அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022, குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை, ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா குரு பூஜை அழைப்பிதழ், மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022 அழைப்பிதழ், சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 , ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022, எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 93ஆவது மஹா குருபூஜை , ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022 என சித்தர்களின் தரிசனம், திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீ மூட்டைச் சுவாமிகள் 72 ஆம் ஆண்டு குருபூஜை விழா - 31.05.2022 என நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் நாளை நடைபெற உள்ள குட்லாடம்பட்டி ஸ்ரீ ரமணகிரி சுவாமிகள் 67 ஆவது குருபூஜை பற்றி அறிய உள்ளோம்.
"வழிபாட்டில் முக்கியமானது எதை வழிபடுகிறோம் என்பதில்லை, நாம் வழிபடுகிறோம் என்பதே.
வழிபடும் நம்மிடத்தே அன்பு இருக்குமானால் நமக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கும் சுவராகிய நான் என்கின்ற பாவனையை மிக எளிதாக நாம் சமர்ப்பித்துவிடமுடியும்”
--- ரமணகிரி சுவாமிகள்
பியர் ஏ வெர்டின் என்பவர் சுவீடன் நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இந்திய நாட்டின் ஆன்மீக நூல்களிலும் யோக மார்க்கத்திலும் அவர் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தார். இந்தியாவிற்கு வந்து குருமார்களிடம் நேராக ஆன்ம தத்துவங்களைக் கற்று யோகப் பயிற்சியில் நிலை நின்று மெய்ப்பொருள் தரிசிக்க ஆவல் மிக்கவராய் இருந்தார். 1945ம் ஆண்டு காசி பல்கலைச் சாலையில் இரண்டு ஆண்டுகள் தங்கிப் படிப்பதற்கான உதவி பெற்று இந்தியா வந்துசேர்ந்தார். வகுப்புகளில் நூல்களைக் கற்று அறிவதோடு அவர் மனம் நிறைவு அடையவில்லை. மாறாக அவர் யோக சாதனையில் ஈடுபட்டு நூல்களில் பெரிதும் சிறப்பிக்கப்படுகின்ற மெய்ஞானத்தை அடைவதில் கருத்தாய் இருந்தார்.
ஆதலால் காசியில் குரு ஒருவரை நாடி அடைந்தார். அவரிடம் முறைப்படி சன்னியாசம் வாங்கிக்கொண்டார். இந் நிகழ்ச்சியை ஒட்டி சுவீடனில் அரச குடும்பத்தில் தனது பங்காக இருந்த பெரும் செல்வத்தைத் துறந்தார் ; அவர் துறந்த செல்வம் எட்டு மில்லியன் டாலர் ஆகும். அத்தோடு பல்கலைக்கழகப் படிப்பினையும் கைவிட்டார். அவருடைய தீக்ஷா குரு துறவியாகப் போகிற அவருக்கு நியதி ஒன்றினை விதித்தார். அது அவராக எதையும் யாரிடமும் யாசிக்கக்கூடாது, கிடைப்பதை ஏற்றுக்கொண்டு நிம்மதி அடையவேண்டும் என்பதே.
துறவு மேற்கொண்ட அடுத்த நாள் பியர் முடி மழிக்கப்பட்ட தலையுடனும் காவி உடையுடனும் காசியின் வீதி ஒன்றில் சென்றுகொண்டிருந்தார். அவரை அடையாளம் கண்டுகொள்ளாத அவரது நண்பர் ஒருவர் அவரை பிச்சைக்காரன் என்று நினைத்துத் தனது மனைவியிடம் வீட்டிலிருந்த அழுகிய வாழைப் பழங்களைக் கொடுக்கும்படி குரல் கொடுக்கின்றார். அன்று பியருக்குக் கிடைத்த பிச்சை அதுவாக இருந்தது.
அடுத்த நாள் காசி அரசரின் அரண்மனையின் முன்பாக அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது படை வீரன் ஒருவன் அவரை வணங்கி அரண்மனையின் உள்ளே வரும்படி அழைத்தார். விளக்கம் கேட்ட பியருக்கு வியப்பான பதில் ஒன்று கிடைத்தது. அன்றாடம் காலையில் அரசரின் பார்வையில் அரண்மனை வாயிலுக்கு முன்பாக நடந்து சென்றுகொண்டிருக்கும் முதல் சன்னியாசிக்கு உணவளித்து மரியாதை செய்வது அரசருக்கு வழக்கம் என்பதே.
இவ் விரண்டு நிக்ழ்ச்சிகளையும் தனது குருவினிடம் பியர் விவரித்தனர். இரண்டு நிகழ்ச்சிகளையும் சமபாவத்தோடு பொருட்படுத்தாது விட்டுவிடவேண்டும் என்றும், உணவு என்பது உயிர் வாழ்வதன் பொருட்டு என்று கொள்ள வேண்டும் என்றும் அவரது குருவானவர் அவருக்கு அறிவுறுத்தினர். அதன் பின்னர் பியர் யாரிடமும் எதையும் யாசித்ததும் இல்லை, பணத்தைத் தொட்டதும் இல்லை.
இவ்வாறு காசியில் துறவு மேற்கொண்டு மெய்ப்பொருள் நாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பியர் டென்மார்க் நாட்டவரும் பகவானால் பிறவிச் சித்தர் என்று சிறப்பிக்கப் பட்டவரும் ஆன சூன்யதா என்னும் எளியவரைக் காண, இருவரும் நல் இணக்கம் கொண்டனர். கோடைக் காலத்தில் சூன்யதாவின் இமாலயக் குடிலுக்குச் சென்று அங்கேயும் பியர் தனிமையையே நாடி தனது சாதனையில் தீவிரராய் விளங்கினார்.
“உலகத்தாரின் போலி வாழ்க்கை முறை பியரைச் சற்றும் ஈர்க்கவில்லை; அகத்தூய்மை கொண்டு எளியவரினும் எளியவராய் சாதனை ஒன்றையே குறியாகக் கொண்டிருந்தார்,” என்று சூன்யதா அவரைப் போற்றுகின்றார்.
பிறவியிலிருந்தே மனோமௌனத்தில் நிலை கொள்ளும் இயல்பினரான சூன்யதா ஏற்கெனவே பகவான் ரமணரைத் தரிசித்து அவரது சன்னிதியில் சூன்ய அனுபூதியில் நிலைத்து அதுவே சீவனின் சொரூப உணர்வும் உண்மையும் என ஒரு அற்புத நிகழ்ச்சியின் வாயிலாகத் தெளிவடைகின்றார்.
குருமார்களை ஒப்பிட விரும்பாத சூன்யதா பகவான் ரமணரைத் தனிப்படப் போற்றுமுகமாக ரமணர் இமாலயம் என்றும், குருமார்கள் என்று தோன்றிக் கொண்டிருக்கும் பலர் சிறு மண் குவியல் என்றும் கூறி இருப்பது நோக்கத் தகுந்தது. ரமணரின் மேன்மையை அறிந்த சூன்யதாவே பியரை பகவான் ரமணரின் சன்னிதிக்கு வழிகாட்டினார்.
ராஜயோகம் பயின்று வந்த பியர் 1949ல் பகவான் ரமணரைத் தரிசித்தார். அவருடைய சன்னிதியில் ஆன்மவிசாரத்தின்பால் அவர் ஈடுபாடு கொண்டார். ரமண சன்னிதியில் யோகத்தோடு கூடி ஆன்ம விசார சாதனையில் நிலை கொண்டார். தொடர்ந்து நாற்பது நாட்கள் செய்து வந்த நிலைப்பட்ட சாதனையின் தீவிரத்தாலும் பகவான் சன்னிதித் திருவருளாலும் 1949ம் ஆண்டு சிவராத்திரி அன்று அவருக்குச் சொரூபஞானசமாதி கிட்டியது. மெய்ப்பொருள் ஆன்ம சொரூபமே என்பது உறுதியாயிற்று.
அந் நிகழ்ச்சியை விளக்குமாறு வினவியவர்களிடம் பியர், “ அன்று நான் முட்டாள் ஆனேன் ,” என்று கூறியதோடு நில்லாமல், அன்றிலிருந்து தன்னை ஒரு முட்டாள் என்றே அறிமுகப்படுத்திக் கொள்வாராம்.
