அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று முழுதும் ஆவணி மாத ரேவதி நட்சத்திரம். இன்றைய திருநாளில் ஸ்ரீ சாது கருணாம்பிகை அம்மையாரை பற்றி அறிய இருக்கின்றோம். முதன் முதலாக ஸ்ரீ சாது கருணாம்பிகை அம்மையாரைப் பற்றி பேராசிரியர் M.K தாமோதரன் ஐயா எழுதிய நூல் மூலம் அறிந்தோம். இந்த நூல் நாம் சில வருடங்களுக்கு முன்னர் படித்தது. அப்போதே மனம் ஏங்கியது. எப்போது நமக்கு தரிசனம் கிடைக்கும் என்று? அன்று எண்ணிய எண்ணம் இன்று விளைவிற்கு வந்து, இன்றைய பதிவாக மலர்கின்றது. கேட்டது கிடைக்கும், நினைப்பது நடக்கும் என்பதற்கு இன்றைய பதிவும் உதாரணம் ஆகும்.
இறைத் தத்துவத்தை உணர பக்தியில் பலவகைகள் உண்டு. சிரவணம்,கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்ச்சனம்,தாஸ்யம், சினேகம், ஆத்ம நிவேதனம் என்னும் சரணாகதி. பாதைகள் வேறானாலும் இலக்கு ஒன்றே. எண்ணற்ற மானுடர்களில் ஆண், பெண் பேதமின்றி இறைவனை சென்றடையும் ஆத்மா ஒன்றே.
பெண் சித்தர்களுள் ஔவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்கள். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று,இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.அருளன்னை ஸ்ரீசாரதா தேவி, பக்த மீரா, ஸ்ரீஅன்னை, அக்கா மகாதேவி, மாயம்மா, சர்க்கரை அம்மாள், அம்மணியம்மாள்,கரூர் பாட்டி சித்தர் என இன்னும் நம்மால் அறியப்படாத மாந்தருள் தெய்வங்களானோர் பலருண்டு
மதுரையில் முத்து
மீனாட்சி அம்மையின் அருளாட்சி நடைபெறும் மதுரையம்பதியில் தியாகராஜர் பிள்ளை - ஞானாம்பாள் தம்பதியருக்கு 1930 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் தேதி ரோஹிணி நட்சத்திரத்தில் அம்மைநாயக்கனூரில் ஸ்ரீகருணாம்பிகை அம்மை அவதரித்தார்
அக்காலத்தில் பெரிதாய் பள்ளி சென்று அதிகம் படிக்காவிடினும், இளமை முதலே இறை நாட்டத்தில் ஆர்வம் கொண்டு வள்ளல் பெருமானை தன் மனத்துள் குருவென இருத்தி அருட்பெரும் ஜோதியை தியானித்து வரலானார்.
வழக்குரைத்த வனிதை:-
அக்கால வழக்கப்படி அம்மையின் 14ம் வயதிலேயே பெற்றோர் அவருக்கு மணம் முடிக்க வேண்டி அம்மையை வற்புறுத்தினர். இருப்பினும், இல்வாழ்வை வெறுத்த நிலையில் இருந்த கருணாம்பிகை அம்மையாரோ குடும்ப நண்பர் ஒருவரின் அடைக்கலத்தைப் பெற்று, அக்கால கட்டத்திலேயே பெண்ணுரிமை கோரி வழக்காடு மன்றத்தை நாடினார். வழக்கின் தீர்ப்பும் அம்மையாருக்கு சாதகமாகவே,அடைக்கலம் அளித்தவரின் ஆதரவோடு தம் துறவு வாழ்வைத் தொடங்கினார்
நிலவறையில் நிஷ்டை:-
திண்டுக்கல்லில் 1956ல் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு ஒரு நிலவறையை ஏற்படுத்தி, அதனுள் 18 மாதங்கள் கடும் தவத்தை மேற்கொண்டு சிறந்த தவயோகி ஆனார். இளம்தவசியை நாடித் தம் குறைகளை போக்கிக் கொள்ள அடியவர்கள் வரத்தொடங்கினர். தம்மை நாடி வந்த அடியவர்களின் குறைகளையும், துன்ப துயரங்களையும் அருளாளரான ஸ்ரீ கருணாம்பிகை அம்மையார் கருணை கொண்டு போக்கி வந்தார்
முக்தி நிலை:-
ஸ்ரீகருணாம்பிகை அம்மையார் தாம் ஜீவமுக்தி அடையும் நாளை அடியவர்களிடம் முன்னதாகவே அறிவித்துவிட்டு, அதன்படி 1970ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் ரேவதி நட்சத்திரத்தில் தன்னை இறைவனுக்கு ஆத்ம நிவேதனமாய் அர்ப்பணித்துத் தன் ஜீவனை இறைவனின் திருவடிகளில் சரணாகதி அடையச் செய்தார்.
ஜீவசமாதி அமைவிடம்:-
திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆசிரமத்தில் அம்மையாரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. ஸ்ரீ கருணானந்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
நாமும் ஒருமுறை அம்மையாரின் அதிஷ்டானத்தைத் தரிசித்து ஸ்ரீ கருணாம்பிகையின் காருண்யத்தைப் பெற்றிடுவோம்.
இதோ.இன்று நாம் பெற்ற 51வது குருபூஜை விழா தரிசனக் காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.வழக்கம் போல் மனதுள் பல சிந்தனைகள் ஓடியது. ஆசிரமம் என்று நாம் கேட்டதும் எப்படியும் கடைகள் நிறைந்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நம் நினைப்பு அங்கே சென்றதும் தவிடு பொடியானது. மிக மிக எளிமையாக சாது கருணாம்பிகை அம்மையார் ஆசிரமம் இருந்தது.
சாது ஸ்ரீ கருணாம்பிகை ஆசிரமத்தில் நுழைந்தது முதல் நாம் பெற்ற தரிசன காட்சிகளை மேலே இணைத்துள்ளோம். ஒவ்வொன்றாக பார்த்து அருள் பெற்றுக் கொள்ளுங்கள். நாமும் இங்கே எதுவும் பேச விரும்பவில்லை. மௌனிக்கவே விரும்புகின்றோம்.
இந்த அருள்நிலையோடு இன்று மேலும் ஒரு தரிசனம் பெற்றுள்ளோம். அட,,அவருக்கும், சாது ஸ்ரீ கருணாம்பிகை அம்மையாருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்று சிந்தித்து பாருங்கள். அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.
ஓம் ஸ்ரீ கருணானந்தேஸ்வராய நமஹ
மீள்பதிவாக:-
SATHU KARUNAMBIGAI AMMAYAR IN THAVA VALGAI PADITHIL MANAM ANBUDAN ARR@A.R.RAJANBABU GINGEE 604202.VILLUPURAM DT.9789702129
ReplyDeleteஓம் ஸ்ரீ கருணானந்தேஸ்வராய நமஹ
Deleteமகிழ்வும் நன்றியும் அன்பும்