இறைவா..அனைத்தும் நீயே..!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளத்தின் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் நீர் மோர் சேவையில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டி பணிக்கப்பட்டுள்ளோம். இதன் பொருட்டு சின்னாளபட்டியில் நீர் மோர் சேவை தினமும் 50 நபர்களுக்கு நடைபெற்று வருகின்றது. மேலும் சென்ற பங்குனி பௌர்ணமி முந்தைய நாளில் சுமார் 200 அன்பர்களுக்கு திருஅண்ணாமலையில் நம் குழு சார்பில் மோர் சேவை நடைபெற்றது. இன்னும் இந்த மோர் சேவை சிறப்பாக செய்வதற்கு குருவிடம் வேண்டி பணிகின்றோம்.
நாளை தமிழ் புத்தாண்டாம் சித்திரை பிறக்கவுள்ளது. குருவருளால் எட்டாம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்க உள்ளோம். சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் பிரசாத பை அடித்து விக்கிரமசிங்கபுரம் விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு கொடுத்தோம். இந்த ஆண்டில் இன்னும் திருமுறை பாராயணத்தை சிரத்தையாக கைக்கொள்ள குருவிடம் வேண்டி பணிகின்றோம்.
எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி மொழியும் ஆகும்.எனவே தமிழ் மறைகள் படிப்பது,கேட்பது இன்பம் ஆகும். ஒரு தட்டில் தமிழ் மொழியில் உள்ள பக்தி நூல்களையும், மற்றோரு எடைத் தட்டில் பிற மொழி பக்தி நூல்களையும் வைத்தால் கூட தமிழ் மொழிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.
திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.
பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.
பன்னிரு திருமுறைகளை பொருள் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று முதலில் நாம் நினைப்பது தவறு. முதலில் இவற்றையெல்லாம் படிக்க துவங்க வேண்டும். பொருள் தெரிந்தால் தான் படிப்பேன் என்றால் அப்படியே காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நம் தமிழ் வேதங்களை படிக்க ஆரம்பித்தால் நாளடைவில் நம் தரத்திற்கேற்ப பொருள் புரிய நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இப்படி தான் நமக்கு குருவருளால் மன்னார்குடி ரெங்கசாமி ஐயா அவர்கள் மூலம் தினந்தோறும் காலையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் திருவாசகம் படித்தும்,கேட்டும் உணர்ந்தும் வருகின்றோம். மாணிக்கவாசக பெருமானார் கூறியது போல கீழே கண்டு நீங்கள் திருவாசகத்திற்கான விளக்கம் பெறலாம்.
ஆம். திருவாசத்திற்கான மெய்ப் பொருள் விளக்கம் சிவமே ஆகும். சிவம் என்றால் அன்பு தானே? அன்பே சிவம் என கொண்டு ஐம்புலன்களிலும் நாம் உணர்ந்து, ஊனினை உருக்கி, நம் உள்ளொளி பெருக்கி இறையைப் தினமும் போற்றி வந்தால் நாமும் சிவத்தை உணரலாம். மிகப் பெரும் செல்வமாக இருப்பது சிவமே ஆகும். தற்போது திருவாசகம் நூலை தொட்டாலே சிவத்தை தொடுவதாக உணர்கின்றோம்.
திருவாசகம் குறித்து குருநாதர் அருளிய வாக்குகளை இனி வரும் பதிவுகளில் சிந்திப்போம்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html
நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html
கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html
ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html
தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும். - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html
அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html
No comments:
Post a Comment