அவரது அனுபவத்தின் வாயிலாக அவர் அடைந்த விளக்கத்தை இவ்வாறு குறித்திருக்கின்றார்:
நான் ஏதொன்றையும் அறிவதில்லை
அறிபொருளை அறியும் நான் அறிவில்லாத
முட்டாளே தவிர வேறு இல்லை
எண்ணம் இல்லாத போது
நான் முடிவும் முதலும் இல்லாது இருக்கிறேன்
எது எண்ணுகிறதோ
அதற்குப் பல்லாயிரம் பிறவிகள் உண்டு
நான் இருக்கும் பொழுது அவன் இல்லை
அவன் இருக்கும் பொழுது நான் இல்லை
சசி என்னும் அன்பருக்கு அவர் எழுதியிருக்கின்ற விளக்கக் கடிதத்தைப் படிக்கும் பொழுது, ராஜ யோக மார்க்கத்தில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றிருந்த அவர் பகவானின் ஆன்ம விசாரத்தை எளிதாகச் செய்ய வல்லவராயிருந்தார் என்று அறிய முடிகின்றது.
ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை
விடுக்கவே ஓர் வழி உந்தீ பற
வீயும் அதன் உரு உந்தீபற
மன உரு மாய மெய் மன்னு மா யோகி
தனக்கு ஓர் செயல் இலை உந்தீபற
தன் இயல் சார்ந்தனன் உந்தீ பற
என்னும் உபதேச உந்தியார் பாடலில் பகவான் ஒடுங்கும் உள்ளத்தின் உருவ நாசமே மெய்ஞானப் பேறு என்று விளக்குகின்றனர் .
பியரும் ஆன்ம விசாரத்தின் வாயிலாக மனத்தையும் பிராணனையும் உள்ளே அடங்கச் செய்து தற்கவன நிட்டையில் ஆழ்ந்தார்.
பகவானின் ஆன்மவிசார மார்க்கத்தைப் பயிலுவதை அவர் தனது தீக்ஷா குருவிடம் தெரிவித்தார். ராஜயோக மார்க்கத்தில் ஈடுபடுவதற்கான தீக்ஷையைப் பெற்ற காரணத்தால் குருவிடம் பகவானது ஆன்மவிசார சாதனையில் தனக்கு ஏற்பட்டிருக்கும் பிடிப்பை விளக்கினார். அதற்கு அவரது தீக்ஷா குரு பகவானே அவரது குரு என்று உறுதிப்படுத்தி அவ்வழியில் சாதனையைத் தொடர்வதற்கு ஊக்குவித்தார்.
1950 மார்ச் மாதம் பியர் அல்மோராவில் இருந்த சமயம். பகவான் உடல் விடப்படுகின்ற நேரம் நெருங்குவதை உள்ளுணர்வால் அறிந்து கொண்டார். உடனேயே திருவண்ணாமலைக்கு விரைந்தார். அக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பகவானுக்கு இறுதி அஞ்சலி செய்பவர்களுள் ஒருவராக அவர் வந்து செல்வதைப் பார்க்கலாம், உயரமான, ஒல்லியான, நீண்ட முடியோடும் தாடியோடும் கூடிய, வெளி நாட்டவராய் அவரைக் காணலாம்.
பகவானின் மகாசமாதிக்குப் பின்னர் பியர் இமாலயத்திற்குச் செல்வதாய் இருந்தார். வழியில் அவர் சென்னையில் தங்கினார். அச் சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சி அவரைத் தடுத்து ஆட்கொண்டது. இதனை அவர் சூனியதாவிற்கு எழுதிய கடிதத்தில் விரிவாக விளக்கி இருக்கின்றார். வடக்கே செல்லவிருந்த அதே நாளன்று அவர் அடையாற்றில் இருக்கும் பிரமஞான சபையின் நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டார். ஒட்டியிருந்த பூங்காவில் அவர் உலவிக்கொண்டிருந்த சமயம் பகவான் அவர் முன் தோன்றுகின்றார். தன்னைப் பின் தொடருமாறு சொல்லி முன் நடக்க அவர் பின்னே பியரும் நடக்கத் துவங்குகின்றார். கடற்கரை ஓரமாகவே சென்று ஒரு சிற்றூரை அடைந்து அங்கேயே மணலில் அமர்ந்து விசாரத்தில் ஆழ்ந்தார். அன்றிருந்து அவருடைய ஒரே தர்மம் ஆன்மா தான் என்று பகவான் உபதேசிக்கின்றார். மேலும் சில உபதேசங்களை பகவான் கொடுத்ததாகவும் அவற்றை சில நாட்கள் அவர் பின்பற்றியதாகவும் அவர் அக்கடிதத்தில் தெரிவிக்கின்றார். அக் கிராமத்து மக்களே அவருக்கு ஒரு குடிலை அமைத்துத் தந்ததாக அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
