"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 10, 2019

நாதுலா பாஸ் (Nathula Pass) கதாநாயகன் - சித்தர் பாபா ஹர்பஜன் சிங் கோயில் தரிசனம் பெறுவோம்

 அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் நாம் தற்போது சென்று வந்த சிக்கிம் யாத்திரையில் கிடைத்த அறிய வேண்டிய அரிய செய்திகளை தர இருக்கின்றோம். சரித்திரத்தோடு ஆன்மிகமும் இந்த பதிவில் இணைகின்றது. இந்த பதிவு நம் மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒன்று. சித்தர்கள் என்றால் நம் தமிழ் நாட்டில் மட்டும் தானா ? என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில் நாங்களும் இருக்கின்றோம் என்று மார்தட்டி, இன்றும் சிக்கிம் மாநில மக்களால் தினசரி வழிபாட்டில் வைத்து வணங்கப்பெற்று வருகின்றார் பாபா ஹர்பஜன் சிங். ஒரு ராணுவ வீரரை மக்கள் வீட்டின் பூசையறை, வாகனங்களின் முகப்பு பகுதிகளில் வைத்து வழிபடுவதை பார்க்கும் போதே நமக்கு நெஞ்சு உருகியது. நாம் சிக்கிம் பயணத்தில் தங்கி இருந்த விடுதியின் வரவேற்பறையில் பாபா ஹர்பஜன் சிங் தரிசனம் கண்டோம்.


எங்கப்பா நம்ம கதாநாயகன் என்று தேடுகின்றீர்களா? விநாயகரின் வலப்பக்கத்தில் இதோ..ஜூம் செய்து அவரை மட்டும் கீழே காணலாம்.



நம்ம கதாநாயகன் பற்றி அறியும் முன்னர்,  நாதுலா பாஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

 14790 அடி உயரத்தில் கடுங்குளிர் கொண்ட இந்த நாதுலா (நாது லா எனப்பிரித்து எழுதுவதுதான் சரி. நாது என்றால் கேட்கும் செவிகள் எனப்பொருள். லா என்றால் கணவாய். இரண்டு மலையடிவாரத்திற்கு இடையிலுள்ள இயற்கையான ஒற்றையடிப்பாதைப் போன்ற வழி) தற்போது இந்திய சீன எல்லைகளாக உள்ளன. உண்மையில் இது திபெத்தின் எல்லையாகும். சீனா அநியாயமாக திபெத்தை ஆக்ரமிப்பு செய்தப்பிறகு இவ்விடம் நமக்கு சீன எல்லையாக மாறிவிட்டது.

2014-ஆம் ஆண்டு நமது பாரதப்பிரதமரை சந்தித்த சீன அதிபர், இந்த நாதுலா வழியினை இந்திய யாத்ரீகர்களுக்காக திறந்துவிட ஒப்புதலளிக்கப்படும் எனச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முன் பழைய சீன அரசுக்கும் இந்தியாவிற்கும் முக்கிய வழித்தடமாக இது இருந்தது. பல்வேறு ஆபத்துக்களையும் தடைகளையும் கொண்டதாக இந்த மலைப்பாதை இருந்தது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த நாளில் யாக் எருமையின் மீது அமர்ந்துக்கொண்டு மிகச்சிரமப்பட்டு மக்கள் பயணம் செய்துள்ளனர். சீனாவிலிருந்து திபெத்திய கடுங்குளிர் பாலைவனத்தைத் தாண்டி 14790 அடி உயர நாதுலாவைக் கடந்து கொல்கத்தாவைச் சென்றடையும் இந்தப் பாதைக்கு 'ஓல்ட் சில்க் ரூட்' என்று பெயர். இதே வழியாகத்தான் நாமும் சீனாவிற்கு செல்லவேண்டும்.

புராதனப் பெருமை மட்டுமல்ல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. 1956-ஆம் ஆண்டு தற்போதுள்ள 14-வது தலாய்லாமா இந்தியாவிற்கு இந்த வழியாகத்தான் அடைக்கலம் தேடி தப்பிவந்தார். ஏழாம் அறிவு-நமது தமிழகத்தைச் சேர்ந்த போதி தர்மர்கூட இந்த வழியாகத்தான் சீனா சென்றிருக்கக்கூடும். தற்போது இக்கணவாய் வர்த்தகத்திற்கோ யாத்திரைகளுக்கோ பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் எந்நேரமும் இந்திய-சீன இராணுவத்தினர் காவல் புரிந்து வருகின்றனர். 14700 அடி உயரத்தில், பனியும் குளிரும் சூழ்ந்த இடத்தில், இருநாட்டு இராணுவ வீரர்களையும், இருநாட்டு எல்லையில் சென்று பார்ப்பதுதான் இந்த நாதுலா பாஸ் சுற்றுலாவின் பாக்கியம். புதன், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி பெற்று இங்குச் செல்லமுடியும்.




  நாதுலா பாஸ்  அனுபவம் அலாதியானது, நாங்கள் தற்போது சென்று வந்தோம். இப்பொழுது பனிப்பொழிவு இல்லை. அக்டோபர் முதல் செல்லும்  போது பனிப்பொழிவு இருக்கும். கடுங்குளிரான பகுதி. இந்திய சீன எல்லை கண்டோம்.இது தான் முதல் அனுபவம். அடுத்து நாங்கள் தரிசித்த பாபா கோவில் பற்றி தற்போது பார்ப்போம்.

 ஜேலேப்லா பாஸ் மற்றும் நாதுலா பாஸ் ஆகிய இரு மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் நினைவான  கோவில் உள்ளது. யார் இந்த பாபா? பார்ப்போம் வாருங்கள்.... இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா? இந்தியாவின் பிரமோஸ் ஏவுகனைகளோ, சுகாய் போர் விமானங்களோ அல்ல. சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி. அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் 'பாபா ஹர்பஜன் சிங்'. இங்குள்ள இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம். ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். 1968-ஆம் ஆண்டு சிக்கிம்மில் உள்ள நாதுலா எல்லைக்கு மாற்றப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில் நாதுலாவில் அடிக்கடி எல்லைச் சண்டைகள் நடைபெற்றுவந்த நேரம். இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்த நேரம். 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அவர் படையிலிருந்து ஓடிவிட்டார் என்ற செய்தியும் பரவியது.


பாபா ஹர்பஜன் சிங் கோயிலில் இருந்து 


அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார். இதனை கனவு கண்ட வீரர் அலட்சியப்படுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (அப்போதய வழக்கப்படி, இறந்த வீரர்களின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும். அவருடைய சீருடை மட்டுமே குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.) கனவில் தெரிவித்த அதே இடத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால், பட்டாலியன் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் மீது மரியாதை வரத்தொடங்கியுள்ளது. அவ்வப்போது ஹர்பஜன் சிங், வீரர்களின் கனவில் வந்து, 'நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், உங்களுக்காக எல்லையில் காவல் காக்கின்றேன், சீனா - இந்தியா மீது படையெடுத்தாலோ பிரச்சனை எழுப்ப முயன்றாலோ அதனை மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கின்றேன்' என்று கூறிவந்துள்ளார்.

இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்.


பாபா ஹர்பஜன் சிங் கோயிலில் இருந்து
ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம். (ஹர்பஜன் சிங் உடல் மீட்கப்படவில்லை, எனவே அவர் இறந்ததாக பதிவு செய்ய முடியாது. அவர் இறந்ததாக அறிவிக்க முடியாத நிலையில் அவருக்கான சம்பளத்தை இராணுவம் வழங்கியதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.)


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். இந்த வழக்கம் மிகச்சமீபம் வரை நடந்தது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை பலதரப்பில் இருந்து விமர்சனத்திற்கு ஆளானது. பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையடுத்து, இந்திய இராணுவம் சத்தமில்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு கொடுத்துவிட்டது. இதற்குள்ளாக இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.






 இராணுவம் இவரை பணியிலிருந்து விடுவித்தாலும், ஹர்பஜன் சிங் என்பவர் 'பாபா ஹர்பஜன் சிங்' என்று வீரர்களால் போற்றப்படுவதால், எல்லைப்புற சாலைகள் அமைப்பான 'கிரெப்' (GREF) ஹர்பஜன் சிங்கிற்கு மறுவேலை வழங்கியுள்ளது. இப்போது கிரெப் ஊழியராக அவர் வருடத்திற்கு இரண்டு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று வருகின்றார். நாதுலாவில் உள்ள அவர் கோவிலில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி அவருடைய குடும்பத்திற்கு அனுப்பப்படுகின்றது. பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள். ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார்.





மேற்கண்ட (கற்பனை) நிகழ்வுகளை நாம், கதையாகவும் கொள்ளலாம். உண்மையாகவும் கொள்ளலாம். அது அவரவர் மன நிலையைப்பொறுத்தது. நம்மைப் பொறுத்த வரையில் இது உண்மையே. இன்னும் நம்மால் அந்த கோயிலிலிருந்து மீண்டு வர இயலவில்லை.இதோ..காட்சிப்பதிவுகளை கீழே பதிவு செய்கின்றோம்.

























வெகு நல்ல உயரமான இடம், நல்ல குளிர், அப்பழுக்கற்ற பஞ்ச பூதங்கள் நிரம்பிய இடம். மனதை இலகுவாக குவிக்க முடிந்தது, பாபா ஹர்பஜன் சிங் அங்கே சூட்சுமமாக இருப்பதை உணர முடிகின்றது. சிறிது நேரம் மௌனித்து நின்றோம், மண்டியிட்டு வேண்டினோம். நாதுலா பாஸ் கதாநாயகன் கேட்க கேட்க இப்படி நடக்குமா? என்று தோன்றுகின்றது. ஆனால் பரம் உள்ளே இறங்கிவிட்டால் பாமரனும் விதி விலக்கல்ல.

பாபா ஹர்பஜன் சிங் பொற்பாதம் வணங்கி அங்கிருந்து விடை பெற்றோம். அடுத்து நாம் தரிசிக்க இருப்பது சிவனார் தான். மீண்டும் மேலே சென்று பாருங்கள். சில காட்சிகளில் சிவா பெருமான் இருப்பது தெரியும்.இங்கிருந்து நடந்து செல்லும் தூரம் தான்.மீண்டும் அடுத்த பதிவில் அங்கிருந்த சிவ பெருமான் தரிசனம் பெறுவோம்.

மீள்பதிவாக:-

No comments:

Post a Comment