"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, May 24, 2024

கோவையில் குருநாதர் உத்தரவு - நலம் தரும் பதிகங்கள் - கோளறு பதிகம்!

                                                               இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானின் அருளால் ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு நொடியும் வழி நடத்தப்படுத்தப்பட்டு வருகின்றோம். ஒவ்வொரு மனிதருக்கும் மனைவி,குழந்தை, வேலை போன்ற அனைத்தும் வாய்க்காவிட்டாலும் பரவாயில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் குரு கிடைப்பது தான் பிறவியின் பயன் ஆகும். அது போன்று தான் நம் எல்லோருக்கும் குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமான் கிடைத்துள்ளார். இதற்கு நாம் ஒவ்வொரு நொடியும் நன்றி சொல்ல வேண்டும். இந்த பயணத்தில் இன்றைய பதிவில் கோளறு பதிகத்தை காண உள்ளோம். என்ன திடீரென்று பதிகங்கள் பக்கம் என்று யோசிக்கின்றீர்களா? அனைத்திற்கும் காரணம் உண்டு. காரணமின்றி காரியமில்லை என்பதும் நாம் அறிந்ததே! 

கோவையில் குருநாதர் சத்சங்கத்தில் மூன்று உத்தரவுகள் நமக்கு கொடுத்துள்ளார்.

1. குருநாதர் அருளிய உறுதிமொழி -  10 கட்டளைகள்- இதனை தினந்தோறும் நாம் வழிபாட்டில் கூறி வர வேண்டும்.

2. தினந்தோறும் அதிகாலை வழிபாட்டில் ஒரு முறை சிவபுராணம் படிக்க வேண்டும் 

3. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 108 முறை கோளறு பதிகம் படிக்க வேண்டும். இதனை நாம் முதலில் அதிகாலை வழிபாட்டில் ஒரு முறை படித்து தொடங்க வேண்டும்.

இந்த உத்தரவுகளையொட்டியே நாம் பதிவுகளை சமர்ப்பித்து வருகின்றோம். அந்த வழியில் இன்றைய பதிவாக கோளறு பதிகம் படித்து உணர்வோமாக!



 



 

இறைவா !!!!! அனைத்தும் நீ
ஆதி கணபதி பாதம் காப்பு
ஆதி அம்மை உண்ணாமலை தேவி அப்பன் அண்ணாமலையார் பாதம் காப்பு
அகத்திய மாமுனிவர் பாதம் காப்பு
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு
திருஞானசம்பந்த சுவாமிகள் பாதம் காப்பு
பதிகம் ஓதும் முறை
1) பதிகத்தின் முழு பொருளையும் அறிந்து படிப்பது மிக மிக மிக மிக அவசியம். பொருள் உணர்ந்து படித்தால்தான் முழு பலன் கிடைக்கும்.

2) வெல்லம் கலந்த பச்சரிசி மாவிளக்கு ஏற்றி வழிபடு செய்த பின்னர் , விளக்கு குளிர்ந்தவுடன் அவ் மாவிளக்கை ஜீவராசிகளுக்கு அளித்து அன்னம் இட , உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3) ஒவ்வொரு முறையும் பதிகங்கள் ஓதும் முன்னர் , ஜீவராசிகளுக்கு அன்னம் தண்ணீர் கட்டாயம் இடல் வேண்டும். கரணம் அவற்றின் மூலம் உங்கள் முன்னோர்கள் உங்கள் இல்லம் வந்து உணவு உட்கொண்டு வாழ்த்திச் செல்லுவார்கள். அவர்கள் ஆசி மூலம் பல வெற்றிகளை நீங்கள் அடைய இயலும்.

4) ஜீவராசிகள் , பறவைகள் , குருவிகள், பைரவ வாகனமான நாய்கள் , எறும்புகள் , காகங்கள் , மற்றும் இதர விலங்குகள் உணவை உட்கொண்டு உங்களை வாழ்த்தும். அதன் மூலம் புண்ணியங்கள் உங்களை வந்து அடையும். வெற்றி உண்டாகும்.
கோளறு பதிகம் – சிறு குறிப்பு
அருளிச்செய்தவர்திருஞானசம்பந்த சுவாமிகள்
திருமுறைஇரண்டாம் திருமுறை 85 வது திருப்பதிகம்
பா வகைஎண்சீர் சந்த விருத்தம்
கோளறு பதிகம் - ( கோள் அறு பதிகம் )
கோள் = சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
அறு = துண்டி, வெட்டு
பதிகம் = பத்துப் பாடல்கள்
கோள் அறு பதிகம் = நவகிரகங்களின் ஆதிக்கத்தை துண்டிக்கும் 10 பாடல்கள்
கோளறு பதிகம் பயன்கள்
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இந்த கோளறு திருப்பதிகம் பாடலை நாம் தினமும் பாடினால் எந்த ஒரு தோஷமும் அணுகாது என்று கூறப்படுகிறது. இப்பாடலில் அமைந்துள்ள ஒவ்வொரு வரிகளும் சிவபெருமானை போற்றும் விதமாக அமைந்துள்ளது. சிவபெருமானை நினைத்து இப்பாடலை பாடுபவர்களுக்கு நவகிரகங்களில் எந்த கிரகங்களாலும் உண்டாகக்கூடிய தோஷங்கள் அண்டுவதில்லை. குறிப்பாக தீராத பிணி எல்லாம் தீர்வதாக நம்பப்பட்டு வருகிறது. பாடலில் இருக்கும் குறிப்புகளும் இதையே பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் பாடலில் நவ கிரகங்களால் ஏற்படக்கூடிய எந்த தோஷங்களும் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு ஏற்படுவதில்லை என்றும்,
இரண்டாவது பாடலில் பயணங்களுக்கும் ஒவ்வாத நட்சத்திரங்கள் கூட நல்ல நட்சத்திரங்களாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பாடல் சிவனடியார்களுக்கு மூலம் எல்லா திசைகளில் இருந்தும் காக்கும் தெய்வங்கள் நன்மையைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள் என்றும் அழகாக கூறியுள்ளார்.
நான்காவது பாடலில் ஜுரமும், நெருப்பும், எமனும், எமதூதர்களும் கூட சிவபெருமானை வணங்குபவர்களை ஒன்றும் செய்ய முடியாதாம்.
ஐந்தாம் பாடலின் மூலம் பஞ்சபூதங்களும் சிவனடியார்களை பார்த்து அஞ்சி நடுங்கும் என்றும்,
ஆறாம் பாடலில் கொடிய வனவிலங்குகளும் சிவனை வணங்குபவர்களை ஒன்றும் செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாம் பாடலின் மூலம் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு வெப்ப காய்ச்சல், குளிர்காய்ச்சல், வாதம், பித்தம் போன்ற எந்த நோய்களும் வருவதில்லை, வந்தாலும் அவற்றால் பாதிப்புகள் இருக்காதாம். அதுபோல்
எட்டாம் பாடலில் ஏழு கடல்கள் சூழ்ந்த இலங்கை இராவணன் போன்ற அரக்கனாலும், ஆழ்கடலில் வாழும் உயிரினங்களாலும் சிவனை வணங்குபவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
ஒன்பதாம் பாடலில் மற்ற கடவுள்களையும், தேவர்களையும் கூட தாக்கும் காலன் சிவனடியார்களுக்கு நல்லதே செய்யுமாம்.
பத்தாம் பாடலில் எத்தகைய மதவாத போரும் சிவனை வணங்குபவர்களுக்கு நல்லவையாக மாறுமாம்.
பதினோராம் பாடலின் முடிவில் தான் எழுதிய இந்த பாடலை. பாடுபவர்களுக்கு பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் இயங்குகின்ற 9 கோள்களை தாண்டி அதாவது நவகிரகங்களை தாண்டி நல்லதே நடக்கும் என்று உறுதி கூறுகிறார். இப்பாடலை நாமும் தினமும் பாடி காலத்தை வெல்வோமாக! ஓம் நமச்சிவாய!!
கோளறு பதிகம் தோன்றிய கதை
மதுரை பாண்டிய மன்னன் நின்ற சீர்நெடுமாறன் சமண மதத்தில் பற்று கொண்டு, மற்ற சமயங்களைப் புறக்கணித்து வந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் சைவ சமயத்தில் பற்று கொண்டிருந்தார். சமணர்களின் அடாத செயல்களால் நாட்டில் குழப்பங்கள் நிலவ, அதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி சைவம் தழைக்கவும் நாட்டில் நல்லாட்சி நிலவவும் அழைப்பு விடுத்தார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரச பெருமானும் அப்போது திருமறைக்காட்டில் இருந்தனர்.

மதுரையம்பதி அரசியாரின் வேண்டுகோளை ஏற்று திருஞான சம்பந்தர் மதுரை செல்ல விரும்பி திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசரோ, அச்சமயம் நிலவிய கோள்களின் அமைப்பும் போக்கும் தீமை பயக்கும் என்று கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.
‘சகலத்துக்கும் தலைவனான நம் ஈசன் துணை இருக்கையில், நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும். ஈசனின் அடியாருக்கு அவை நன்மையே செய்யும். கவலை வேண்டாம்’ என்று கூறி கோளறு பதிகம் பாடினார். பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் கொண்ட இந்த கோள்களின் தீவினையை நீக்கும் இந்தப் பாடல்கள் சிறந்த பரிகாரப் பாடல்களாக விளங்குகின்றன.

'அப்பரே. அடியார் குழாத்தில் இருந்து ஐயனை வணங்குவது மிக மிக அருமையாக இருக்கிறது. தாங்கள் அடியேனைத் தேடி வந்ததும் நாம் இருவரும் இந்த திருவெண்காட்டுத் திருத்தலத்தில் இருந்து மாதொரு பாகனை வணங்கி வாழ்த்துவதும் எல்லாம் ஐயனின் திருவருளே. நாளெல்லாம் இப்படியே சென்றுவிடக் கூடாதா என்று இருக்கிறது நாவுக்கரசப் பெருமானே!'.

'முற்றிலும் உண்மை காழிப்பிள்ளையாரே. நாம் இருவரும் சேர்ந்து அவன் புகழைச் செந்தமிழில் பாடவேண்டும் என்பது ஐயனின் ஆவல் போல் இருக்கிறது. அதனால் தான் நம்மை சேர்த்துவைத்திருக்கிறான்'.

'திருநாவுக்கரசப் பெருமானே. அடியார் குழாம் என்று நான் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டேன். கிடைத்தற்கரிய பேறல்லவா எனக்குக் கிடைத்திருக்கிறது. நற்றுணையாவது நமச்சிவாயமே என்று கல்லைக் கட்டி கடலில் தள்ளிய போதும், சுண்ணாம்பு காளவாயில் வீசப்பட்டப்போதும் இறைவன் திருநாமத்தைச் சொல்லி அந்தத் துன்பங்களில் இருந்தெல்லாம் எந்த வித குறையும் இன்றி வெளிவந்து அரன் நாமத்தின் பெருமையை உலகறியச் செய்த தங்களின் அன்பு அடியேனுக்குக் கிடைத்தது என் பெரும் பாக்கியம்.'

'சம்பந்தப் பெருமானே. அடியேன் மீதுள்ள அன்பினால் தாங்கள் என்னை உயர்த்திப் பேசுகிறீர்கள். அம்மையப்பனை நேரே கண்டு உமையன்னையின் திருமுலைப்பாலை அவளே தர உண்டு திருஞானசம்பந்தர் என்ற திருப்பெயரைப் பெற்று இந்த சின்ன வயதில் ஊர் ஊராய் போய் ஐயனைப் பற்றி அழகான தமிழ்ப் பாடல்கள் பாடி வரும் தங்கள் பெருமையே பெருமை. தாங்கள் வெயிலில் வெகுதூரம் நடக்கக் கூடாது என்று ஐயனே தங்களுக்கு முத்துப்பல்லக்கும் முத்துப்பந்தலும் சிவகணங்களின் மூலம் தந்தாரே. என்னே அவன் அருள்! என்னே தங்கள் பெருமை!'.

அடியார் ஒருவர் குறிக்கிட்டு, 'பெருமானே. மதுரையில் இருந்து மகாராணி மங்கையர்கரசியாரிடமிருந்தும் அமைச்சர் குலச்சிறையாரிடமிருந்தும் செய்தி வந்துள்ளது', என்று கூறி ஒரு ஓலையை சம்பந்தரிடம் தருகிறார். அதனைப் படித்துவிட்டு காழிப்பிள்ளையார் அப்பரைப் பார்த்து

'ஐயனே.பாண்டியன் தேவியாரும் குலச்சிறையாரும் அடியேனை மதுரையம்பதிக்கு வந்து ஆலவாய் அரசனின் ஆலய தரிசனம் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஓலையைப் பார்த்தவுடன் உடனே சென்று அன்னை அங்கயற்கண்ணியுடன் அமர்ந்திருக்கும் திருஆலவாயானைப் பார்க்கவேண்டும் போல் ஆவல் கூடுகிறது'.

திருநாவுக்கரசர் ஒன்றுமே சொல்லாமலும் முகவாட்டம் அடைவதையும் பார்த்து, 'பெருமானே. ஏன் தயங்குகிறீர்கள்? உடனே திருஆலவாய்க்குச் செல்லவேண்டும் என்று என் மனம் பொங்குகிறது. ஆனால் தாங்கள் எதையோ எண்ணிக் கலங்குவதாய்த் தோன்றுகிறது. என்னவென்று தயைசெய்து சொல்லுங்கள்'.

'ஒன்றும் இல்லை பிள்ளையாரே. பாண்டியன் சமணனாய் மாறிவிட்டான். மதுரையில் சமணர் ஆதிக்கம் அளவில்லாமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். என் இளம்வயதில் சமணரால் அடியேன் அடைந்த துன்பங்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறு பிள்ளையான தாங்கள் மதுரைக்குச் சென்றால் அந்த சமணர்களால் ஏதாவது ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் தாங்கள் மதுரைக்குச் செல்லவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்'.

'அப்பரே. என் தந்தையாரைப் போன்ற அன்பு என் மேல் தங்களுக்கு இருப்பதால் தான் அடியேன் உங்களை அப்பர் என்று அழைத்தேன். உங்களுக்கு சமணர்களால் விளைந்த துன்பங்களெல்லாம் எந்த இறைவனின் திருவருளால் விலகியதோ அதே இறைவன் திருவருள் அடியேனையும் காக்கும் என்பதனை மறந்து கலங்குகிறீர்களே. தாங்கள் இப்போது கலங்குவதைப் பார்க்கும் போது நான் உங்களை அப்பர் என்று அழைத்தது மிகச் சரி என்று தெளிவாகிவிட்டது. என்னை தயைசெய்து தடுக்கவேண்டாம்.'

'அது மட்டும் இல்லை ஐயனே. இன்று நாளும் கோளும் சரியில்லை. அதனால் இன்று நீங்கள் கிளம்பி மதுரைக்குச் செல்லாமல் பிறிதொரு நாள் சென்றால் மிக்க நலமாகும் என்று அடியேன் எண்ணுகிறேன்'.

'அப்பரே. நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததா. வேயுறு தோளி பங்கன் ....'

---------------

இப்படி தொடங்கியது தான் 'கோளறு பதிகம்' என்னும் இந்தப் பத்துப் பாடல்களும். பதிகப் பொருளை அடுத்தப் பதிவிலிருந்து பார்க்கலாம்.
கோளறு பதிகம் - சொற்பிரிவு பாடல்
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி, பாம்பு இரண்டும் உடனே,
ஆசு அறு அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (1)

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு , ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! (2)

உரு வளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகு அலர் கொன்றை முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலையதூர்தி, செயமாது, பூமி, திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே (3)

மதி நுதல் மங்கையோடு வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி , நமனோடு தூதர் , கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (4)

நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெம் சினம் அவுண ரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (5)

வாள் வரி அதள் அது ஆடை, வரி கோவணத்தர்,மடவாள் தனோடும் உடனாய்
நாண் மலர் வன்னி ,கொன்றை, நதி சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
கோள் அரி,உழுவையோடு , கொலை யானை,கேழல்,கொடு நாக மோடு, கரடி
ஆள் அரி நல்ல நல்ல அவை, நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (6)

செப்பு இள முலை நன் மங்கை ஒரு பாகமாக விடை ஏறு செல்வன் அடைவார்
ஒப்பு இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும் , வாதம் , கையான பித்தும்,வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. (7)

வேள் பட விழி செய்து அன்று விடை மேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண் மதி , வன்னி , கொன்றை மலர் சூடி , வந்து என் உளமே புகுந்த அதனால்
ஏழ் கடல் சூழ் இலங்கை , அரையன் தனோடும், இடரான வந்து நலியா
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. (8)

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசு ஏறும் எங்கள் பரமன்
சல மகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும், மாலும்,மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே (9)

கொத்து அலர் குழலியோடு , விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் , மதியும் , நாகம் , முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! (10)

தேன் அமர் பொழில் கொள்ஆலை,விளை செந்நெல்  துன்னி வளர் செம் பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. (11)
பாடல் எண் : 01
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
வேய் = மூங்கில்
உறு = போன்ற
தோளி = அழகிய தோள்களையுடைய உமை அம்மைக்கு
பங்கன் = தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன் ஆதி ஈசன்
விடம் = பாற்கடலில் தோன்றிய கொடிய ஆலகால விஷத்தை
உண்ட = உண்ட
கண்டன் = கழுத்தை உடையவனாகிய ஆதி சிவபெருமான்
மிக நல்ல வீணை தடவி = அன்பினால் தழுவிக்கொள் இறைவனை ( காகபுசண்டர் மாமுனிவர் சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1)
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமேபு குந்த அதனால்
மாசு = களங்கம்
அறு = நீக்குதல் / அற்ற / இல்லாத ( மாசறு = களங்கம் இல்லாத )
திங்கள் = குளிர்ச்சி உடைய சந்திரனையும்
கங்கை = பாவத்தை நீக்கி புண்ணியம் அருளும் கங்கை அன்னையையும்
முடிமேல் அணிந்து = முடிமேல் சூடிக்கொண்டு
என் உளமே புகுந்த அதனால் = என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்)
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி = ஏழு நாட்களும் , அதன் தொடர்புடைய 7 நவ கிரகங்களும்
பாம்பு இரண்டும் உடனே = மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் 2 கோள்களும் இவை உள்ளடங்கிய ஒன்பது கோள்களும்
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே.
ஆசு = குற்றம்
அறு = நீக்குதல் / அற்ற / இல்லாத
ஆசறு = குற்றமற்ற (என் போன்ற) சிவனடியாருக்கு
அவை = ஏழு நாட்களும் , ஒன்பது கோள்களும்
நல்ல நல்ல = மிக மிக நல்லதையே செய்யும்!
அடியார் அவர்க்கு மிகவே = (என் போன்ற) சிவனடியாருக்கு) மிகவும் மிக மிக நல்லதையே செய்யும்!
சொற்பிரிவு

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி, பாம்பு இரண்டும் உடனே,
ஆசு அறு அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் விளக்கம் 1 :

(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) - அன்பினால் தழுவிக்கொள் இறைவனை - களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

பொருள் விளக்கம் 2 :

மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்,தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல், அன்பினால் தழுவிக்கொள் இறைவனை (மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு), களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்), அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்), ஒரு குற்றமும் இல்லாதவை , அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.
பாடல் எண் : 02
என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே(திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி)
(என்பு = எலும்பு , ஓடு = கூரையில் வேயப் பயன்படும் பொருள்.)

என்பொடு = எலும்புடனும்

கொம்பொடு = கொம்புடனும்

ஆமை இவை = ஆமையும் ஆகிய எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை

மார்பு = ஆதி ஈசனின் மார்பில்

இலங்க = விளங்க

எருது ஏறி = அறவுருவாகிய ரிஷப வாகனத்தின் மேல் ஏறி

ஏழையுடனே = உமை அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்பொன் பொதி = பொன் போல ஒளிரும்
மத்த மாலை = குளிர்ச்சி பொருந்திய ஊமத்தை மாலையும்
புனல் = (கங்கை ) ஆறு, நீர்
புனல் சூடி = ஆதி ஈசன் சிவபெருமான் தனது தலையில் பாவத்தை நீக்கி புண்ணியம் அருளும் கங்கை அன்னையை சூடி
உளம் = உள்ளம்
வந்து என் உளமே புகுந்த அதனால் = வந்து என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்

ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்

ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்

பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்

ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்

உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!அன்பொடு = அன்போடு
அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே = ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.
சொற்பிரிவு


என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு , ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
பொருள் விளக்கம் 1:

என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின் கண் இலங்கப் பொன் போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தை மலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.

பொருள் விளக்கம் 2:
முதல் பாடலில் நவகோள்கள் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொன்னார். இந்தப் பாடலில் பயணத்திற்கு ஆகாத விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று தள்ளப்பட்ட நாட்களும் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொல்கிறார்.

சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் காரணத்தை மற்றோரிடத்தில் காணலாம்.

ஏழையென்றது பெண் என்னும் பொருளில். இங்கு அது உமையன்னையைக் குறித்தது. ஏழைப்பங்காளன் என்று வள்ளல் தன்மையை உடையவரைக் குறிப்பது இன்று வழக்கில் உள்ளது. அது 'ஏழைப்பங்காளன்' என்னும் சொற்றொடரின் பொருள் உணராததால் வந்த வினை. ஏழைப்பங்காளன் என்று குறிப்பிடப் படும் முழுத் தகுதியும் சிவபெருமானுக்கே உண்டு. மற்றோருக்கு இல்லை. ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள். அப்படி மனைவிக்கு தன் உடலில் பாதியைத் தந்தவர் அண்ணலையன்றி வேறு யார்?

சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நல்ல செயல் செய்யவோ எங்காவது பயணம் கிளம்பும் போதோ வார நாளைப் பார்த்தபின் அந்த நாளில் அமைந்த விண்மீனையும் பார்த்திருக்கிறார்கள். அந்த 27 விண்மீன்களில் 12 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடலில் சம்பந்தர் குறித்து அவையெல்லாமும் கூட அடியார்க்கு மிக நல்லவையே என்கிறார்.

சோதிட நூல்களில் அசுவினியில் தொடங்கி விண்மீன்களைச் சொன்னாலும் கிருத்திகையை முதல் விண்மீனாய் சொல்லும் மரபும் இருந்திருக்கிறது. மேஷம் முதல் ராசியானதால் அது அசுவினியில் தொடங்குவதால் அசுவினியை முதலாகக் கூறும் வழக்கமும் வந்தது. ஆனால் சம்பந்தரோ இங்கு கிருத்திகையை முதலாகக் கூறும் மரபைப் பாராட்டி அந்த விண்மீன்களை எண்களாகச் சொல்லியிருக்கிறார்.
பாடல் எண் : 03
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்உருவளர் = உரு வளர் = அழகில் சிறந்த
பவளமேனி ஒளி = சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும்
நீறணிந்து = திருநீற்றினை அணிந்து கொண்டு
உமையோடும் = உமையன்னையுடன்
வெள்ளை விடை மேல் = வெள்ளை எருதின் மேல் ஏறி
முருகலர் கொன்றை திங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்முருகலர் = முருகு (அழகு) அலர் (மலர்)
கொன்றை = கொன்றைப் பூவினையும்

முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்
திங்கள் = வெண்ணிலவு ஆகிய சந்திரனையும்
முடிமேல் அணிந்து = தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மான பலவும்திருமகள் = செல்வத்திற்கு அதிபதியான திருமகள் , அன்னை மஹாலட்சுமி

கலையதூர்தி = கலை (நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது)
கலையது (நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் ) ஊர்தி (வாகனம் ) = கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள் , அன்னை சரஸ்வதி

செயமாது = செயம் ( வெற்றி) மாது ( மங்கை ) = ஜெயமகள் , வெற்றிக்கு அதிபதியான மலைமகள் , அன்னை துர்கை

பூமி = அன்னை நிலமகள்

திசை தெய்வமான பலவும் = எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவேஅரு = சிறந்த / தேர்ந்த பொருளை குறித்து நிற்கும் , நெதி = செல்வம், முத்து அரிய செல்வங்களையே
அருநெதி = அரிய செல்வம் போல
அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே = ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.
சொற்பிரிவு

உரு வளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகு அலர் கொன்றை முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலையதூர்தி, செயமாது, பூமி, திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
பொருள் விளக்கம் 1:
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும். அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.


பொருள் விளக்கம் 2:
உருவளர் பவள மேனி ஒளி நீறனிந்து:

கரிய மேகங்களைப் பார்க்கும் தோறும் எப்படி மேகவண்ணனின் கரிய நிறம் மனதில் தோன்றி மயக்குகிறதோ அது போல் மேலே வெளிர்ந்த சாம்பல் பூசி எரிந்து அடங்கி நிற்கும் தீக்கங்கினைக் காணும் தோறும் மனதில் தோன்றுவது சிவபெருமானின் தோற்றமே. தீக்கங்கினைப் போன்ற சிவந்த, பவளம் போன்ற மேனியைக் கொண்டவன் சிவன் (சிவந்தவன், செம்மையானவன்). அந்த செந்நிற மேனி முழுவதும் மறையும் படி வெண்ணிற நீறணிந்து தோன்றும் தோற்றம் தீக்கங்கினை சாம்பல் சூழ்ந்தது போன்ற தோற்றம். காக்கைச் சிறகினிலே கண்ணனைக் கண்டது போல் இந்த சாம்பல் சூழ்ந்த கங்கினைக் காணும் தோறும் நினைவில் வருபவன் 'ஆத்தி சூடி இளம் பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்'.

ஒரு முறை வாரியார் சுவாமிகள் சொன்னது நினைவிற்கு வருகிறது. தென்னாட்டார் சிவனைச் சிவந்தவன் என்ன, வடநாட்டார் அவனை வெண்ணிறம் கொண்டவன் என்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் சொன்னது: நாம் அவனின் உண்மையான தோற்றத்தைக் கண்டோம். அதனால் அவன் சிவந்த நிறம் கொண்டவன். சிவன் என்றோம். வடவர்கள் அவன் உடலெங்கும் திருநீறு பூசி நிற்கும் கோலத்தைக் கண்டார்கள். அதனால் அவன் பனியைப் போன்ற நிறமுடையவன் என்றார்கள்.

பாரதியாரும் முழுவெண்மேனியான் என்கிறார் பாருங்கள்.

முருகுலர் கொன்றை:

முருகு என்றால் அழகு என்று பொருள். நிறைய பேருக்கு அது தெரியும். முருகன் என்றால் அழகன்.

ஆனால் முருகு என்றால் தேன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அதனால் தான் இதற்கு தேன் நிரம்பி அலர்ந்த அழகிய கொன்றை என்று பொருள் சொன்னேன்.

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி:

இதில் கலையதூர்தி செயமாது என்பதற்கு முன்னோர்கள் கலையென்னும் மானை வாகனமாகக் கொண்ட துர்க்கையும், வெற்றிக்கு அரசியான செயமாதுவும் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

பின்னால் வந்தவர்கள் சிலர் வெற்றிக்கு அரசியான (செயமாதுவான) மான் வாகனம் கொண்ட துர்க்கை என்று இருவரும் ஒருவரே என்று பொருள் கொண்டிருக்கிறார்கள்.

கலையதூர்தி என்னும் போது மானை ஊர்தியாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே சம்பந்தர் பாடியிருக்கலாம். ஆனால் இங்கு திருமகளையும் சொல்லி, மலைமகளையும் சொல்லிவிட்டு, கலைமகளை விட மனம் வரவில்லை. அதனால் கலை என்பதை வித்தை என்ற பொருள் கொண்டு கலையதூர்தி என்பதனை கலைமகள் என்று பொருள் கொண்டேன்.

திசை தெய்வமான பலவும்:

முதலில் இதற்குத் தோன்றிய பொருள் 'எட்டுத் திசைகளிலும் இருந்து நம்மைக் காக்கும் எண்திசைக்காவலர்கள்' என்பதே. வடமொழியில் அவர்களை 'அஷ்டதிக் பாலகர்கள்' என்பார்கள். அவர்கள் கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்கினி, தெற்கு - யமன், தென்மேற்கு - நிர்ருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈசானனாகிய சிவன்.

இந்த சொற்றொடர் இந்த எண்திசைக் கடவுளர்களை மட்டும் குறிக்காமல் மேலும் எல்லாத் திசைகளிலும் இருந்து நம்மைக் காக்கும் தெய்வங்களையும் குறிக்கும் என்று பின்னர் தோன்றியது.

