அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது.
சென்னை ஒரு ஆன்மிக பூமி. பற்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அருள் நிறைந்த ஊர்.திருஒற்றியூர் என்றாலே வடிவுடையம்மன் ஆலயமும்,பட்டினத்தாரும்,வள்ளலாரும் நினைவிற்கு வருவார்கள்.இந்த புனித தலத்தில் நம் பாதம் பட இறை அருள் வேண்டும். ஒட்டுமொத்த ஆன்மிக சங்கம் இங்கே கிடைக்கின்றது.ஒன்றா..இரண்டா ? என அடுக்கும் அளவிற்கு சித்தர்களின் அருள்மழையில் நனைய முடிகின்றது. சென்னை மட்டுமல்ல...ஒட்டுமொத்த தமிழ்நாடும் சித்தர்களின் பரிபூரணம் நிறைந்து காணப்படுகின்றது.
நாம் கூடுவாஞ்சேரி வந்த பிறகு, சித்தர்களின் தேடலில் வண்டிக்கார சுவாமி ( எ) தினகரன் சிவயோகி சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்று தரிசனம் செய்தோம். இந்த முறை சுவாமிகள் குருபூஜை பற்றிய தகவல் கிடைக்கவே, இன்றைய பதிவில் வண்டிக்கார சுவாமிகள் பற்றி காண இருக்கின்றோம்.
சென்னையில் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் சித்தர்கள் அருள் நிறைந்து காணப்படுகிறது. கோடம்பாக்த்தில் பரத்வாஜ முனிவர் வழிப்பட்ட பரத்வாஜர் திருக்கோயில், வியாக்ரபாதார் முனிவர் ,பஞ்சலி முனிவர் வழிப்பட்ட வேங்கீஸ்வரர் கோயில் மற்றும் வடபழனி முருகன் கோயில் உருவாக காரணமாக இருந்த,அண்ணா சாமி தம்பிரான், பாக்கியலிங்க தம்பிரான்,இரத்தின சாமிகள் ஆகியோர், தமிழகம் முழுதும் அதிகமான பக்தர்கள் கொண்ட வடபழனி பரஞ்சோதி பாபா, ஒம்காரசுவாமிகள், சின்னையா(எ) வெங்கட்ராம சுவாமிகள் ஆகியோரை அறியாத பக்தர்கள் இருக்கமுடியாது.
இவர்களை போலவே வடபழனி வேங்கீவரர் திருக்கோயில் அருகில் தவம் செய்து, சிறிய வண்டியில் சித்த மருந்துகளை எழை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கியும், தனது தவ ஆற்றலால் மன நலம் குடும்ப நலம், தொழில் நலம், ஆகியவற்றை வழங்கி அருளாட்சி செய்தவர் தினகர சிவயோகியாவார். இவரது பூர்வீக குடும்பம், பரம்பரை, பிறப்பு, இதர விவரங்கள் தெரியவில்லை. 1983-ம் ஆண்டு தனது சீடர் திரு அகத்திலகம் என்பவரை அழைத்து இன்னும் 48 நாட்களில் ஜீவ சமாதி அடைய போவதாகவும் அதற்கான இடம் தேர்வு செய்ய துறைமுகத்தில் வேலை செய்யும் இரு சீடர்கள் அழைத்து வரும்படி ஆணையிட்டார்.மேற்படி சீடர் அவர்களை அழைத்து அவர்கள் மின்சார இரயில் பயணம் செய்தபடி பேசிக்கொண்டிருக்கையில், பக்தர் ஒருவர் எங்கள் ஊரில் மழையில்லை நாங்கள் கஷ்டப்படுகிறோம், உங்கள் சுவாமியை எங்கள் ஊரில் தங்க வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படியே சுவாமியை கூடுவாஞ்சேரில் உள்ள களத்துமேடு பகுதியில் சுவாமியை குடிசைபோட்டு தங்கவைத்திருந்தனர். பார்ப்பதற்கு எளிமையாகவும் மெலிந்தஉடலும் உயரமான தோற்றம் கொண்டவர். நீளமான தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்டவர். தவலிமையுடன் ஒரு கம்பீரத்துடன் காணப்படுவார். இவருக்கு பக்தர்கள் அதிகமாக இருப்பினும் யாரையுமே அருகில் வைத்துக்கொள்ளவில்லை. இவர் தம் வாழ் நாட்களில் எப்போதுமே வண்டிலேயே பல காலம் வாழ்ந்தவர். அதனால் வண்டிக்கார சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
சுவாமிகள் சொன்னது,போலவே 1983-ம்ஆண்டு ஆவணி திருவோணம் நட்சத்திரம் அன்று ஜீவ சமாதியானார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாம் நம் நண்பர் உடன் சேர்ந்து கூடுவாஞ்சேரி களத்துமேடு பகுதிக்கு சென்றோம். அப்படியே சுவாமிகள் தரிசனம் பெற எண்ணினோம். சுவாமிகள் ஜீவ சமாதி களத்துமேடு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ளது. களத்துமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். நாம் சென்ற நேரம் நடை சாத்தி இருந்தமையால் வெளியே இருந்து இறை தரிசனம் பெற்றுக்கொண்டிருந்தோம்.
வண்டிக்கார சுவாமி தரிசனம் பெற முகவரி:-
கூடுவோஞ்சேரி, பெரிய தெரு,(joyce nursary school)
களத்துமேடு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயில் வெளிபுற வளாகம்
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html
குரு உரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_54.html
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே! - இன்று பட்டினத்தார் குருபூசை - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_1.html
நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html
No comments:
Post a Comment