ஆனால் வேறு ஒரு விதமாகவும் அந் நிகழ்ச்சி விளக்கப்படுகின்றது. ஸ்வீடன் நாட்டு அரச குடும்பத்தினர் என்பதால் சென்னையில் அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பவர் ஒருவர் அமைந்து இருந்தார். கடற் கரையிலேயே விசாரத்தில் ஆழ்ந்துவிட்டிருந்த பியர் நெடு நேரம் திரும்பாததினால் அவர் எங்கு சென்றுவிட்டார் என்று தெரியாமல் அவர் மிகவும் கவலை கொண்டார். இவரைத் தேடும் பணி துவங்கியது. இறுதியில் கடற்கரையில் கொளுத்துகின்ற வெய்யிலில் அவர் நிட்டையில் அழ்ந்திருந்ததைக் கண்டனர். அவர் புற உணர்விற்கு மீண்ட பின்னர் அவரைப் பார்த்துக் கொள்பவர் தனது இருப்பிடத்திற்கு வருமாறு அவரை வேண்டினார். ஆனால் பியரோ அவ்விடத்திலேயே தங்குமாறு பகவான் தன்னைப் பணித்திருப்பதாகவும் ஆதலால் அங்கேயே இருக்கப் போவதாகவும் உறுதியாய்த் தெரிவிக்கின்றார். வேறு வழியின்றி விருந்து பேணுபவர் தென்னை ஓலைகளைக் கொண்டு வேய்ந்த ஒரு குடிலை அவ்விடத்திலேயே அமைத்துக் கொடுத்தார். தினந்தோறும் பியருக்கு உணவு கொண்டுசென்று அளிப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.
திருவான்மியூரை ஒட்டிய இடம் இது. இங்கே பியர் ஆழ்ந்த நிட்டையில் ஊன்றியிருந்தார்.உடலின் தேவைகளை மறந்த வண்ணம் இருந்தார். தனக்கு அனுப்பப்பட்ட உணவை அக் கிராமத்து மீனவர்களிடம் கொடுத்துவிடுவார்.
இங்கு ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி நிகழ்ந்தது. வழக்கறிஞராக இருந்து பகவானின் பக்தராய் பகவானின் சன்னிதியில் நிட்டை கைவரப்பெற்று பகவானையே குருவெனக் கொண்டு உய்ந்தவர் சுவாமி சுரேஷானந்தா அவர்கள். பாலக்காட்டில் அவருடைய பெருமளவு பொருட் கொடையாலும் முயற்சியாலும் விஞ்ஞான ரமணீய ஆஸ்ரமம் நிறுவப்பட்டது. பகவானுடைய ஆசியால் வறியவர்களுக்கு அன்னதானம் துவங்கப்பட்டது. சுவாமி சுரேஷானந்தா பியரோடு கூடி அக் கடற்கரையில் அக் கால கட்டத்தில் இருக்க நேர்ந்தது. இருவரும் தபசிகளாக இணந்து இருந்தனர்.அன்று என்று அவர்களுக்குப் பசியும் தாகமும் கூடியது. உணவும் வந்து சேரவில்லை என்று தெரிகின்றது. அச் சமயம் பெண்மணி ஒருவர் அவர்களுக்கான உணவைக் கொண்டு வருகின்றார்.
அவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி. இவர்களுக்கு அவரைத் தெரியாது, அவருக்கு இவர்களைத் தெரியாது. அவர் எப்படி இங்கு வந்து சேர்ந்தார் என்பது இவர்களுக்கு வியப்பாயிற்று. பகவான் ரமணர் தனக்குத் தோன்றி இவ் இரு தபசிகளுக்கும் உணவளிக்குமாறு பணித்ததாக அவர் தெரிவிக்கின்றார்.