இப்போது இன்னொரு பொருளும் தோன்றுகிறது. வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொற்களைத் திசைச் சொற்கள் என்பார்கள். அது போல் தொடக்கத்தில் நம் வழிபாட்டு முறையில் இல்லாமல் பின்னர் நம் வழிபாட்டு முறையில் சேர்ந்த, சேர்ந்து கொண்டிருக்கும் தெய்வங்களைத் திசைத் தெய்வங்கள் எனலாம் என்று தோன்றுகிறது.
பாடல் எண் : 04
மதி நுதல் மங்கையோடு வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்மதி = சந்திரன்
நுதல் = நெற்றி
மதிநுதல் = பிறை போன்ற நெற்றியை உடைய
மங்கையோடு = உமையம்மையோடு
வட பால் இருந்து = ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) தென் திசை நோக்கி (தட்சினாமூர்த்தி திருவுருவத்தில்) வடப்பக்கமாய் அமர்ந்து
மறை ஓதும் எங்கள் பரமன் = மறைபொருளாய் இருக்கும் ஞான நூல்களை ஓதி அருளும் எங்கள் பரமனான சிவபெருமான்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்நதியொடு = அன்னை கங்கை நதியோடு
கொன்றைமாலை = கொன்றை மாலை
முடிமேல் அணிந்து = தனது தலை முடியின் மேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் = என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிரந்தரமாய் வீற்றிருப்பதால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
கொதியுறு = கொதி (சினம்) , உறு (மிக்க)

காலனங்கி = காலன் ( உடலை வருத்தும் காய்ச்சல் என்னும் காலனும்) ,அங்கி - உடலைச் சுடும் அக்கினியும் (தீயும்)

நமனோடு தூதர் = உயிரை எடுக்கும் நமனெனும் யமனும் அவனுடைத் தூதர்களாகிய

கொடு நோய்கள் ஆன பலவும் = கொடிய நோய்கள் யாவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.அதிகுணம் = மிக்க குணமுடையனவாக

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. = ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.
சொற்பிரிவு

மதி நுதல் மங்கையோடு வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி , நமனோடு தூதர் , கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பொருள் விளக்கம் 1:

பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின் கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யம தூதர், கொடிய நோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.


பொருள் விளக்கம் 2:

சிவபெருமான் உமா மகேசுரவராக அன்னையுடன் கூடி அமர்ந்திருக்கும் திருக்கோலமும் யோகீஸ்வரனாய் வட விருக்ஷம் எனப்படும் கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து மறைகளை சனத்குமாரர்களுக்கு உபதேசிக்கும் தென்முகக் கடவுள் திருக்கோலமும் முதல் வரியில் குறிக்கப் படுகின்றன. தென்முகக்கடவுளாய் அமர்ந்திருக்கும் போது அன்னையுடன் சேர்ந்திருப்பதில்லை ஐயன். ஆனால் சம்பந்தருக்கு அன்னையையும் ஐயனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை போலும். உள்ளம் புகுந்தவன் அன்னையுடன் அல்லவா புகுந்தான். அதனால் மதி நுதல் மங்கையோடு என்று யோகநிலையில் இருக்கும் திருக்கோலத்திலும் அன்னையுடன் சேர்த்து ஐயனை தரிசிக்கிறார்.

ஐயனுடன் அடியாருக்கு இருக்கும் நெருக்கமான உறவைக் குறிக்க 'எங்கள் பரமன்' என்கிறார். அவன் பரமன் - எல்லோருக்கும் மேலானவன். ஆனால் அதே நேரத்தில் எங்களவன். :-)

காலனும் நமனும் யமனின் மறுபெயர்கள். இங்கு கொதியுறு காலன் என்று சொல்லிவிட்டு மீண்டும் நமன் என்கிறார். இருமுறை யமனைக் குறித்திருப்பாரோ என்று கேள்வி வந்தது. அதனால் அவன் அருளை முன்னிட்டுச் சிந்தித்ததில் 'கொதியுறு காலன்' என்பது 'காய்ச்சலாகிய காலன்' எனப் பொருள் தரலாம் என்று தோன்றியது.

அங்கி என்பது அக்கினி எனும் வடசொல்லின் திரிபு.

நமனோடு அவன் தூதர்களும் கொடு நோய்களான பலவும் என்று சொல்லவந்தவன் பின்னர் நோய்களைத் தானே யமதூதர்கள் என்று சொல்லுவார்கள்
பாடல் எண் : 05
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள்த னோடும்
விடையேறும் நங்கள் பரமன்
நஞ்சணி கண்டன் = நஞ்சு அணி கண்டன் = தேவர்களும் அசுரர்களும் இழந்த செல்வங்களை மீண்டும் அடைவதற்காக பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய

எந்தை = என் தந்தையும்

மடவாள் தனோடும் = (மடம் + ஆள் = சிவபுரத்தின் பெண்மணி ) = உமையம்மையாரோடு
விடையேறும் ( விடை = எருது , ஏறும் ) நங்கள் பரமன் = அறவுருவாகிய எருதின் மேல் ஏறி வரும் எங்கள் பரமனாகிய சிவபெருமான்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
துஞ்சிருள் = துஞ்சு (உறங்கு) + இருள் = அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நடு இரவு நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட

வன்னி = வன்னி மலரையும்
கொன்றை = (சிவந்த) கொன்றை மலரையும்
முடிமேலணிந் = முடிமேல் அணிந்து

தென் உளமே புகுந்த அதனால் = என் உளமே புகுந்த அதனால் = அவனது அளவில்லா அருளினாலே என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
வெஞ்சின = வெம் + சினம் = கொடிய சினம் மிகுந்த
அவுண ரோடும் = அவுணர் = அசுரர்

உருமிடியும் = உரும் இடியும் = உருமும் இடியும்

மின்னும் = மின்னலும்
மிகையான = மிக்க சக்தி வாய்ந்த
பூத மவையும் = பூதம் அவையும் = ஐம்பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, விண்)
அஞ்சிடும் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
அஞ்சிடும் = இறைவனது பெருமையையும் அவனடியார்களது பெருமையும் எண்ணி அஞ்சிடும்
நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே = ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.
சொற்பிரிவு

நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெம் சினம் அவுண ரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
பொருள் விளக்கம் 1:
நஞ்சணிந்த கண்டனும், எந்தையும், உமையம்மையாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான், இருள் செறிந்த வன்னி இலை, கொன்றை மாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.

பொருள் விளக்கம் 2:
பாடல் எண் : 06
வாள்வரி அதள தாடை வரிகோவ ணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
வாள் வரி அதளதாடை = வாள் ( ஒளிபொருந்திய ) வரி ( வரிகளையுடைய ) அதள் ( புலி) அது ஆடை =
= வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும்
வரி கோவணத்தர் = வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடையாடையும் அணிந்த சிவபெருமான்
மடவாள் தனோடும் உடனாய் = அன்பு மனையாளோடு சேர்ந்து
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
நாண்மலர் = அன்றலர்ந்த பூ ஆன
வன்னி கொன்றை நதி = வன்னி, கொன்றை, கங்கை நதி

சூடி வந்தென் = சூடி வந்து என் = தன் திருமுடியின் மேல் சூடி தானாக என்

உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்த காரணத்தால்
கோளரி உழுவை யோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
கோளரி = கோள் (வலிமை) + அரி (சிங்கம்) = வலிய சிங்கம்
உழுவையோடு = ( உழுவை = புலி ) = புலியோடு
கொலையானை = கொலை யானை = கொலைசெய்யும் யானை
கேழல் = காட்டுப் பன்றியும்
கொடு நாக மோடு = கொடிய நாகமும்
கரடி = கரடியும்
ஆளரி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
ஆளரி = ஆள் அரி = ஆளைக் கொல்லும் சிங்கமும்
சொற்பிரிவு

வாள் வரி அதள் அது ஆடை, வரி கோவணத்தர்,மடவாள் தனோடும் உடனாய்
நாண் மலர் வன்னி ,கொன்றை, நதி சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
கோள் அரி,உழுவையோடு , கொலை யானை,கேழல்,கொடு நாக மோடு, கரடி
ஆள் அரி நல்ல நல்ல அவை, நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
பொருள் விளக்கம் 1:

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலிய சிங்கம் , புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும்.! அடியார்கட்கும் மிக நல்லனவே செய்யும்.

பொருள் விளக்கம் 2:
பாடல் எண் : 07
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக = செப்பு இள முலை நன் மங்கை
ஒரு பாகமாக = கிண்ணம் போன்ற இள நகில்களை உடைய உமையாள் ஒரு பாகமாக

விடையேறு = விடை ஏறும் = இடப வாகத்தில் ஏறி வரும்

செல்வனடைவார் = செல்வன் அடைவார் = நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம் சிவபெருமான் இடம் சேரும்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந் = ஒப்பு ( அழகு ) இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து =
ஒப்பு கூறத்தக்க இளமதியமும் கங்கையும் (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து

தென் உளமே புகுந்த அதனால் = என் உளமே புகுந்த அதனால் - தானாகவே என் உள்ளம் புகுந்து அங்கு நிலை நின்றதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியாவெப்பொடு = வெப்பமான காய்ச்சல்,
குளிரும் = குளிர் காய்ச்சல்,
வாதம் = வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்),
மிகையான பித்தும் = பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற எந்த நோயும்
வினையான வந்து நலியா (வருத்தாது ) = வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.(நலியா ) அப்படி = நம்மை வருத்தாவண்ணம்
நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
சொற்பிரிவு

செப்பு இள முலை நன் மங்கை ஒரு பாகமாக விடை ஏறு செல்வன் அடைவார்
ஒப்பு இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும் , வாதம் , கையான பித்தும்,வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பொருள் விளக்கம் 1:


பொருள் விளக்கம் 2:
பாடல் எண் : 08
வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்வேள்பட = வேள் பட = (வேள்) மன்மதன் (பட ) அழிந்து சாம்பலாக
விழி செய்து அன்று = நெற்றிக்கண்ணைத் திறந்து அன்று
விடைமேல் இருந்து = அறவுருவான எருதின் மேல் அமர்ந்து
மடவாள் தனோடும் உடனாய் = அழகிய உமையன்னையுடன் சேர்ந்து
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்வாண் மதி = ஒளிமிகுந்த நிலவையும்
வன்னி கொன்றை மலர் சூடி = வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி
வந்தென் உளமே புகுந்த அதனால் = வந்து என் உளமே புகுந்த அதனால் = என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியாஏழ் கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா = ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.ஆழ் கடல் = ஆழமான கடலும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
சொற்பிரிவு

வேள் பட விழி செய்து அன்று விடை மேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண் மதி , வன்னி , கொன்றை மலர் சூடி , வந்து என் உளமே புகுந்த அதனால்
ஏழ் கடல் சூழ் இலங்கை , அரையன் தனோடும், இடரான வந்து நலியா
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பொருள் விளக்கம் 1:

மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத் திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து, முடிமிசை ஒளிபொருந்திய பிறை, வன்னி, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிறராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா, ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும்.

பொருள் விளக்கம் 2:
இராவணன் சிறந்த சிவபக்தன். அவ்வாறிருக்க இராவணன் போன்றவர்களால் துயரம் வராது என்று ஏன் எழுதியிருக்கிறார் சம்பந்தர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மதனவேளை அழித்தவன், காமேஸ்வரன், காமதகனன் தன் துணைவியுடன் என் உள்ளத்தில் நிலைபெற்றதனால், பெரும்பண்டிதனாய் இருந்தும் எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

திருஞானசம்பந்தரின் எல்லாப் பதிகங்களிலும் எட்டாவது திருப்பாட்டு இராவணனைப் பற்றியும், ஒன்பதாவது திருப்பாட்டு பிரமன், மால் பற்றியும், பத்தாவது பாட்டு சமண, புத்தர் பற்றியும் வருவது வழக்கம். அந்த வழக்கத்தை ஒட்டியே, கோளறு பதிகத்திலும் இந்த எட்டாவது பாடல் இராவணனின் அகந்தையை அழித்து அவனுக்கு அருள்புரிந்த விதத்தைப் போற்றுகின்றது. தென்னிலங்கை வேந்தனாகிய இராவணன், முன்பு தன் அறியாமையினால் கயிலை மலையினை எடுக்க முயன்றான்.அப்போது அம்மலையின்கீழ் அகப்பட்டுத் தலைகளும், தோள்களும் நசுங்கி அல்லலுற்றான். தன் தவறை உணர்ந்து அதனைப் பொறுத்தருளும்படி இறைவனை வேண்டி இசைச் பாடல்களால் துதித்தான். அவனது இசைப்பாடலைக் கேட்டு நெகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு அருள்புரிந்த விதத்தை அறிவுறுத்துவது இந்த எட்டாம் திருப்பாட்டாகும்.

