"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, March 11, 2022

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் பற்றி பேசுவதற்கு எப்போதுமே நமக்கு இனிக்கத் தான் செய்யும். அது போல் தான் சித்தர்கள் கொடுக்கும் அருள்நிலையும் என்று தோன்றுகின்றது. சித்தர்களின் வழிபாட்டை நாம் சிறந்த வழிபாடு என்றும் சொல்லலாம். நம் தளத்தில் சித்தர்களைப் பற்றி தொட்டு காட்டி வருகின்றோம். 

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022  என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்றும் மற்றொரு சித்தர் பற்றி உணர உள்ளோம். களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் பற்றியும், அவர் தம் 8 ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பிதலும் இன்றைய பதிவில் காண உள்ளோம். 

முதலில் இன்று  காலை  முதல் நடைபெற உள்ள ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 அழைப்பிதழை கீழே பகிர்கின்றோம்.




பாரத தேசம் எண்ணற்ற மகான்களையும் யோகிகளையும் கொண்ட நாடு அந்த வழியில் தற்போது பழனியில் இருந்து சுமார் 9 மைல் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த ஒரு சித்தபுருஷர்  கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் . 
11/03/2014 அன்று மஹா சமாதி அடைந்தார் எங்கும் நிறைந்தார். 
இந்த உலகில் எந்தமூலையில் இருந்து எவர் அழைத்தாலும் உடன் தோன்றி அருள்வார். 


பெயர்:
          ஒரு மூட்டையை சுமந்து நடந்ததாலும், பக்தர்களின் பாவங்களை வாங்கிகொள்வதாளும் சிலர் மூட்டை சுவாமிகள் என்றும் சிலர் பழனி சுவாமிகள் என்றும் அழைக்கிறார்கள்.   

சிறப்பு:
         ஒருமுறை பார்த்தாலே நமது பாவங்கள் பறந்துவிடும் கல்லைபுரட்டசொல்லி நமது பாவங்களை
களைகிறார்.பலருக்கு நோய்கள் குணமாகுது. அவரை தரிசிக்க அவர் நினைத்தால்தான் நம்மால் முடியும் பலர் பல அதிசயங்கள் நடந்ததை கூறுகிறார்கள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பரிபாசை பேசும் சித்தர் என்ற தலைப்பில் காண்பித்தது. அவரைப்பற்றி கூறுதல் கடினம். அங்கு சென்றால் தான் உணரமுடியும். அதற்கு அவர் அனுமதி வேண்டும்.

அனுபவம்:
                     எத்தனையோ கூறமுடியும் ஒருவன் வலியை எப்படி அடுத்தவருக்கு உன்ர்த்தமுடியாதோ அதேபோல் எனது அனுபவமும்.  தற்போது அவர் உடலுடன் இல்லாவிட்டாலும் அவர் பார்வை என் மேல் உள்ளதை உணர்கிறேன். 

மீண்டும் ஒரு அனுபவத்தை இங்கே குருவருளால் பகிர்கின்றோம்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு,பழனி இடும்பன் மலை அருகில் இருக்கும் கணக்கன்பட்டி  கிராமத்தில் மூட்டை சாமியார் இருந்தார்..நானும் என் நண்பரும் பைக்கில் சென்றோம்...ஏதோ பஞ்சாயத்து நடப்பது போல சின்ன கூட்டம்...ஒரு ஓரத்தில் அழுக்கு மூட்டை சாமியார் கயித்து கட்டிலில் அமர்ந்து இருந்தார்...கட்டிலா,தரையிலா என நினைவில்லை...அம்பாசிடர் காரில் வந்த நீதிபதி ஒருவர் பழத்தட்டுகளுடன் அவர் அருகில் போக ,சாமியார் கோபமாகி அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தார்...நானும் நண்பரும் அதிர்ச்சியானோம்..இதென்னடா வம்பா போச்சுன்னு.விசாரிச்சா அவர் ஆசிர்வாதமே இதானாம்...!

கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தோம்...எங்களை போலவே அவரை பார்க்க வந்தவர்களும் என்ன செய்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருந்தாங்க...கால்ல விழுந்து விபூதி வாங்கிட்டு போலாம்னு வந்தவங்கதான்..கிட்ட போனாலே அசிங்க அசிங்கமா வார்த்தை வருதே..அது கலெக்ட்டரா இருந்தாலும் அதான்..

