"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, April 14, 2024

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு

                                                   இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) & தள உறவுகளுக்கும், உழவாரப்பணி, அன்னதானம் மற்றும் இன்னபிற சேவைகளுக்கு பொருளுதவி செய்தும், தளத்திற்கு மாதந்தோறும்  விருப்ப சந்தா அளித்து உதவும் உள்ளங்கள் அனைவருக்கும், தளத்தில் பதிவுகளை படித்தும், பகிர்ந்தும் நமக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும்  திரு குரோதி  வருட(2024-2025) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டி அனைவருக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.இன்றைய புத்தாண்டில் நம் தளம் குருவருளால் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.



நம் குழு எப்படி ஆரம்பித்தோம் என்றும், நம் தளம் சார்பில் செய்து வரும் சேவைகளை பற்றியும் இங்கே தொடர விரும்புகின்றோம்.

 வாழ்க்கை படகில் ஓடிக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று ஆண்டுக்கு முன்பு அகத்தியர் வனம் அறிமுகம் கிடைத்தது. பல்வேறாய் தொண்டு செய்பவர்களுடன் அறிமுகம் கிடைத்தது. அன்ன தர்மம் செய்வது பற்றி நினைத்தேன். அகத்தியர் வனம் மலேசியா குழு அன்னதானம் செய்வதை பார்த்தேன். 

ஜீவ அமிர்தம், rightmantra சுந்தர் என நட்பு வட்டத்தின் அனுபவம் உதவியுடன் என் அலுவலக நண்பர்கள் உதவியுடன் (தமிழ்மணி, அரவிந்த், மணிகண்டன் & மனோ) 2016 ஆம் ஆண்டு  ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 10 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கூடுவாஞ்சேரி சுற்றி உள்ள பகுதிகளில் கொடுத்தோம். 

நமது முதல் அன்னதானம்  2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ம் தேதி (14.02.2016)  நடைபெற்றது. மார்ச் மாதம் மேலும் சில நண்பர்கள் கை கோர்த்தனர். அன்பு தொண்டு இல்லம், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் என  மாதம்தோறும் குருவருளால்  தொண்டு செய்தோம்.அப்போது நாம் வேறெதுவும் நினைக்கவில்லை. பின்னர் நண்பர்களின் துணையுடன் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT என்ற பெயரில் நம் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த பணி கோவில் சுத்தம் செய்தல், ஆசிரமத்திற்கு உதவுதல் என நீண்டது. நம் குழு சார்பில்  மரம் நடு விழா, மோட்ச தீபம், ஆலயங்களுக்கு தீப  எண்ணெய் வழங்குதல், உழவாரப்பணி, அன்னதானம், மாதந்தோறும் சித்தர்கள் வழிபாடாக ஆயில்ய ஆராதனை, மலை யாத்திரை என தொடர்ந்து வருகின்றோம். தற்போது 100 உறுப்பினர்களுடன் "தேடல் உள்ள தேனீக்களாய்" என்ற பெயருடன் இயங்கி வருகின்றோம்.

எப்படி ஆரம்பித்தோம் என்று இப்போது நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாய் உள்ளது. அனைத்திற்கும் காரணம் தேட நாம் தான் முயலுவோம். ஆனால் அந்த பரம்பொருள் நம்மை வழிநடத்தி வருவதை பார்க்கும் போது நாம் இன்னும் ஆன்மிகத்தில் இப்போது தான் காலடி எடுத்து 
வைத்துள்ளதாக உணர்கின்றோம். நம் கையில் ஒன்றுமே இல்லை. அனைத்தும் குருமார்களின் ஆசியோடு தான் நடைபெற்று வருகின்றது.


TUT அன்னசேவை பற்றி இன்னும் பேசுவோம். இந்தப் பதிவுகளை பார்க்கும் போது நாம் இங்கே அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டும், கடந்து வந்த பாதை என்ற நிலையிலும் பார்க்க விரும்புகின்றோம். முதன் முதலாக கூடுவாஞ்சேரியில் சுமார் 10 உணவு பொட்டலங்கள் கொடுத்தோம். 

அடுத்து நம் அலுவலக நண்பர் திரு, சிவகுமார் அவர்களின் துணையுடன் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்ன சேவை செய்து உள்ளோம். சுமார் 100 நபர்களுக்கு உணவு கொடுக்கும் பொருட்டு இந்த சேவை வேளச்சேரியில் தொடங்கி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வரை தொடரும். இது போல் சில மாதங்கள் அன்னசேவை தொடர்ந்துள்ளோம். இதற்கு நம்முடன் கரம் கோர்த்த அன்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நம்முடன் இணைந்த மலேஷியா அகத்திய அடியார் பெருமக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

அடுத்து நம்மால் கூடுவாஞ்சேரியில் இருந்து வேளச்சேரி வரை சென்று வர முடியவில்லை. கூடுவாஞ்சேரி வந்து ஓராண்டு கழித்து நமக்கு வள்ளலார் கோயில் பற்றி தெரிந்தது. பின்னர் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதியம் அன்னசேவை செய்து வந்தோம். இந்த சேவை மேலும் தொடர வேண்டும் இனி மாதம் தோறும் அமாவாசை அன்னதானம் என்று செய்து வந்தோம். அமாவாசை அன்னதானம் இன்று வரை நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது. அடுத்து அமாவாசை அன்னதானம் மற்றொரு வழியில் தன்னை பெருக்கி கொண்டது. ஆம். நம் தளத்தின் மூலம் நடைபெற்று வரும் மோட்ச தீப வழிபாடு  மூலம் அன்று சுமார் 100 பேருக்கு உணவு வழங்கி வருகின்றோம். நமக்கே இது ஆச்சர்யமாக உள்ளது? இந்த அமாவாசை மோட்ச தீப அன்னசேவைக்கு சுமார் ரூ.3000 ஆகும். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தொண்டு நடைபெற்று வருகின்றது.

இப்படியே தொடர்ந்த அன்னதானம் மேலும் பல தன்னலமற்ற சேவை அமைப்புகளோடு இணைந்து நடந்து வருகின்றது. கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில், மதுரை ஸ்ரீ அகத்தியர் இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என தொடர்ந்து வருகின்றது. இங்கு சிலவற்றை தான் குறிப்பிட்டு கூறியுள்ளோம். இந்த 2020 ஆம் ஆண்டு அன்னசேவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செய்தோம். நம் தளத்தின் ஆணிவேராக அன்னசேவை தான் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இது தவிர சில நாட்களில் சிறப்பு அன்னதான சேவையும் நம் தளம் சார்பில் நடைபெறும்.குறிப்பாக ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் இது போன்ற சேவை தொடரும்.

ஆங்..சொல்ல மறந்து விட்டோம். சென்ற 2019 ஆண்டில் புரட்டாசி அமாவாசை ஒட்டி நம் தளம் சார்பில் மகாளயபட்ச நாட்கள் முழுதும் இது போன்ற சேவை செய்தோம். 


இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு அன்னசேவையின் போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,

அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 

நமது அடுத்த சேவையான உழவாரப் பணி பற்றி காண உள்ளோம்.

உழவாரப் பணி அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்கள் இருக்கலாம். அவர்களுக்காக சில செய்திகளை இங்கே பகிர உள்ளோம்.


பொதுவாக நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழலும்  கோடான கோடி மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவாரப்  பணி  அருமருந்தாக அமைந்துள்ளது . ​உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7-ம்  நூற்றாண்டு  வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது

உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண் அப்புறப்படுத்தி ஆலயத்தை நாம் செம்மைப் படுத்துவது போல் நம் கர்ம வினை போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மைப் படுத்துகிறான். இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.

ஆன்மீகப்  பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது. மற்றொரு விதத்தில்  கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.

மனிதன் கடைத்தேறுவதற்கு எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை பிரார்த்தனை முறைகளை, கூறியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும் மகத்துவமும் மிக்கது திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.

நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும் பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம் இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.


அடுத்து நாம் செய்த முதல் உழவாரப்பணி அனுபவத்தை இங்கே பகிர இருக்கின்றோம். தேடல் உள்ள தேனீக்களை குழுவின் மூலம் அன்னசேவை செய்து கொண்டிருந்த நேரத்தில் 2016 ஆண்டு  ஜூன் 5 ம் தேதி  ( 05.05.2016) அன்று பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவிலில்  குருவருளால் செய்தோம்.

எப்படி ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை. ஆனால் பெருங்களத்தூரில் உள்ள நண்பரின் முயற்சியால் இந்த உழவாரப்பணி செய்யும் வாய்ப்பு கிட்டியது. உளமார இந்த உழவாரப் பணி தற்போது வரை நம் தளத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றது. இன்னும் உழவாரப்பணிக்கென்று கருவிகள் கூட நாம் வாங்கி வைக்கவில்லை. நமக்கே இது ஆச்சர்யம் தான். எங்கு உழவாரப்பணி செய்ய நமக்கு இறையருள் கூட்டுவிக்கின்றதோ, அங்கு முன்கூட்டியே சென்று பார்த்து வருவோம். அதற்கு முன்னர் உழவாரப்பணி கருவிகள் வாங்கி வைத்து விடுவோம். பணி நிறைவில் அந்த கருவிகளை அந்த கோயிலுக்கே மீண்டும் கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

பெருங்களத்தூரில் தொடங்கிய முதல் உழவாரப்பணி குருவருளால் தற்போது வரை பல கோயில்களில் நடைபெற்று வந்துள்ளது.

1. பெருங்களத்தூர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவில் 
2. அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயம் பெருங்களத்தூர் 
3. கூடுவாஞ்சேரி நூலகம் 
4. கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் கோயில்
5. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில்
6. ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் கோயில் 
7. குழந்தைவேலர் சித்தர் கோயில், மயிலாப்பூர் 
8. பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் 
9. கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் திருக்கோயில் 
10. குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயில் 
11. கொளத்தூர் திருமால் மருகன் ஆலயம்
12. ஆப்பூர் ஸ்ரீ நித்ய கல்யாண ப்ரஸன்ன வெங்கடேச பெருமாள் கோயில் 
13. குன்றத்தூர் ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயம் 
14. கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே  ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயம்

மேற்கண்ட கோயில்களில் நாம் உழவாரப்பணி செய்திருக்கின்றோம். அதிலும்  குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உழவாரப்பணி செய்து வருகின்றோம். கொளத்தூர் திருமால் மருகன் ஆலயதில் 2 முறையும், குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயிலில் 2 முறையும், கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே  ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயதில் உழவாரபாணியோடு மரம் நடு விழாவும், பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமதில் மூன்று முறையும் செய்துள்ளோம். இவற்றில் நாம் வெளியூர் சென்று செய்த பணிகளாக ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் கோயில் , கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் கோயில், பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் என அடங்கும். 

நம் உழவாரப்பணியின் சிறப்பாக சிறப்பு தரிசனம் நமக்கு கிடைத்து வருகின்றது என்று சொல்லலாம். ஓதி மலை யாத்திரையில் நமக்கு உழவாரப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அடுத்து 
பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப்பணி அங்கு ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழாவிற்காக நமக்கு அருளப்பட்டது. இதே போன்று குன்றத்தூர் உழவாரப்பணி என்றால் கண்டிப்பாக ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயம், திருஊரகப்பெருமாள் கோயில், குன்றத்தூர் முருகப் பெருமான் என கிடைத்து விடும். தற்போது நாம் செய்த ஆப்பூர் உழவார்ப்பணியில் நமக்கு ஒரு நாள் யாத்திரையாகவே அமைந்தது. அனைத்தும் குருவருளால் என்று நமக்கு உணர்த்தப்பட்டும் வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு உழவாரப்பணியின்  போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.





நம் குழுவின் அடுத்த நிலை நோக்கி நகர்ந்த ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு பற்றி தொடர உள்ளோம். அன்னதானம், உழவாரப் பணி என தொடர்ந்த நாம், ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு மூலம் குருவருளைப் பற்றிடவும், பெற்றிடவும் முடிகின்றது. ஆரம்பத்தில் நாமும் இந்த வழிபாடு ஸ்ரீ அகத்தியர் வழிபாடு என்று மட்டும் நினைத்தோம். ஆனால் பின்னர் சித்தர் போற்றித் தொகுப்பு பாடி பூசைகள் நடைபெற்ற போது தான் இது ஆயில்ய ஆராதனை மட்டுமன்று; சித்தர்களின் பூசை என்று உணர்ந்தோம்.

இப்போது நம் தள பதிவுகளை திரும்பி பார்க்கும் போது நாம் ஏற்கனவே சித்தர்கள் அறிவோம் என்ற ஒரு பதிவை அளித்துள்ளது நினைவிற்கு வருகின்றது. அந்தப் பதிவை பார்த்துவிட்டு ஒரு அன்பர் சித்தர் காப்புப் பாடல் வேண்டும் என்று சொல்லி இருந்தார். நாமும் அவருக்கு அதனை பகிருந்தோம். இனி..நாம் எப்போது ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பூசை ஆரம்பித்தோம், எப்படி முதல் பூசை நடந்தது என்பது போன்ற அனுபவத்தை இங்கே காண்போம்.


நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

2016 ஆம் ஆண்டில் நாம் அன்னதானம், உழவாரப்பணி என்று ஆரம்பித்த நாம் 2017 ஆம் ஆண்டில் தேடல் உள்ள தேனீக்களாய் - (TUT) குழுவிற்கென்று வலைத்தளம் ஏப்ரல் 14 ம் தேதி ஆரம்பித்தோம். இதனை அப்படியே நம் ஆண்டு விழா என்று கணக்கில் வைத்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டில் தான் ஆயில்ய பூசை நமக்கு குருவருளால் கிடைத்தது. 2016 முதல் நமக்கு ஜீவ நாடி அறிமுகம் கிடைத்தது. ஜீவ நாடி உத்தரவுப்படி சில வழிபாட்டு முறைகளை நாம் தொடங்கினோம். அதுவரையில் கூடுவாஞ்சேரியில்  உள்ள ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் பற்றி யாம் அறியவில்லை. ஆனால் கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் அப்போது ஆகி விட்டது. பின்னர் ஒரு நாள் நமக்கு ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் கிடைத்து. அன்று தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனமும் கண்டோம். அப்போது தான் ...அடடா..குருநாதரை நம் வீட்டு அருகிலே இருப்பது அறியாது இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமோ என்று தோன்றியது. இது தான் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதை என்றும் தோன்றியது.

உடனே நாம் குருநாதரிடம் விண்ணப்பம் வைத்து விட்டு வந்தோம். அடுத்து நமக்கு கிடைத்த ஜீவநாடி உத்தரவில் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை செய்ய அருள வேண்டும் என்று வினவினோம். நம் குருநாதர் சரி என்று நாடியில் வாக்குரைத்தார். இது பற்றி நம் குழு அன்பர்களிடம் பேசி, முதல் வழிபாடாக  ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு  2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8 ம் நாள் (21.08.2017) திங்கட்கிழமை நடைபெற்றது.



 இது நாம் எதிர்பாராத ஒன்று. ஆனால் நம் TUT குழுமத்தின் அடுத்த கட்ட பயணத்தில் இது ஒரு மைல் கல் என்றால் அது மிகையில்லை.கூடுவாஞ்சேரி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அகத்தியரின் தரிசனத்தில், கல்யாண தீர்த்தம், பஞ்செட்டி என்று பயணம் செய்துள்ளோம். கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோவிலில் அகத்தியர் தரிசனம் பெறலாம் என்று கேள்விப்பட்டோம். ஆனால் காலம் கனிய வேண்டுமே. இரண்டு, மூன்று முறை கோவிலுக்கு சென்று, வணங்கியபோது,சற்று ஆழ்ந்த அமைதியில், அகத்தியருக்கு ஆயில்யம் நட்சத்திரம் அன்று ஆராதனை செய்ய மனம் விரும்பியது.உடனே குருக்களிடம் சொன்னோம்.இதோ ஆயத்தப் பணிகள் நடந்து 2017 ஆம் ஆண்டில் 21.08.2017 முதல் ஆயில்யம் பூஜை நடைபெற்றது. இனி மாதந்தோறும், ஆயில்ய நட்சத்திர ஆராதனை நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு,குருவருள் பெற அன்போடு அழைக்கின்றோம்.

 குருக்கள் ஏற்கனவே நம்மிடம், பூஜையில் சித்தர்கள்  போற்றி சொல்லி துதிக்க

 என்று சொன்னார்கள். நாம் அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு அவரே கொண்டு வருவதாகவும், சொன்னார்கள். ஆனால் அன்று அதை மறந்து விட்டார்.நானும் குருக்கள் சித்தர் போற்றி துதிக்க ஏற்பாடு செய்திருப்பார் என்று வெறுங்கையை வீசி சென்று விட்டோம். அகத்தியர் பூஜையை அவர் ஆரம்பிக்கும்  முன்பு நம்மை சித்தர் போற்றி துதி படிக்க சொன்னார்கள்.நமக்கு உடனே பதற்றம் உருவாகி விட்டது. நாம் சற்று மறுத்து விட்டோம். பின்பு உடனே அலைபேசியை எடுத்து , அகத்தியர் வனம் மலேஷியா திரு.சண்முகம்  ஆவடையப்பா ஐயாவின்  நினைவில் உடனே சித்தர் போற்றி தொகுப்பை இணையத்தில் எடுத்து,குருக்களிடம் அனுமதி கேட்டு , துதிக்க ஆரம்பித்தோம். நம் உறவுகளுக்காக இணைப்பை பதிவின் இறுதியில் இணைத்துள்ளோம். அனைவரும் குரு நாளில் கண்டிப்பாக சித்தர் போற்றித் தொகுப்பை மறக்காது வேண்டவும்.


முதலில் நாமும்,குருக்களும் மட்டுமே அகத்தியர் முன்பு இருந்தோம். குருக்களின் இசைவு கேட்டு, சித்தர் துதி ஆரம்பமானது. காப்பான கருவூரார் பாடலில் ஆர்மபித்து அப்படியே,நம் அப்பனை நினைத்து, பாடிக் கொண்டே சென்றோம். வேகமாக பாடி முடித்து விட்டோம்.சுமார் 10  நிமிட இடைவெளி முடித்து, அகத்தியர் முன் சுமார் 5, 6 அன்பர்கள் நின்றிருந்தனர்.எல்லாம் அவர் அருள் தானே !


அகத்தியர் அலங்காரம் முடிந்ததும்,ஆர்த்தி காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.







இதற்குத் தானே ஆசைப்படுகின்றோம் எம் ஐயனே ! அம்மையும் அப்பனுமாய் காண்கின்றோம் வெள்ளொளி வேந்தே! அருணாச்சல சிவ ! அருணாச்சல சிவ ! பொய்யை  நீக்கி மெய்யை உணர்த்தும் முழுமுதற் கடவுளே..ஒப்பிலா மணியே ...தமிழ் தந்த கடவுளே. என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தோம். கண் குளிர அகம் மகிழ அகத்தியர் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.இது தாம்  பெரும்பேறு. செல்வத்துள் செல்வம். அறுசுவை கேள்விப்பட்டிருப்போம். அகத்தியர்  தரிசனத்தில் ஏழாம் சுவை உணர்ந்தோம். ஏன் ! எதற்கு ? என்று தெரியவில்லை. நடப்பதெல்லாம் நின் அருளாலே என்று மனதுள் நன்றி சொன்னோம். குருக்கள் தீபாராதனை காட்ட தாயாராகி விட்டார்.




தீபாராதனை உங்களுக்காக ! எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்துள்ளோம். இந்த கவின்மிகு,அருள்மிகு,அன்புமிகு,கருணைமிகு,ஆற்றல்மிகு தரிசனம் பெற ! கண்ணில் சிறிது நீர்த்துளி எட்டிப்பார்த்தது. அனைவரும் ஆரத்தி எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் குருக்கள்,அகத்தியரிடம் வேண்டி, நம்மைப் பார்த்து, அகத்தியர், நம்மை மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை செய்ய விரும்புவதாக சொன்னார்கள். மிக்க நன்றி என்று குருக்களிடம் கூறிவிட்டு, நமது TUT குழுவின் சார்பாக இங்கே, அகத்திய ஆராதனை ஆயில்யம் நட்சத்திரம் அன்று  அளித்தோம்.அடுத்து அவர் சொன்ன செய்தி  நம்மை அற்புதத்தில் ஆழ்த்தியது.

