"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 15, 2019

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக !

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வேலூர் மாவட்டம் நெமிலி வட்டத்தில் உள்ள அழகிய ஊர் பனப்பாக்கம். இந்த ஊருக்கு பத்து விதமான பெயர்கள் உண்டு என்று நாம் கேள்விப்பட்டோம். ஓரிரண்டு பெயர் என்றாலே நமக்கு நினைவில் கொள்வது சற்று சிரமம். தற்போது ஊரின் பெயர்களும் காலத்தால் மருவி வருகின்றது. இந்த சூழலில் இது போன்ற சிறப்பு செய்திகளை நாம் அறிந்து கொண்டு, அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். அந்த வரிசையில்

விலாச காஞ்சி
திருத்தலபுரி
பனசையம்பதி
மயூரபுரி
புலியூர்
இந்திரபுரி
பிரம்மபுரி
கய்யாணமாவூர்
பாலாற்றின்வடகரை
பனப்பாக்கம்

என்ற பத்து விதமான பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றது என்று சொல்ல ஆசை தான். ஆனால் பனப்பாக்கம் என்ற பெயரே அனைவர்க்கும் தெரியும். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொருவிதமான காரணம் இருக்கும். ஆனால் நாம் கேள்விப்பட்டவரையில் இது பனைமரங்கள் நிறைந்த ஊர் ஆதலால் இவ்வூருக்கு பனசை நகர் என்ற பெயர் வழங்கலாயிற்று. காலப்போக்கில் பனப்பாக்கம் என்று வழங்கப்பட்டு வருகின்றது.

இத்தகு  சிறப்பு வாய்ந்த பனப்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. உமாதேவி,நந்திதேவர்,இந்திரன்,பிரம்மன், திருமால், தக்கன், இராகவன், மன்மதன்,
இயமன், வீரபத்திரர்,அகத்தியர் , வேதியர் என அனைவரும் இங்குள்ள  மாயூரநாதரை  தரிசித்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சில கல்வெட்டுக்களும் உண்டு.பனப்பாக்கம் மாயூரநாதர் கோயிலில் சுமார் 1000 ஆண்டுக்கு முற்பட்ட இராச இராச சோழனின் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் கல்வெட்டு சவுந்தர நாயகி சந்நிதி அர்த்த மண்டபத்தின் வடக்குபுற சுவற்றில் உள்ளது. மாயூரநாதர் கருவறையின் வடக்குச் சுவற்றில் விஜயநகரப் பேரரசு வெங்கடபதி ராயன் கல்வெட்டும் உள்ளது.

இத்தலத்தின் தல வரலாறு பற்றி கேள்விப்பட்டோம். இப்படியெல்லாம் நடைபெற காரணம் என்ன? கைலாயத்தின் முக்கியத்துவம் இங்கே உணர முடிகின்றது. தலைவரின் சொல்லே தரணி ஆளும் மந்திரம் என்றும் உணர்ந்தோம்.இதோ தல வரலாறு.

தலவரலாறு

ஒரு சமயம் சிவன் கயிலாயத்தில் உள்ள உத்தியான வனத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தியானத்தில் இருக்கும் போது உமாதேவியும் நந்திதேவரும் அவ்விடத்தை விட்டு அவ்வனத்தின் பேரழகை கண்டனர். உமாதேவி அங்கு மயில் தோகை விரித்து ஆடுவதையும், நந்திதேவர்  அங்கு புலியின் விளையாட்டையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். சிவபெருமான் தியானத்திலிருந்து நீங்கி அங்கு உமாதேவியும் நந்திதேவரும் காணாததால் கயிலாயம் சென்றார். உமாதேவியும் நந்திதேவரும் திரும்பி வந்து பார்க்க சிவபெருமான் அங்கு இல்லாமையால் அவர்களும் கயிலாயம் சென்றனர். அங்கு சிவபெருமான் நீங்கள் இருவரும் என்னை மறந்து மயில் ஆட்டத்தையும், புலி விளையாட்டையும் பார்த்துக்கொண்டிருந்ததால் புவியில் மயிலாகவும், புலியாகவும் மாறுக என சபித்தார். இவ்விருவரும் சாபம் நீங்க வழியாதென வினவ பூவுலகில் தொண்டைநாட்டில் முக மண்டலம் போன்ற காஞ்சிக்கு ஒரு காத தொலைவில் பனசையம்பதியில் நம் திருவுருவமாக உள்ள சோதிவடிவாக உள்ள பெருமானை பூசிக்க இச்சாபம் விலகும் என்றார். இவ்விருவரும் இத்தலத்திற்கு வந்து பூசை செய்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றனர்.

