பெருமாள் நான்கு சித்திரை வீதிகளிலும் பல்லக்கில் ஊர்வலமாக வலம் வருகிறார். அதே நாள் மாலையில் நம்பெருமாள் நான்கு சித்திரை வீதிகளிலும் கற்பகவிருட்ச (விரும்பியதை அளிக்கும் கற்பகமரம்) வாகனத்தில் வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் பூதத்தாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

மூன்றாம் நாள்

காலையில் சிங்க (சிம்ம) வாகனமும் மாலையில் யாலி (கற்பனையான மிருகம்) வாகனமும் பயன்படுத்தப்படுகிறது. திருமாலின் முன்னிலையில் பேயாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

நான்காம் நாள்

காலையில் நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்திலும் மாலையில் கருட வாகனத்திலும் வீதி வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் திருமழிசையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

ஐந்தாம் நாள்

காலையில் நம்பெருமாள் சர்ப்ப (சேஷ வாகனம்) வாகனத்திலும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும் வீதி வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் நம்மாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

ஆறாம் நாள்

காலையில் நம்பெருமாள் ஹம்ச (அன்னம்) வாகனத்திலும், மாலையில் திருமாலுக்கு தேங்காய் தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டு யானை வாகனத்திலும் வீதி வலம் அழைத்து வரப்படுகிறார். திருமாலின் முன்னிலையில் நம்மாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

ஏழாம் நாள்

காலையில் பக்தர்கள் கண்ணாடி அறையில் தரிசன சேவைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு திருக்கொட்டாரம் (நெற்களஞ்சியம்) கண்டு வீதிவலம் வருதல். இரவு தாயார் சந்நதியில் திருமஞ்சனம் கண்டருளல். இந்த ஆலயத்தில் பெருமாளுடன் உபயநாச்சியாராக இருவரும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். மற்றைய ஆலயங்களில் நின்றகோலம்தான். அதன் பிறகு நள்ளிரவில் கண்ணாடி அறை சேர்கிறார். திருமாலின் முன்னிலையில் திருமழிசையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

எட்டாம் நாள்

காலையில் திருமால் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல் பின் ரெங்கவிலாச மண்டபம் அடைந்து மாலையில் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல். நம்பெருமாள் சித்திரை தேர் கொட்டகை அருகே வரும் போது குதிரையில் நான்குக் கால் பாய்ச்சலில் செல்கிற ஒரு தனித்துவமான தரிசனம் அருளப்படுகிறது. திருமாலின் முன்னிலையில் திருமங்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

ஒன்பதாம் நாள் (தேரோட்டம்)

அதிகாலையில் நம்பெருமாள் சித்திரைத் தேரில் நான்கு சித்திரை விதிகளிலும் உலா வருகிறார். அதன் பிறகு திருமால் ரேவதி மண்டபம் அடைந்து, திருமஞ்சனம் கண்டருளல். திருமாலின் முன்னிலையில் திருமங்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

பத்தாம் நாள் (சப்தாவரணம்)

காலையில் திருமால் சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். மாலையில் திருமால் இராமானுஜரின் பாடல்களைக் கேட்பதற்கு வசதியாக நம்பெருமாள் அமைதியான முறையில் (இந்த உலாவின் போது இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை) நான்கு ரத வீதிகளிலும் வலம் வருகிறார். நம்பெருமாள் இராமானுஜரின் கோவிலுக்கு செல்கிறார், அங்கு இராமானுஜரால் உள்ளன்போடு வரவேற்கப்படுகிறார். நம்பெருமாளுக்கு இராமானுஜர் தேங்காய் தண்ணீரை காணிக்கையாக செலுத்துகிறார். நம்பெருமாளுக்கு தேங்காய் தண்ணீர் செலுத்தப்பட்ட பிறகு அது இராமானுஜருக்கு செலுத்தப்படுகிறது

பதினோறாம் நாள்

காலையில் திருமால் கருட மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். மாலையில் நம்பெருமாள் முழுதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வருகிறார்.

இந்தத் திருவிழா திருமால் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல விலங்குகளிடத்திலும் அருள்பாலிப்பார் என்பதை விளக்குகிறது. கஜேந்திரன் என்னும் பெயருடைய ஒரு யானை எந்தவொரு பிரதிபலனையும் கருதாமல் ஒரு குளத்தில் இருந்து தினமும் மலர்களை பறித்து திருமாலின் பாதங்களில் காணிக்கையாக சாத்துகிறது. யானை இந்தச் சேவையை மிகவும் விரும்பி செய்கிறது. எனவே, யானை பகவானிடம் இருந்து எதையும் கேட்கவில்லை. இதனால் திருமால் விஷ்ணுவுக்கு யானையை மிகவும் பிடிக்கிறது. வாய்ப்புக் கேடாக, ஒரு நாள் யானை மலர்களை பறித்துக் கொண்டிருந்த போது அதன் காலை முதலை கவ்வுகிறது. யானையால் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட, திருமாலுக்கு வழமையாக செய்து வருகிற தனது சேவை பாதிக்கப்படுமோ என கவலைப்படுகிறது. யானை தனது சேவையை தொடர்ந்து செய்வதற்கு அருளுமாறு திருமாலை தொடர்ச்சியாக இறைஞ்சி கேட்கிறது, ஆனாலும் வலி மற்றும் வேதனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அது கேட்கவில்லை. திருமால் அவ்விடத்திற்கு விரைந்து சென்று முதலையைக் குத்திக் கொன்று யானையைக் காப்பாற்றி அருளினார். இந்த நிகழ்ச்சி கஜேந்திர மோட்சம் என்ற பெயரில் காவிரி ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்படுகிறது

இந்தத் திருவிழா, திருமாலை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்ற மலர்களின் அசுத்தங்களை சுத்தப்படுத்துவதற்காக தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல்–மே) கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருவிழா இராம அவதாரத்தின் நினைவுக்குறிப்பாகக் கொண்டாடப்படுகிறது என்றாலும் கூட ஸ்ரீரங்கத்தில் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. ஆழ்வார்களுள் ஒருவரும் இராமரின் சீடருமான குலசேகராழ்வார் தனது மகளை ரங்கநாதருக்கு திருமணம் முடித்தார். இந்தத் திருவிழா அர்ஜூனா மண்டபத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரங்கநாத ஸ்வாமியும் சேரகுலவள்ளி நாச்சியாரும் (குலசேகராழ்வாரின் மகள்) அருகருகே அமர்ந்திருக்கின்றனர் மற்றும் திருமஞ்சனம் கண்டருளல்.

தமிழ் மாதம் வைகாசியில் (மே-ஜூன்) கொண்டாடப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் மன்னர் அண்ணப்ப உடையாரால் 1444-ஆம் அண்டில் வஸந்த மண்டபம் கட்டப்பட்டது. வஸந்தோத்ஸவம் நடைபெறுவதற்காக மல்லிதேவன் புத்தூர் கிராமம் திருவிடையாட்டமாகத் (தானமாகத்) தரப்பட்டது. வஸந்தோத்ஸவம் பௌர்ணமிக்கு (முழு நிலா நாள்) 8 நாட்களுக்கு முன்னதாக தொடங்குகிறது. பௌர்ணமி திருவிழா முடிவுக்கு வந்ததும் திருமால் குதிரை வாகனம் ஏறி நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்து வஸந்த மண்டபம் சேர்கிறார். வஸந்த மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். 17) முதல் திருநாள், ஏழாந் திருநாட்களில் நம்பெருமாள் இரண்டு உபய நாச்சிமாரோடு வஸந்த மண்டபத்தில் உத்ஸவம் கண்டருளுவார். எஞ்சிய நாட்களில் திருமால் மட்டுமே வஸந்த மண்டபத்தில் உத்ஸவம் கண்டருளுவார். திருமால் ஒவ்வொரு நாளும் மூலஸ்தானத்திற்கு திரும்ப வரும் போதெல்லாம் கம்பர் மண்டபத்திற்கு வருகை தருகிறார். ஒவ்வொரு நாளும் திருமால் முன்னிலையில் ஆழ்வார் பாடல்கள் பாடப்படுகின்றன. ஸ்ரீதேவி ரங்கநாயகி கோவிலிலும் வஸந்தோத்ஸவம் மேற்கொள்ளப்படுகிறது.






