அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளம் சார்பில் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்மாத சேவைகளுக்கு பொருளுதவி செய்து வரும் அனைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம். சென்ற வாரம் திமிரியில் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பில் நடைபெற்ற சத்சங்கத்தில் கலந்து கொண்டோம். நம் அகத்திய அடியார்களை அன்று சந்தித்து மகிழ்ந்தோம். குருநாதரின் வாக்கினை கேட்டும் மகிழ்ந்தோம்.அன்றைய தினம் அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் தரிசனம் பெற்று வந்தோம். இது போன்ற நிகழ்வுகள் நாம் நினைத்தால் பங்கு பெற இயலாது. குருவருள் துணை கொண்டே இவற்றில் நாம் பங்கு பெற முடியும். இவற்றுடன் தினம் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது பன்னிரு திருமுறை படித்து வருகின்றோம்.
இதற்கு. முந்தைய பதிவில் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா பற்றி கூறி இருந்தோம். குருவருளால் அன்றைய தினம் இரவு கூட்டுப்பிரார்தனையில் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய அசோக சால வாசம் படித்து மகிழ்ந்தோம். கடந்த கந்த ஷஷ்டி விரத காலங்களில் ஸ்ரீமத் குமாரசுவாமியம் படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. இதுவெல்லாம் குருவருளால் தான் நமக்கு கிடைத்து வருகின்றது.
இந்த பயணத்தில் திருவாசகம் பற்றி அவ்வப்போது சிந்தித்து வருகின்றோம். குருவருளால் திருமந்திரம் பற்றியும் நாம் உணர்த்தப்பட்டு வருகின்றோம். இதில் நாம் மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருமந்திரம் முற்றோதுதலில் கலந்து கொண்டோம். இந்த சிந்தனையின் பயனாக நமக்கு திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! கிடைத்தது. அவற்றை இங்கே குருவருளால் பதிவு செய்ய விரும்புகின்றோம். மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம் அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அவற்றை அச்சிட்டு சில அன்பர்களுக்கு கொடுத்துள்ளோம். பதிவின் அன்றைய தரிசனத்தையும், நந்தி மஹாத்மியம் பற்றியும் இன்று படித்து, தினமும் நந்தியெம்பெருமான் அருள் பெற படித்து உணர்வோம்.
அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி
என்று நந்தியெம்பெருமானை போற்றி மகிழ்வோம்.
இந்த பாடல் காஞ்சிபுராணத்தில் திருநந்தி தேவர் போற்றியாக பாடப்பட்டுள்ளது.காஞ்சிப் புராணம் காஞ்சித் தலத்தைச் சிறப்பித்துக் கூறும் புராண நூலாகும். இந்நூலாசிரியர் சிவஞான முனிவராவார். வடமொழியில் உள்ள காஞ்சிமான்மியங்களைக் கருவாகக் கொண்டு சிவஞானமுனிவர் விரிவாக இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூலிலுள்ள பாடல்களின் தொகை 2742 ஆகும். சேக்கிழாரின் பெரியபுராணம் போன்றே இப்புராணமும் தமிழில் புராணத்தின் பெருமையை உயர்த்தியுள்ளது.
இப்புராணத்தின் இறுதிப் பகுதியில் மக்கள் பின் பற்ற வேண்டிய ஒழுக்கங்களும் பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என்ற இரண்டிலும் பதி புண்ணியம் எவ்வாறு சிறந்தது என்பதும் விளக்கப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் இறைவனின் உருவத்திருமேனிகள் இருபத்திநான்கின் இயல்புகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. இப்புராணத்தை படித்துணர குருவிடம் வேண்டி பணிகின்றோம்.
அடுத்து திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! காண இருக்கின்றோம்.
அனைவரும் இந்த தொகுப்பில் உள்ள நந்தி மஹாத்மியம்! திருமந்திரகளை அச்சிட்டு வைத்து கொள்ளுங்கள். நீங்கள் வழிபட செல்ல இருக்கும் கோயில்களில் இவற்றை அன்பர்களுக்கு கொடுத்து படிக்க சொல்லுங்கள்.
No comments:
Post a Comment