பொதுவாக அமாவாசை தினம் சித்தர்கள்,முனிவர்கள் வழிபாடு  செய்ய உகந்தது. நாம் அன்று செய்த பூஜை ஆயில்ய நட்சத்திரத்தோடு, அமாவாசை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றதும், உள்ளம் நெகிழ்ந்தது.பின்பு அகத்தியர் தரிசனம் கண்டீர்களா? என்றார்? நாம் சுற்றும்,முற்றும் பார்த்தோம். இல்லை என்றோம். அப்போது அவர் தொடர்ந்தார். சித்தர்களின் ஆசி, நீங்கள் நினைப்பது போல்,அதிசயமாக நிகழாது. நம்முள் ஒருவராக வந்து ஆசி கொடுப்பார்கள் என்றார்.அங்கே இருந்த சாது ஒருவரைக் காண்பித்தார்.இவர் வருவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.இவர் தான் இங்கே அகத்தியர் சொரூபமாக வந்து உள்ளார் என்றார். நாமும் உடனே சுதாரித்துக் கொண்டோம்.உணர்ந்தோம். எப்படியோ முதல் பூஜையில் எங்களுக்கு சாது ரூபத்தில் வந்து ஆசி வழங்கிய அகத்தியரை நாம் வணங்கினோம்.



                           முருகப் பெருமானுடன் இணைந்த அகத்தியர் தரிசனம்

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு. உடனே வெற்றிலை, பாக்கு உடன் பழங்கள் கொடுத்து சாதுவிடம் வேண்டினோம்.அவர் காட்சிப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. நைவேத்தியமாக சுண்டல் வழங்கப்பட்டது. நமக்கு ஒரு பிரசாதத்தோடு சேர்த்து,சுண்டலும் தந்தார்கள். நாம் அலுவலகம் வந்து அவற்றை எடுத்து சுவைத்துப் பார்த்தோம். என்ன சுவை ! இன்னும் நாக்கில் சுவை ஊறுகின்றது ? அந்த காரமும், சுவையும்! அடடா ! என்னன்னே தெரியல! என்ன மாயமோ? கோவில் பிரசாதம் ....கோவில் பிரசாதம் தான்.சாட்சாத் ..அகத்தியர் அருள் நிறைந்ததன்றோ !



2017 ஆம் ஆண்டில் தொடங்கிய கூடுவாஞ்சேரி ஆயில்ய பூஜை இரண்டு ஆண்டுகளைத் தாண்டி தற்போது வரை குருவருளால் நடைபெற்று வருகின்றது. முதல் ஆயில்ய பூஜையில் நாம் ஒருவராக கலந்து கொண்டு ஓரே ஒரு பிரசாதம் வழங்கி மகிழ்ந்தோம். அடுத்த சில மாதங்களில் ஆயில்ய பூஜை மார்கழி மாதத்தில் குரு பூஜை என்று கொண்டாடினோம். 108 தீபமேற்றி முதல் குருபூஜை கூடுவாஞ்சேரியில் கொண்டாடி மகிழ்ந்தோம்.  இந்த 108 தீப வழிபாடு நமக்கு அடுத்த வழிபாடு பற்றி உணர்த்த காரணமாக இருந்தது. அது என்ன? என்று தெரிந்த அன்பர்கள் கூறலாம். இங்கே தான் நமக்கு தீப வழிபாட்டின் முக்கியத்துவம் புரிந்தது. அடுத்தடுத்த ஆயில்ய பூசையில் அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு ஆயில்ய பூசையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருக்கும். இப்படி தான் வழிபாடு இருக்கும் என்று நாம் திட்டமிடமாட்டோம். ஆனால் குருவருளால் ஆயில்ய வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த ஆயில்ய பூசை வழிபாட்டில் குருநாதரின் தரிசனம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக நம்மை ஈர்க்கும் படி இருக்கும். இடையில் ஒரு முறை சந்தன காப்பு அலங்கார தரிசனம் கண்டோம். 2019 மார்கழி ஆயில்ய பூசையில் அதாவது குரு பூஜையில் ராஜ அலங்காரம் கண்டு மகிழ்ந்தோம்.
2018,2019,2020,2021  என  நான்கு  ஆண்டுகளாக ஆயில்ய பூஜை நம் தளம் சார்பில் குருபூஜையாக கொண்டாடி வருகின்றோம். இது மட்டுமல்ல. ஸ்ரீ அகத்தியர் குரு பூஜைக்கு நமக்கு தெரிந்த மற்ற கோயில்களுக்கு நம் தளம் சார்பில் சிறு தொகையும் அளித்து வருகின்றோம். 



நம் குழுவின் அடுத்த நிலை நோக்கி நகர்ந்த மோட்ச தீப  வழிபாடு பற்றி தொடர உள்ளோம். அன்னதானம், உழவாரப் பணி , ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு என தொடர்ந்த நாம்,  மோட்ச தீப வழிபாட்டின் மூலம் குருவருளைப் பற்றிடவும், பெற்றிடவும் முடிகின்றது. ஆரம்பத்தில் நாமும் மோட்ச தீப வழிபாடு பற்றி சாதாரணமாக எண்ணினோம். ஆனால் நாம் நினைப்பது தவறு என்று உணர்த்தப்பட்டு இன்றும்  நம் தளம் சார்பில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம்.

இனி..நாம் எப்போது மோட்ச தீப வழிபாட்டு  பூசை ஆரம்பித்தோம், எப்படி முதல் வழிபாடு  நடந்தது என்பது போன்ற அனுபவத்தை இங்கே காண்போம்.

2016 ஆம் ஆண்டில் நாம் அன்னதானம், உழவாரப்பணி என்று ஆரம்பித்த நாம் 2017 ஆம் ஆண்டில் தேடல் உள்ள தேனீக்களாய் - (TUT) குழுவிற்கென்று வலைத்தளம் ஏப்ரல் 14 ம் தேதி ஆரம்பித்தோம். இதனை அப்படியே நம் ஆண்டு விழா என்று கணக்கில் வைத்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டில் தான் ஆயில்ய பூசை நமக்கு குருவருளால் கிடைத்தது. 2016 முதல் நமக்கு ஜீவ நாடி அறிமுகம் கிடைத்தது. ஜீவ நாடி உத்தரவுப்படி சில வழிபாட்டு முறைகளை நாம் தொடங்கினோம். அதுவரையில் கூடுவாஞ்சேரியில்  உள்ள ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் பற்றி யாம் அறியவில்லை. ஆனால் கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் அப்போது ஆகி விட்டது. பின்னர் ஒரு நாள் நமக்கு ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் கிடைத்து. அன்று தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனமும் கண்டோம். அப்போது தான் ...அடடா..குருநாதரை நம் வீட்டு அருகிலே இருப்பது அறியாது இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமோ என்று தோன்றியது. இது தான் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதை என்றும் தோன்றியது. பின்னர் முதல் வழிபாடாக  ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு  2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8 ம் நாள் (21.08.2017) திங்கட்கிழமை நடைபெற்றது. அடுத்து வந்த ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தியை அதாவது மார்கழி மாத ஆயில்ய பூசையை 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். இங்கிருந்து தான் நமக்கு தீப வழிபாடு பற்றி உணர்த்தப்பட்டது.

ஏற்கனவே நாம் நம் தளத்தில் தீப வழிபாடு பற்றி அவ்வப்போது கூறியுள்ளோம். மீண்டும் தனிப்பதிவுகளில் இது பற்றி பேசுவோம். 

சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானகுடில் மூலம் கோவை பச்சாபாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில்  நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.


 உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின் ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும் உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும் வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த  மோட்ச தீபம்  வழிபாடு ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும் இல்லையே....

அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் 2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020 ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக நடைபெற்றது. வருகின்ற சித்திரை மாத மோட்ச தீப வழிபாடு தற்போதுள்ள 144 தடை உத்தரவால் நடைபெறவில்லை. ஆனால் குருநாதரின் அருளால் அன்றைய தினம் ஆத்ம தீபம் ஏற்ற உள்ளோம். எனவே அனைவரும் வீட்டிலிருந்த படியே பிரார்த்தைனை செய்து கொள்ள வேண்டுகின்றோம்.




10 ம் ஆண்டில்  வெற்றி நடை போட்டு வரும் உலக பக்தர்கள் தினம் மலரில் நம் குழுவால் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.அதனை அப்படியே பகிர்கின்றோம்.

இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது.  துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.


இந்த சேவையில் நமக்கு இயல்பாக அமைந்தது ஆலய தரிசனம் ஆகும். நம் தளத்தில் உழவாரப்பணி செய்வதற்கு நமக்கு குருவருள் அவ்வப்போது சில ஆலயங்களை தரிசனம் செய்ய கூட்டுவிக்கும். பின்னர் நாம் அவற்றை நம் தளம் சார்பில் ஆலய தரிசனமாக எடுத்துக்கொள்வோம். இது ஒரு புறமிருக்க, சித்தன் அருள் வழங்கும் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பில் உள்ள யாத்திரைகளை நாம் அவ்வப்போது தரிசனம் செய்து வருவது வழக்கம். இவற்றில் சில மலை யாத்திரையும் அடங்கும்.

முதன் முதலாக நாம் நம் தளம் சார்பில் சுமார் 8 பேருடன் பர்வத மலை யாத்திரை சென்று வந்தோம். அடுத்து அகத்திய அடியார்களோடு கல்யாண தீர்த்தம் மற்றும் அத்திரி மலை யாத்திரை சென்று வந்தோம். அடுத்து தேடல் உள்ள தேனீக்களாய் குழு மூலம் மீண்டும் கல்யாண தீர்ததம் தரிசனம் மேற்கொண்டோம்.

சென்ற மாதம் கல்யாண தீர்த்தம் செல்லும் போது அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற தல யாத்திரைகளுக்கு சென்று வாருங்கள். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் காலை முதல் மாலை 5 மணி வரை அபிஷேகம், அலங்காரம் என்று கல்யாண தீர்த்தத்தில் தரிசனம் பெற்றதுண்டு. ஆனால் இப்போது கல்யாண தீர்த்தம் தரிசனம் பெறுவதற்கு முறையான அனுமதி பெற வேண்டி உள்ளது.



1. பர்வத மலை
2. ஓதி மலை
3. சதுரகிரி
4. அத்திரி மலை
5 .வெள்ளியங்கிரி
6. வள்ளிமலை
7. திருஅண்ணாமலை
8. நம்பி மலை
9. சபரி மலை
10. பொதிகை மலை
11. தேனி சண்முகநாதன் மலை
12. தேவதானப்பட்டி மிருகண்ட மகரிஷி மலை
13. கோவில்பட்டி அருகே குருமலை
14. சதாசிவ கோனா மலை
15.தோரண மலை
16. மருத மலை
17. மங்கலதேவி கண்ணகி கோவில்

என  பல யாத்திரைகள் சென்று வந்துள்ளோம். இதில் பருவத மலை யாத்திரை 4 முறையும், சதுரகிரி 2 முறையும், சபரி மலை 5 முறையும், வள்ளிமலை 4 முறையும், வெள்ளியங்கிரி 3 முறையும் சென்று வந்துள்ளோம். எண்ணைக்கையில் என்ன இருக்கின்றது ? எண்ணத்தில் தான் அத்தனையும் இருக்கின்றது. இனி சில தரிசன அனுபவங்களை இங்கே பகிர்கின்றோம்.

இந்த யாத்திரை சேவையில் பாண்டிச்சேரி அகத்தியர் ஞான இல்லமும் நாம் பெற்று வருகின்றோம்.
ஒவ்வொரு அகத்தியர் ஜெயந்தி வழிபாட்டின் போதும் நாம் பாண்டிச்சேரி அகத்தியர் ஞான இல்ல தரிசனமும், அதனை சேர்த்து பாண்டிச்சேரி சித்தர்கள் தரிசனமும் பெற்று வருகின்றோம்.

4 சித்தர் கோயில்களை தரிசித்தோம்.





 அடுத்து அருட்குரு ஸ்ரீ சக்திவேல் பரமானந்தர் சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.






 இதோ.. அடுத்த சித்தர் தரிசனம் கீழே.


அருள்லிகு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.




 அடுத்து தவத்திரு ஸ்ரீ குருசாமி அம்மையார் தரிசனம் பெற்றோம்.









அடுத்து தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.







அடுத்து கண்ணகி கோயில் யாத்திரை தரிசனம் 







பர்வதமலை யாத்திரை காட்சிகள் இனி பெறலாம் 

 யாரையும் பயமுறுத்த இங்கே படங்களை பதிவிடவில்லை. மலை ஏறி சென்று ஈசனை தரிசிக்க முடியாதவர்களுக்காகவே இங்கே பதிவிட்டு வருகின்றோம்.





ஓரளவு மலை உச்சி வந்து விட்டோம் 



மனதை அந்த பரத்திடம் ஒப்படைத்து விட்டு, வேறெந்த எண்ணமும் மனதில் இருத்தாது, திக்கற்ற எமக்கு நீரே துணை என்று வேண்டிக் கொண்டு மலை ஏறினோம்.

 இது போன்ற மலை தலங்களுக்கு செல்லும் போது கூடுமானவரை பிளாஸ்டிக் தவிர்க்கவும். அப்படி நீங்கள் கொண்டு சென்றால் அவற்றை மீண்டும் அடிவாரத்திற்கு கொண்டு சென்று குப்பையில் சேர்த்து விடுங்கள். இப்படி செய்பவர்களைத் தான் சித்தர்கள் விரும்புவார்கள். என்ன தான் நாம் பூசை செய்தாலும், ஊர் ஊராக சுற்றினாலும் இது போன்ற மாற்றங்களை செய்தால் தான் நாம் சித்தர்கள் வசம் செல்ல முடியும்.