இதிலிருந்து நாம் உணரக்கூடிய உண்மை என்னவென்றால், இராவணன் போன்ற அகந்தைமிக்கவர்களினால் நேரக் கூடிய இடர்களையெல்லாம் இறைவன் தடுத்து நீக்குவான்; மேலும், இராவணன் போல் தவறை உணர்ந்து பக்தியினால் பாடித் துதிப்போரை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் படைத்தவன் இறைவன். இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு எந்தத் துயரமும் அணுகாது என்று புரியவைக்கிறார் சம்பந்தர்.
பாடல் எண் : 09
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்பல பல வேடமாகும் பரன் = அடியார்கள் வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி அருள் புரியும் பரமன்

நாரி பாகன் = பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டவன்

பசு ஏறும் எங்கள் பரமன் = விடையின் மேல் ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்சல மகளோடு எருக்கு முடி மேல் அணிந்து = நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் = தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்மலர் மிசையோனும், மாலும்,மறையோடு தேவர் வருகாலமான பலவும் = மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும் தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது போன்ற பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவேஅலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே = அலைபொங்கும் கடல், மேரு மலை ஆகியவையும்
சொற்பிரிவு

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசு ஏறும் எங்கள் பரமன்
சல மகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும், மாலும்,மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
பொருள் விளக்கம் 1:
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறி வரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்க மலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரை மலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.

பொருள் விளக்கம் 2:

பாடல் எண் : 10
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்கொத்து அலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு
விசயற்கு நல்கு = விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக
குணமாய வேட விகிர்தன் = இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்மத்தமும் = ஊமத்தை மலர்,
மதியும் = பிறை நிலவினையும்
நாகம் = பாம்பினையும்
முடி மேல் அணிந்து = தன் திருமுடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் = தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமேபுத்தரோடு அமணை = பெளத்தர்களையும் சமணர்களையும்

வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே = வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்
சொற்பிரிவு

கொத்து அலர் குழலியோடு , விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் , மதியும் , நாகம் , முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
பொருள் விளக்கம் 1:
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள் புரிந்த வேட வடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும்.

பொருள் விளக்கம் 2:
விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் (விசயன்) ஒருசமயம் சிவபெருமானைத் தியானித்துக் காட்டில் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தான். அச்சமயம், சிவபிரான் அவனுடைய தவநிலையைச் சோதிக்கும் பொருட்டு, வேடனாகத் திருவுருவம் கொண்டு, கையில் வில்லுடனும், வேட்டை நாய்கள் சூழ அக்காட்டிற்குச் சென்றார். உமாதேவியையும் (கொத்தலர் குழலி) வேட்டுவச்சியாக உடனழைத்துச் சென்றார். அருந்தவத்தில் இருந்த அருச்சுனனுடன் ஒரு பன்றியின் காரணமாகப் பெரும்போர் செய்து, விசயனின் வில் ஒடிந்து வீழவும், அவன் உடலில் அம்பு தைக்கவும், அவனை வென்று அவன் தவவலிமையைச் சோதித்தார். பின்னர், அவனது தவத்துக்கு இரங்கி அவனுக்குப் பாசுபதம் என்னும் அஸ்திரத்தைத் தந்தருளினார்.

இந்தத் திருச்செயலின் பெருமையை அறிவிப்பதன் மூலம், ‘தனது திருவிளையாடல்களால் களிக்கும் இறைவன் நமக்குச் சோதனைகள் பல கொடுத்தாலும், இறுதியில் பெருவரங்கள் அருளிக் காப்பான்; அருச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்து அவனைப் பாரதப் போரில் வெற்றியடைய உதவியது போல, புத்த சமணர்களிடம் நடக்க இருக்கும் வாதப்போர்களிலும் பக்கபலமாக நின்று வெற்றி பெறத் துணைநிற்பான்’ என்று உணர்த்துகிறார் சம்பந்தர்.

புத்தரோடு சமணர்களை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருஞானசம்பந்தரின் எல்லாப் பதிகங்களிலும் 8-வது திருப்பாட்டு இராவணனைப் பற்றியும், ஒன்பதாவது திருப்பாட்டு பிரமன், மால் பற்றியும் பத்தாவது பாட்டு சமண, புத்தர் பற்றியும் வருவது வழக்கம் என்று முன்னர் கண்டோம். அந்த மரபைப் பின்பற்றியே, கோளறு பதிகத்தின் இந்தப் பத்தாவது திருப்பாட்டிலும் சமணர்கள் மற்றும் பெளத்தர்களை வாதத்தில் வெல்ல ஆலவாய்க் கடவுளின் திருநீறு துணைநிற்கும் என்று அருள்கின்றார் சம்பந்தர்.
பாடல் எண் : 11
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ ( நிகழ )தேன் அமர் பொழில் கொள் = தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும்
ஆலை விளை செந் நெல் = கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும், செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து

துன்னி வளர் செம் பொன் எங்கும்  வளர் செம்பொன் எங்கும் நிகழ (திகழ) = நெருங்கி , சிவந்த பொன்னைப் போல் எங்கும் நிறைந்திருப்பதும்
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து = பிரமன் சிவபெருமானை வழிபட்ட திருத்தலமுமான பிரமாபுரத்தில் ( சீர்காழியின் ) தோன்றிய
மறை ஞான ஞான முனிவன் = மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் = தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் நட்சத்திரங்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.ஆன சொல் மாலை ஓதும் = சிறந்த இந்தச் சொல்மாலையை இந்தப் பதிகத்தை ஓதும்

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. = அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை!
சொற்பிரிவு

தேன் அமர் பொழில் கொள்ஆலை,விளை செந்நெல் துன்னி வளர் செம் பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
பொருள் விளக்கம் 1:

தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன் முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

பொருள் விளக்கம் 2:
பிரமாபுரம் அல்லது பிரமனூர் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று.
சர்வம் சிவார்ப்பணம்

No comments:

Post a Comment