அவர் நடக்க ஆரம்பித்தார்.அவர் பின்னால் போனோம்..நாங்கள் மொத்தம் 10 பேர் இருந்தோம்...இடும்பன் மலைக்கு வந்தவர் மலை ஏற ஆரம்பித்துவிட்டார்..பின்னால் நாங்களும் ஏறினோம்..ஒரு பெரிய உருண்டை கல் 10 டன் எடை இருக்கும்...சும்மாதானே இருக்கீங்க..இந்த கல்லை நகத்துங்க..என சொல்லிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்துவிட்டார்..எனக்கும் நண்பருக்கும் சிரிப்பு வேற..அது குட்டி மலை மாதிரி இருந்துச்சி..அதை தள்ளுன்னா...நாங்க 10 பேர் நடக்குறதா இது...

எல்லோரும் கல்லை தள்ளுவது போல செய்தோம்..பெண்களும் 4 பேர் இருந்தனர்...யாராலும் சிறு அசைவை கூட கொடுக்க முடியாது என தெரியும்...அதுல ஒருத்தர் ஒரு மூங்கில் முட்டு கொடுத்து தூக்கினா தள்ளிடலாம்ங்க..சாமி சொன்னா அதுல அர்த்தம் இருக்கும்..வாங்க தள்ளலாம்னார்..எங்களுக்கு சிரிக்கிறதா...கோபபடுறதான்னு தெரியலா..ஒரு இத்துப்போன மூங்கிலை ஒருத்தர் எடுத்து வந்து முட்டுக்கொடுத்து தள்ளினார்...

இது ஆகறதில்ல..என நானும் என் நண்பரும்...மலையை விட்டு கொஞ்சம் இறங்கி ,அவர் திட்டாத அளவுக்கு பாதுகாப்பா நின்னு,சில சமயம் அடிக்கவும் செய்வாராம்..அவரை பார்த்து தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டு ,விழுந்து கும்பிட்டு பார்த்தோம்..எங்களை பார்த்தார்..லேசாக சிரிப்பது போல இருந்தது..இதுவே போதும் என கிளம்பிவிட்டோம்!!

இவர் அற்புதங்கள் பல செய்தவர் என பழனி மக்கள் நிறைய சொல்கிறார்கள்...பழனி முருகன் தரிசனம் சிலருக்கு இவர் மூலம் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள்...எல்லா அஷ்டமா சித்துகளும் அறிந்தவர் என சொல்கிறார்கள்...எப்படியோ ஒரு சித்தரை தரிசித்தோம் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தோம்...

 சுவாமிகள் உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவரை இந்த பழநியில் அறிந்தவர்கள் ஏராளம். பழநியில் அவருக்கு பக்தராக இருந்த பணக்காரர்கள் பல பேர். மூட்டை சுவாமிகள் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை முறையே வேறு. நம்மிடம் இருக்கும் குறைகளை அகற்றுவதற்காகவே இவர் அவதரித்திருக்கிறார்.



எவரேனும் இவரிடம் பணமோ, பொருளோ கொடுக்க வந்தால், முதலில் அவர்களை விரட்டி விடுவார். எவரிடம் இருந்தும் சல்லிக் காசு வாங்க மாட்டார். யாரிடமும் எதுவும் கேட்கவும் மாட்டார். இப்போது கூட இவரின் சில பக்தர்கள், இதே கணக்கன்பட்டியில் இவர் தங்குவதற்காக ஒரு 'சித்சபை' கட்டி வருகிறார்கள். அதற்கு இவர் முறையாக ஒப்புதல் தரவில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கியே இருப்பார்.

இதே கணக்கன்பட்டியில், அவரது சகோதரரின் குடிசையில் வசிக்கிறார் இவர். எப்போதாவது சாப்பிடுவார். சகோதரர் வீட்டில் இருப்பவர்களே, ஏதாவது ஒரு ஓட்டலில் இருந்து (அவர் கேட்கும்போது) உணவு வாங்கி வந்து தருவார்கள்.

ஆனால், இந்த ஐம்பது வருடங்களில் மூட்டை சுவாமிகளிடம் கார்களிலும் வேன்களிலும் வந்து, பணத்தைக் கொட்ட முயன்ற கோடீஸ்வரர்கள் பல பேர். அப்படிப்பட்ட ஆசாமிகள் வந்தாலே, எரித்து விடுவது போல் இவர் பார்ப்பார். அடுத்த கணம் அந்த ஆசாமிகள் கிளம்பிப் போய் விடுவார்கள். இவருக்கு காசு, பணம், உணவு, உடை, இடம் இப்படி எதுவுமே முக்கியம் இல்லை. இவருடைய அவதார நோக்கமே வேறு. அதனால்தான், இவர் பலரிடம் இருந்தும் தனித்துத் தெரிகிறார்'' என்றார் கணக்கன்பட்டிவாசி ஒருவர்.
கணக்கன்பட்டி கிராமத்துக்குள் தொடர்ச்சியாக இவர் தங்கி இருப்பது கடந்த சில வருடங்களாகத் தானாம். அதற்கு முன்னால் அடர்ந்த மலையில் எங்காவது தங்கி இருப்பார்.

பழநி மலைக்கு எதிரே உள்ள இடும்பன் மலை யில் சில காலம் தங்கி இருந்தாராம். பல நேரங்களில் இவர் எங்கு இருக்கிறார் என்பதை பக்தர்கள் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. உச்சி வேளையில் கொளுத்துகிற வெயிலில் மலைக்கு மேலே தகிக்கிற ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் இருப்பார்; பேயெனக் கொட்டுகிற மழையில் முழுக்க நனைந்தபடி அதே பாறையில் படுத்திருப்பாராம். இயற்கையின் எந்த ஒரு சக்தியும் இவரை பாதித்ததே இல்லையாம்.

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள் என்று ஒரு பக்தர் நம்மிடம் சொன்னவை: ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.

பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி சித்தியாகி  விட்டார்.
- இப்படி நிறைய சம்பவங்களை அனுபவங்களாகச் சொல்லலாம்.''



மூட்டை சுவாமிகளின் இயற்பெயர் 'பழனிச்சாமி' என்று ஓர் அன்பர் சொன்னார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை மூட்டை ஸ்வாமிகள் வசித்து வந்த இடம்: பழநி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழநி கலைக் கல்லூரி வாசலில். கலர் வேஷ்டி... மேலே ஒரு முழுக்கைச் சட்டை... தலையில் ஒரு முண்டாசு. பெரும்பாலும் வேஷ்டியை மடித்துக் கட்டி இருப்பார். இவர் உடுத்தி இருக்கும் துணிகள் பெரும்பாலும் கந்தலாகவே காணப்படும்.

இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்... கன்னாபின்னாவென்று கத்தி விட்டு, அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார் இவர்.

அன்றைய தினம் மதிய உணவை அங்கே அன்னதானத்தில் பெற்றோம். அருள் நிறை மகான் கால் பட்ட இடத்தில் நாம் கால் பதித்ததே பெரும் பாக்கியம். அருமையான அருள் நிறை தரிசனம் நம் உணர்வை மாற்றியது. அங்கே கிடைத்த உணவும் நம்மை உயிர்க்க வைக்கின்றது. சுவாமிகளுக்கு இரண்டு இடத்தில கோயில் இருக்கின்றது. இதோ அடுத்த கோயிலுக்கு செல்கின்றோம்.

நமக்கு அன்று ஒரு சித்திரக்கவி கிடைத்தது. சுவாமிகளின் அடியார் ஒருவர் கொடுத்தார்.இணையத்தில் வெளியிட நமக்கு உத்திரவு கிடைக்கவில்லை. கிடைத்தால் பகிர்வோம். இதுவரை அதனை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றோம்.

சரி..சுவாமிகளின் தரிசனம் பெறலாமா? சரியாக சுமார் 11 மணி அளவில் சுவாமிகளின் கோயிலை அடைந்தோம். 









பழநி கலைக் கல்லூரியின் வாயிலில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றின் நிழலில் இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். சில நேரங்கள் திடீரென்று காணாமல் போய் விடுவார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 'சாமீ மலைக்கு மேலே போயிருக்கு' என்பார்கள். அவர் இருக்கும் இடம் இதுதான் என்று பிறரால் அடையாளம் சொல்லக் கேட்டு, அவரைத் தேடி அங்கே போனால் - அவர் இருக்க மாட்டார்.

இன்றைக்கும் இந்த நிலை உண்டு. ஸ்வாமிகள் கணக்கன்பட்டியில் இருக்கிறார் என்று ஒரு கூட்டம் இவரைத் தேடி வரும். வந்து பார்த்தால், 'சாமி, உள்ளே போயி ஏழு நாள் ஆச்சு' என்று ஏதாவது ஒரு மலைப் பகுதியை நோக்கிக் கையைக் காண்பிப்பார்கள் ஊர்க்காரர்கள். சுவாமிகள் எப்போதாவதுதான் தமிழ் பேசுகிறார். மற்ற நேரங்களில் சித்தர்கள் பேசும் ஒரு பாஷையைப் பேசுவதாகச் சொல்கிறார்கள். சாதாரணமான ஆசாமிகளுக்கு அந்த பாஷை புரிவதில்லை.