மாயூரநாதர்

அன்று முதல் மயில் பூசித்ததால் அச்சோதிலிங்கப் பெருமானுக்கு மயூரநாதன் (மயூரம்-மயில்) என்றும் தல விருட்சம் பனை ஆதலால் பனசையம் பதி என்றும், பஞ்சதால மரங்கள் தோன்றியதால் தாலமா நகர் என்றும் பெயர் பெற்றது.

இனி யாரெல்லாம் இங்கே வந்து வழிபட்டார்கள் என்று சுருக்கமாக காண்போம்.


உமாதேவி
மயிலாக சாபம் பெற்ற உமாதேவி பல வனாந்திரங்களைக்கடந்து சிவகங்கையில் நீர் அருந்த பூர்வ ஞானம் தோன்றி சோதிலிங்க பெருமானை அடைந்து பூசித்தார் . பூசனைக்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவ, ஐயனே என் சாபம் நீங்கப்பெற்றதை போன்று உம்மை பூசிக்கும் அடியார்களின் ஆணவபிணி நீங்கவும் இத்தலம் காஞ்சிக்கு அணித்தாக உள்ளதால் விசால காஞ்சி எனவும் பெயர்பெறவும் அருள் செய்தல் வேண்டும் என்றார். இறைவன் அவ்வாறே வரம் அளித்தார். உமையின் மயிலுருவத்தை அருளுடன் நோக்க அதிலிருந்து பாக்கு, பனை, தெங்கு, தாளிப்பனை, ஈந்து (ஈச்சை) ஆகிய ஐவகை மரங்களும் தோன்றின. உனது வடிவம் மிக்க வனப்புடன் இருப்பதால் உலகத்தார் சவுந்தரநாயகி என உன்னை அழைப்பார்கள். நீ என் இடப்பாகம் வந்து அமருவாய் என்று கூறி மறைந்தார்.

நந்திதேவர்
நந்தி தேவர் புலியுருவம் தாங்கி பனசைநகர் வந்து சேர தனது துர்குணங்கள்  நீங்கி சற்குணத்துடன் சோதிலிங்கப் பெருமானைப் பூசிக்க சிவபெருமான் சவுந்தரநாயகியுடன் காட்சி தந்து தன்னை விட்டு நீங்கா வரமும் தந்தார். நந்தி தேவர் புலி உரு கொண்டு இறைவனை பூசித்ததால் திருப்புலியீசன் என்றும் இத்தலம் சிவபுரத்திற்கு ஒப்பானதால் சிவபுரம் என்றும் வழங்கப்படுகிறது.

இந்திரன்
இராமபிரானால் சாபம் பெற்ற தன் மகன் சயந்தனின் சாபம் தீர மாயூரநாதரை வேண்டி சாப விமோசனம் பெற்று தென்மேற்கு திசையில் ஒரு சிவலிங்கம் அமைத்து பூசை செய்ய எம்பெருமான் சூரிய ஒளி போன்று காட்சி தந்ததால் அருணாசலேஸ்வரன் என்று பெயர் பெயரிட்டு வணங்கி தன் இந்திர உலகம் சென்றான்.

பிரம்மன்
கங்கா தேவியால் சிறகுகள் ஒடிக்கப்பட்ட அன்னப்பறவைக்கு மீண்டும் அதே பொலிவு பெற வேண்டி பிரம்மன் அன்னத்துடன் இத்திருத்தலம் வந்து மாயூரநாதரை வணங்கி புதுப்பொலிவு பெற்று திருக்கோயிலுக்கு தெற்கே அரைகடிகை தூரத்தில் ஒரு லிங்கத்தை அமைத்து பூசை செய்து அருள் பெற்றார். பெருமானுக்கு விரிஞ்சகேசன் என்று பெயரிட்டு தன் உலகம் சென்றார்.

திருமால்
திருமாலின் வாகனமான கருடனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது. கருடன் திருமாலுடன் இங்கு வந்து மாயூரநாதரை வணங்க அந்நோய் தீரப்பெற்றது. எம்பெருமான் திருமாலை நோக்கி இன்று முதல் நீவீர் இலக்குமிநாராயணராக மேற்குதிசையில் அமர்வாய் என்றார். 

தக்கன்
தக்கனது யாகத்தை அழித்து அவனது தலையை கொய்த வீரபத்திரக்கடவுள் மீண்டும் அவனை ஆட்டுத்தலையுடன் உயிர்ப்பிக்க  சாப நிவர்த்தியாக இத்தலம் வந்து மாயூரநாதரை வணங்க சாப நிவர்த்தி பெற்று கீழ் திசையில் (ரெட்டிவலம்) தான்தோன்றி ஈசனையும் பெரியநாயகி அம்மனையும் ஸ்தாபித்து பூசை செய்து தன் உலகம் சென்றான்.

இராகவன்(இராமன்)
நாட்டிலுள்ளோர் பழிக்க, சீதையை காட்டில் விட்ட பாவம் தீர இராமன், வசிஷ்ட முனிவரின் அறிவுறுத்தலின் பேரில் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி சாப நிவர்த்தி பெற்றார்.

மன்மதன்
சிவபெருமானின் மீது அம்பு தொடுத்த பாவம் தீர மன்மதன், மாயூரநாதரை வணங்கி கிழக்கே ஒரு லிங்க உருவத்தை அமைத்து வழிபட இறைவன் காட்சி தந்து சாப நிவர்த்தி அருளினார். மன்மதன், இறைவனுக்கு மதணேசன் என்றும் அம்பிகைக்கு திரிபுர சுந்தரி என்றும் அவ்வூருக்கு நல்ல நகர் என்றும் பெயரிட்டு வழிபட்டு இரதி தேவியுடன் தன் உலகம் அடைந்தனர்.

இயமன்
இயமன், சிவலிங்கத்தின் மீதும், மார்கண்டேயன் மீதும் பாசக் கயிற்றை வீசிய பாவம் தீர தாலமா நகர் வந்து மன்மதன் வழிபட்ட நல்லீசப் பெருமானை வணங்கி பின்பு மாயூரப்பெருமானையும், திருக்காளத்தி நாதரையும் வணங்கி பாவ நிவர்த்தி பெற்று தன் உலகம் சென்றனன்.

வீரபத்திரர்
தாலமா நகரின் மன்னன் வச்சிராங்கதனும் மக்களும் சைவத்தை மறந்து சமணத்திற்கு மாறுகின்ற சேதியறிந்த எம்பெருமான் வீரபத்திரரையும் பத்திரகாளியையும் அனுப்பி மன்னனையும் மக்களையும் சைவத்திற்கு திருப்பி அனைத்து ஆலயங்களையும் புதுப்பித்தனர். மன்னன் வச்சிராங்கதன் வீரபத்திரருக்கு கோயில் ஒன்று எழுப்பி வழிபட்டு மகிழ்ந்தான்.

அகத்தியர்
திருத்தணிகை வேலனிடம் தாலமாநகரின் வரலாற்றைக் கேட்ட அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி வட திசையில் (நெடும்புலி) லிங்க மூர்த்தியையும் அகிலாண்ட நாயகியையும் ஸ்தாபித்து பொதிகை மலைக்கு சென்றனர்.

வேதியர்
மகப்பேறு வேண்டி சிவராத்திரை பூசைக்கு காளத்தி யாத்திரை சென்ற இராமேஸ்வரத்து தம்பதியர் கர்ப்பவாதியான  மனைவியுடன் மயூரநாதரை வணங்கி தங்கியிருக்கும் போது அன்று இரவு ஆண் மகவு பெற்றதனால் காளத்திநாதனை இங்கேயே அமைத்து பூசித்து இராமேசுவரம் சென்றனர்.
மீண்டும் ஒருமுறை கோயிலின் தகவல்கள் சுருக்கமாக இக்கோயில் 5 நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சௌந்தர்ய நாயகி. தலமரம் பனைமரம், ஆதலால் இவ்வூருக்கு பனப்பாக்கம் என்றும் உமையம்மை மயில் வடிவில் வழிபாடு செய்ததால் இறைவனுக்கு மயூரநாதர் என்றும் பெயர். இத்தலத்திற்கு திருத்தாலபுரி, மயூரபுரி, புலியூர், இந்திரபுரி, பிரமபுரி, கலியாணமாவூர் முதலிய பெயர்கள் இத்தலப்புராணமாகிய பனசைப் புராணத்தில் குறிக்கப்படுகிறது. நந்திதேவர், பிரமன், இந்திரன், அகத்தியர், முதலியோர் பூஜை செய்து பேறு பெற்றத் தலம். கல்வெட்டுக்கள் 2 உள்ளன. இறைவர் பெயர் புலியப்பர் என்றே குறிக்கிறது. நாள்தோறும் மூன்று கால பூஜை சித்திரை மாதத்தில் மகநட்சத்திரத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment