"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, May 26, 2020

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தின் மூலம் மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய நட்சத்திரம் அன்று ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, உழவாரப் பணி மற்றும் அன்னசேவை செய்து வருகின்றோம். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி ஆகும். வைகாசி  மாத மோட்ச தீப வழிபாடு சுமார் 10 பேர் அளவிலே நடைபெற்றது. வருகின்ற வியாழக்கிழமை அதிகாலை 05:30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3  மணி  வரை ஆயில்யம் நட்சத்திரம் வருகின்றது. வழக்கமான பூசை இம்முறை நடைபெறும்.

தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி  இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.

 அகத்தியம். பேச பேச திகட்டாதது. கேட்க கேட்க இனிமையானது. உண்ண உண்ண அமிர்தமானது. இன்றைய பதிவில்  2018ம் ஆண்டில் நம் தளம் கொண்டாடிய அகத்தியர் ஜெயந்தி விழாவின் துளிகளை இங்கே பகிர உள்ளோம்.

திருச்செந்தூரில் திருவிழா, பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க!, தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018), அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா (26/12/2018),  கும்பமுனி குருவே சரணம்! சரணம்!!, ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 7 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா,  அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! என்று அகத்தியர் ஜெயந்தி அழைப்பிதழ் பதிவுகள் நம் தலத்தில் அளித்தோம். நாம் அன்றைய தினம் நம் TUT நண்பர்களோடு பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு சென்று வந்தோம்.




அன்று மாலை நம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அகத்தியர் ஜெயந்தியை கொண்டாடினோம். சென்ற ஆண்டு(2017) 108 தீபமேற்றி கொண்டாடினோம். 2018 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் அகத்தியர் ஜெயந்தி கொண்டாடினோம். இம்முறையும் 108 தீபமேற்றி வழிபட்டோம்.


பாண்டிச்சேரியில் இருந்து சரியாக மாலை 5 மணி அளவில் கூடுவாஞ்சேரி வந்து சேர்ந்தோம். அப்படியே அகல் விளக்கு கடைக்கு சென்று அகல் வாங்கி வந்து வெற்றிலை மீது தீபமேற்ற விரும்பி, வெற்றிலையை இரு முக்கோண வடிவில் வைக்க ஆரம்பித்தோம்.




ஒரு முக்கோண வடிவம் வந்த பின்னர் நெய் ஊற்ற ஆரம்பித்தோம்.




அன்றைய தினம் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி கொண்டாட்டம் இருந்தபடியால் கூட்டம் இருந்தது.



சரியாக நம்மால் முன்னேற்பாடு செய்ய முடியவில்லை. இருக்கும் அளவில் நம்மால் இயன்றதை செய்தோம். அகத்தியருக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் 108 தீபம் எப்படியாவது ஏற்ற வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.



இதோ..அனைத்தும் தயார். பஞ்சபூத வழிபாட்டை மேற்கொள்ள இருக்கின்றோம்.











குருமார்களை கொண்டாட இருக்கின்றோம். தீவினை வேரோடு அழிய தீபம் ஏற்ற இருக்கின்றோம்.



மீண்டும் ஒரு முறை 108 விளக்குகள் உள்ளதா என சரிபார்த்தோம். இதோ..இரண்டாண்டு ஆசை நிறைவேறப் போகின்றது. அகத்தியரை அரசராக கிரீடம் வைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது.எத்துணை ஆயில்ய ஆராதனை செய்திருக்கின்றோம். ஆனால் அகத்தியர் ஜெயந்தி அன்று தான் ராஜ அலங்காரம் நமக்கு கிடைத்து. திரு.சிவசங்கர் & பெரம்பலூர் சதீஷ்குமார் இருவருக்கும் நம் நன்றி.




கருணை விழியால் நம்மை ஆட்டுவிக்கும் ராஜாவே..நின் தாள் சரணம்.




அடுத்து குருக்களை அழைத்து முதல் தீபம் ஏற்ற வேண்டினோம்.









இதோ ...108 தீபமேற்றியாகி விட்டது. மீண்டும் அகத்தியர் சந்நிதி நோக்கி சென்றோம். நம் தல அன்பர்கள் அனைவருக்கும் சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்தோம். அன்று மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக குமார் குருக்களின் தந்தையார் அன்று பூசித்தார். மிகவும் சந்தோஷப்பட்டார். இது போன்று சித்தர்களை போற்றுங்கள் என்று கூறி நம்மை ஆசிர்வதித்தார். வேறென்ன வேண்டும் நமக்கு? இது போதுமே என்று ஆனந்தத்தில் திளைத்தோம்.










அகத்தியர் ஜெயந்தி கொண்டாட்டம் நம் தளம் சார்பில் அருமையாக ஆரம்பித்து விட்டோம். மீண்டும் அடுத்த நாள் பூசையும் உண்டு. அடுத்த பதிவிலும் கொண்டாட்டம் தொடரும். யோசித்து பாருங்கள். இந்த ஆண்டிலும் 108 தீபமேற்றி, சித்தர்களை போற்றி, ராஜ அலங்கார தரிசனத்தில், மிக உயர்ந்த பெரியோரின் ஆசியில் அகத்தியர் ஜெயந்தி விழா TUT தளம் சார்பில் கொண்டாப்படுகின்றது என்றால் அது சித்தர்களின் அருள் தானே !

இதோ... சித்திரை மாத ஆயில்ய வழிபாட்டின் அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.





 மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....
 வைகாசி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கூட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

- மீண்டும் அடுத்த பதிவில் கொண்டாடுவோம்.

மீள்பதிவாக:-

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Monday, May 25, 2020

நால்வரின் பாதையில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் எப்படி வாழக் கற்றுக் கொண்டோம்? அனைத்தும் நம் பெற்றோர் நமக்கு சொல்லித் தருபவை ஆகும். நாட்கள் செல்ல, செல்ல, சிந்திக்கும் ஆற்றல் கொண்டு இன்னும் புது புது செய்திகளை நாம் பெற்று வருகின்றோம். இங்கே புது, புது என்பவை ஏற்கனவே நம் முன்னோர்கள், தாத்தன், பாட்டன், முப்பாட்டன், அதற்கும் முந்தைய தலைமுறை பின்பற்றி வந்ததாக இருக்கும். இது இல்வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. இறைவனை உணரும் வாழ்க்கைக்கும் பொருந்தும். சரி. விசயத்திற்கு வருவோம்.

 நான்கு என்ற சொல்லுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பல விடயங்கள் இந்த நான்கில் அமைவதைக் காணலாம். திசைகள் நான்கு. வேதங்கள் நான்கு. பிரமனுக்கு முகங்கள் நான்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் நான்கு. சமயக் குரவர்கள் நால்வர். சந்தான குரவர்கள் நால்வர். தனு, கரண, புவன, போகங்கள் நான்கு. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என யுகங்கள் நான்கு. தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ நெறிகள் நான்கு. சாலோகம், சாரூபம், சாமீபம், சாயுச்சியம் என முத்தி நிலைகள் நான்கு. சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் என இறைவனிடம் உபதேசம் கேட்டவர்கள் நால்வர். இப்படி பல விடயங்கள் இந்த நாலில் அடக்கம். நாலு பேர் போன வழியிலே போ என்பார்கள். ஆம்.இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை தெளிவாக நமக்கு எடுத்து சொல்லி வாழ்ந்து காட்டியவர்கள்.

நாலு பேரு சொல்றத கேளுங்க

இது வழக்கமா எப்பவுமே கேட்குற மாதிரி இருக்கும். அந்த காலத்துல இதைத்தான் சொல்லுவாங்க.யாருப்பா அந்த நாலு பேருன்னு நமக்கு நினைக்க தோணும்.பக்கத்து வீட்டுக்காரன்,எதிர்த்த வீட்டுக்காரன் அப்படி,இப்படி னு நாலு பேரா இருக்குமோனு நினைக்கிறோம்.ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரங்களை பார்த்து தான் நாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.எங்க ? நாம நம்ம வாழ்க்கையை வாழுறோம்? அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இங்க நாம சொல்ல வர்ற நாலு பேரு யாருன்னு கேட்டா? இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.புரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.

நால்வர் துதியோடு பதிவிற்குள் செல்வோமா?

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

- உமாபதி சிவாச்சாரியார்




 இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.

2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.



இப்போது புரியும்னு நெனைக்கின்றோம். அந்த நாலு பேரு வேறு யாரும் அல்ல. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.இவற்றை எல்லாம் நாம் பருகித் திளைக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.நமக்கே தெரியாத போது ? ஹி ..ஹி ..எப்படி சொல்வது என கேட்கிறீர்கள் தானே? அதனால் தான் சொல்கின்றோம் நம் மரபு, சமூகம், பண்பாடு,க லாச்சாரம் நோக்கி கொஞ்சமாவது திரும்பி பார்க்க வேணும். அப்படி பார்த்தல் தான் இது போன்ற செய்திகளை நாம் அறிந்து,உணர முடியும்.



நால்வர் வந்த வழி:
~~~~~~~~~~~~~~
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள்.

சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார்.

நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார்.

சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர்.

மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.






இங்கே கூறியுள்ள நான்கு மார்க்கமே இறையை உணரும் வழி ஆகும். தாச மார்க்கம், சத்புத்ர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என்ற இவை நான்கும் முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. இவற்றையும் நாம் தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.

சரியை - தாச மார்க்கம்

சரியை சைவத்தில்  முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.  இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.

ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.

    சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.

    சரியையிற் கிரியை - ஒருமூர்த்தியை வழிபடல்.

    சரியையில் யோகம் - வழிபடும் கடவுளையும் சிவனையும் தியானித்தல்.

    சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.

திருநாவுக்கரசர் இந்த சரியை நெறியைப் பின்பற்றி இறை தரிசனம் பெற்றார்.

கிரியை - சத்புத்ர மார்க்கம்

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவது கிரியை என்று முரு பழ இரத்தினம் செட்டியார் குறிப்பிடுகிறார் 

திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.

    கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.

    கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.

    கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.

    கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார். 

யோகம் - சக மார்க்கம்

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.

    யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.

    யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.

    யோகத்தில் யோகம் - தியானம்.

    யோகத்தில் ஞானம் - சமாதி.

சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார். 

ஞானம் - சன்மார்க்கம் 

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

    ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல்.

    ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல்.

    ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல்.

    ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல்.

மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார். 

நாம் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலமாக மேற்சொன்ன நான்கு மார்க்கங்களிலும் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக அதிகளவில் நம்மை சன்மார்க்கம் தான் ஈர்த்து வருகின்றது. இதனையே நாம் வள்ளலார் வழியிலும், நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் ஆசியிலும் பெற்று வருகின்றோம் என்பது கண்கூடு. இந்த நான்கு வழியில் ஏதேனும் ஒன்றைப் பற்றி சென்றாலே இறையை உணர முடியும். மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். உடனே செயலில் இறங்குங்கள். நீங்கள் செல்லும் பாதையில் கற்களும், முட்களும், தடைகளும் வரலாம். அப்போது யாரேனும் உங்களுக்கு வந்து நிச்சயமாக வழிகாட்டுவார்கள் என்பது உறுதி. ஆனால் இன்னும் பாதைக்குள் செல்லாமல் அங்கும், இங்கும் அலைந்து, செய்திகளை தெரிந்து வைத்துக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபடுவது கால விரயமே ஆகும். நீஙகள் எந்த மார்க்கத்தில் இருக்கின்றீர்களோ, அதில் முதலடியோ, பாதையில் சென்று கொண்டிருந்தாலே இன்னும் பயணம் செய்யுங்கள். நால்வர் பெருமக்கள் உங்களை விரல் பிடித்து அழைத்து செல்வார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகளின் சில பாடல்கள் (ஒலி வடிவில்) – வரலாற்றுமுறையில். திருவதிகையில் தொடங்கி திருப்புகலூர் வரை அவர் பாடிய தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டு இறைவனே மெய் மறந்து இருக்கிறான் என்றால் நம்முடைய நிலை என்ன? அவர் பாடுவதைக் கேட்டுக்கொண்டே அவர் பின் புகுவோம் வாரீர் !! இன்னும் நால்வரின் பாதையில் பயணம் செய்வோம்.

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (6) - https://tut-temples.blogspot.com/2020/05/tut-6.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

Sunday, May 24, 2020

பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
தென்கயிலாயம் என போற்றப் பெற்று வருகின்றது  திருச்சிராப்பள்ளி .

நன்று உடையானை தீயது இலானை , சென்று அடையாத் திருவுடையானை என்பார் திருஞானசம்பந்தர்

கட்டு நீத்தவர்க்கு இன்னருள் செய்பவர் என்பார் திருநாவுக்கரசர்

தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ என்பார் மணிவாசகர். 

திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சிராது நடக்கும் என்பது அப்பர் அரும் தமிழ் .

இன்றைய பதிவில் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் பற்றியும், அங்கே அருள் பாலித்து வரும் தாயுமானவர் சுவாமிகள் பற்றியும் அறிய தருகின்றோம்.



திருச்சி என்றால் மலைக்கோட்டை என்பதும், மலைக்கோட்டை என்ற உடன் உச்சிப் பிள்ளையார் கோயிலும் தான் நினைவிற்கு வரும். இவற்றைத் தாண்டி அங்கே நமக்குத் தாயாய் விளங்கும் தாயுமானவர் திருக்கோயில் அழகாய் பிரம்மாண்டமாய், நின்று பேசுகின்றது.

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

இத்திருக்கோயிலின் தல வரலாறு கீழே

    எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
    திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது 'திரிசிராப்பள்ளி ' என்று பெயர் பெற்றது.


    உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.

வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு.


    தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார்.

காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.

இத்தலத்தின் சிறப்புகள் ஒன்றா? இரண்டா? நீங்களே படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

  •     இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
  •     மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்.
  •     வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
  •     மலையின் உச்சியில் "பிள்ளையார் " உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது.
  •     தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
  •     சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
  •     தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
  •     சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.
கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.








இனி  தான் தாயுமான சுவாமிகள் பற்றி அறிய உள்ளோம்.


தாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்:கேடிலியப்பர், தாயார்: கெஜவல்லி அம்மையார். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.



தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.








தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

 ஆழ்வார்களைப் போன்று காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார். கண்ணி என்றழைக்கப்படும் இரண்டடிப் பாடல் வகையை இவர் கையாள்கிறார். இவரது பாடல்கள் அனைத்தும் தாயுமானவர் பாடல்கள் என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. சிற்சில இடங்களில் சித்தர் கருத்தை ஒத்துப் பாடும் இவர், தம் காலத்தில் சமயப் போராட்டங்களையும் பூசல்களையும் கண்டு மனம் வெறுத்துச் சமரச ஒளியையே அதிகம் பாடியுள்ளார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் இவர்க்கே உரியவை. “சும்மா இருக்க அருளாய்” என்று இறைவனிடம் வேண்டுபவர்,

    எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
                             (பராபரக்கண்ணி - 221)

என்று பாடுகிறார்.









தான் செய்யும் இறைவழிபாட்டை,

    நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
    மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
                             (பராபரக்கண்ணி -151)

என்று கூறுகிறார். ஆனந்தக் களிப்பு, பைங்கிளிக் கண்ணி, ஆகாரபுவனம் என்பன கண்ணி வடிவில் அமைந்தவை. மொத்தம் 1452 பாக்களை 56 பிரிவுகளில் இவர் பாடியுள்ளார்.

    பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும்
                பொய்யெனவே
    மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே
           காண்பேனா - காண்
                    (காண்பேனா கண்ணி - 6)



                                    கோயில் மேல்புறம் வரைந்த கலைவண்ணம்










இது போன்ற, பித்தத்தை தெளிய வைத்து, சித்தம் உணர்த்தும் சித்தர் பாடல்களை இங்கே, இனிவரும் பதிவுகளில் அளிக்க சித்தர்களின் ஆசி வேண்டுகின்றோம்.













இந்த கோயிலுக்கு நீங்கள் சென்றால், மலையடிவார மாணிக்க விநாயகர், எம் பெருமானாய் தாயுமானவர், மகான் தாயுமானவர், உச்சி பிள்ளையார் கோயில் என ஒன்றுள் பலவாய், பலவற்றுள் ஒன்றாய் உள்ள தரிசனம் பெற முடியும். ஏகப்பட்ட கண்கவர் கலைவண்ணங்களை கருத்தாய் கவரவும் முடியும்.

சரி. இனி நாம் நேரே இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் சென்று தாயுமான சுவாமிகள் தரிசனம் பெற இருக்கின்றோம். 


இதோ ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனம் வந்து விட்டோம்.



உள்ளே செல்ல இருக்கின்றோம்.


உள்ளே சென்றதும் ஸ்ரீ தாயுமானசுவாமி பற்றிய செய்தி இருந்தது. உங்கள் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.


இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த ஜீவ ஆலயம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர முடிகின்றது. இதோ. உள்ளே ஒவ்வொருவராக சென்று கொண்டு இருக்கின்றார்கள்.



இதோ. நாமும் உள்ளே சென்று விட்டோம். மாயையின் பிடியில் இருந்து தப்பித்து உள்ளே சென்றது போன்ற உணர்வு. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் மரபில் சில மகான்களை கண்டோம். நீங்களும் கண்டு உணருங்கள்.






இந்த தரிசனத்தை தனித்தனியே தந்திருக்கலாம் என்று தற்போது நினைக்கின்றோம்.


இதோ. அடுத்து தாயாய் விளங்கும் பரமான தாயுமான சுவாமி தரிசனம் பெற இருக்கின்றோம். நம் மனதில் பல கூச்சல், சப்தம், ஆட்டம், ஓட்டம் என இருந்தது. வெற்று ஆரவாரம் எதுவும் இங்கில்லை. பேரமைதி இருந்தது. இது நம்மை ஈர்த்தது. நம் ஊன் எப்போது உருகும் என்று காத்திருந்தோம்.


உள்ளொளி பெருக்கும் தரிசனம். அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவின் இந்த இடத்தில் நமக்கு மூலத்தின் ஆதாரத்தில் சிறிய உணர்வாக அழுத்தம் பெற முடிகின்றது. இங்கேயே இப்படி ஒரு அனுபவம் என்றால் நேரில் சென்று மீண்டும் மனதில் தரித்து பரத்தில் சிக்க , தரிசிக்க மனம் விரும்புகின்றது.




தாயுமானவரே போற்றி 
தந்தையுமானவரே போற்றி 
எந்தையே போற்றி 
பரமே போற்றி 
சிவமே போற்றி 







‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!”
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் ! பராபரமே!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே !
தாயுமானப் பெம்மான் தன்அடியை ஏத்துதற்குக்
காயும் வினைஅகலும் காண்.

என்று மீண்டும் மீண்டும் பாடி தாயுமானவர் பதம் போற்றுவோம்.

அன்பைப் பெருக்கி ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
கன்றினுக்குச் சேதா கனிந்து இரங்கல் போல் எனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே !
சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கு
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே !
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே !
சீர் ஆரும் தெய்வத் திரு அருள்ஆம் பூமிமுதல்
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே !

வித்து இன்றி யாதும் விளைவது உண்டோ?
நின்அருளாம்
சித்து அன்றி யாங்கள் உண்டோ? செப்பாய் பராபரமே!
சின்மயானந்த குருவே !                 
அங்கை கொடுமலர் தூவி அங்கமது புளகிப்ப
அன்பினால் உருகி விழிநீர்
ஆறாக, ஆராத முக்தியினது ஆவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர ! சுயம்புவே ! சம்புவே ! எனவும் மொழி
தழுதழுத்திட வணங்கும்
சன்மார்க்க நெறி இலாத் துன்மார்க்கனேனையும்
தண் அருள் கொடுத்து ஆள்வையோ?
துங்கமிகு பக்குவச் சனகன் முதல் முனிவோர்கள்
தொழுது அருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே
சொரூப அநுபூதி காட்டிச்
செங்கமல பீடம் மேல் கல்ஆல் அடிக்குள் வளர்
சித்தாந்த முக்தி முதலே !
சிரகிரி விளங்கவரு தட்சிணாமூர்த்தியே !
சின்மயானந்த குருவே !


இன்றைய ஒரே பதிவில் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயிலில் அருள்புரியும் தாயுமான சுவாமிகள் பற்றியும், அவரின் பூரண அருள் தரும் ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனம் தரிசனமும் பெற்றுள்ளோம் என்றால் குருவின் கருணைக்குத் தான் எல்லை உண்டோ? 

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

 பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

 குருவே சரணம் - ஸ்ரீ ல ஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_23.html

 ஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள் - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_20.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_28.html

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_90.html

சிறப்பான வாழ்வு தரும் சித்தர்காடு - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி -  https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_16.html

சித்தர்கள் அறிவோம்! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_13.html
 
பாண்டிச்சேரி சித்தர்களின் பாதம் பற்றுவோம் - https://tut temples.blogspot.com/2020/03/blog-post_53.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி... - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_14.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html