அடுத்து அப்படியே கோயிலுக்குள் சென்று தரிசனத்தில் ஈடுபட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் சென்றது. தற்போது பல மாற்றங்கள் அங்கே உணர்ந்தோம். 18 சித்தர்கள் இடையே எம் பெருமான் தரிசனம் வழங்கிய காட்சி ..கீழே பகிர்கின்றோம்.



 காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.




 விளக்கேற்றி வழிபாடு செய்தோம். தாயை தயை கூர்ந்து  வணங்கினோம்.





இனி வெள்ளியங்கிரி மலை யாத்திரை தரிசனம் பெற இருக்கின்றோம்.




 இதோ. பாம்பாட்டி சித்தர் குகை கண்டோம். நன்றாக தரிசித்தோம்.








இறங்கி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை.ஏனெனில் இறங்கி வரும் போது சூழ்நிலை நமக்குத் தெரியாது.எனவே கொண்டு சென்று நெய்யை அங்கிருந்த அகலில் ஊற்றி, தீபமேற்றி, ஒவ்வொருவராக உள்ளே சென்று தியானித்தார்கள். நம் TUT குழுவின் உறவுகள் அனைவருக்குமான பிரார்த்தனை செய்யப்பட்டது.





மனம் அங்கிருந்து அகலவில்லை.  இருப்பினும் வெளியே வந்து மீண்டும் யாத்திரை தொடர்ந்தோம்

இதோ அடுத்த நாள் காலை மலையேற்ற காட்சிகள்.




குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். கை கால்கள் மறத்து இருந்தது. அப்படியே நடையைக் கட்டினோம். இப்படி ஒரு இன்ப நிலையை நாம் இது வரை அனுபவித்ததில்லை.




திருக்கோயில் செல்ல உள்ள நுழைவாயில் கண்டதும் அனைவரும் ஆனந்தம் கண்டோம். அப்படியே குழு காட்சிப்படம் எடுத்து விட்டு அங்கிருந்த அந்த பெரிய பாறையைப் பார்த்து, அங்கு எத்தனை எத்தனை சூலாயுதம் மற்றும் மணிகள் என கண்டு, பார்த்து அப்படியே உள்ளே சென்றோம். பனி தன் பணியை செய்து கொண்டிருந்தது.

 ஒவ்வொருவராக சென்று ஆசி பெற்ற காட்சி. இவர் இங்கே பல்லாண்டுகளாக இருந்து பூசை செய்து வருகின்றார். இவரிடம் ஆசி பெற்றது மிகவும் மகிழ்வாக இருந்தது. காரணம் இவரை நாம் தொலைக்காட்சி பதிவில் பார்த்திருக்கின்றோம். சிவன் அடியார் இவரிடம் ஆசி பெற்றது எத்துனை எத்துணை பெரும் பேறு என்று யாம் அறிந்திலோம் இறைவா !





இதோ..உங்களுக்காக..தெள்ளத் தெளிவாக அந்த ஈசனின் அருட்காட்சி. கண்டு மகிழுங்கள். இந்தப் பராமனைக் காணத் தான் 10 மணி நேரம் நடந்தோம். கண்டதும் அனைத்தும் பறந்து போய் விட்டது. மனம் மிக மிக லேசாக மாறிவிட்டது. இயற்கையின் இன்பம் உணர்த்தப்பட்டது. தென்றலை ஸ்பரிசித்தோம். மழையில் நனைந்தோம். சிவத்தின் அருளில் ஊறினோம். கைலாய வாத்தியம் விண்ணைப்பிளக்க, கயிலாயத்தில் கால் ஊன்றி, இது கனவா? நனவா? என்று நம்மை நாமே தொட்டுப் பார்த்தோம். இதற்குத் தானே ஆசைப்பட்டோம் இறைவா ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று நெக்குருகினோம்.

அடுத்து தேனி சண்முகநாதர் மலை தரிசன காட்சிகள் 


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் ஊரில் உள்ள கமயக்கவுண்டன் பட்டி அருகில் இருந்து குழந்தைவேலர் தரிசிக்க மலை என்ற வேண்டும். மலையேற்றம் என்றவுடன் மிகப் பெரிய மலை என்று நினையாதீர். தூரம் மிக மிக அதிகம். மலை ஏற்றம் குறைவே. ஆனால் நிறைவாய் தரிசனம். சென்ற பதிவில் மலை யாத்திரை மேற்கொண்டு, மலை ஏறி நாம் பார்த்தது அந்த வெற்றிவேலைத் தான். வெற்றிவேல் தரிசனம் கண்டு, அப்படியே நேரே சென்றால் திருக்கோயிலை அடையலாம்.



கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பதற்கேற்ப. சிறிய கோயிலை இருந்தாலும், அங்கே வெளிப்படும் முருகன் அருள் மூவுலகும் பெறும் என்பதே உண்மை. பார்க்கும் இடமெல்லாம் பசுமை. பசுமை முருகனுக்கு மிகவும் பிடிக்கும் அன்றோ? பசுமை நம் எண்ணத்திலும் நிறைந்தது.



 கற்கள்,பாறைகள் என தாண்டி தாண்டி சென்றோம். தீர்த்தம் வந்து கொண்டிருந்தது. எப்போதும் இந்த தீர்த்தத்தில் நீர் இருக்கும். கண்ணகித் தாய் மதுரையை எரித்து இங்கே வந்த போது, குழந்தை முருகன் இங்கிருந்து அவளை மகிழ்வித்தாராம். குழந்தையைக் கண்டால் கோபம் தணியும் அல்லவா ? மேலும் கண்ணகித் தாயின் தாகம் தீர்க்க, முருகன் அம்பு விட்டு,இங்கு தீர்த்தம் உருவாக்கினார் என்பதும் தொன் நம்ம்பிக்கையாக உள்ளது.





அங்கிருந்த பாறைகளுக்கு நடுவில் ஒரு சிறிய குகை இருந்தது. இங்கு சித்தர்கள் வாசம் எப்போதும் உண்டு என்று கூறினார்கள்.இவர்களை இங்கு வழிபட்ட பின் தான் நாம் கோயிலில் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறினார்கள். நம்மால் உள்ளே செல்ல முடியவில்லை. தீபம் இட்டு வழிபாடு செய்த காட்சி மேலே உங்களுக்காக இணைத்துள்ளோம்.



எத்துனை சிறப்பு வாய்ந்தது முருகா! எனும் நாமம். இத்தகைய முருகனை தேனியில் உள்ள சண்முகநாத மலையில் தரிசித்தது நம்மை இன்னும் நம்மை முருக அடியாராக ஆக்கிவிடும் என்பது திண்ணம்.












  ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை தரிசனம் பெறலாமா?


இதான் அந்த அடிவாரக் கோவில்.ஒரே ஒரு நுழைவு வாயில் என்ற வளைவு மட்டும் தான் இருந்தது.இப்போது மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. தொடர இருக்கும் மலைப் பாதை சற்று கடினமாக இருக்கும் என்று. காலணியோடு தான் நடக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். இது போன்ற யாத்திரைகளில் நாம் அதை விரும்புவதில்லை.எனவே அவற்றை கழட்டி வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை வணங்கி விட்டு, பயணத்தை தொடர்ந்தோம்.

