அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் அரியது, பெரியது, இனியது, கொடியது என நம் ஒளவைப் பாட்டி அருளிய பாடல்களை படிக்க இருக்கின்றோம். இவை தான் நம்முடைய சொத்து. இவற்றை நாம் உணர்வதோடு மட்டுமின்றி நம் அடுத்த தலைமுறைக்கும் உணர்த்த வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட. இது தான் மிகப் பெரிய ஞானமும் ஆகும். இவற்றையெல்லாம் விடுத்து நாம் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கின்றோம்.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
என்ற மருதகாசியின் பாடல் வரிகள் விவசாயத்திற்கு மட்டும் அல்ல. நம் தமிழுக்கும் பொருந்தும். தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பொருந்தும்.
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே
இன்று நாம் ஒளவைப் பாட்டி கூறும் அரியது பற்றி இங்கு சிந்திக்க இருக்கின்றோம். பாடலைப் படித்து பார்த்தாலே மிக எளிதாக புரியும். இந்த உலகில் அரிதிலும் அரிதான ஒன்று..அதாவது கிடைத்தற்கரிய பேறு மானிடராக பிறத்தல். இதைத் தான் மாணிக்கவாசகரும் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் என்று கூறியுள்ளார். எனவே மனிதராகப் பிறத்தல் அரிது ஆகும் என்று நன்றாக இங்கே புரிகின்றது. இவ்வாறு நாம் மனிதராக பிறக்க நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை.
அடுத்த வரிகளில் அவ்வாறு மனிதனாக பிறத்தலிலும் அரிதாக கூன்,குருடு,செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று கூறுகின்றார்.மனிதராக பிறத்தல் அரிது என்றால் கூன்,குருடு,செவிடு, பேடு நீங்கி மனிதராக பிறத்தல் அரிதினும் அரிது. இதுவும் தாயின் கருவறையில் தீர்மானிக்கப்பட்டு நாம் பிறந்து உள்ளோம். இறையின் கருணையால் குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து உள்ளோம்.
இன்னும் அடுத்த வரிகளில் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது என்று கூறுகின்றார். இங்கு நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று கொள்ள வேண்டும். அதாவது ஞானமும் கல்வியும் பெறுதல் அடைதல் அரிது என்று கூறவில்லை. மாறாக ஞானமும் கல்வியும் கண்டு மகிழ்ந்து, இன்புற்று, பாராட்டி, சிறப்பிக்க வேண்டும். அப்படியென்றால் கல்வி கற்கும்போது விரும்பி,மகிழ்ந்து கற்க வேண்டும். கல்வி என்பது புறத்தில் நாம் கற்பது. ஞானம் என்பது அகத்தில் நாம் கற்பது. கல்வி வெளியில் இருந்து உள்ளே செல்லும். ஞானம் உள்ளிருந்து வெளியே வருவது என அறியலாம்.
ஒளவையார் அடுத்த வரிகளில் மிக மிக ஆழ்ந்த செய்தியை கூறுகின்றார். தானமும் தவமும் தான்செயல் அரிது என்று கூறுவது தான் வாழ்வின் நோக்கத்திற்கு அடிப்படை ஆகும். தானம் செய்வது மிக எளிதா என்ன? பணம் இருக்கும் அனைவராலும் தான,தர்ம அறப்பணிகள் செய்ய முடியுமா? பணம் ஒரு பொருட்டல்ல. மனமே முக்கியம். இதைத்தான் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்ல கேட்டிருக்கின்றோம். அடுத்து தவம் செய்ய வேண்டும். தவம்? தவம் செய்வதும் எளிதான செயலா? தவம் செய்வது என்றால் காட்டுக்கு போய் மரத்தடியில் அன்ன ஆகாரமின்றி தனிமையில் இல்லறம் துறந்து செய்வது அல்ல. தவம் செய்வது என்பது தம் கருமம் செய்வது என்று வள்ளுவப் பெருந்தகையும் கூறுகின்றார். தியானம் செய்ய செய்ய தவம் பழக்கப்படும்.
இந்த தானமும் தவமும் நாம் செய்யும் போது வானவர் நாடு என்று சொல்லப்படும் சொர்க்கத்தின் வழி திறக்குமாம்.
இப்போது பாடலின் பின்னிருந்து முன்னே செல்வோம்.
சொர்க்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?
ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.
மிக மிக எளிமையாக வாழ்வின் நோக்கத்தை நமக்கு நம் ஒளவைப் பாட்டி அருளியுள்ளார். இது தான் இன்றைய தேவையும் கூட.இது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தேவை ஆகும்.
நம் தேடல் உள்ள தேனீக்கள் குழுவும் தானம்,தர்மம் போன்ற அர்ப்பணிகளில் நாள் தோறும் அன்பர்களின் பொருளுதவி,அருளுதவியால் செய்து வருகின்றது. தவத்தை தினமும் தோறும் கூட்டுப்பிரார்த்தனையில் தொட்டு வருகின்றோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்க்கவைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில்
2. திருஅண்ணாமலை அன்னதானம்
3. எத்திராஜ் சுவாமிகள் முதியோர் இல்ல அன்னசேவை
4. தர்ம சிறகுகள் குழு சிறு காணிக்கை
5. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை
6. எண்ணெய் - 1 டின் உபயம்
7. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை
8. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு
9. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை
10. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை
இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி, திருமண உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.
இது தவிர மேலும் மதுரை TUT யாத்திரையில் அன்னசேவைக்கு சிறு காணிக்கை குருவருளால் கொடுக்கப் பணிக்கப்பட்டோம்.
மதுரை பசுமலை ஸ்ரீ அகத்தியர் கோயில் அன்னசேவை
ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் அன்னசேவை
ஸ்ரீ நடனகோபாலநாயகி பிருந்தாவனம் கும்பாபிஷேகம்
கிண்ணிமங்கலம் பிரதோஷ & குருபூஜை உபயம்
இவ்வாறு நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றோம். அடுத்து தவத்தை மேற்கொள்ளும் பொருட்டு தினமும் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம். இந்த நித்திய கூட்டுப் பிரார்த்தனை ஜூம் செயலி மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற்று வருகின்றது. கூட்டுப் பிரார்த்தனை 184 ஆவது நாளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்த கூட்டுப் பிரார்த்தனையில் திருவாசகம், சிவ பதிகங்கள், குரு மந்திரங்கள், அகவல் பாராயணம் என செய்து வருகின்றோம். இதன் மூலம் தவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்பது உண்மை
குருவருளால் தானத்தையும், தவத்தையும் தேடல் உள்ள தேனீக்கள் தினமும் தொட்டு வருகின்றது. இவற்றிற்கு பொருளுதவி, அருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றி கூறி இப்பதிவை முழுமை செய்கின்றோம்.
இறைவா அனைத்தும் நீயே..அனைத்தும் உன் செயலே..அனைத்திற்கும் நன்றி
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment