அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று ஆவணி மாதம் பிறந்து விட்டது. ஆவணி 1 ம் தேதி யோடு இன்று பூசம் நட்சத்திரம் வருகின்றது. ஆவணி மாத பூச நட்சத்திரத்தில் திரயோதசி திதி அன்று தான் கோவை அருகில் உள்ள ஓதிமலையில் ஓதியப்பரின் திருநட்சத்திரம்! சித்தன் அருள் ஆசியுடன் நாம் அந்த நாள் இந்த வருடம் என்ற நிகழ்வில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓதிமலை தரிசனம் பெற்றோம். சென்ற ஆண்டும் கிட்ட வில்லை. இந்த ஆண்டில் சொல்லவே வேண்டாம். இன்றைய பதிவில் நாமும் ஓதிமலை சென்று மீண்டும் தரிசனம் பெற உள்ளோம் மேலும் சென்ற ஆண்டில் நாம் கொண்டாடிய நிகழ்வின் துளிகளை இங்கே இணைக்க விரும்புகின்றோம்.
முருகா...அழகென்ற சொல்லுக்கு முருகா என்று கேட்டிருப்போம். இதனை உணர ஓதிமலை சென்று தரிசியுங்கள். .
ஒதிமலை பற்றிய சில குறிப்புகளை முன்னரே ஒரு பதிவில் பதித்திருந்தேன். சமீபத்தில் ஒரு நாள் என்னவோ யோசனை வர மறுபடியும் அதை ஒரு முறை படித்துப் பார்த்தேன். அப்போது ஒரு எண்ணம் உதித்தது. அகத்திய பெருமான் ஒதிமலையை பற்றி என்ன சொல்லுவார். தற்போது அவர் யாருக்காகவும் நாடியில் வந்து சொல்வதில்லையே. நம் அனைவருக்கும் ஒதிமலையின் மகத்துவத்தை பற்றி அகத்தியரின் அருள் வாக்கினால் அறியும் வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் தோன்றியது. எப்போதும் போல அவரிடம் வேண்டிக் கொண்டேன்.
"சித்தன் அருள்" தொடரை வாசிக்கும் அகத்தியர் அருள் பெற்ற ஒரு அடியவர், திரு குரு மூர்த்தி என்பவர் அகத்தியர் நாடியில் வந்து ஒதி மலையின் புகழை சொன்னதாக சொல்லி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதை படித்ததும், அந்த மலையின், ஒதிப்பரின் புகழை படித்து யான் பெற்ற இன்பத்தை நீங்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கில் கீழே தருகிறேன். அதற்கு முன் திரு.குருமூர்த்திக்கு மிக்க நன்றியுடன்......... அகத்தியரின் அருள் வார்த்தைகளை கீழே தருகிறேன்.
சங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி
சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி
சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி
சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி
சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி
சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி
சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்,
பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி
சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி
அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி
நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி
கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள்ஓதினாலும்,
கட்டிய மனைவி ஒதுகிறாளே என்று தாய்ஓதினாலும்,
உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதைஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு.சுயநல நோக்குண்டு
பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.
ஞானத்தை நல்கும் கிரி
அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி
பேதத்தை நீக்கும் கிரி
வேதத்தை உணர்த்தும் கிரி
சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி
நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி
வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி
எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி
கர்ம நிலைகளை மாற்றும் கிரி
அக உளைச்சல் ஒழிக்கும் கிரி
பேதம் காட்டா வேத கிரி
ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி
இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி
அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி
ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி
ஓதும் கிரி அது ஓதிய கிரி
பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி
ஓம் நமகுமாராய !
இங்கு நாம் அகத்தியரின் அருளை பகிர்ந்துள்ளோம். இவை தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் திரு.கணேசன் ஐயா அவர்கள் வாசித்து அருளிய ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடிஆகும். மீண்டும் மீண்டும் படித்து தமிழ் அமுதம், அருளமுதம் பருகுங்கள்.
சென்ற ஆண்டில் நாம் ஆவணி பூச நட்சத்திரம் அன்று வள்ளிமலை செல்வது என்று முடிவானது. நம் நண்பர் திரு. ஆனந்த் பாபு அவர்களும் நம்முடன் கேரளாவில் இருந்து வந்து நம்முடன் இணைந்து கொண்டார். பின்னர் நமக்கு ஓதியப்பரின் பிறந்த நாள் பற்றிய செய்தி கிட்டியது. உடனே வள்ளிமலையில் தெரிந்த அன்பர்கள் இருக்கின்றார்களா? என விசாரித்தோம். குருவருளால் அன்பர் சுந்தர் என்பவரின் அறிமுகம் நமக்கு ஏற்கனவே இருந்தமையால் உடனே பேசி, அன்றைய தினம் காலை சாதுக்களுக்கு அன்னசேவை செய்ய ஏற்பாடு செய்யும் படி வேண்டினோம். அடுத்து அன்று நாள் முழுதும் வள்ளிமலை மலைக்கோயில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய நம் தளம் சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டினோம். அட..இரண்டுமே கைகூடியது.
இதோ.வள்ளிமலை அடிவாரம் சென்று விட்டோம். அடுத்து நம்முடன் வேலூரில் இருந்து அடியார் திரு.சுரேஷ் ஐயா அவர்களும் இணைந்து கொண்டார்கள். மேலும் ராணிப்பேட்டையில் இருந்து அடியார் திரு.ஸ்ரீதரன் ஐயா அவர்களும் இணைந்து கொண்டார்கள்.
நண்பர் பாபு, திரு.சுரேஷ் ஐயா , திரு.ஸ்ரீ தரன் ஐயா அவர்கள் உரையாடிய காட்சி
அங்கும் இங்குமாக சாதுக்கள் இருந்தார்கள். நாமும் அன்னசேவை செய்வதற்கென தயாரானோம்.
இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்னசேவை தொடங்கிவிட்டோம். ஸ்ரீதரன் ஐயா அவர்கள் இனிப்பு வாங்கி வந்தார்கள். இனிப்பு உடன் பிரிஞ்சி சாதம் என ஒவ்வொரு சாதுக்களும் கொடுத்து மனதிற்குள் ஆசி வேண்டினோம்.
ஒவ்வொருமுறை அன்னசேவை செய்வது நமக்கு புது அனுபவமாக இருக்கும். இப்படி தான் செய்ய வேண்டும் என்று எதுவும் நாம் தீர்மானிப்பதில்லை. குருவின் அருளாசியால் இவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நம் தளம் சார்பில் பொருளுதவி செய்யும் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம். அன்னதானம் செய்வது அனைத்தையும் வழங்குவது ஆகும். இது போன்று முன்பின் தெரியாத, முகமறியா அன்பர்களுக்கு சேவை செய்வது நமக்கு புண்ணியம் பெற்று தரும்.
சுமார் 200 சாதுக்களுக்கு மேல் அங்கே அன்னசேவை செய்தோம். அடுத்து ஸ்ரீ அருணகிரிநாதர் தரிசனம் பெற்றோம். நம் தள அன்பர்கள் அனைவருக்குமாக இங்கே பிரார்த்தனை செய்தோம். அடுத்து மலை ஏறி முருகப்பெருமான் தரிசனம் தான்.
இதோ..வள்ளிமலை அடிவாரத்தில் இருந்து மலை ஏறத் துவங்கிவிட்டோம். அன்று காலை பூஜைக்கான அபிஷேக பொருட்களை நாம் எடுத்துக்கொண்டோம். நேரம் கருதி திரு.ஸ்ரீதரன் ஐயா அவர்கள் பணி நிமித்தமாக சென்றார்கள்.
வள்ளிமலை
தரிசனம் பெற நீங்கள் மலை ஏறும் போது நாம் இளைப்பாற ஒரு மண்டபம் வரும். இது
சாதாரண மண்டபம் அல்ல. இங்கே சித்தர்களின் சூட்சும தரிசனத்தை உணரலாம்.இதை
யாம் சொல்லவில்லை. தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் தான் இதை
கூறினார்.வள்ளிமலை கோயிலின் திருப்பணியின் போது நேரில் உணர்ந்து சுவாமிகள்
நமக்கு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடம் தான் சித்தர்களின் அருளை உணரும் இடம். கூட்டத்தோடு கூட்டமாக
சென்றால் நமக்கு ஒன்றும் புரியாது. காலை சுமார் 9 மணி அளவில் தனிமையில்
இங்கே சென்று விளக்கேற்றி சித்தர்களை மனதில் நினைத்து தியானியுங்கள்.
ஆற்றலை நீங்கள் உணர்வீர்கள். நாமும் இங்கே விளக்கேற்றி வழிபாடு செய்தோம்,
இந்த நுழைவாயில் கடந்ததும் திருக்கோயில் தான். முருகா என்று வேண்டினோம்.
அடுத்து உள்ளே சென்றதும் கருவறையின் அருளை உணர்ந்தோம். அங்கே உள்ள இறை சன்னிகளுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தோம்.
அடுத்து நம் முருகப் பெருமான் தரிசனம் தான். கண்ணார அபிஷேகம் கண்டு, நமக்குத் தெரிந்த முருகப்பெருமான் துதிகளை படித்தோம்.
ஆறுமுகனே தெய்வம்
அன்னோன் குருசாமி
வேறு தெய்வம் சொல்லில் விருதாவே
நூறு தரம் மெய் சொன்னேன்
மெய் சொன்னேன் வேத முடிவிதுவே
பொய் சொன்னால் வாய் புழுத்துப் போம்
என்று தண்டபாணி சுவாமிகள் பாடி இருக்கின்றார். நாம் இப்போது தான் முருகனின் அருட்கடலை சிறு துளியாக பருகி வருகின்றோம். முருகன் அருளை வள்ளிமலையில் நாம் பெற்ற போது, இனி வருடத்திற்கு ஒரு முறை நாம் வள்ளிமலை கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதுள் இறுத்தினோம்.
இதோ .வள்ளிமலை ஆண்டவர் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து விட்டோம். இங்கே
படியின் மூலம் மீண்டும் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம்.
அட..காட்டுக்குள்ளே திருவிழா என்பது போல் இருந்தது. கற்கள்,மண் கொண்ட பாதை வழியே நடக்க தொடங்கினோம். அடுத்து பொங்கி அம்மன் தரிசனம் பெற்றோம்.
மீண்டும் மீண்டும் அங்கே சுற்றிக் கொண்டே இருந்தோம். சில நிமிடம் மௌனத்தில்
மௌனித்தோம். பேரமைதி கிட்டியது. குரங்கு மனம் இங்கே குதிக்கவில்லை.
பேரமைதியின் கட்டுப்பாட்டில் மனம் ஒடுங்கியது. இறை சக்தியின் பேரின்ப நிலை
சில நொடிகளில் தொட்டுக்காட்டப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அடுத்து இடம் நோக்கி நகர்ந்தோம். இதோ சுவாமிகள் அருள்பாலிக்கும் நடுமண்டபம் வந்தோம்.
குருமார்களின் தரிசனம் ஒருங்கே பெற்றோம். அள்ள அள்ள குறைவிலா தரிசனம்.
குருமார்களின் தரிசனம் ஒருங்கே பெற்றோம். அள்ள அள்ள குறைவிலா தரிசனம்.
வள்ளிமலை சுவாமிகள் பாதம் சரணம். வேறென்னே வேண்டும் இறைவா!
அடுத்து அங்கிருந்து அடுத்த இடம் நோக்கி சென்றோம்.
அங்கே இரண்டு பாதை இருந்தது. ஆஸ்ரமத்தில் இருந்து நாம் தற்போது இடப்பக்கம்
சென்று கொண்டு இருக்கின்றோம். அடடா. இந்த வழியே செல்லும் போது நமக்கு என்ன
தரிசனம் கிடைக்கப்போகிறது என்று மனதிற்குள் 1000 கேள்விகள்.
சரவணப்பொய்கை தீர்த்தம் கண்டோம். இங்கே செல்லும் பொது கவனமாக செல்லுங்கள். ஏனெனில் இங்கு நாம் பாறையின் மேல் தான் நடக்க வேண்டும்.
அங்கிருந்து அனைவரும் மேலே ஏறிக்கொண்டு இருந்தார்கள். மேலே உச்சியில் சிவபெருமான் இருப்பதாக சொன்னார்கள். எப்படி இருப்பார்? உயரமாகவா? இல்லை வேறு எப்படி? அலங்காரம் எப்படி இருக்கும் என்று மீண்டும் 1000 கேள்விகளை மனதில் தொடுத்துக்கொண்டு மேலே ஏறினோம்.
எந்நாட்டவர்க்கும் இறைவனாக விளங்கும் தென்னாட்டின் சிவன் இந்த தரிசனத்தில்
நாம் நினைத்துக் கூட பார்க்க வில்லை. அபிசேகம் ஆராதனை இங்கே செய்வது கடினம்
தான் என்றாலும் மனதில் கொஞ்சம் வலி இருந்தது.தேற்றிக்கொண்டு மீண்டும்
மீண்டும் அங்கேயே சுற்றி சுற்றி வந்தோம்.
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
வள்ளிமலை அடிவாரம் நோக்கி இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.
அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் ஆலயத்தில் தரிசனம் பெற்றோம்.
நால்வரின் தரிசனம் பெற்றோம். நம் குருநாதரின் தரிசனமும் பெற்றோம்.
அடிவாரக்கோயிலை இன்னும் சற்று தூரத்தில் காண உள்ளோம். இதோ திருக்குளத்தை நெருங்கிவிட்டோம்.
வள்ளிமலை அடிவாரக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோயிலினுள் சென்று முருகப்பெருமானை மீண்டும் தரிசித்து.வெளியே வந்து அங்கிருந்த செய்திப்படங்களை கண்டோம். நீங்களும் மேலே பாருங்கள்.
உச்சியில் உச்சி முகர்ந்து தரிசனம் தந்த சிவபெருமானை திருமால்கிரீஸ்வரர்
என்று அழைக்கின்றார்கள். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
நீங்களே சிந்தித்துப்பாருங்கள். ஸ்ரீ ஓதியப்பரின் அருளால் வள்ளிமலையில் அன்னசேவை செய்து, தீபமேற்றி மலைக்கோயிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேக வழிபாடு செய்து, திருப்புகழ் ஆஸ்ரமம் கண்டு, வள்ளிமலை சுவாமிகள் ஜீவசமாதி தரிசனம் பெற்று , மலை உச்சியில் உள்ள திருமால்கிரீஸ்வரர் தரிசனம் பெற்றுள்ளோம் என்றால் இது குருவருளால் தானே!
சரி..பதிவின் நீளம் கருதி, ஓதிமலையில் நாம் பெற்ற கற்பூர ஆரத்தியை இங்கே தருகின்றோம். அனைவரும், அள்ளிக்கொள்ளுங்கள்.
மகா ஆரத்தி காட்ட ஆயத்தம் ஆதல். இது போதாதா? நாம் செய்த பாவங்கள் இந்த ஆரத்தியில் பொசுங்கட்டும், அறுகுணம் சீர் ஆகட்டும், வல்வினை, வரப் போகின்ற வினை நம்மை சிறக்க உதவட்டும், இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் மகிழ்வோடு வாழ வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்தோம். மேலும் நம் TUT உறவுகள் அனைவரின் பெயரிலும் சங்கல்பம் செய்தோம், அது மட்டுமா? நம் TUT தளத்திற்கு மேலும் ஒரு அருள் கிடைத்தது. நம் தளத்திற்கு முருகன் அருள் கிடைத்துக் கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியமே என்று உணரச் செய்தார் முருகப் பெருமான்.
இதனை யடுத்து, வெளியே பிரசாதம் வழங்கப் பட்டது. குருக்கள் மீண்டும் ஒருமுறை திரை போட்டார், நமக்கு தூக்கி வாரிப்போட்டது, பின்பு முருகன் மீண்டும் அருள் பாலித்தார். அனைவரும் பூ கேட்டல் நிகழ்வில் இருந்தனர். நமது நியாயமான கோரிக்கையை மனதில் நினைத்து, ஓதியப்பரிடம் வேண்ட வேண்டும், அப்போது அவரிடம் இருந்து, உத்தரவு இருந்தால் பூ கீழே விழும், இது போன்ற நிகழ்வு நமக்கு புதிதாக இருந்தது. ஆனால் ஓதியப்பரின் ஆசி பரிபூரணமாக இருந்தது.
பின்பு செவிவழி செய்தியாக நமக்கு கிடைத்து என்னவென்றால், ஒவ்வொரு முறை பூஜை முடித்ததும், முதலில் குருக்கள், முருகனிடம் பேசுவார், பூ போட்டு பார்ப்பார், ஓதியப்பர் ஆசி கிடைத்தால் தான் திரை விலக்கி, வெளியே உள்ள அடியார்களுக்கு ஆசி கிடைக்கும், இல்லையென்றால் குறைகள் களையப்பட்டு, பூஜை நடைபெறும். கேட்கவே சிலிர்ப்பாக இருந்தது.
வெளியே வந்து, பிரசாதம் உண்டோம். அப்பப்பா என்ன சுவை. இன்னும் நாவினில் அந்த சுவையை உணர முடிகின்றது.உடனே முருகப் பெருமானை மனதார நினைத்து, மீண்டும் ஒருமுறை தொழுது,கீழே இறங்க ஆரம்பித்தோம். மலையேற்றத்தை விட, மலையிறக்கம் சற்று எளிதாய் இருந்தது.
இன்றைய ஓதியப்பரின் திருநட்சத்திரத்தை நாம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு மாலை 5 மணி அளவில் அபிஷேகம்,ஆராதனை செய்து சிறப்பு வழிபாடாக கொண்டாட குருவருள் நம்மை பணித்துள்ளார்கள். மேலும் இன்றைய இறைப்பணியாக வள்ளிமலையில் சாதுக்களுக்கு மதிய உணவு தர நம் தளம் சார்பில் குருவருளால் ஏற்பாடு செய்துள்ளோம்.
இன்றைய தினமும் முழுதும் ஓதியப்பரின் அருளில் திளைப்போம்.
ஓம்! ஓதியப்பரின் புகழ் ஓங்கட்டும் !!
மீண்டும் சந்திப்போம்
மீள்பதிவாக:-
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html
வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html
முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html
No comments:
Post a Comment