"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 29, 2020

தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! - ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசிப்போம்


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள், சுப்புலாபுரம் சற்குரு சுவாமிகள், திருவொற்றியூர் வீரராக சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், மதுரை சோமப்பா சுவாமிகள், பாண்டிச்சேரி தேங்காய் சுவாமிகள், ராம பரதேசி சுவாமிகள், வண்ணார பரதேசி சுவாமிகள் என கண்டு வருகின்றோம். இது சிறு துளியே. பெரு வெள்ளம் போன்றவர்கள் சித்தர்கள். 

சித்தர்களின் தரிசனம் கிடைக்காதா என்று யாரும் ஏக்கம் கொள்ள வேண்டாம். இல்லறமாகிய நல்லறத்தை நீங்கள் சிறப்பாக நடத்தி வந்து, தங்களின் விருப்பத்தை தங்களின் அருகில் உள்ள உயிர்நிலை கோயிலில்களில் அல்லது தினசரி வழிபாட்டில் வைத்தால் போதும். அனைத்தும் குருமார்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற துவங்கும். சித்தர் மார்க்கம் பார்க்க எளிமையாக தோன்றும்.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது. சித்தன் அருள் பெறுவதும் எளிதன்று. யாரும் பயப்பட வேண்டாம். உங்களை பயமுறுத்துவதும் நம் நோக்கம் அல்ல. சித்தர்கள் விரும்புவது அமைதியைத் தான்.

சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. 

இதனால் தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். தமிழ்நாடே ஒரு புண்ணிய பூமி தான். இங்கே தான் நம் அம்மையப்பர் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்டி உள்ளார். இங்கே தான் மிக மிக அதிக அளவில் மகான்கள் தரிசனம் தருகின்றார்கள். 18 சித்தர்கள் நம்மை இங்கே தான்.. இங்கு மட்டும் தான் உணர்த்தி வருகின்றார்கள். சைவம் என்ற பண்பாடு உருவானதும் இங்கே தான். தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் நாம் பல வித கோயில்கள், மகான்கள் தரிசனம் பெற முடிகின்றது. சென்னையை எடுத்து கொண்டால் ஒரு நாள் போதாது.

சென்னை ஒரு ஆன்மிக பூமி. பற்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அருள் நிறைந்த ஊர்.திருஒற்றியூர் என்றாலே வடிவுடையம்மன் ஆலயமும்,பட்டினத்தாரும்,வள்ளலாரும் நினைவிற்கு வருவார்கள்.இந்த புனித தலத்தில் நம் பாதம் பட இறை அருள் வேண்டும். ஒட்டுமொத்த ஆன்மிக சங்கம் இங்கே கிடைக்கின்றது.ஒன்றா..இரண்டா ? என அடுக்கும் அளவிற்கு சித்தர்களின் அருள்மழையில் நனைய முடிகின்றது.

வடிவுடையம்மன் கோவில் தரிசனம் பெற நமக்கு ஒரு நாள் தேவை. அந்த அளவிற்கு நாம் தரிசனம் செய்ய வேண்டும்.இங்கே 2 ன் சிறப்பு உள்ளது. இறைவன்,இறைவி,தல மரம்,தீர்த்தம் என இரண்டு இரண்டாய் உண்டு. எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். இங்குள்ள ஈசன் மாணிக்க தியாகர் என்று அழைக்கப்படுகின்றார். 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கே காணலாம். திரிபுர சுந்தரியான அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றிய பிறகு வடிவுடை அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூர் டோல் கேட் ரோட்டில் உள்ள பரஞ்சோதி மகான் தர்கா,சங்கர மடத்துறவி மகா தேவேந்திரர் அதிஷ்டானம்,அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குபேரனால் வழிபடப்பட்ட கோவில்,தக்ஷிணாமூர்த்தி கோவில்,எண்ணூரில் பன்னண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு முத்தாரம்மன், சுயம்பு சித்தர்,பாடகச்சேரி பைரவ சுவாமிகள் அப்புடு சுவாமிகள்,ரோமச மகரிஷி சுயம்பு உருவம்,காக புஜண்டர் ஜீவசமாதி,பட்டினத்தார் சுவாமிகள் ஜீவசமாதி,வீரராகவ சித்தர் ஜீவசமாதி, குணங்குடி மஸ்தான் தர்கா என அருள் நிறைந்த ஊரே திருஒற்றியூர். காண கிடைக்க வேண்டுகின்றேன் திருஒற்றியூர் தரிசனம் !!!

