"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, July 23, 2020

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளை திருஆடிப்பூரம்.இன்றைய பதிவில் ஆடிப்பூரம் பற்றி தொட்டுக் காட்ட விரும்புகின்றோம். அன்னையின் பாதம் தொட்டு பதிவைத் தொடர்வோம். அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடம் இருந்து வந்துள்ள ஆடிப் பூர விரத வழிபாட்டை அனைவரும் மேற்கொண்டு  குருவருளும் திருவருளும் பெற வேண்டுகின்றோம். 



ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.

இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள்  உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.



அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை  உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த  வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக  எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு  நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த  தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில்  வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம்.  இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம்  ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும்  பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா  நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும்  உகந்த நாள்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான்  முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய்  இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில்  அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக  வழங்கப்படுகின்றன.

காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில்  வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி  அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.

சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர்  இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன்  சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை  உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில்  நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு  அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில்  ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

ஆனால் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் கோயில்களில் வழிபாடு சிறிய அளவிலே தான் நடைபெற்று வருகின்றது. எனவே இறை அன்பர்கள் அனைவரும் வீட்டிலே வழிபாடு செய்யும் படி வேண்டுகின்றோம்.

சென்ற ஆண்டு ஆடி மாத ஆயில்ய தரிசனமும்,  இந்த ஆண்டு ஆடி மாத ஆயில்ய தரிசனமும் காண்போமா?

சில தரிசனங்களை கீழே இணைத்துள்ளோம்.







மீண்டும் மீண்டும் தரிசனம் பெற்றோம். 

இனி. இந்த ஆண்டில் நாம் பெற்ற நம் குருநாதர் தரிசனம் 


பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் ஆடிப்பூர விரதம்  அனைவரும் மேற்கொள்ள வேண்டுகின்றோம். காலை 6 மணிக்கு முன்பு எழுந்து நீராடி, வீட்டில் தீபமேற்றி, தாயே. உன் தயை வேண்டி இன்று விரதம் இருக்கின்றோம் என்று கூறி, காலை வழிபாடு செய்யவும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சமைத்த உணவுகளை தவிர்க்கவும். பழங்களை மட்டுமே காலை, மதியம் உணவாக எடுத்துக்கொள்ளவும். இது இருந்தும் இல்லாமலிரு என்ற பக்குவ நிலை. இறையின் அருள் பெரும் நிலை. பின்னர் மாலை 6 மணிக்கு பின்னர் மீண்டும் நீராடி வழிபாடு செய்து, இனிப்பு பதார்த்தம் நைவேத்தியம் செய்து, லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற பதிகங்கள் பாடி வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டுகின்றோம்.

இந்தப்பதிவை படிக்கும் அனைவருக்கும் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைத்திட எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவதுடன், இந்நன்னாளில் அபிராமி அந்தாதியில் உள்ள ஒரு பாடலைத் தருகின்றோம்.அனைவரும் தினசரி பூசையில் இணைக்கவும்.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/20072020.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_17.html

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரிஅம்மன் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post.html

 சித்திரை மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_1.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html


சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

No comments:

Post a Comment