அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய ஆருத்ரா & மார்கழி ஆயில்ய வழிபாடு பற்றி காண இருக்கின்றோம்.
மார்கழி மாதத்தில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு இரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபையாக போற்றப்படகிறது. இந்த ஐந்து சபைகளிலும் ஆருத்ரா தரிசனம் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம். இவை யாரும் இறைவன் இப்புவியில் அவதரித்த நட்சத்திரங்கள். அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி என்று கேட்கிறீர்களா 'பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்' என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் தோற்றுவித்த ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ரா நாளில் தரிசித்தாலே பலன் ஆகும். வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment