அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளம் சார்பில் நடைபெற்று வரும் சேவைகளில் உழவாரப்பணி சேவை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.உழவாரப்பணி செய்வது நம் உளம் ஆற செய்வது ஆகும். இந்த சேவையின் மூலம் நாம் நேராகவே இறையருளை பெற முடியும். நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழலும் கோடான கோடி
மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவாரப் பணி அருமருந்தாக
அமைந்துள்ளது . உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7-ம்
நூற்றாண்டு வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது
உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண்
அப்புறப்படுத்தி ஆலயத்தை நாம் செம்மைப் படுத்துவது போல் நம் கர்ம வினை
போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மைப் படுத்துகிறான். இறைவன் நாம்
பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை
சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.
ஆன்மீகப் பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும்
தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது. மற்றொரு
விதத்தில் கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு
தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள்
தொண்டு ஆற்றுகின்றோம்.எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை
அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.
மனிதன் கடைத்தேறுவதற்கு எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை
பிரார்த்தனை முறைகளை, கூறியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும்
மகத்துவமும் மிக்கது திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.
நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும்
பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம்
இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.
வழக்கமாக நாம் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப்பணி செய்து வருகின்றோம். இந்த ஆண்டு தொற்றுக்கிருமி காலத்தில் நம் சேவைகளில் உழவாரப்பணி,ஆலய தரிசனம், மலை யாத்திரை என நாமும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம். எப்போது இந்த சேவைகள் அனைத்தும் தொடங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தோம். அப்போது தான் வைகுண்ட ஏகாதசி பற்றி நம் நினைவிற்கு நம் குழு அன்பர் மூலம் அறிவுறுத்தப்பட்டோம். இதோ..மீண்டும் நம் சேவையை தொடர உள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கத்திலும் குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப்பணி செய்தோம். இந்த ஆண்டின் முழுமையும் குன்றத்தூர் உழவாரப்பணி மூலம் எம் பெருமாள் இந்த மார்கழி மாதத்தில் அழைத்து இறையருள் கொடுக்க உள்ளார் எனும் போது நம் மனம் மகிழ்கின்றது.
இன்னும் குன்றத்தூர் என்று கூறினாலே முருகப்பெருமான் பற்றி தான் அனைவருக்கும் தெற்கின்றது. மீண்டும் குன்றத்தூர் பற்றி பேசுவோம்.
குன்றத்தூர்
என்றாலே நமக்கு சேக்கிழார் தான் நினைவிற்கு வருகின்றார். சும்மாவா? பெரிய
புராணம் இயற்றிய பெருந்தகை அல்லவா! சேக்கிழார் பிறந்த மண்ணில் நம் மனம்
பதிவதற்கு நாம் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடுத்து
குன்றத்தூர் முருகன் கோயில். இங்கே கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக
கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தனையும் தாண்டி இங்கே குன்றத்தூர் கோவிந்தன்
அருள்பாலித்து வருகின்றார் என்பது வெகு சிறப்பு. நாம் எப்போது குன்றத்தூர்
சென்றாலும் தெய்வ சேக்கிழார் வழிபட்ட கந்தலீஸ்வரர், குன்றத்தூர்
திருஊரகப்பெருமாள் மற்றும் குன்றத்தூர் முருகப் பெருமான் என தரிசனம் பெற்று
வருவது வழக்கம்.
ஊர்
ஊராக சுற்றாதே; குன்றத்தூரை சுற்று என்றும் கூறலாம். ஏனெனில் நமக்கு
பிரபலமாக தெரிந்தது இந்த மூன்று கோயில்கள் தான் . இவற்றையும் தாண்டி
சென்னையை சுற்றி உள்ள நவகிரக கோயிலான திருநாகேஸ்வரம் கோயில் உள்ளது.
அடுத்து சேக்கிழார் மணி மண்டபம் உள்ளது. சைவம்,வைணவம், கௌமாரம் ,சாக்தம் என
அனைத்தும் குன்றத்தூரில் ஒருங்கே ஒருமித்து காணப்படுகின்றது.
எனவே
தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம், குன்றத்தூர் மண்ணை மிதிப்பது நாம்
செய்த புண்ணியமே. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று கேட்டிருப்போம். நம்
தளத்திலும் ஒரே
கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப
வழிபாடும்... என்று பதிவு கண்டிருப்போம். ஆனால் இந்தப்பதிவில் மூலம் ஒரே
கல்லுல மூணு மாங்கா என குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோயில்
உளவரப்பணிக்கு வரும் அன்பர்கள் சேக்கிழார் வழிபட்ட கந்தலீஸ்வரர், குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் மற்றும் குன்றத்தூர் முருகப் பெருமான் என மூன்று தரிசனம் பெறலாம் என்பதையே தலைப்பின் மூலம் சொல்ல விரும்புகின்றோம்.
சரி..இனி இந்த ஆண்டில் வைகுண்ட ஏகாதசிக்காக நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT
குழுவின் மூலம் நாம் திருஊரகப்பெருமாள் கோயிலில் செய்த உழவாரப்பணி துளிகளை
இங்கே அள்ளித்தெளிக்க விரும்புகின்றோம்.
ஒவ்வொரு உழவாரப்பணியும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும். சேவைக்கு யார் வருகின்றார்கள் என்றெல்லாம் ஆரம்பகாலத்தில் பார்த்தோம். தற்போது எண்ணிக்கை முக்கியமல்ல என்ற நிலைக்கு வந்து விட்டோம். முதலில் குன்றத்தூர் ஸ்ரீ கந்தலீஸ்வரர் தரிசனம் பெற்றோம். அன்றைய தினம் மதுரையில் இருந்து அன்பர் திரு.ஈஸ்வரன் வந்து இருந்தார்கள். சற்று நேரத்தில் ஆவடியிலிருந்து திரு.நாகராஜன் ஐயாவும் வந்து சேர்ந்தார்கள். இன்னும் சற்று நேரம் பொறுத்து சேவையை ஆரம்பிக்க எண்ணினோம். திருமுறை விநாயகர் கோயில் அங்கே இருப்பது நமக்கு தெரியும் என்றாலும் நம்மால் இன்னும் தரிசனம் பெறவில்லை என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம் அன்று தீர்ந்தது. நீங்களும் திருமுறை விநாயகர் தரிசனம் பெற்றுக்கொள்ளுங்கள்.
திரு.ஈஸ்வரன் ஐயா அவர்கள் வழிபாடு செய்த போது
திருமுறை விநாயகர் தரிசனம் முடித்ததும் உழவாரப் பணியை ஆரம்பித்தோம். விநாயகப்பெருமான் கொடுத்த தெம்பில் இனிதே பணி செய்தோம்.
முதலில் கோயில் வளாகத்தில் உள்ள செடிகளை அகற்றும் பணியை செய்தோம். நம்முடன் இன்னும் சில அன்பர்கள் நம்முடன் இணைந்தார்கள். செடிகளை அகற்றும் பணி மும்முரமாக செய்தோம். கையில் உறை அணிந்து கொண்டு களைகளை பிடுங்க ஆரம்பித்தோம். அடுத்து கோயிலினுள் சுத்தம் செய்ய ஆரம்பித்தோம்.
இரண்டு குழுவாக பிரிந்து, ஒரு சாரர் செடிகளை அகற்றும் பணியும், மற்றொரு குழு கோயிலினுள் சுத்தம் செய்யும் பணி என தொடர்ந்தோம். நம் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் இதோ..கீழே உள்ள படத்தை பாருங்கள். நம்மால் முடிந்த வரையில் தூய்மை செய்துள்ளோம்.
வெளியே செடிகளை அகற்றிய பின்னர் அனைவரும் கோயிலினுள் சென்று பணிகளை ஆரம்பித்தோம். அடுத்து நமக்கு அங்கே உள்ள சுவாமி மேடை சுத்தம் செய்ய பணித்தார்கள். இது இங்கே வழக்கமான ஒன்று தான். ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு சுத்தம் செய்தார்கள். தம்பி பாலமுருகன் இணைந்து கொண்டு சேவையை தொடர்ந்தார்.
ஆஹா..மேடை சுத்தம் செய்த பின்பு..தங்கள் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
அடுத்து தீப மேடை சுத்தம் செய்யும் பணி ஆரம்பமானது. தம்பி பாலமுருகன் இதனை சிரமேற்கொண்டு எடுத்து செய்ய ஆரம்பித்தார்.
அன்பார் ஒருவர் துடைப்பான் கொண்டு தரையை சுத்தம் செய்த காட்சி. இது போல் ஒவ்வொருவரும் தங்கள் நிலை உணர்ந்து அவர்களாகவே பணியை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தார்கள்.
அன்பர் திரு.ஆதித்யாவும் வந்து சேர்ந்தார்கள்.
நெய் விளக்கேற்றி விட்டு போடப்பட்ட டப்பாக்களை ஒன்றாக சேர்த்தோம்.
நேரம் வேறு மதியம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓரளவிற்கு கோயில் வளாக செடிகள், கோயிலினுள் உள்ள மேடை, தீப மேடை என சுத்தம் செய்த பிறகு, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாம் ஆயத்தம் செய்ய சென்றோம். இதற்கு தானே ஆசைப்பட்டு இங்கே வருகின்றோம். இந்த உழவாரப்பணிக்கென்றே நண்பர் திரு.முகுந்த் வந்து விடுவது வழக்கம்.
அடுத்து நாம் என்னென்ன பணிகள் செய்தோம், பெருமாள் நமக்கு கொடுத்த அருள் என அடுத்த தொகுப்பில் தொடர்வோம். அடுத்த பதிவில் உழவாரப்பணி அறிவிப்பும் இடம் பெறும்.
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
- மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment