அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை இன்று கருட பஞ்சமியாக அமைந்தது. இம்மாத பதிவுகளில் அன்னையின் தரிசனம் பற்றி எந்த பதிவின் இல்லை என்ற ஏக்கம் எமக்கும் இருக்கின்றது. அதுவும் கடைசி ஆடி வெளியான இன்று அன்னையின் அருளைப் பெற இருக்கின்றோம். ஆடி மாத சேவைகள் அனைத்தும் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அன்னையின் அன்பிலும் திளைத்து வருகின்றோம்.
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே
குருவருளால் பதிவின் தலைப்பிற்கும் நாம் இன்று தரிசிக்கும் ஆலயத்திற்கும் தொடர்பு அமைந்து உள்ளது. சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம் தரிசனம் இன்று பெற இருக்கின்றோம். ஆம்..பெயரிலேயே கரும்பு வந்து விட்டது. இன்றைய தலைப்பும் இதனையொட்டியே அமைந்துள்ளது.
நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோவில்!சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:
காஞ்சிபுரம் நகரில் இருந்து கீழம்பி - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர்.இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம். கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்.
கோவிலை தற்போது பூஜித்தும், பராமரித்து வரும் நவீன்குருக்கள், கோவிலை பற்றி நமக்குதெரிவித்தார். அவர் கூறிய மகத்துவங்கள் இதோ :
- வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்புவலிங்கம் இங்குள்ள ஸ்வாமி. பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற லிங்க மூர்த்தி.கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழேஇருக்கிறார். .
- தல மரம் - சரக்கொன்றை, பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம்.
-இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி ரொம்பவும் மஹிமை பெற்றவர். அம்பிகை தன்னுள் பாதியாக உள்ளதை அறிவிக்க, ஒரு காதில் மகரக்குழையும்,மறுகாதில் தோடும் அணிந்திருக்கிறார்.
- தொண்டர் தம் பெருமையைசொல்லவும் பெரிதே என்றவாக்கிற்கிணங்க, இவ்வாலயத்தில்அறுபத்து மூவரும் இல்லை. மாறாக,அறுபத்து மூவரும்,தக்ஷிணாமூர்த்தியுடைய தலைசடையில் 63 லிங்கங்களாக காட்சிதருகிறார்கள்.
அதாவது, சிவனை வழிபட்டு சிவமாகவே ஆனதால் லிங்கமாகவும்,அடியார்களை இறைவன் தலை மீதுவைத்து பிள்ளை போல்கொண்டாடுவார் என்பது போல், அவர்தலையிலும் இருப்பது, பக்திக்கு மரியாதை.
கோவிலில் ஓரிடத்தில் வில்வமும் வேம்பும் ஒன்றாய் வளர்ந்திருக்கின்றன. வேப்ப மரம் தனது கிளையை வில்வத்தின் மீது போட்டவாறு வளர்ந்திருக்கிறது.அம்பாள் சிவனுடைய தோள் மீது கைபோட்டவாறு இருப்பது போல்இருக்கும். வில்வ மரம் மூன்றுகிளைகள் விட்டு சூல வடிவில் வளர்ந்திருக்கிறது. அடியில் ஒரு பெரியசிவலிங்கமும் அம்பாளும் உண்டு.
- தவிர அழகு வாய்ந்த விநாயகர்,சண்முகர், நவகிரஹங்கள் சந்நிதிகள்உண்டு.
- ஸ்வாமியின் சந்நிதியில் முழுக்க கல்திருப்பணி. விமானம் தவிர.அதேபோல், எங்கும் காணக்கிடைக்காத வகையில், அம்பாளுக்கு முழுவதும் பச்சைக்கல் கொண்டு சந்நிதிஅமைக்கப்பட்டுள்ளது.
- பச்சைக் கல்லுடைய மகிமையால், அம்பாள் சந்நிதியில் உஷ்ணம் நிரம்புவதில்லை. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.
- அந்நியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி, முற்காலத்தில் எல்லா விக்கிரஹங்களும் ஸ்வாமி சந்நிதியில் வைக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டன.கோவில் இருக்குமிடம் தெரியாமல், மண்மேடு அமைத்து கோவிலை மூடிவிட்டனர். காலப்போக்கில் இங்கு கோவில் இருந்ததே தெரியாமல்போனது.
- பிற்காலத்தில்(1954), காஞ்சி பெரியவர்களின் உத்தரவுப்படி, தொ. மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள் இங்கே அகழ்வுப்பணி மேற்கொண்டு,மண் மேட்டுக்குள் இருந்த சந்நிதியை கண்டுபிடித்தார்.
- அருகே இருந்த அம்பாள் சந்நிதிவெற்றிடமாக இருந்ததால், சிறுவர்கள் விளையாட சென்றார்களாம், ஆனால் எப்போது போனாலும் ஒரு சர்ப்பம்சீறிக்கொண்டு அவர்களைவிரட்டியதாம். கோவில் கண்டுபிடிக்கப்பட்டதையும், சர்ப்பத்தின் சீற்றத்தையும் குறித்து, காஞ்சிமஹாபெரியவாளிடம் தெரிவித்ததைஅடுத்து, பெரியவாள் இங்கே விஜயம்செய்து, தரிசனம் செய்தார்களாம்.
- அம்பாள் சந்நிதிக்கு வந்த அவர் (17-04-1978), விக்ரஹம் இல்லாத போதும் சாந்நித்தியம் இருப்பதால் தான் சர்ப்பம்யாரையும் நுழையவிடாமல் தடுப்பதாக அறிந்தார். அதே போல், அங்கே ஒருஅழகிய சிவலிங்க ஆவுடையாரின் மீது, கல்லிலேயே அம்பாளுடைய ஸ்ரீசக்ரயந்த்ரம் இருந்தது. இதைக்கண்டபெரியவாள், அங்கிருந்த நெருஞ்சி முட்களின் ஊடே, தர்ப்பை பாயை விரித்து, அமர்ந்துவிட்டார். 3நாட்களுக்கு அங்கிருந்து விலகவில்லை. பின்பு, உடனேதிருப்பணி துவங்க அனுக்கிரஹம்தந்தார். காஞ்சியை சேர்ந்த சுப்பையா ஸ்தபதி இதை மேற்கொண்டு செய்தார்.
- திருப்பணி நிறைவடையும் நேரம், தரைத்தளம் போட தரையை தோண்டியபொழுது, மேலும் ஒரு அம்பாள் சிலையும், அம்பாள் சந்நிதி விமானத்திற்கும் சுவருக்கும் இடையே வர வேண்டிய மேல் வரிசை சிற்பக்கற்களும் கிடைத்தன. கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தாயும் தந்தையும் சிசுவோடு இருத்தல் என பலவித சிற்பங்களை கொண்டஅக்கற்களை இன்றும் பிரகாரத்தில்காணலாம். விமானம் எழுப்பப்பட்ட காரணத்தால் அவற்றை மேல்வரிசையில் வைக்க இயலவில்லை.
புதிதாக கிடைத்த அம்பாள் திரிபுரசுந்தரி என்றும், அவள் தான் த்ரிபுராந்தகேஸ்வர ஸ்வாமியின் போகசக்தி அம்பாளென்றும், சுந்தர காமாக்ஷி, தானே சிவசக்தி ஐக்கியமான ராஜ ராஜேஸ்வரி அம்சமென்றும் பெரியவாளால்தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே சுவாமி சந்நிதிக்குள்ளேயே தெற்கு நோக்கி திரிபுரசுந்தரி அம்பாளும், தனி பச்சைக்கல் சந்நிதியில் கிழக்குநோக்கி ஸ்ரீ சக்ர பீடத்தோடு சுந்தரகாமாக்ஷி அம்பாளும்அருள்கின்றனர். 1984ல் காஞ்சி புதுப்பெரியவர்கள், கிருபானந்த வாரியார் ஆகியோர் முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அம்பாள் ஐக்கிய ரூபத்தில் ஸ்ரீசக்ரபீடத்தோடு இருக்கும்கோவில்களில் ( திருவாரூர்,திருநாகேஸ்வரம், சிதம்பரம்)கண்டிப்பாக ஒரு காவல் தெய்வம்உண்டு. சாஸ்தா, பைரவர், வீரபத்ரர் என யாராவது இருப்பர்.
- இங்கேயும், தக்ஷனுக்கு ஆட்டுத் தலைதந்து, அனுக்கிரஹம் செய்தகோலத்தில் அனுகிரஹ வீரபத்ரர் அம்பாளுக்கு எதிரே இருக்கிறார். அவர் சிரசில் சிவலிங்கம் தாங்கியவாறுகாணப்படுகிறார்.
- ஸ்வாமி சந்நிதியில் விலகி இருக்கும் நந்தியும், சுவற்றில் பாதி புலி உடல்கொண்ட ஆண் ஒருபுறம் தீபம் காட்டுவதாகவும், பாதி புலி உடல்கொண்ட பெண் மறுபுறம் தூபம்காட்டுவதாகவும் சிற்பங்கள் உள்ளன.
- சுந்தரகாமாக்ஷி அம்பாள், கிட்டத்தட்ட 6அடி உயரம். கைகளில் பாசாங்குசம் அபய வரதத்தோடு கூடிய பேருக்கேற்றஅழகு சொட்டும் திருமேனி.
- முன்னே லிங்கபீடத்தில் ஸ்ரீசக்ரம்.அம்பாளுக்கு கால்களுக்கு இடையே த்வாரமும், அதன் மூலம் கொலுசு சார்த்தும் வழியும் உள்ளது.
- அம்பாளுடைய முகலாவண்யம் சொல்லில் அடங்காதது. அங்கே சென்று நின்றுஅனுபவிப்பவர்களுக்கே அதன் உள்ளர்த்தம் புரியும். அபிஷேகத்தில் தலையில் ஜலம் விடும்போது,கண்களை மூடிக்கொள்வது போலவும், ஜலம் வடிந்தவுடன் மீண்டும் கண்களைதிறந்துகொள்வது போலும் காட்டி,அம்பாள் ஜாலம் பண்ணிக்கொண்டேஇருக்கிறாள்.
- அம்பாள் பராசக்தியாக, ஸ்ரீவித்யாமூர்த்தி ஆக இருப்பதால்,வாசலில் சுவர்களிலும் தூண்களிலும், கணபதி, ஸ்கந்தர், லட்சுமி, சரஸ்வதி, இரண்டு குதிரைகளோடு சாமரம் வீசும்அஷ்வவல்லி, இரண்டு யானைகளோடுசாமரம் வீசும் கஜவல்லி (அச்வாரூடை சம்பத்கரி என்றும் கொள்ளலாம்) ஆகியவர்கள் காட்சி தருகின்றனர்.சுவர்களின் இடையே ஒரு மாடத்தில் வாழைப்பழம் உரித்துசாப்பிட்டுக் கொண்டு, அம்பாளை நோக்கியவாறு, அவள் உத்தரவுக்கு காத்திருக்கும் கோலத்தில், அமர்ந்திருக்கும் குழந்தை ஆஞ்சநேயர்கூட அழகு தான்.
இதனை கீழ்க்கண்ட படங்கள் மூலம் அறியலாம்.
தற்போது பூஜிக்கும் நவீன்குருக்களுடைய தந்தை, சந்திரசேகரகுருக்கள் 10 வயது சிறுபிள்ளையாகஇருந்தபோது, மஹாபெரியவாளிடம், "இந்த அம்பாளுக்கேன் காமாட்சின்னுபேர்? காமாக்ஷி காஞ்சிலேஉக்கார்ந்துண்டு தானே இருப்பா? "என்று கேட்டுள்ளார். அவருக்கு பெரியவாள் அளித்த பதில்:
"இப்போ, உன் அம்மா எங்கயோ உக்கார்ந்துண்டு இருக்கா, நீ போய் தூத்தமோ காபியோ கேக்கறே... என்ன பண்ணுவோ.. பொறுமையா இதோ வரேன்னு சொல்லிட்டு, எழுந்து வந்து போட்டுத்தருவோ... ஆனா, இந்தகாமாக்ஷி பாவம், எதையாது கேட்டுண்டு வர்ற கொழந்தேளுக்கு, உடனே கொடுத்துடணும் னு ஆசையாம். அதாவது, உக்கார்ந்துண்டு இருக்கறவ எழுந்துவர்ற கொஞ்ச காலதாமதம் கூடஅவளுக்கு பண்ண விருப்பம்இல்லையாம். அதான் நின்னுண்டு இருக்கா" .
கேட்டதை கொடுக்க காத்திருக்கும்காமாக்ஷி அம்பிகையை, த்ரிபுராந்தகரை, த்ரிபுரஸுந்தரியை காண சென்று வாருங்கள். முடிந்த வரைஆலயத்தின் பாதுகாப்புக்கும்,அபிஷேக அலங்காரங்களுக்கும் பொருட்களை தந்து, பணி செய்யுங்கள்.
ஆலயத்தில், நித்யபூஜை, தீபம் ஏற்ற எண்ணெய், சந்தனம் குங்குமம் மற்றும் அபிஷேகப்பொருட்கள் ஆகியவை உள்பட, பல்வேறு கைங்கர்யங்களில் உதவி தேவைப்படுகிறது. செய்ய சக்தியும், மனமும் விருப்பமும் உடைய அன்பர்கள், கீழே தந்துள்ள ஆலய அர்ச்சகரை தொடர்பு கொண்டு, அல்லது நேரில் சென்றோ முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
காலம் காலமாக கருணை பொழியும் காமாக்ஷி அம்மை, நம்மை நிச்சயம் கடைத்தேற்றுவாள், வேண்டிய வரம் தருவாள். காமாக்ஷியை நம்பினோர் கைவிடப்படார். காப்பது அவள் கடன்.
தொடர்பு விவரங்கள் : ஆலய அர்ச்சகர் நவீன் சுந்தர் குருக்கள் - 9791505077, 9486060120, 9486370223
ஆலயம் தரிசனம் செய்ய செல்லுவோர் அர்ச்சகருக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துவிட்டு செல்லவும்.
காஞ்சீபுரம் ~காவேரி பக்கம் ரயில் உள்ளது
நன்றி : அகத்தியர் ஞானம்
சுந்தர காமாக்ஷி சுபிக்ஷம் தரட்டும்!
அப்படிப்பட்ட பரம சிவனாரையும் அவரது உடல் தளர்ந்து போகுமாறு தனது குரும்பை ஒத்த கொங்கைகளால் சாய்த்த பெருமை உடைவள் அல்லவோ நமது அம்மை அபிராமி!
அந்த பெருமையும் சிறப்பும் உடைய அபிராமி அன்னையின் செம்மையான திருக்கரங்களிலே இருக்கும் கரும்பும், மலர்களும், எப்போதும் என் சிந்தையிலே இருக்கட்டும் என்று பேசுகிறார் அபிராமி பட்டர்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html
No comments:
Post a Comment