அதே போல் பாண்டிச்சேரி என்று எடுத்துக்கொண்டால் சுமார் 50க்கும் மேற்பட்ட அருளாளர்களின் ஜீவா ஆலயங்கள் காண முடிகின்றது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று பார்த்தால் பாடல் பெற்ற தலங்கள் தரிசனம் பெறலாம். மதுரை என்று பார்த்தால் மீனாட்சி அம்மன் தரிசனம் மட்டும் என்று நினையாது, இரண்டு முருகனின் படை வீடுகள், ராமதேவர் கோயில், சோமப்பா கோயில் என்று பட்டியல் நீளும். இதில் நெல்லை பக்கம் சென்றாலே நம் குருநாதரின் புனிதம் காணும் அளவில் அள்ள, அள்ள மனம் நிறையும் தரிசனம் கிடைக்கின்றது.

இந்த வரிசையில் திருச்சியும் கணக்கில் கொள்ளலாம். பாடல் பெற்ற தளங்களும், சித்தர் கோயில்களும் நிறைந்து காணப்படுகின்றன. இன்று நாம் திருச்சியில் உள்ள ஒரு சித்தர் ஜீவாலயம் கண்டு அருள் பெற இருக்கின்றோம்.



2018 ஆம் ஆண்டில்  நாம் திருச்சி செல்ல நேரிட்டது. அப்போது இரண்டு நாள் பயணமாக திட்டம் வைத்து சென்றோம். சனிக்கிழமை திருப்பட்டூர், திருநெடுங்களம், எறும்பீஸ்வரர், தாயுமானவர்,உச்சிப்பிள்ளையார்,உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் என சென்று வந்தோம். அடுத்த நாள் காலை நம் குழுவின் உறவும், அகத்தியர் வழிபாட்டை நமக்கு உணர்த்திய திரு.செல்லப்பா அண்ணனை தொடர்பு கொண்டு நம் திருச்சி பயணத்தை பற்றி சொன்னது தான் தாமதம், அவர் உடனே வீட்டிற்கு வரும் படி அன்பு கட்டளை இட்டார். பின்பு அவர் வீட்டிற்கு சென்று காலை உணவு முடித்து அன்றைய தினம் சித்தர்கள் மற்றும் ஜீவன் முக்தர்கள் யாத்திரையாக மாற்றிவிட்டார். அனைத்தும் நாம் அருள் பெற வேண்டிய புண்ணிய ஷேத்ரங்கள். அவை ஸ்ரீ கட்டக்கழி சுவாமிகள் ஜீவசமாதி,ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் மடாலயம்,ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் மடாலயம், பொன்மலைப் பரதேசி மடாலயம் என நீண்டது. 

நாம் தரிசித்த கோயில்கள் அனைத்தும் நாம் ஏற்கனவே காண வேண்டும் என்று குறித்து வைத்து இருந்தோம். ஆனால் அன்று எதிர்பாராதவிதமாக நமக்கு அருள் நிறைந்த ஆனந்த தரிசனமாக அமைந்து விட்டது. மற்ற பொதுவான கோயில்களுக்கு என்று வேண்டுமானாலும் நாம் செல்லலாம். இவை போன்ற சித்தர் கோயில்களுக்கு நாம் ஏதேனும் புண்ணியம் செய்தாலோ அல்லது குருவருள் இருந்தாலோ தான் செல்ல முடியும். இதோ இன்றைய பதிவில் தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! என்று நம்மை அழைக்கின்றார் ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள்.

திருச்சி வரகனேரியில் உள்ளது ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் மடாலயம். எந்த ஒரு ஆரவாரமும் இன்றி அமைதியின் ஊற்றாக உள்ளது. தற்போது சித்தர்கள் கோயிலிலும் நன்கு கூட்டம் உள்ளது. ஆனால் கூட்டத்தை தவிர்த்து இது போன்ற அமைதி ஊற்றெடுக்கும் ஆலயம் சென்று ஆன்ம பலம் பெறுங்கள்.


தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! என வரவேற்கும் கோயிலின் உள்ளே சென்றோம். சிறிய அளவில் தான் கோயில் இருந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்று கேட்பது போன்று சுவாமிகளின் அருள்நிலை நன்கு இங்கே உணர முடிந்தது.







இங்கே ஐயாவின் உயிர்ப்பின் மேலே லிங்க பிரதிஷ்டை. ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமானாக இங்கே இருக்கின்றார்.






இங்கே உணர்வின் நெகிழ்ச்சி அன்பாக வெளிப்படுகின்றது. நாம் சென்ற நேரம் யாரிடமும் சுவாமிகள் பற்றி கேட்க முடியவில்லை. அடுத்த முறை சந்திப்பில் இன்னும் விபரங்கள் தர விரும்புகின்றோம்.சித்தர்கள்,மகான்கள் தமது பெயர்,புகழ் சொல்வதை விரும்பமாட்டார்கள்.இவை அனைத்தும் நமக்காக தான்.நாம் அழைக்கின்ற நேரத்தில் அவர்கள் வரமாட்டார்கள். அவர்கள் அழைக்கும் நேரத்தில் தான் நாம் அங்கே செல்ல முடியும். அது போன்ற ஒரு சக்தி களமாக அருள்மிகு மாணிக்கம் சுவாமிகள் மடாலயம்  விளங்குகின்றது.

இங்கே சிவனாரின் மேலே யார் என்று கவனித்தீர்களா? அடடா. நம் குழுமியானந்த சுவாமிகள் என்று நீங்கள் சொல்வது நம் காதில் விழுகின்றது. அடுத்து வரும் பதிவுகளில் மீண்டும் சிந்திப்போம்.


- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.



மீள்பதிவாக:-

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகா! சரணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அடுத்து நாம் சென்ற வாரம் அருணை முனிவன் பிரார்த்தனை மையம் நடத்திய வேல் பூசையில் கலந்து கொண்டோம்.
வேல் பூசை முதன் முதலாக கண்டோம். கேட்டோம். கருத்தில் நிறைத்தோம். காலை 9 மணி அளவில் தொடங்கிய பூசை மதியம் 4 மணி அளவில் தான் முழுமை பெற்றது. இன்னும் அந்த அருள்நிலை நம்முள் அகத்தியமாக நிறைகின்றது. தனிப்பதிவில் இந்த அனுபவம் போற்றுவோம்.
நம் தளத்திற்கும் முருகனுக்கும் நெருங்கிய தொடர்பு என்று தான் சொல்ல வேண்டும். குருவாக நாம் பார்க்கும் போது  அகத்தியரின் பதிவுகள் அள்ள அள்ள நிறைவாக கிடைக்கின்றது. அகத்தியரின் வழிபாட்டில் நாம் உச்சமாக கருதுவது பொதிகை யாத்திரை என்று சொல்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக நாம் விரும்பிய இந்த யாத்திரை நம் குருநாதர் அகத்தியரின் அருளால் 2019 ஆண்டில் நமக்கு கிடைத்தது. நம் குருவின் குருவாக முருகப் பெருமானை நம் தலத்தில் பல பதிவுகளில் கண்டு வருகின்றோம். ஓதிமலை முருகர், வள்ளிமலை முருகன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை முருகர் என நாம் அருள் பெற்று வருகின்றோம்.இன்றைய பதிவிலும் முருகனருள் முன்னின்று நம்மை வழி நடத்த முருகப்பெருமானிடம் வேண்டுகின்றோம்.

இன்றைய பதிவில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி செல்ல உள்ளோம். அகத்தியத்தை அன்பால் பரப்பி வருகின்றது சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக்  குடில். நாம் முதன் முதலாக மாசி மக யாக நிகழ்விற்காக தொடர்பு கொண்டோம். அடுத்து நம்மை மோட்ச தீப வழிபாட்டிற்கு தயார் செய்தார்கள். மேலும் நம்மை அகத்தியம் நோக்கி நகர்த்தி வருகின்றார்கள். சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக்  குடில் மாதம் தோறும் அமாவாசை அன்று யாகம் செய்து, ஸ்ரீ அகத்தியர் தம்பதிக்கு பூசை செய்து வருகின்றார்கள். அப்படி ஒரு முறை நாம் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக்  குடில் சென்ற போது அங்கே உள்ள முருகப் பெருமான் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள். இதோ.. சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகப் பெருமான் கோயிலுக்கு நாம் அனைவரும் செல்ல இருக்கின்றோம்.




பிரம்மரிஷி பட்டம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர்.அவர் முன் தோன்றிய பரமேஸ்வரர், "தவமுனியே! பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை உனக்குச் சொல்ல வல்லவள், பாலதிரிபுரசுந்தரிதான். எனவே அவளை எண்ணி தவம் செய்!' எனச் சொல்லி மறைந்தார்.
அதன்படியே தவம் செய்த விஸ்வாமித்திரர் தன் முன் "ஜல் ஜல்' என சலங்கை ஒலி எழவே, விழித்துப் பார்த்தார். அழகே வடிவான சின்னஞ்சிறுமி ஒருத்தி அவர் எதிரே நின்றிருந்தாள். தெய்வீகம் கமழ்ந்த அவளது திருமுகத்தை பார்த்ததுமே முனிவருக்குப் புரிந்துவிட்டது. ஈசன் சொன்ன பாலதிரிபுரசுந்தரியே இப்படிச் சிறுமி வடிவில் தோன்றியிருக்கிறாள் என்பது! அந்த தெய்வீகக் குழந்தையைப் பணிந்தார்.
"விஸ்வாமித்திரா! பிரம்மரிஷி பட்டத்திற்காகவா இப்படி உடலை வருத்தி கொண்டாய்?.இதற்குச் சுலபமான வழி இருக்கிறது. நீ எனக்கு ஒரே ஒரு குங்குமப் பொட்டு வை. அதன் பலனாகவே உனக்கு அந்தப் பட்டம் கிடைத்துவிடும்!' என்கிறாள் தேவி.
மனம் நெகிழ்ந்து மகிழ்ந்த மகரிஷி, "தாயே உங்களுக்குப் பொட்டு வைத்து விட வேண்டும், அவ்வளவுதானே. இதோ இப்போதே திலம் இட்டுவிடுகிறேன்!' என்ற பணிந்தார்.
சிவனது வழிகாட்டலின்படி குங்குமம் தயாரித்து அதை தேவியின் திருமுகத்தில் திலகம் போல் இட்டதை சரிபார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். சிறுமி வடிவில் இருந்த அம்பிகை, குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. அடுத்த நொடி, அந்தக் குளத்தில் இருந்து தெய்வீக ஒளி பொருந்திய முகம் ஒன்று தோன்றியது.
விஸ்வாமித்திரர், அவ்வதனத்தைக் கைகூப்பி வணங்கினார். அடுத்தடுத்து அதே போன்று மேலும் மூன்று முகங்கள் தோன்றின. அனைத்தும் இணைந்து, நான்கு முகங்களுடன் கூடிய ஒளி வெள்ளம் நிறைந்த தெய்வத் திருஉருவம் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க, "நான்முக முருகா வருக வருக' என்று அழைத்து அணைத்துக் கொண்டாள் தேவி.

ஆறுமுகனை தன் பொருட்டு நான்முகத் தெய்வமாக தேவி படைத்ததைக் கண்டு மெய் சிலிர்த்த விஸ்வாமித்திரர், மனம் உருகினார். "முருகப் பெருமானே! கந்தா.. கதிர்வேலா!' என்று பாடி ஆடித் துதித்துப் பரவசமானார்.
உடனே திரிபுரசுந்தரி, "விஸ்வாமித்திரா! ஈஸ்வரன் அன்று என் அம்சம் இனறி ஆறுமுக வேலனை படைத்தார். நான் இன்று அவரது அம்சம் இன்றி நான்முக வேலனைப் படைத்தேன். இவனே நீ வேண்டும் வரத்தினை அருள்வான்' என்று கூறி மறைந்தாள்.நான்முக முருகனின் தாள் பணிந்த முனிவர் அடுத்த கணமே தனது உள்ளத்தில் இருந்த "தான்' என்ற அகந்தை அழிவதை உணர்ந்தார்.
அதே சமயத்தில் கொஞ்சம் தொலைவில் கல் மழை பெய்யத் தொடங்கியது. அந்தக் கல் மழையை அவருக்குக் காட்டிய நான்முக முருகன், "முனிவரே! அங்கே வந்தால், ஆவன செய்வோம்!' என்று சொல்லிவிட்டு மறைந்தார். அப்படியே கல் மழை பெய்த இடம் நோக்கி நடந்த முனிவருக்கு சிறுவன் ஒருவன் அடையாளம் காட்ட, அவர் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு முருகன் கோயில் இருந்தது.

அங்கே பாலதிரிபுர சுந்தரியும், நான்முக முருகனும், ஒன்றாக நின்று விஸ்வாமித்திரருக்குக் காட்சி தந்தார்கள்.
"இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேனே' என்று தன் தவறுகளை உணர்ந்து வருந்தினார்.
அப்போது, "பிரம்மரிஷி விஸ்வாமித்திரரே!' என்று குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினார். அங்கே கோயில் வாசலில் வசிஷ்டர் நின்று கொண்டு இருந்தார்.

"வசிஷ்ட முனியே! நான் திருந்தி விட்டேன். உங்கள் மேல் பொறாமை கொண்டு அல்லலுற்ற நான் ஈஸ்வரியின் அருளாலும், சதுர்முக முருகனின் அனுகிரகத்தாலும் அகந்தை நீங்கி, அவர்களின் அருள் பெற்றேன். இப்போது தங்கள் ஆசி வேண்டுகிறேன்' என்று கூறி பணிந்தார் விஸ்வாமித்திரர்.
அவருக்கு பிரம்மரிஷி பட்டம் தந்து ஆசி வழங்கினார் வசிஷ்டர்.
திண்டு திண்டாக கல்மழை பெய்த தலம், திண்டுக்கல்.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து முருகன் வழகாட்டிய படியால் அவனது கோயில் இருக்கும் இடம் சின்னாள் பட்டி இன்று சின்னாளப்பட்டி.
நம்மை ராஜ கோபுரம் ஏற்கனவே வரவேற்று விட்டது அல்லவா?


இந்த வாயில் வழியே உள்ளே நுழைந்தால் முருகன் அருள் பெறலாம்.



நீங்கள் மேலே படித்த தல புராணம் மீண்டும் இங்கே தருகின்றோம்.



திண்டுக்கல் சின்னாளப்பட்டி தவிர, அநேகமாக வேறு எங்கும் நான்கு முகம் கொண்டு முருகன் எழுந்தருளவில்லை என்பது இத்திருத்தலத்தின் தனிசிறப்பு என்கிறது தல வரலாறு. கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை உள்ளது. வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மூலவராகக் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சி. பிராகாரத்தில் விநாயகர், தண்டபாணி, பாலசுப்பிரமணியர், குக்குட சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார்.
தென் திசை பார்த்து அமைந்துள்ள சதுர்முக முருகனுக்காக எதிரே கோயிலின் முன்புற ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சதுர்முகனுக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேகம் செய்வது இத்தலத்தின் சிறப்பு.





இதோ..இங்கே தான் முருகப் பெருமான் அருள் பெற்றோம்.


செவ்வாய் கிழமை தோறும் நான்மக முருகனுக்கு இப்படி அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, வளர்பிறை அஷ்டமி பைரவர் பூஜை யாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தலத்து முருகனை வழிபட்டால், செவ்வாய்தோஷம் தீரும் என்பது நம்பிக்கை.



அருள்மிகு விஸ்வாமித்திரர் தரிசனம்  இங்கே 




அன்றைய தினம் பைரவர் வழிபாடு செய்தோம்.





இக்கோயிலின் தல விருட்சம், வேங்கை மரம். மண்டபத்தின் ஈசானிய மூலையில் நவகிரகங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்திலும் ஒரு விநாயகர் உள்ளார். இத்திருத்தலத்திற்கு வந்து சதுர்முக முருகனை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை இல்லாத குறை போன்ற சங்கடங்களை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.






மீண்டும் ஒருமுறை வலம் வந்து தரிசனம் செய்தோம்.






அடடா..நான்முக முருகப் பெருமான். இது போன்ற அருள்நிலை நம் தமிழ்நாட்டில் இங்கே மட்டும் தான் என்று நினைக்கும் போது மனம் உருகுகின்றது. 



அடுத்து வெளி பிரகாரம் சுற்றி வந்தோம். கோயில் மிக மிக பெரிய சுற்று கொண்டதாக இருந்தது. இயற்கை கண்டு இன்புற்றோம். அப்போது தான் அங்கே வெளி மண்டபத்தில் சித்தர்கள் தரிசனம் பெற்றோம்




இதோ மீண்டும். கோபுர தரிசனம் பெற உள்ளோம்.











கோபுர தரிசனத்தில் நம் முருகப்பெருமானை கண்டதும் மனம் ஒன்றி லயத்தில் ஆழ்ந்தது.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது மேலே உள்ள படங்களை காணும் போது தெரிகின்றது.


எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில், மதுரை செல்லும் வழியில் உள்ளது சின்னாளப்பட்டி. அங்கிருந்து சிறிய பயண ஊர்திகளில் கோயில் செல்லலாம்.

மீள்பதிவாக:-

அழகெல்லாம் முருகனே... பூம்பறையின் மேவு ..பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_23.html

குறிஞ்சி ஆண்டவரே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_19.html


வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html