 மேலே பார்த்தீர்களா? பாதை இப்படித் தான் இருந்தது. மற்ற மலைகளில் நாம் பாதை இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியும்.இங்கே நம்மால் சொல்ல இயலாது. கல்லும்,மண்ணும் கலந்த கூரான கற்கள் கொண்ட பாதை. நமது மனமும் இப்படித்தானே இருக்கின்றது. பேராசைகளும்,எதிர்மறை எண்ணங்களும், சினம்,கடும்பற்று,முறையற்ற பால்கவர்ச்சி,வஞ்சம் ,தான் என்ற பொருள் பற்று,தனது என்ற அதிகார பற்று என்று நிரப்பி அல்லவா வைத்திருக்கின்றோம் இவை அனைத்தும் நம்மை விட்டு அகல, மலை கடவுளிடம் தஞ்சம் வேண்டும்.




சற்று மலை வறண்டு காணப் பட்டாலும்,பசுமையின் போர்வையில் நமக்கு மன மகிழ்வாய் இருந்தது.மேலே செல்ல செல்ல,பாதையும் கற்களும்,முட்களும்,சரளைக் கற்களுமாக இருந்தது.




இங்கிருந்து படிக்கட்டு பயணம் போல் இருந்தது. மனதார படிக்கட்டுகள் போட்ட நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறி மலை ஏறினோம். முழுதும் இது போல் இருக்கும் என்று எண்ணினோம்.ஆனால் இது சற்று தூரம் தான்.மீண்டும் புதிய பாதை...நாம் ஏற்கனவே சொன்னோமே அந்த பாதை தான்.

 கோவிலை ஒட்டிய பகுதிக்கு இந்தோ வந்துவிட்டோம்.ஒவ்வொருவராக வருவதை கவனியுங்கள்.






இதோ கோவில் வந்து விட்டோம். நேரே கோவில் சென்று, சிவ பெருமானை தரிசித்து விட்டு, அப்படியே கோவிலை சுற்றிப் பார்த்தோம்.கட உள் நம்மிடம் வசமாகிய உணர்வாய் அந்த பரமே வசமானால், பரவசம் தானே.சிறிய கோவில் தான் என்றாலும், நெஞ்சை விட்டு அகலாத கோவில்.முதலில் விநாயகரை தரிசித்தோம்.  நவகிரக நாயகர்களை வேண்டினோம்.அங்கிருந்து பின்னால் பார்த்தால் சோத்துப்பாறை அணைக்கட்டு தெரிந்தது.ஏறி வந்த பாதையும், மேலே கண்ட கோவிலும்..கோவிலைக் கண்டதும் உடல் வலி அனைத்தும் பறந்து போய் விட்டது.



நவக்கிரக சன்னதி 


சோத்துப்பாறை அணைக்கட்டு 


                                                            கோவிலின் முன்புறத் தோற்றம்



சுமார் 1 மணி அளவில் கோவில் அடைந்து விட்டோம். அப்படியே கோவிலை சுற்றி வந்தோம்.என்னவொரு தாகத்தில் நடந்து வந்தோம். மேலே வந்த உடன்,மழையின் சாரலில் தாகம் இல்லை.அப்படியே சுற்றி வரும் போது ,நீர் சுனைகள் கண்டோம்.பாசி படிந்து, பச்சையாய் இருந்தது.நடந்து வந்த களைப்பு நீங்க ஒரு குளியல் போட்டோம்.பச்சைத் தண்ணீர் என்று சொல்லி,கேட்டு இருப்போம்.இங்கு..உண்மையிலே பச்சைத் தண்ணீர் தான்.





                                                          
                                                         இங்கே தான் குளியல் 


அனைவரும் பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு வந்து இருந்தார்கள்,அதை கோவில் குருக்களிடம் கொடுத்துவிட்டு, இளைப்பாறினோம்.2 மணி வரை தரிசனம் செய்த அனுமதி. 2 மணிக்கு மதிய உணவு. அதற்குள் சுவாமி தரிசனம் பெற உள்ளே சென்றோம்.

கோவிலின் வெளியே விநாயகர் சன்னதி 
                                                                    கோவிலின் உள்ளே 

 சிறிய சத்சங்கம் நிறைவு பெற்ற  பின்பு, சுமார் 1 மணி நேரம் ஓய்வெடுத்தோம்.பின்பு 5 மணி அளவில் மலையிலிருந்து கீழே இறங்குவதாக திட்டம்.அதற்கு முன்பாக இறங்குபவர்கள், சொல்லிவிட்டு இறங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.இரண்டு மணி நேரம் மீண்டும் ஐயன் தரிசனம்,இங்கு எப்போதும் விளக்கு ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்.எனவே,வருகின்ற அடியார் பெருமக்கள் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.


அடுத்து வள்ளிமலை தரிசனம் பெறலாமா?

 வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.




வள்ளிமலையில் நாம் கிரிவலம் செய்துள்ளோம்.

 அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்த உடன்,  வள்ளியம்மை தவப்பீடம் கண்டோம். உள்ளே சென்று  விரும்பியது.உடனே உள்ளே சென்று வழிபாடு .செய்தோம்.


 2019 ஆம் ஆண்டை நாம் இங்கே தான் வள்ளிமலை கிரிவலத்தோடு ஆரம்பித்துள்ளோம். முதல் தீபமும் இங்கே தான் ஏற்றினோம். அனைத்தும் குகன் அருளால் தான். இனி நம் தல அன்பர்களுக்கு குறையில்லை. குறை இருந்தாலும் அதனை நிறையாக மாற்றித்தரும் படி இங்கே அன்னையிடம் வேண்டினோம்.







தரிசனம் . முடித்து மீண்டும் கிரிவலம் ஆரம்பித்தோம்.





இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் என்று நமக்கு தெரியவில்லை. காலைக் கதிரவன் கண் சிமிட்ட ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் வேகமாக நடந்தோம்.








இன்னும் கொஞ்ச நேரத்தில் வள்ளிமலை அடிவாரம் அடைந்து விடலாம் என்று மனதுள் தோன்றியது.








அருள்மிகு இடும்பன் ஆலயம் கண்டோம். அடுத்த முறை உள்ளே சென்று வழிபட மனதுள் சங்கல்பம் செய்தோம்.இதோ. கிரிவலம் முழுமை பெற உள்ளது.





மீண்டும் மூத்தோனை கண்டு வழிபட்டு நன்றி கூறினோம். முதல் முதலாக வள்ளிமலை கிரிவலம் முத்தாய்ப்பாக அமைந்தது.





மீண்டும் நம் குழுவோடு ஒரு முறை வள்ளிமலை கிரிவலம் செல்ல வேண்டினோம். வேண்டுதல் வேண்டாமை இலாதவனிடம் இது போன்ற சில விஷயங்களை வேண்டித்தான் பெற வேண்டும்.



வள்ளிமலை தரிசனம் பெற நீங்கள் மலை ஏறும் போது நாம் இளைப்பாற ஒரு மண்டபம் வரும். இது சாதாரண மண்டபம் அல்ல. இங்கே சித்தர்களின் சூட்சும தரிசனத்தை உணரலாம்.இதை யாம் சொல்லவில்லை. தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் தான் இதை கூறினார்.வள்ளிமலை கோயிலின் திருப்பணியின் போது நேரில் உணர்ந்து சுவாமிகள் நமக்கு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்த இடம் தான் சித்தர்களின் அருளை உணரும் இடம். கூட்டத்தோடு கூட்டமாக சென்றால் நமக்கு ஒன்றும் புரியாது. காலை சுமார் 7 மணி அளவில் தனிமையில் இங்கே சென்று விளக்கேற்றி சித்தர்களை மனதில் நினைத்து தியானியுங்கள். ஆற்றலை நீங்கள் உணர்வீர்கள். நாமும் இங்கே விளக்கேற்றி வழிபாடு செய்தோம்,


சிறிது நேரம் கழித்து , மேலே மலை ஏறினோம். இங்கே படிக்கட்டுகள் இருப்பதால் மலை ஏற வசதியாக உள்ளது.


இன்னும் சற்று தூரம் தான் போலிருந்தது. இதோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் நுழைவாயில் தெரிகின்றது.


இந்த நுழைவாயில் கடந்ததும் திருக்கோயில் தான். முருகா என்று வேண்டினோம்.




நாம் சென்ற போது கொடிமரம் இல்லை.  இதோ வள்ளியம்மை சன்னிதி உள்ளே சென்றோம்.


அடுத்து  நம் முருகப் பெருமான் தரிசனம் தான்.

ஆறுமுகனே தெய்வம்
அன்னோன் குருசாமி
வேறு தெய்வம் சொல்லில் விருதாவே
நூறு தரம் மெய் சொன்னேன்
மெய் சொன்னேன் வேத முடிவிதுவே
பொய் சொன்னால் வாய் புழுத்துப் போம்

என்று தண்டபாணி சுவாமிகள் பாடி இருக்கின்றார். நாம் இப்போது தான் முருகனின் அருட்கடலை சிறு துளியாக பருகி வருகின்றோம். முருகன் அருளை வள்ளிமலையில் நாம் பெற்ற போது, இனி வருடத்திற்கு ஒரு முறை நாம் வள்ளிமலை கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதுள் இறுத்தினோம்.


இதோ .வள்ளிமலை ஆண்டவர் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து விட்டோம். இங்கே படியின் மூலம் மீண்டும் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம்.













அடுத்து மலையில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினோம். வள்ளிமலையில் திருப்புகழ் ஆஸ்ரமம் இருப்பதாக கேள்விப்பட்டோம் .எங்கே ? எப்படி செல்வது என்று தெரியவில்லை.


அப்போது தான் அங்கே கீழே இறங்கிய பாதையில் ஒரு கிளைப்  பாதை பிரிந்தது, மேலும் அங்கே விசாரித்தோம்.இந்த பாதை வழியே செல்லுங்கள் என்று சொன்னார்கள்.





அட..காட்டுக்குள்ளே திருவிழா என்பது போல் இருந்தது. கற்கள்,மண் கொண்ட பாதை வழியே நடக்க தொடங்கினோம்.



இந்த பாதை வழியே நடக்கும் போது மனம் ஆனந்தக் கூத்தாடியது. இந்த பசுமை நமக்கு எங்கே கிடைக்கும்? நகர வாழ்க்கையில் இருந்து சற்று மனதுள் பசுமை தருவது இது போன்ற மலை யாத்திரைகளே.


நீங்கள் எந்த கடவுளை வழிபட்டாலும் நீங்கள் இது போன்ற பாதையில் செல்லும் போது கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்றோ, உங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் ஓதியோ நடக்க, வலி தெரியாது. நடக்க நடக்க இன்பமாகும்.






சற்று தூரத்தில் கற்கள் கொண்ட பாதை வந்தது. இது போன்ற யாத்திரை நம் உடல்நலம் பற்றி நம்மிடம் பேச வைக்கும். நம் மன நலம் பற்றியும் பேசும்.


 அப்படி என்ன தான் இருக்கின்றது வள்ளிமலையில் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகின்றது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். இந்த குன்றில் குமாரனோடு வள்ளியும் இருப்பதால் வள்ளிமலை மிக மிக பிரசித்தி பெற்றது. மலை என்றால் வலம் செல்வது நன்றாம். இங்கு கிரிவலம் செல்வது நம் வளங்களை தரும் என்பது திண்ணம். திருஅண்ணாமலை போன்று வணிக கடைகள் கிரிவலப் பாதையில் இல்லை. எனவே நாம் நம் விருப்பப்படி கிரிவலம் செல்லலாம். சுமார் 1 மணி நேரம் போதுமானது. இயற்கை காற்று, பசுமை காட்சிகள், வள்ளி பிறந்த இடம் என அனைத்தும் ஒருங்கே சேரும் போது வள்ளிமலை ...வளங்களை அள்ளித்தரும் மலை தான்.


வள்ளிமலை பற்றி அருணகிரிநாதரும், வாரியாருக்கு சொன்னதை படித்தீர்களா? திகட்டாத இன்பம் தருவது வள்ளிமலை. யாரெல்லாம் பெண்களுக்கு தோஷம் செய்து இருப்பதாய் உணர்கின்றீர்களோ, அவர்கள் அனைவரும் வள்ளிமலை முருகனிடம் சரண் அடையுங்கள்.

பதிவின் நீளம் கருதி, பதிவை நிறைவு செய்கின்றோம். இனி தனி தனி பதிவுகளில் நம் மலை யாத்திரை தரிசனம் பற்றி பேசுவோம். ஆரம்ப கால ஆலய தரிசன, மலை யாத்திரைகளில் நாமும் அவசர கதியாக இருந்தோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சில வழிகாட்டுதல்கள் நமக்கு நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானால் கிடைத்தது.தற்போதைய ஆலய தரிசங்களில் பொறுமையாக அந்தந்த யாத்திரை முன்கூட்டியே முன்னேற்பாடு வழிபாடுகளாக தீப வழிபாடு, அன்னசேவை என செய்து வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றோம்.

 இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு ஆலய தரிசனம், மலை யாத்திரை    வழிபாட்டின் போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,
அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 

நன்றி 

மீண்டும் ஒரு முறை  வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.

7 ஆம் ஆண்டு சேவை எங்கே ? எப்படி நடந்தது. அடுத்த பதிவில் நம் சேவைகள் பற்றி  மீண்டும் சிந்திப்போம்.



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவருளால் ஏழாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2023/04/tut.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 12 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-12.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-11.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 10 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-10.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-9.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

No comments:

Post a Comment