அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவரும் தைத்திங்களில் பொங்கல் திருவிழாவினை கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். உறவுகளை சந்தித்து, வீட்டில் வழிபாடு செய்து அன்பை பரிமாறி, வீட்டில் திரு தங்கிய நிலையில் திருவிழாவினை கொண்டாடி மகிழ்ந்தோம். இன்றைய நன்னாளில் மாட்டுப் பொங்கல் அனைவரும் கொண்டாட உள்ளோம். நேற்று எப்படி சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தினோமோ, அதே போல் இன்று நாம் விவசாயத்தின் ஆணி வேராக உள்ள பசுவிற்கு நன்றி சொல்ல வேண்டும். எனவே நம் குழு அன்பர்கள் இன்று பசுவிற்கு நன்றி கூறி, கோமாதா வழிபாடு செய்வோம். இதனை யொட்டி நாம் ஏற்கனவே அறிந்தும், அறியாமலும் தொகுப்பில் காட்சிப்படங்களாக பகிர்ந்த செய்திகளை இன்று மீண்டும் பகிர்கின்றோம்.
மேலும் ஒரு சிறு குறிப்பாக சிவன் மலை கோவில் உத்தரவுப் பெட்டியில் பசுவும், கன்றும் உத்தரவாகி, கொலு பொம்மையாக பசுவும்,கன்றும் வைத்துள்ளார்கள். நம்மை காக்கும் ஒரே இனம் பசு இனம் தான் என்பது இன்றைய பதிவை முழுதும் படித்தால் புரியும். நாம் வாழ வேண்டும் என்றால் பசுக்கள் தேவை என்பதும் தெளிவாக நமக்கு புலப்படும். நாளொரு ஓட்டத்தில் நாம் பசுக்களை கண்டு கொள்வதில்லை. இனியாவது பசுவை பாதுகாக்க வேண்டும். இது நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் நமக்கு இட்டுள்ள உத்தரவு ஆகும். பசு குறித்த குருநாதர் வாக்கினை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.
என்ன தான் நாம் டிராக்டர் போன்ற நவீன தொழில்நுட்பம் நோக்கி சென்றாலும், பசுவின் பயனின்றி நாம் ஒரு நாளும் நகர இயலாது. ஒவ்வொரு நாளின் தொடக்கத்தையும் நாம் பசுவின் பால் கொண்டு தேநீர் அருந்தி ( பாக்கெட் பால்?) தொடங்குகின்றோம். பசுவின் சாணம் சிறநத கிருமி நாசினியாக பயன்பட்டு வருகின்றது. தற்போது பசு சாணம் கொண்டு நாம் வாசல் தெளிப்பதும் இல்லை. எனவே முடிந்த வரையில் பசுவின் சாணம் பயன்படுத்துங்கள். எப்பேர்ப்பட்ட தொற்றுக்கிருமி காய்ச்சலுக்கும் மாட்டுத் தொழுவத்தில் விடை உண்டு. ஆம்..அவ்வளவு ரகசியங்கள் மாட்டு தொழுவத்தில் உள்ளது.
இதற்கு மேலாக நாம் தினமும் அணிகின்ற திருநீறு பசு மாட்டின் மூலமே பெறப்பட்டு வருகின்றது. திருஆலவாயான் திருநீற்றை நமக்கு தருகின்ற பசுவை நாம் போற்றி வழிபட வேண்டியது அவசியமாகின்றது. இது போல் தயிர், மோர், வெண்ணை, நெய் என தினசரி பயன்பாட்டிலும்,மருத்து வத்திலும் பயன்பெற்று வருகின்றோம். நாம் தினமும் உண்கின்ற உணவும் பசுவின் உதவியால் தான் நமக்கு கிடைத்து வருகின்றது. இது போல் பசுவின் பயன்களை நாம் சொல்லில் அடக்க முடியாது
நம் முப்பாட்டன் வள்ளுவப் பெருந்தகை சொல்லியதை இங்கே நினைவு கூர்வோம்.
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை "
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி 'சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்'.'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு' என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு விவசாயத்தின் நிலை என்ன?
விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது விவசாயம்..
இனி பசுவின் முக்கியத்துவத்தை காண உள்ளோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment