"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 29, 2020

நான் யார்? - பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 141 ஆவது ஜெயந்தி தின விழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் ஜெயந்தி தின விழா. மார்கழி மாத புனர்பூசம் நட்சத்திரப்படி நாளை பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 141 ஆவது ஜெயந்தி தின விழா கொண்டாடுகின்றார்கள். ஆங்கில தேதிப்படி 30.12.2020 இன்றும் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 141 ஆவது ஜெயந்தி தின விழா என்றும் கருத்தில் கொள்ளலாம்.அனைத்து பகவான் ஸ்ரீ ரமணர் வழிபாட்டு மையங்களிலும் இன்றைய விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றி பேசுவதும், படிப்பதும் தேவாமிர்தமே. இந்த ஆண்டில் தமிழ் புத்தாண்டு முதல்  நாம் தினம்தோறும்  அருணாசல ஸ்ரீ அக்ஷரமணமாலை பதிவு செய்ய வாய்ப்பு கிட்டியது. இது எப்படி நிகழ்ந்தது போன்ற கேள்விகளுக்கு விடை தேட முடியாது. தேடல் உள்ள தேனீக்களாக நாம் தேடிய போது குருவின் வழிகாட்டலால் தான் இது கிடைத்தது. அருணையின் கருணை என்றே நாம் இதை சொல்ல விரும்புகின்றோம்.

பக்தி,ஞானம் என பல விதமாக நாம் ஆன்மிகத்தில் அடியெடுத்து வைத்தாலும் இறுதியில் நான் யார்? என்பதே விடை தேட வேண்டிய வினா. இந்த வினாவிற்கு விடை  தேடியதால் திருச்சுழி, வேங்கட ரமணன்  பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி ஆனார். பக்திக்கும் முக்திக்கும் அடிப்படையாக இந்த நான் யார் என்ற தேடல் விளங்குகின்றது.

திருச்சுழி ரமணா

ஸ்வயம்பிரகாச ரமணா

அருணாசல ரமணா

யோக ரமணா

தீர ரமணா

வேதாந்த ரமணா

அருள் ரமணா

ஆத்ம ஞான ரமணா

சற்குரு ரமணா

மோக்ஷ ரமணா

மஹர்ஷி ரமணா

சாந்த ரமணா

கல்யாண ரமணா

சியாம ரமணா

ஆனந்த மோன ரமணா

கருணா ரமணா

திடஞான ரமணா

ஆப்த பந்து ரமணா

ஜோதி ரமணா

ஸ்வப்ரகாச ரமணா

நித்ய ஸாந்நித்ய ரமணா

உன்னை நமஸ்கரிக்கின்றேன்

இன்றைய பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் ஜெயந்தி தின நன்னாளில் பகவானை வணங்கி ரமணரின் வழியிலேயே பதிவை தொடர்வோம்.

பக்தர் : ஒரு ஞானியின் நினைவைக் கொண்டாடுவது எப்படி?"

பகவான் ரமணர் : பிறப்பும் இறப்பும் கடந்த ஒரு ஞானியின் பிறந்த தினத்தையோ (ஜயந்தி), மறைந்த தினத்தையோ (ஆராதனை) கொண்டாடுவது எப்படியென்றால் அவரது உபதேசங்களை நினைவு கூர்வதுதான். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன உபதேசித்தார் என்பனவற்றை நினைவு கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான கொண்டாட்டம்.

இன்று ரமண ஜெயந்தி. நாமும் அவரது நினைவைக் கொண்டாடுவோமா?.

ரமணர் பற்றி எழுத நினைப்பதும் பேச நினைப்பதும் கோலம் போடுவது போன்றது தான். கோலம் தானே அது எளிதாக தரையில் போடலாம் அல்லவா? இது தரையில் போடும் கோலம் அல்ல. பின்னே? நீரில் போடும் கோலமும் அல்ல..அத்தனையும் தாண்டி காற்றில் போடும் கோலம் தான். இது எப்படி முடியும்? அது தான் பகவான். எத்தனையோ மகான்கள் இந்த புனித பூமியில் அவதாரம் செய்து வருகின்றார்கள்.அவற்றுள் சிலரே பகவான் என்று அழைக்கப்படுவர். ஒருவர் ரமணர், மற்றொருவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். இன்று பகவான் தரிசனம். அதுவும்  ரமண ஜெயந்தியான  இந்த நாளில் பெற இருக்கின்றோம்.