அவர்தான் எலினார் பாலின் நோய் என்பார். 1930 களில் கலிஃபோர்னியாவிலிருந்து ரயில் வழியாக அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைக்கு வந்து பின்னர் கப்பலில் பயணித்து சென்னை வந்து சேர்ந்து, அங்கிருந்து கொடைக்கானல் வந்து அங்கே திருவருளால் பகவானிருக்கும் இடத்திற்கு வழிகாட்டப்பட்டவர். அமெரிக்காவில் இருந்த சமயம் பல மாதங்கள் உறக்கத்தை முற்றிலும் இழந்து மன நலம் குன்றி உடல் நலிந்து போனார் எலினார். இந்தியாவிற்குச் சென்றால் ஓர் அருளாளர் சன்னிதியில் தனக்கு விடிகாலம் இருக்கலாம் என்கின்ற நம்பிக்கை அவரிடம் மேலோங்கிற்று. அதனால் உந்தப்பட்டு தனியாகவே கப்பலில் பயணம் ஆனார். அப்பொழுது அவருடைய மன உடல் நிலை கவலைக்கு இடமாக இருந்ததால் கப்பலின் மருத்துவர் அவரை பயணியாகச் சேர்த்துக் கொள்ள அஞ்சினார். இவருடைய மன உறுதியையும் உறுக்கமான வேண்டுகோளையும் கண்டு இரங்கினார். இருந்தும் கப்பலின் தலைவருக்கு எலினாரின் நிலை தெரிந்தால் அவர் எலினாரை கப்பலுக்குள் அனுமதிக்கமாட்டார் என்று அவருக்குத் தெரியும் ஆதலால் எலினார் கப்பலின் தலைவருக்குத் தெரியாமலே கப்பலுக்குள் சென்று பயணத்தைத் தொடர்ந்தார். .
இளம் வயதினர், அமெரிக்கப் பெண்மணி, தனிமையில் பயணம் செய்கின்றவர், அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. இந் நிலையில் சென்னை வந்து கொடைக்கானலுக்கு அனுப்பப்படுகின்றார். அங்கே தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளி வந்து முதன் முதலாகப் பார்த்த இரு இளைஞர்களிடம் அருளாளர்கள் யாரையாவது அவர்களுக்குத் தெரியுமா என வினவ அவர்களால் பகவான் ரமணர் பால் வழிகாட்டப்பட்டார். அவர் தங்கி இருந்த விடுதியில் இருந்த அயல் நாட்டினர் திருவண்ணாமலை காடுகள் நிறைந்த பகுதி என்றும் தனியாக ஒரு பெண் அங்கே செல்வது ஆபத்து என்றும் அச்சுறுத்துகின்றனர். ஆனால் அவரோ பகவானை அடைந்துவிடுவது என்பதில் உறுதியாய் இருந்தார். போகும் வழியில் மதுரைக்குச் சென்று கோயிலைப் பார்த்துவிட்டுப் பின் செல்லும்படியும் இருந்தவர் கூறினர் அவரோ கண நேரமும் தாமதியாது அண்ணாமலையையும் பகவானையும் அடைய உறுதி பூண்டார்.
அடைந்த மாலையில் பகவானைக் கண்ட மாத்திரத்தில் தன் விடியல் பகவானே என உணர்ந்து சஞ்சலம் தீர்ந்தார். அன்று இரவு பயணியர் விடுதியில் வசதி ஏதும் இல்லாத அறையில் பழைய மரக்கட்டிலில் படுத்தவர் இரவு பூராவும் காலை நெடு நேரமும் தன்னை மறந்து துயிலில் ஆழ்ந்து சுகித்து எழுந்தார். என்னே குருவருள்! உடல் நலிந்தும் மனம் நலிந்தும் புறத்தடைகள் பல அச்சுறுத்திய போதிலும் உறுதி தளராது அவற்றை எல்லாம் கடந்து குருவைச் சரணாக அடைந்த அப் பெண்மணியின் விசுவாசம் என்னே!
சில நாட்களே தங்கவேண்டும் என்று வந்த அவர் எட்டு மாதங்கள் பகவானிடத்தே தங்கிவிட்டார். அமெரிக்காவிற்கே செல்ல மனம் இல்லாது பிரிவதற்கு முதல் நாள் கண்ணீரை மழை எனப் பொழியவிட்டு பிரிவின் துயரம் பொறாது பகவானிடமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார், அவர் தான் பகவானது மகாசமாதியை ஒட்டிய காலத்தில் பகவானை மீண்டும் தரிசிக்க வந்திருக்கின்றார். அச் சமயத்திலேயே சென்னையில் இருக்கையில் பகவானால் பணிக்கப்பட்டு கடற்கரையில் இருந்த தபசிகளுக்கு விருந்து எடுத்துச் சென்றிருக்கின்றார்.
