"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 13, 2020

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர்

அடியார் பெருமக்களே...

அனைவருக்கும் வணக்கம். 

பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள்  என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.



 சரி. பதிவின் உள் செல்வோமா?


முதல் முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.


வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.

எதிர்பார்த்தல் ஏமாற்றமே தரும். இன்று குடும்பங்களில் நடைபெறும் பல குழப்பங்கள், சண்டைகள்,சச்சரவுகள் என அனைத்திற்கும் காரணம் எதிர்பார்ப்பே ஆகும். அதுவும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இந்த எதிர்பார்ப்பினால் வரும் ஏமாற்றம் இருக்கின்றதே..அப்பப்பா..வார்த்தையால் இதனை சொல்ல இயலாது. 

சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் இந்த எதிர்பார்ப்பு, ஆசையில் இருந்து தோன்றுகிறதா? இல்லை பேராசையில் இருந்து தோன்றுகிறதா? என்று சரியாக சொல்ல முடியாது.இந்த எதிர்பார்ப்பை தவிர்த்தாலே பல பிரச்சினைகள் சரியாகி விடும்.எப்படி தவிர்ப்பது? இங்கே ஒரு நாள் முழுக்க எதிர்பார்ப்பை தவிர் என்று சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் எடுத்த உடனேயே இது சாத்தியமல்ல. முதலில் சிறு சிறு நிகழ்வுகளில் இந்த எதிர்பார்ப்பை தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்க்க பழகினால் தான் ஒரு நாள் முழுக்க இதனை கடைபிடிக்க முடியும்.

எம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இது பற்றி கேட்டோம்.

 "நீங்கள் எதிர்பாராது இருப்பதனால், உங்களுக்கு வர வேண்டியது நின்றுவிடாது. எதிர்பார்த்தாலும், எதிர்பாராவிட்டாலும் வந்து சேர வேண்டியது சரியாக வரும் -

கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் அவர்களிடம் நான் எதிர்பார்க்க வேண்டியதே இல்லை. அவரவர்கள் செய்வதைச் செய்யட்டும். ஆனால், மனைவி என்ற முறையில், கணவன் என்ற முறையில், மகன் என்ற முறையில், தாய் என்ற முறையில் வயதில், பொருளில், ஆற்றலில், அதிகாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன்? இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சிந்தனை செய்து 'அவரவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?' என்று உதவி செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, 'அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இன்னதை செய்ய வேண்டும்' என்பது இல்லை.

அப்படி நீங்கள் எதிர்பாராது இருப்பதனால், உங்களுக்கு வர வேண்டியது நிற்காது; வர வேண்டியது சரியாக வரும். அப்படி வரும்போது, எதிர்பார்ப்பதில் ஒரு கற்பனை மூட்டையைக் கட்டி வைத்திருந்தோமே, அதுவும் இதுவும் இடிபடாது. என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு அந்நேரத்தில் மனம் தயாராக இருக்கும்.

எந்நேரமும் கற்பனையான எதிர்பார்ப்பு என்ற ஒரே ஓர் வியாதியால் தான் இன்று மனித குலத்தில் துக்கம், சோர்வு, துன்பம், பகை, பிணக்கு எல்லாம் வருகின்றன. 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கடமையை உணராது அதில் ஓர் உரிமை கோரும் போது துன்பங்கள் தான் வரும்.

மனிதனிடம் இருக்கும் அறிவைக் கொஞ்சம் சிந்தனையில் திருப்பிக் கொண்டு, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, கடமை செய்வதில் முனைந்து நிற்போம். முயன்றால், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் முழுமையான ஓர் மாற்றம் கிடைக்கும்; அமைதி கிடைக்கும். அதாவது செல்வந்தனாக இருக்கக்கூடிய உணர்வு வந்துவிடும்.

எதிர்பார்ப்பவன் எப்போதும் பிச்சைக்காரனாகத்தான் இருப்பான். எந்த நேரமும் யார் என்ன கொடுப்பார்களோ? என்றுதான் இருப்பான். எதிர்பார்ப்பவனாக இயற்கை நம்மைப் படைக்கவில்லை. அத்தகைய முழுமையோடு இயற்கை நம்மை உண்டாக்கி வைத்திருக்கிறது. நம்மிடம் எல்லாம் இருக்கிறது. கற்பனையான எதிர்பார்ப்பு சிறுமையைச் செய்து விடுகிறது. வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முதலாவது - எதிர்பார்த்தல் தவிர்ப்பது.

இரண்டாவது - பிறருக்கு என்ன செய்ய முடியும்? என்பது.

மூன்றாவது - எந்தச் செயல் செய்தாலும் அந்தச் செயலின் விளைவு பிறருக்குத் துன்பம் இல்லாது நட்டம் இல்லாது இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்வது.

இம்மூன்று கொள்கைகளைக் கடைபிடித்து மனதை வளப்படுத்தி, குடும்பநலம் பெறலாம்.அப்போது உலகமே நம்முடையதுதான். பக்கத்தில் இருப்பவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்கள், எல்லோருமே நண்பர்களாகத்தான் இருப்பார்களே தவிர, எதிர்ப்பு என்பது இருக்கவே இருக்காது.

 மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்..

"குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்;
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்,
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வேதாத்திரி மகரிஷி சொன்ன வழியில் எதிர்பார்ப்பினை தவிர்த்து, அனுதினமும் ஏற்றமுடன் வாழ்வோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

No comments:

Post a Comment