ரமணர் சொல்லும் செய்திகள் பார்ப்பதற்கு எளிமையாக தோன்றும். ரமணர் படித்து விட்டு செல்லும் விஷயங்களை சொல்லவே இல்லை. படித்து மனதில் இருத்த வேண்டிய செய்திகளை மட்டுமே சொல்லி இருக்கின்றார். ரமணாத்மியம் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியது ஆகும். இது ஆழ்ந்து செல்லக் கூடியது, ஆழ்ந்து சொல்லக்கூடியது, ஆழ்ந்து சிந்திக்க கூடியது; இது தான் பகவானின் சிறப்பு.இவர் மாய மந்திரம் எதுவும் செய்தவர் வல்லவர். மாயா பற்றி ஆத்ம விசாரம் பற்றி அனுதினமும் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பேசியவர். அருணையிலே இருந்து கொண்டு மக்களைத் தன்பால் தற்போது வரை வரவழைத்துக் கொண்டிருப்பவர். ரமணரை நேரில் நாங்கள் கண்டதில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் அருணைக்கு அழைக்கப்படுவது ரமணரால் தான். ஒரு சாதாரண மனிதனாக அவதரித்து, பின் தன் முயற்சியால் தெய்வ நிலை அடைந்தவர். அமைதியை ஆராதனை செய்தவர். ஆனந்தத்தை பரிபூரணமாக கொடுத்துக்கொண்டு வருபவர்.எளிமையாய் வாழ்ந்தவர். சுருக்கமாக சொன்னால் ஞான வள்ளல் ரமணர். பகவான் பற்றி இனி உணர்வோம்.

அருப்புக்கோட்டை நகரின் அருகிலுள்ள திருச்சுழியில் 1879-ம் ஆண்டு பகவான் ரமணர் பிறந்தார். ரமணரின் சிறு வயதிலேயே தந்தை சுந்தரம் ஐயர் காலமானார், தாயார் அழகம்மை அரவணைப்பில் வளர்ந்த ரமணர் பள்ளி வயது வரை சராசரி மாணவராகவே இருந்தார். விளையாட்டும் நீச்சலுமே அவரது பொழுதுபோக்கு. தனது 16-ம் வயதில் 1895-ல் அவரின் வீட்டிற்கு வந்த விருந்தினர் “அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்று சொன்ன வார்த்தை அவரைப் பரவசப்படுத்தியது. திருவண்ணாமலைதான் அருணாசலம் என்பதை அவர் மூலம் உணர்ந்தார். அதுமுதல் அவரது உள்ளத்தில் ஒரு புதிய கிளர்ச்சி ஏற்பட்டது.

பின்பு ஒரு சமயம் மரண பயம் அவரை ஆட்கொண்டது. அந்த அனுபவத்தைத் தானே உணர ஒரு பிணம்போலப் படுத்தார், அவருள் ஏற்பட்ட உள்ளுணர்வு அவருக்கு இறப்பின் ரகசியத்தையும் இறப்பிற்குப் பின் என்ன என்பதையும் விளக்கியது.

“அழிவற்று அண்டமெங்கும் நிறைந்திருக்கும் ஆன்மஜோதியோடு ஒன்றியவன் நான்” என்ற அறிவு புலப்பட்டது.

1896, ஆகஸ்ட் 29-ல் அவரது அண்ணனின் ஒரு கோபச் சொல் இவரது ஞானத்தின் வாசலைத் திறந்தது. அண்ணனுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அண்ணாமலைக்குப் புறப்பட்டார்.
“நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவரது உத்தரவுப்படி கிளம்புகிறேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. இதற்காக ஒருவரும் விசனப்பட வேண்டாம். ‘இதை'த்தேடி காசு, பணம் செலவு செய்ய வேண்டாம்...” என்று எழுதி கீழே தனது பெயரைக் குறிப்பிடாமல் கோடு போட்டுவைத்தார். ‘தகப்பனார்' என ஈசனையும், ‘இது' என அஃறிணையில் தன்னையும் குறிப்பிட்டார்; ஆணவம் அழிந்த ஆத்மாவாக வெளிப்பட்டு, தான் ஞானம் அடைந்துவிட்டதை உணர்த்தினார்.

1896 செப்டம்பர் முதல் நாள் ரமணரின் அருள்பாதம் அண்ணாமலை என்னும், அருணாசலத்தில் அடி வைத்தது. நேராகக் கோவிலுக்குள் நடந்தார். “அப்பா, நான் வந்துவிட்டேன்” என்றுகூறி அண்ணாமலையார் முன் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரது பிரயாணம் அன்றோடு நிறைவுபெற்றது. அதற்குப்பிறகு தன் ஸ்தூல சரீரத்துடன் வேறு எங்குமே சென்றதில்லை.

ரமணரின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது. ரமண பகவானின் ‘நான் யார்' என்ற தன்னையறியும் தத்துவ விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. ‘‘நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஒடுங்கும், அதுவே தபஸ்!” என்பது போன்று விளக்கங்கள் அருளினார்.

ரமண மகரிஷி காலத்தில் அவரைக் கண்டோர் அடைந்த ஆனந்தத்திற்கும், துன்பங்கள் நீங்கி அமைதியடைந்த மக்களின் சுகத்திற்கும் அளவில்லை. ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. பயன் அடைந்தோர் அவரிடம் நன்றி கூறினாலும் அதை அவர் ஏற்பதில்லை. மௌனமே அவரது ஆசீர்வாதம். மௌனமே அவரது பேச்சு. அதில் நாம் மூழ்க மனமோ சுகமாகும்.

பகவான் ரமணர் தனது தாயாரின் மறைவின்போது அவரின் தலையிலும் மார்பிலும் தனது இரு கைகளையும் வைத்து முக்தி அடையச்செய்தார். அது மட்டுமல்ல, தாயாரின் சமாதியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து கோவிலும் கட்டினார், அதை தியான பூமியாக்கினார். ஒவ்வொரு நாளும் பலரும் அங்கமர்ந்து அன்பின் அருளொளியைப் பெறுகின்றனர். ரமணரை இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சியர்கள் என பல்வேறு மதத்தவரும் சென்று வழிபட்டுள்ளனர். ஞானி என்பவன் எவரும் எளிதில் அணுக முடியாதவன் என்ற நிலையை மாற்றி அனைவரும் தன்னை அணுகும்படி வாழ்ந்தார். ஆத்ம விசாரணை செய்யும்முறையை தெளிவுபடுத்தினார்.

கிரிவலத்தினால அடையும் நன்மை என்ன எனக் கேட்ட பக்தருக்கு, “கிரிவலம் தீயைப் போன்றது. தன்னைத் தொட்டவரைத் தீ சுடுவதுபோல அது உன்னை ஈர்க்கும். நம்பிக்கை உண்டோ இல்லையோ, ஒருமுறை கிரிப்பிரதட்சணம் செய்துபார்; நீயே உணர்வாய்” என்றார். ரமணரின் இந்த கூற்றுக்குப் பிறகே கிரிவலம் பிரபலமானது. பவுர்ணமியில் இன்று லட்சக்கணக்கானோர் வலம் வருகின்றனர். ‘உன்னை விசாரித்து அறி' என்பது அவரது சுருதி வாக்கியம்.

இனி நிகழ்வின் துளிகளை தர விரும்புகின்றோம்.

கோட்டூர் அருணாசல அட்சரமணமாலை சேவை மையம் சார்பில் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 139 வது ஜயந்தி தின  திருவாசகம் முற்றோதல்கோட்டூரில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஆனைமலை ஆர்ஷய வித்தியாபீடம் ஸாவமி ததேவானந்த சரஸ்வதி ஸாவமிகள் ஆசியுரை வழங்கினார் பகவான் ரமணமகரிஷி திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்.அனைத்து உயிர்களும் இறைவன் ரூபமே என்றும்   எல்லா உயிர்களை யும்   போற்றி  வணங்கியவர் மனிதன் இறைநிலையை அடைய பல் வேறு உபதேங்களை நூல்வடிவமாக தந்துள்ளார் என்று கூறினார்.திருவாசகம் முற்றோதலில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை உடுமலை அடியார் பெருமக்கள் பங்கேற்றனர்.தீபாராதனைக்குப்பின் பிரசாதம் வழங்கப்பட்டது





ஸ்ரீ ரமணர் ஜெயந்தி விழா அழைப்பிதழ் - 31.12.2020



ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய! 

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் 141 ஆவது ஜயந்தி விழா கொண்டாட்டத்தில் இணைய உலகெங்கிலும் உள்ள ரமண அன்பர்களை அழைக்கிறோம். 
பகவானின் பேரருளால் இவ்வருட ஜயந்தி விழா நேரலையில் உலகெங்கிலும் உள்ள ரமண அன்பர்களோடு இணைந்து 29 மணி நேர உலகளாவிய நிகழ்வாக டிசம்பர் 31 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு  துவங்க உள்ளது. 

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நைஜீரியா, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல்வேறு சத்சங் குழுக்கள் பங்கேற்கின்றன. 

நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட், பாஸ்டன், வாஷிங்டன், டி.சி, ஓஹியோ, டெட்ராய்ட், வட கரோலினா, ஜார்ஜியா, தம்பா, ஹூஸ்டன், ஆஸ்டின், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டில், ஒட்டாவா, டொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சத்சங் குழுக்கள் இந்தக் கொண்டாட்டத்தில் தொடர்ந்து பங்கேற்கின்றன.

அருணாசல ஆசிரம யூடியூப் சேனலைப் பயன்படுத்தி நேரடி ஒளிபரப்பு இருக்கும். கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக இந்நிகழ்வை காணலாம்:

https://www.youtube.com/c/ArunachalaAshrama

மார்கழி மாத புனர்பூசம் நட்சத்திரப்படி நாளை பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 141 ஆவது ஜெயந்தி தின விழா கொண்டாடுகின்றார்கள். ஆங்கில தேதிப்படி 30.12.2020 இன்றும் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 141 ஆவது ஜெயந்தி தின விழா என்றும் கருத்தில் கொள்ளலாம்.

இன்றைய நன்னாளில் நாமும் நான் யார்? என்ற கேள்வியை கொண்டு ஆத்ம விசாரம் செய்து பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் அருள் பெற பிரார்த்திக்கின்றோம்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய! 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குரு தரிசனம் : அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_64.html

கேட்பது விவேகானந்தரோ? - இது ரமணர் வழி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_55.html

மகான்களின் வி(வ)ழியில்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_38.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

No comments:

Post a Comment