அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருபக்தியே கோடி நன்மை தரும். குரு பக்தியை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? குருவின் வழியை,மொழியை பின்பற்ற வேண்டும். இதற்கு அடித்தளமாக இருப்பது போற்றுதல் தானே! இதைத்தான் மாணிக்கவாசகரும் சிவபுராணத்தில் முதலில் தொடங்கும் போது நமச்சிவாய வாழ்க! என்று வாழ்த்தி தொடங்குகின்றார். இது போல் தான் போற்றி..போற்றி நாம் நம் வினைகளை களைய வேண்டும். குருவின் கடைக்கண் பார்வை விழ நாம் ஏங்க வேண்டும். இதற்கு நாம் சித்தர்கள்,ஞானிகள், மகான்கள் திருவடிகளை போற்ற வேண்டும். இதன் பொருட்டு நாம் ஏற்கனவே நம் தளத்தில் சித்தர் காப்பு பாடலை குருவருளால் பகிர்ந்துள்ளோம். எம் குரு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களும் அருட்காப்பு,சங்கல்பம் என இரு கண்களை கொடுத்துள்ளார்கள். இந்த நோக்கில் நாம் இங்கே சித்தர் காப்பு பற்றியும், அண்மையில் நாம் பெற்ற சித்தர்கள் அருள்நிலைகளையும் இங்கே குருவருள் துணை கொண்டு பகிர உள்ளோம்.
சித்தர் காப்பு பகிர்விற்கான எண்ணம் நமக்கு திண்டுக்கல் செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா கோயில் தரிசனத்தில் கிடைத்தது. அங்கே சித்தர் காப்பு பாடல் கண்டு படித்தோம்.இந்தக் கோயில் தரிசனம் பற்றி தனிப்பதிவில் காண்போம். இந்தக் கோயிலில் பிரதானமாக ஸ்ரீ சாய்பாபாவும், கோயில் வெளிப்புறத்தில் 27 நட்சத்திரத்திற்கு என 27 சித்தர்களும் உள்ளார்கள். இங்கே ஒவ்வொரு நாளின் நட்சத்திரத்திற்கு ஏற்ப அன்றைய தினம் சித்தருக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு செய்து வருவது சிறப்பாகும். எத்தனை நாள் ஏக்கம் இங்கே நமக்கு இன்று நிறைவேறி உள்ளது. ஒரே இடத்தில 27 சித்தர்கள் தரிசனம் நமக்கு கிடைத்தது மிக மிக ஆனந்தமாக இருந்தது. எப்போது 27 சித்தர்களுக்கும் மாலை சூடி நாம் தரிசனம் செய்ய போகின்றோம் என்ற ஏக்கமும் இருந்தது. இதுவும் வைகாசி அமாவாசை அன்று குருவருளால் நம் தளம் சார்பில் இனிப்பு,பூக்கள் கொடுத்து வழிபாடு செய்ய வாய்ப்பாக அமைந்தது. அன்றைய தரிசன அருள்நிலைகளையும் பதிவின் இறுதியில் தருகின்றோம்.
இதோ. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சித்தர் காப்பு இங்கே பகிர்கின்றோம்.
1. முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை
2. முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ;
3. வெத்தி கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ;
4. வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங்காப்பு ;
5. அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ;
6. அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ;
7. பரம கயிலாய குரு போகர் பாதங்காப்பு ;
8. கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
9. சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர் பாதங்காப்பு ;
10. இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங்காப்பு ;
11. வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர் பாதங்காப்பு ;
12. மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங்காப்பு ;
13. முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி கமலர் பாதங்காப்பு ;
14. காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங்காப்பு ;
15. பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங்காப்பு ;
16. மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங்காப்பு ;
17. தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங்காப்பு ;
18. காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங்காப்பு ;
19. வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங்காப்பு ;
20. கொல் குணம் போக்கும் கோரக்கர் பாதங்காப்பு ;
21. பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங்காப்பு ;
22. தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர் பாதங்காப்பு ;
23. வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங்காப்பு;
24. போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர் பாதங்காப்பு;
25. நல்ஞானஜோதியை நலமாய் உரைத்திட்ட நற்குதம்பை பாதங்காப்பு;
26. அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு;
27. பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு;
28. காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு;
29. கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;
30. காப்பான கருவூரார், போகநாதர், கருணையுள்ள அகத்தீசர் பாதங்காப்பு;
31. சட்டைநாதர், மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர் பாதங்காப்பு;
32. முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர், கோப்பான கோரக்கர் பாதங்காப்பு;
33. பதஞ்சலியார், கூர்மையுள்ள இடைக்காடர், சண்டிகேசர் பாதங்காப்பு;
34. வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே".
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மச்சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
-மகான் ரோமரிஷி
இந்த 14 ஞானிகள் அடங்கிய பாடலை காலையிலும் மாலையிலும் படித்து பாராயணம்
செய்தும், பூசை செய்தும் வந்தால் ஞானிகளின் அருள் நிச்சயம் கிடைக்கும். இது
போன்ற சித்தர் காப்பு பாடலை தினசரி காலையிலும், மாலையிலு ஓதுவது மிகவும்
நன்று. போற்றினால் தானே நம் வினை அகலும்.
அடுத்து திண்டுக்கல் செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா கோயில் தரிசனத்தில் 27 சித்தர்களின் அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.
இங்கு ஒரு விசேஷமான முறையில் வழிபாடு செய்வது கண்டும், நம் சித்தர் பெருமக்களின் ஞானம் கண்டு மெய் சிலிர்த்தோம். அது என்ன என்று கீழே உள்ள ஸ்ரீ போக மகரிஷி அருளில் பாருங்கள். இதைப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் சிந்திப்போம். அன்று கொண்டாடிய ஸ்ரீ போகர் ஜெயந்தி விழா பற்றியும் இனிவரும் பதிவில் காண்போம்.
ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022 அன்று ஸ்ரீ போகரின் அருள் தரிசனம்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
https://youtu.be/b_cslYsFR48
ReplyDeleteதங்கள் கருத்திற்கு நன்றி ஐயா
Deleteசித்தர்களின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏ஓம் நமசிவாய
ReplyDeleteதங்களின் கருத்திற்கு நன்றி ஐயா
Deleteகுருவருள் நம்மை வழிநடத்த என்றும் பிரார்த்திப்போம்
நன்றி
ரா.ராகேஷ் , சின்னாளப் பட்டி