"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 24, 2021

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 115 ஆவது அவதார திருநாள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

எம்பெருமான் அப்பன் முருகனின் பெருந்தொண்டர் கிருபானந்த வாரியார் சாமிகள் பிறந்த தினம் இன்று. ஐயாவின் புகழை இந்தப் பதிவில் போற்றுவோம். திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.


அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது பிறந்தவர் இவர். செங்குந்த வீர சைவ மரபினர்.


ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19-வது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர். மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்.




19-ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது ஆன்மிக மொழி பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.


அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக்கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி கைத்தல நிறைகனி என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் என்ற விருதை 1967-ம் ஆண்டு வழங்கியது. 1993 அக்டோபர் 19-ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள் 1993-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.

இன்றைய நாளில்  கிருபானந்த வாரியார் அருளிய 7 நாள் துதி இங்கே பகிர உள்ளோம்.இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?

முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.

திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.




ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை :

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

திங்கட்கிழமை :
 
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

செவ்வாய்க்கிழமை :

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

புதன்கிழமை :

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

வியாழக்கிழமை :

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

வெள்ளிக்கிழமை :

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை :

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!              

அடுத்து இன்று நடைபெற்று வரும் விழாவின் அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.



இன்றைய நாளில்  வாரியார் சுவாமிகளை சிந்தித்து, முருகப் பெருமானிடம் வேண்டுவோம்.

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

                                 

No comments:

Post a Comment