நாம் சென்ற நேரம் சரியாக திருமஞ்சனம் நடைபெற்ற நேரம். சுமார் 1 மணி நேரம் பெருமாள் முன்பு இருந்தோம்.நமது TUT குழுவின் சார்பாக நமது உறுப்பினர் அனைவரும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பெற்று வாழ அர்ச்சனை செய்யப்பட்டது. இவ்விரண்டும் மட்டும் இருந்தால் போதும். இவ்வுலகின் அனைத்து சுகங்களையும் அடைந்துவிடலாம். எப்போதும் கடவுளிடம் வேண்டும்போது தனித்தனியாக வீடு வேண்டும், கல்வி வேண்டும், பணம் வேண்டும், இன்ன பிற சமாச்சாரங்கள் வேண்டும் என கேட்காமல் மகிழ்ச்சி வேண்டும் என்று மட்டும் வேண்டுவோம். எவ்வளவுதான் பணம் இருந்தாலும்,ஆரோக்கியம் இல்லையென்றால் அக்குடும்பதில் மகிழ்ச்சி இருக்காது.ஆரோக்கியம் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும்.அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் மேலே சொன்னவை கிடைக்கவேண்டும் அதை அந்த கடவுள் பார்த்துக்கொள்வார். அருமையான இறை தரிசனம் பெற்றோம்.
நம்பி மலை பெருமாள் தரிசனம் பெற்று வெளியே வந்து பிரகாரம் சுற்றினோம். மனதுள் ஒரு வித உணர்வில் கலந்தோம். இந்த இடத்தில் தான் அகத்தியர் மைந்தன் தெய்வத்திரு ஹனுமத்தாஸன் அவர்கள் ஜீவ நாடி வாசித்துள்ளார்கள் என்று மனம் மகிழ்ந்தது. ஸ்ரீ அகத்தியர் பெருமானின் ஆசி அங்கே கிடைக்க பெற்றோம். குருவருளும், திருவருளும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இடம் நம்பி மலை. மீண்டும் மீண்டும் பிரகாரம் சுற்றினோம். அடுத்து ஸ்ரீ அழுகண்ணி சித்தர் தரிசனம் பெற சென்றோம்.
பதிவின் துவக்கத்தில் சொன்னது போல் இந்த இடத்தில் தான் சுமார் 200க்கும் மேற்பட்ட சித்தர்கள் தரிசனம் பெற முடியும். நம் ஊனக்கண்களுக்கு இதை உணர முடியுமா என்ன? மேலும் இங்கே உள்ள புளியமரம் பற்றியும் நம் குருநாதர் அடிக்கடி சொல்வதுண்டு.
அந்த ஜீவ நாடி அற்புதத்தை இங்கே தொடர விரும்புகின்றோம்.
அந்த பதினைந்து நிமிடத்தில் அகத்தியர் சொன்னதை எல்லாம் நினைத்து எத்தனை திகைப்போடு இருந்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். ஏன் இத்தனை பேருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைத்தது? மற்றவருக்கெல்லாம், ஏன் இத்தனை பெரிய பாக்கியத்தை அவர் கொடுக்கவில்லை என்று யோசித்தேன். சிறிது நேரத்தில் மழை விட்டது. மறுபடியும் அதே இடத்தில் வந்தமர்ந்து நாடியை வாசிக்கத் தொடங்கினேன்.
"விண்ணிலிருந்து விழுகின்ற சிறு துளிக்கே பயப்படுகிறார்களே, வாழ்க்கையை எப்படியடா கொண்டு செல்லப் போகிறார்கள் என்று நான் எண்ணவில்லை. அகத்தியன் ஏட்டை காக்கவே, அகத்தியனை மழையிலிருந்து காக்கவே நினைக்கிறார்கள். அகத்தியன் இறைவன் அடி பணிந்து, தலை தாழ்ந்து உள்ளே தானே அமர்ந்திருக்கிறேன். அகத்தியனை உயர்ந்த இடத்தில் உட்காரவைப்பதில் என்ன நியாயம்? அகத்தியனை உட்கார வைக்கலாமா? அகத்தியன் தான் உள்ளே அமர்ந்து கொண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டு இருக்கிறேனே. ஆக, விண்ணில் இருந்து விழுந்த இரு துளிக்கு இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெருமழையே பெய்தாலும், இடியே இடித்தாலும், மின்னலே கண்ணை பறித்தாலும், உங்களுக்குத்தான் ஏதுமே ஆகாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேனே. பின்னர் ஏன் இந்த பயம்?"
கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போய் விட்டனர்.
"அட ராமா! ராமா! அவர் கிண்டலடிப்பதுகூட திட்டுவது போல் தான் உள்ளது" என்றார் ஒரு நண்பர்.
நாடியை மேலும் படிக்கலானேன்.
ஆகவே ஒன்பது பிறவிகளில் இருந்து இவர்களை மீட்டுத் தந்திருக்கிறேன். அதுதான் உண்மை. ஆகவே நான் அடிக்கடி சொல்வதெல்லாம், முடிந்த அளவுக்கு நன்மை செய்யுங்கள், ஆனால் கெடுதல் பண்ண வேண்டாம். நீங்கள் அனைவரும் பூரணத்துவம் பெற்று விட்டீர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும். உங்களுக்கு எத்தனையோ சோதனைகள் தந்திருக்கிறேன், இன்னும் தந்து கொண்டு இருக்கிறேன். விதிமகளிடம் பலபேருக்கு பல காரியங்களுக்காக பேசிய போது விதிமகளுக்கும் எனக்கும் கடும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அன்று ஒருநாள் கொடுமுடியிலே, காவிரிக்கரை ஓரத்திலே கூறும் போது, எனக்கும், விதிமகளுக்கும், பிரம்மாவுக்கும் மாறு பட்ட கருத்துக்கள் எல்லாம் வந்திருக்கிறது. பிரம்மா சொல்கிறார் "நீ ஏகப்பட்ட பேர்களுக்கு பரிந்துரை செய்துவிடுகிறாய். அத்தனை பேர்களின் தலை எழுத்தை ஓலைச்சுவடி நோக்கி கண்டுபிடித்து மாற்றி எழுத 10 ஆண்டுகள் குறைந்த பட்சம் ஆகும். அத்தனை பேர்களையும் நீ இஷ்டப்படி பரிந்துரை செய்து மாற்றி காப்பாற்று என்று சொன்னால், வாங்கின கடனை எவன் கொடுப்பான் என்று வட்டிக்காரன் கேட்பது போல் நான் கேட்கிறேன். அவன் செய்த பாபத்துக்கான கர்மாவுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டாமா? என்று சொல்லி தண்டனையை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது என்று பிரம்மா என்னிடம் சொல்ல, நான்
"தண்டனை கொடுப்பாயோ, இல்லையோ. அதை யாம் அறியோம். என்னை நாடி வந்தான், அவனை காப்பாற்றுவதாக வாக்களித்திருக்கிறேன். அதாவது, அத்தனை பேர்களையும் காப்பாற்றவேண்டும், விதியை மாற்றவேண்டும் என்று தான் அகத்தியன் இன்றைக்கு கூட, கூறி வந்திருக்கிறேன். கூட்டம் அதிகம் என்பதால், அவன் பொதுவாக, மெதுவாக செய்கிறான். இது எனக்கு பிடிக்கவில்லை. ஒப்பவில்லை. இன்னும் இரண்டு பேர்களை போட்டுக் கொண்டுவிட்டால், அதிக உதவியாளர்களை வைத்து தீர்க்கச் சொல்லியிருக்கிறேன். கர்மாவை மாற்றி எழுத சொல்லியிருக்கிறேன். பிரம்மனுக்கு மட்டும் யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் இஷ்டப்படி செய்யலாம் என்று சட்டம் இருந்தால், அகத்தியனுக்கு இருக்ககூடாதா? என்று தான் மூவரிடமும் கேட்டு விட்டேன். அவர்களும் புன்னகை பூக்கிறார்கள். ஆகவே எல்லாருக்கும், எல்லா காரியமும் நல்ல சமயத்தில் நடக்கும். அதுவரை, "துன்புறுத்த மாட்டேன்" என்று அகத்தியன் அவர்களிடம் உறுதி மொழி வாங்கியிருக்கிறேன். உடனடியாக நல்ல காரியம் எதுவும் நடக்காவிட்டாலும், அவர்களை துன்பபடுத்தாமல், அவர்கள் மனதை எந்த கெடுதல் பண்ணாமல், புண்ணாக்காமல், நிம்மதியாக தூங்க விடுவதாக உத்தரவு வாங்கி இருக்கிறேன். ஆகவே, அந்த உத்தரவு படி தான் இன்றுவரை நடக்கிறது. ஏன் என்றால், இப்பொழுது கூட, என் வலது பக்கத்தில் இருக்கின்ற அன்னவனுக்கும், அன்னவன் கை பிடித்த நாயகிக்கும் அகத்தியன் மேல் இன்றுவரை சற்று கோபம் தான். சொன்னபடி நடக்கவில்லை என்று புண்ணாகி இருக்கிறான். அகத்தியன் அழைத்தான், திருக்குறுங்குடிக்கு வரட்டும் என்றும், அகத்தியன் என்னவேண்டு மானாலும் செய்யட்டும். அகத்தியன் எனக்கென்று ஒன்றுமே செய்யவில்லை, என்ற கேள்வி அவன் மனதுக்குள் எழுந்ததை, அகத்தியன் யாம் அறிவேன். ஏன் என்றால், அவன் எதிர் பார்த்த விஷயம் என்பது சாதாரண விஷயம். சாதாரண விஷயத்துக்கு கூட அகத்தியன் கை கொடுக்கவில்லையே என்கிற எதிர்பார்ப்பு அவனுக்குள் இருக்கிறது. வெளியே சொல்லவில்லையே தவிர, அதை அகத்தியன் கண்டு புன்முறுவல் பூத்துவிட்டுத்தான் வருகிறேன்.
"என்ன நடந்தது என்பது எனக்குத்தாண்டா தெரியும். சற்று முன் சொன்னேனே. எனக்கும், பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் இடையில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. கலைக்கெல்லாம் அதிபதியான சரஸ்வதி, பிரம்மா என்னிடம் கோபித்துக் கொண்டார் என்பதற்காகவோ, நான் பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டதற்காகவோ, சரஸ்வதி கூட சில சமயம் திசை மாறி போனாள். அதனால் ஏற்பட்ட விளைவடா இது. ஒருதலை பிரச்சினை என்பது தேவர்களுக்கு வரக்கூடாது. வந்து விட்டது. அது தவறு. இப்பொழுது அகத்தியன் சொல்கிறேன். அகத்தியனை தேடி யார் வந்தாலும் காப்பாற்றுவதாக சத்திய பிரமாணம் வாங்கி இருக்கிறேன். பிரம்மாவும் அதற்கு உடன்பட்டு கை எழுத்து இட்டது போல, புன் முறுவல் பூத்து, தலையாட்டி, கை கொடுத்து, ஆலிங்கனம் செய்துதான் எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த ஆலிங்கனத்தை வைத்து தான் அன்னவனுக்குச் சொன்னேன், நீ அங்கு போ, உனக்கு கலைவாணி அருள் இருக்கிறது என்று. ஆனாலும் கலைவாணிக்கு என் மேல் என்ன கோபமோ, தெரியவில்லை. நான் பரிந்துரைத்ததை வந்து பார்க்காமல் சென்றது ஏனோ தெரியவில்லை. ஆனாலும், அன்னவன், சோமபானம், சுராபானம் போன்றவற்றை பழகி, தன் தேர்வில் மதிப்பெண்கள் கணக்கை குறைத்துக் கொண்டு விட்டதாக விதிமகள் என்னிடம் கூறியதை நான் ஏற்கவில்லை. ஏன் என்றால் அகத்தியனே மாறுபட்டு, பொய் சொல்கிறான் என்று எண்ணிவிடலாம். தவறு செய்வது என்பது மனித இயல்பு. மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் ஏதும் சொத்து கேட்கவில்லை, சுகம் கேட்கவில்லை, வேறு எதுவும் கேட்கவில்லை. வாழ்ந்ததற்கு அடையாளமாக, வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு உயர் பதவி வேண்டும் என்றுதானே அகத்தியனை கேட்டான். அகத்தியன் வீடு தேடி வந்தான். அகத்தியன் மனம் திறந்து வாழ்த்தினேன். எல்லோரும் என் குழந்தைகள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். ஆனால் கலைவாணி சற்று முகம் மாறிவிட்டதால் வந்த விளைவிது. கலைவாணியிடம் எனக்கும் கோபம் இருந்தாலும், அந்த கோபத்தைவிட பன்மடங்கு கோபம் இவர்கள் மனதில் இருக்கிறது என்பதை அகத்தியன் யான் அறிவேன். உண்மையை சொல்வதில் தவறில்லை. ஆனால் அதையும் தாண்டி அகத்தியனை நோக்கி வந்திருக்கிறானே, இவன் பக்தியை என்னவென்று சொல்வது. ஆகவே, அன்னவனுக்கோ, அவன் குடும்பத்தாருக்கோ, இனி எந்தவித வில்லங்கமும் இல்லாமல் சிறப்பாக அமைய, அதை விட பன்மடங்கு வாழ்க்கையில் முன்னேற அகத்தியன் நிச்சயமாக நல்வழி காட்டுவேன். ஆகவே அஞ்சிட வேண்டாம். இதை அவன் கை பிடித்த நாயகியிடம் போய் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாக்கை சொன்னேன். இது வெறும் முக அலங்காரம் அல்ல. அன்னவனை சமாதானப் படுத்த வேண்டிய அவசியம் அகத்தியனுக்கு இல்லை என்றாலும் கூட, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசக்கூடாது என்பதால், அகத்தியனுக்கும், கலைவாணிக்கும் இடையில் நடந்த சம்பாஷணையை கூறுகிறேன்.
இவை ஒரு புறம் இருக்க, இப்பொழுது வந்த காரணங்கள், இப்பொழுது அபிஷேகம் முடிந்து பாத பூசை முடிந்து, நதிகள் எல்லாம் நம்பிதனை வணங்கி விட்டு செல்லுகின்ற காலம். கீழே விஸ்வாமித்ரர் இருக்கிறார், அவர் பின்னாலே, வசிஷ்டர் வருகிறார், ஜமதக்னி வருகிறார். துர்வாசர் வருகிறார். அத்தனை பேர்களும் உள்ளே நுழைகிறார்கள் இப்போது. அனைவரும் நம்பிதனை பார்த்து வாழ்த்துக்களை கூற, அவரும் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறார். ஆகவே, இந்த கலியுகத்தில், மகாபாரதம், ராமாயணம் போன்ற நடந்த நிகழ்ச்சிகளை பகுதி பகுதியாகத்தான் படித்திருக்கிறீர்கள். ஆனால், அத்தனை பேர்களும், அத்தனை மகரிஷிகளும், முனிவர்களும் நம்பிபெருமானை வணங்கிவிட்டு ஆசி வாங்கிக்கொண்டு செல்வதை அகத்தியன் ஓரமாக நின்று பார்க்கிறேன். எப்படிப்பட்ட மகான்கள், எத்தனை தபசு செய்தவர்கள். எத்தனை தபசுகளை வளர்த்து, பிரளயத்தையே உண்டு பண்ணக் கூடிய அளவுக்கு இருக்கிறது? அதோ காகபுசுண்டர் வந்திருக்கிறார். பிரளயத்துக்கு அப்பால் நிற்கக்கூடியவர் அவர். 4000 ஆண்டுகளுக்கு முன நடந்த பிரளயத்தின் போது காக்கை உருவத்தில் அமர்ந்திருந்தாரே. காகபுசுண்டர் வந்திருக்கிறார். ஆக, பிரளயத்தை கண்டிருந்த எல்லோரும் ஒன்று சேர்ந்திருந்த காலத்தில், மனித சித்தர்களாய் இருக்கிற உங்களையும் வரவழைத்தேனே. அவர்கள் முன் இங்கு உட்கார்ந்தாலே போதும். அவர்கள் அத்தனை பேர்களின் கடைக்கண் பார்வை உங்கள் மீது விழும். உங்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த மாபெரும் புண்ணியம் கிடைக்கும்.
உங்களுகெல்லாம் அடிக்கடி சொல்வதுண்டு. சொத்துக்களை சேர்ப்பது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், சொத்துக்களை சேர்ப்பதை விட புண்ணியத்தை சேருங்கள். அந்த புண்ணியம் தான் உங்கள் தலைமுறையை காக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் மீறி, நீங்கள் பாபம் செய்தாலும், செய்யா விட்டாலும், புண்ணியம் செய்தாலும், செய்யாவிட்டாலும், இந்த அருமையான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் 333 ஆண்டுகளுக்கு உங்கள் குலம் செழிக்க, உங்கள் வாரிசு செழிக்க, உங்கள் வாழ்க்கை செழிக்க அகத்தியன் நல்ல படியாக வாழ்த்துகிறேன். (இந்த ஆசிர்வாதம், இந்தப் பதிவை வாசிக்கும் உங்களுக்கும் சேர்த்துத்தான்).
அடுத்து அங்கிருந்து மீண்டும் நம்பிமலை அடிவாரம் நோக்கி சென்றோம். என்னப்பா? கோடகநல்லூர் யாத்திரை என்று தலைப்பிட்டு, நம்பிமலை பற்றி என்று யோசிக்கின்றீர்களா? குருவின் வழியில் தானே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். கோடகநல்லூர் தரிசனம் விரைவில் தொடர்வோம்.
- மீண்டும் சிந்திப்போம்.
super sir
ReplyDeleteThanks for your comment
DeleteGuruvarul will guide all of us
Happy Diwali wishes from TUT
Thanks
R.Raakesh
சிவ சிவ
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி 🙏 🙏 🙏
Deleteஓம் ஸ்ரீ குருவே சரணம்