பகவானின் உபதேசத்தைப் பின் பற்றி ஒழுகி வந்தார் பியர். ஓர் இரவு 12 மணியிலிருந்து 2 மணிக்கு உட்பட்ட நேரத்தில் குண்டலினி எழும்பி சகஸ்ராரத்தினை அடைந்து பின்னர் சீவன் ஆன்மாவோடு கரைந்து ஒன்றிய அனுபூதியை பியர் அடைந்தார், கடல் அலைகளின் ஓம் என்னும் ஒலியால் அவர் உடல் உணர்வு மீண்டும் வரப் பெற்றதாகவும் இல்லை எனில் உடலை அவர் விட்டிருப்பார் என்றும் சூன்யதாவிற்கு எழுதிய கடிதத்தில் அவ் அனுபூதி பற்றி விளக்கி இருக்கின்றர். அந் நிலையில் திரும்பி வருவதற்கோ ஏதாவது முயற்சி செய்வதற்கோ ஆள் ஒருவனும் இல்லை என்று விளக்குகின்றார்.
உடல் உணர்விற்கு மீண்ட அவர் பகவான் பூங்காவில் தோன்றியதற்கு முன் நிகழ்ந்த யாவையும் நினைவிற்கு வராது மறைந்தன என்கின்றார். நாட்கள் செல்லச் செல்ல சற்றே நினைவுகள் திரும்புவதாகவும் அந் நினைவுகளும் ஆன்மீக அனுபவங்களையும் ஆழ்ந்த அன்பையும் மையமாகக் கொண்டவை மட்டும் தான் என்றும் குறிப்பிடும் அவர் அதனால் தான் சூன்யதாவினை நினைக்க முடிந்து அக் கடிதத்தினை அவருக்கு எழுதுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
குறுகிய காலமே சென்னை கடற்கரையினில் அவர் தங்கி இருந்தார். பகவான் மீண்டும் அவர் முன் தோன்றி அவரை மதுரைக்குச் செல்லுமாறு பணித்தார். மதுரையை அடுத்த கிராமப் புறங்களில் அவர் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த பொழுது பகவான் மீண்டும் காட்சி அளித்து சிறுமலைக் குன்றுகள் நிறைந்த பகுதிக்குச் சென்று அங்கே தங்குமாறு வழிகாட்டினார். வாடிப்பட்டிக்கு அருகில் உள்ள குட்லாடம்பட்டி என்னும் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சிறுமலைச் சாரலில் ஒரு சிறிய மலை அருவியை ஒட்டிய இடத்தில் பியர் தங்கலானர். மதுரையைச் சேர்ந்த ஓர் அன்பர் அவருக்கான அனைத்து உதவியும் செய்துகொடுத்தார். எளிமையிலும் எளிமையான வாழ்வு தொடர்ந்தது. ஒரு சிறு கூண்டு போன்ற அமைப்பில் அவரது இரவு கழிந்தது. எளிமையான உணவை அவரே சமைத்துக் கொண்டார். பெரும்பாலும் மலையின் மேல் ஏறி தனிமையில் நிட்டையில் ஆழ்ந்துவிடுவார். 1950 களில் முற்றிலும் மனித நடமாட்டமே இல்லாத மலைப் பகுதி. சுவீடன் நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்; வசதிகளைத் துறந்து, செல்வத்தைத் துறந்து, உறவினர்களைத் துறந்து, தனது நாட்டையும் துறந்து, மனித உறவையும் துறந்து, உடலின் தேவைகளையும் துறந்து “ஆன்மாவே உனது தருமம்” என்னும் பகவான் ரமணரது உபதேசத்தை மட்டுமே தலையாயது என்று பற்றி சொரூப நிட்டையில் ஆழ்ந்து இன்பக் கடலாகிய ஆன்மாவில் மருவினார்.
தனது ஆனந்த அனுபவத்தை அவர் இவ்வாறு பாடுகின்றார்:
இரவு பூராவும் அக்கினி ஒளி ஆனந்தம் பிரணவம்
தந்தையே! தந்தையே ! என்ன சுகம் !
எண்ணமே இல்லை, ஆனந்தமும் ஆனந்தியும் தான்
தந்தையே! நீங்கள் என்னை அணைத்துக் கொண்ட பொழுது என்னையே முற்றிலும் இழந்துவிடும் நிலைக்கு எவ்வளவு நெருங்கிவிட்டேன்
தந்தையே! என்னை ஏன் எண்ணங்களால் துயர் உறுகின்ற, அகந்தையால் வதைபடுகின்ற இடமாகிய மனம் செயல்படும் நிலைக்குத் திருப்புகின்றீர்களோ?
நிட்டையில் ஊன்றி உடலை மறந்த காரணத்தால் பியர் சிறிது காலத்திலேயே காச நோய்க்கு இலக்கானார். அப்பொழுதும் கூட உடலைப் பற்றிய சிந்தனை இல்லாமலே இருந்தார். இருந்தும் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காச நோயாளிகளுக்கு அமைந்திருந்த மருத்துவ நிலையத்தில் இறுதி நாட்களைக் கழித்தார். உடல் முற்றிலும் சீர் குலைந்திருந்தது ஆனால் உற்சாகம் மிகுந்தவராய்த் தான் இருந்தார். “உடலே துன்புறுகின்றது. நான் நன்றாகத்தான் இருக்கின்றேன். எப்பொழுதையும் விட சக்தி இப்பொழுது மிகுந்த வல்லமையோடு விளங்குகிறது, இதோ இங்கே புருவ மத்தியில்,” என்று சொல்லியிருக்கின்றார்.
தனது இறுதியை முன் கூட்டிக் குறிப்பால் உணர்த்திய அவர்,” இன்று நான் நல்ல மாம்பழம் ஒன்றைச் சாப்பிடப் போகின்றேன். நாளை அது குப்பை ஆகிவிடும்,” என்று கூறி இருக்கின்றார். அடுத்த நாள் சீவன் அடங்க ஒரு மணி நேரத்திற்கும் முன்பிருந்தே அவர் ஆழ்ந்த நிட்டையில் உள்முகப்பட்டு இருந்தார். இறுதிக் கணத்தில் “நாம் செல்லலாம்” என்று அவர் முணுமுணுத்தார். யோகியரைப் போலவே அவரும் உடலைக் களைந்தார். அவரது சிரசின் உச்சியில் ரத்தம் கசிந்திருந்தது.
அவர் தங்கியிருந்த சிறுமலைச் சாரலில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பியர் வெர்டின் சுவாமி ரமணகிரியாக அந்த ஆலயத்தில் குடிகொண்டு விளங்குகின்றார்.
பியருக்கு அவரது காசி தீக்ஷா குரு கொடுத்த பெயர் சுவாமி ஹனுமான் என்பது. பகவானை வந்தடைந்த பிறகு அவர் ரமணகிரி என்றே அறிமுகமாகிறார். அவருக்கு ரமணகிரி என்கின்ற பெயர் பகவான் ரமணரால் கொடுக்கப்பட்டது என்கிறார் சூன்யதா
ஒன்று மட்டும் நிச்சயம். பியர் பகவானின் அருளுக்குப் பூரணமாய்ப் பாத்திரரானார். இதற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு: குட்லாடம்பட்டியில் உள்ள சுவாமி ரமணகிரி ஆலயத்தில் பகவான் ரமணரே தனது அருட்கைகளால் ஆக்கிக் கொடுத்திருக்கும் தேங்காயின் ஓட்டினால் அமைந்த திருவோடு. இதன் தனித்துவம் என்ன என்றால் தேங்காயை நீளவாக்கில் அரிந்து அதில் ஒரு பகுதியை அவ்வளவு நேர்த்தியாக பகவான் திருவோடாக அமைத்து சுவாமி ரமணகிரிக்கு அளித்திருக்கின்றார். பகவான் ரமணருக்கும் சுவாமி ரமணகிரிக்கும் இடையில் புறமுகத்தும் அகமுகத்தும் நிலவிய உறவின் மேன்மையை நாம் முழுவதும் அறிவதற்கில்லை. நம் சிற்றறிவிற்கு எட்டாத அவ்வுறவின் மேன்மையை உன்னிஉன்னி உய்வோமாக.
நன்றி : ரமணோதயம் அக்டோபர் 2018.
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
No comments:
Post a Comment