பக்தர்களின் கவனத்திற்காக செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்ன என்பது பற்றிய ஒரு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • நீங்கள் ஶ்ரீரங்கத்திற்கு யாத்திரை தொடங்குவதற்கு முன்பு, உங்கள் இஷ்ட அல்லது குலதெய்வத்தை வழிபடவும்.
  • நீங்கள் ரங்கநாதசுவாமி பெருமாளை வழிபடச் செல்வதற்கு முன்பு காவிரி நதியில் குளிக்கவும்.
  • திருக்கோயிலுள்குள் நுழைவதற்கு முன்பு சுத்தமாகக் குளித்து சுத்தமான உடையணியவும்.
  • திருக்கோயிலுக்குள் முழுகவனத்தையும் ரங்கநாதசாமி பெருமாள் மீது செலுத்தவும்.
  • கோயிலுக்குள் முழு அமைதி காத்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஓதவும்.
  • கோயிலில் இருக்கும்போது பண்டைய பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்பாடுகளை மதித்து நடக்கவும் மற்றும் உங்கள் சக யாத்ரீகர்களிடையே சமய உணர்வுகளைப் பரப்பச் செய்யவும்
  • உங்களுடைய காணிக்கைகளை உண்டியலில் மட்டுமே செலுத்தவும்
  • கோயில் வளாகங்களை தூய்மையாக வைக்கவும்
  • நீங்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு, செல்போன்கள், கால்குலேட்டர்கள், காமரா முதலியன போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் காலணி முதலியனவற்றை வெளியே விட்டுச் செல்லவும்

செய்யக்கூடாதவை

  • நகைகள் அல்லது பணம் எடுத்துச் செல்ல வேண்டாம்
  • அசைவ உணவு சாப்பிடக் கூடாது
  • மது அல்லது இதர போதைப் பொருட்களை அருந்துதல் கூடாது
  • புகை பிடிக்கக் கூடாது
  • தங்குமிடம் மற்றும் தரிசனத்திற்கு இடைத்தரகர்களை அணுகுதல் கூடாது
  • கோயில் வளாகத்தில் மற்றும் வளாகத்தைச் சுற்றி காலணி அணிதல் கூடாது.
  • தெரு வியாபாரிகளிடமிருந்து போலி பிரசாதங்களை வாங்குதல் கூடாது.
  • பெருமாளை வணங்குவது (வழிபடுவது) தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கோயிலுக்குள் வர வேண்டாம்
  • தரிசனம் பெறுவதற்கு அடித்துக் கொண்டு முந்திச் செல்ல வேண்டாம், உங்கள் முறைவரும் வரை வரிசையில் காத்திருக்கச் செய்யவும்.
  • பழக்கவழக்கம் அல்லது உபயோகிக்கும் முறையின் காரணமாக நீங்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டிருக்குமானால், கோயிலுக்குள் நீங்கள் நுழையக் கூடாது
  • பிச்சையெடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது
  • தண்ணீர் மற்றும் மின்சாரத்தை வீணடிக்கக்கூடாது
  • அந்நியர்களை அறைகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக்கூடாது
  • மற்றவர்களிடம் சாவிகளை கொடுத்தல் கூடாது
  • திறந்தவெளியில் எச்சில் துப்பவோ சிறுநீர் அல்லது மலம் கழிக்கவோ செய்தல் கூடாது
  • செல்போன், காமிரா அல்லது மின்சார அல்லது மின்னணு கருவி எதையும் எடுத்துச் செல்லுதல் கூடாது
  • ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லுதல் கூடாது
இவை பொதுவாக அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும்.








- மீண்டும் அடுத்தப் பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

பூலோக வைகுண்டம் தரிசனம் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_63.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

No comments:

Post a Comment