கும்பகோணத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவர், பழநி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பதினெட்டு சித்தர்களையும் தன் கண்களுக்கு நேரே தரிசிக்கும் பெரும் பேற்றைப் பெற்றவர் இவர். அந்த அனுபவம் பற்றி நம்மிடம் சொன்னார் கண்ணன்.
''பழநி கல்லூரியில் சுமார் முப்பது வருடங்களாகப் பணி புரிந்திருக்கிறேன். எனக்கு மூட்டை சுவாமிகளோடு ஓரளவு பரிச்சயம் உண்டு. அவருடன் நான் பேசி இருக்கிறேன். இதைச் சொல்வதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. கல்லூரியின் வாசலில் புளிய மரத்தின் அடியில் படுத்திருப்பார். எப்போதாவது ஓரிரு முறை என்னிடமோ பேராசிரியர் ராமச்சந்திரனிடமோ சாப்பாட்டுக்குப் பணம் கேட்டிருக்கிறார். நான் அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்துள்ளேன். சில நேரங்களில் 'மதியச் சாப்பாட்டுக் குப் பத்து ரூபாய் கொடு' என்று என்னிடம் கேட்டிருக்கிறார். அது என் பாக்கியம்.

ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்தார் சுவாமிகள். நான் சும்மா இருக்காமல் 'சாமீ, சாப்பிடறீங்களா?' என்று கேட்டேன். 'என்ன இருக்கு?' என்று பதிலுக்குக் கேட்டார். என் மனைவி மகாலட்சுமி, 'பூரி பண்ணி இருக்கேன் சாமீ' என்று சொல்லிக் கொண்டே அவருக்கு ஒரு வாழை இலையைக் கொண்டு வந்து போட்டாள். சுவாமிகளும் சாப்பிட உட்கார்ந்தார். உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுக் கொள்ள வைத்து, பூரிகளைச் சுடச் சுட இட்டுப் பரிமாற ஆரம்பித்தாள் என் மனைவி. ஐந்து, ஆறு, ஏழு, எட்டு... என பூரிகள் போய்க் கொண்டிருந்ததே தவிர, சுவாமிகள் எழுவதாகக் காணோம்.

தயார் செய்திருந்த உருளைக்கிழங்கு மசாலா காலி ஆகி விடவே, ஊறுகாய் போன்ற இதர அயிட்டங்களைத் தொட்டுக் கொள்ள பரிமாறி னாள். ஒரு கட்டத்தில் பூரி மாவும் காலி ஆகவே, சட்டென்று மாவு பிசைந்தாள். எனக்கோ குழப் பம். 'சுவாமிகள் நம்மைத் தண்டிக்கிறாரோ!' என்று தவித்தேன். நாற்பத்தேழு பூரிகளைத் தாண் டிய பிறகும் எந்த வித களைப்பும் இல்லாமல், 'என்னம்மா... இதோட நான் நிறுத்திக்கவா?' என்றார் சுவாமிகள், என் மனைவியைப் பார்த்து. முகமெல்லாம் வியர்த்து, களைப்பின் உச்சத்தில் இருந்த என் மனைவி, 'சரிங்க சாமீ' என்றாள் சந்தோஷமாக. உணவை ஒரு பொருட்டாக நினைக்காத மூட்டை சுவாமிகள், அன்று என் வீட்டில் அப்படி சாப்பிட்டது ஏன் என்று இன்று வரை புரியவில்லை.

ஒரு நாள் கல்லூரிக்கு எதிரே அதிகாலை வேளையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். முட்புதர்கள் அடர்ந்திருந்த காடு அது. சட்டென்று

அந்த இடத்துக்கு சுவாமிகள் வந்தார். வணங்கினேன். என் கையில் இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து விட்டு, 'இங்கே ஒரு பிள்ளையார் கோயில் கட்டுப்பா' என்று முட்புதர் அடர்ந்திருந்த இடத்தைக் காண்பித்தார். எனக்கோ பிரமிப்பு. 'ரெண்டு ரூபாயை வெச்சு இந்த இடத்துல எப்படிக் கோயில் கட்ட முடியும் சாமீ?' என்று கேட்டேன். பிறகு, சொன்னார்: 'கொஞ்ச நேரத்துல வெள்ளை கார்ல ஒரு பஞ்சு வியாபாரி வருவார். அவர்கிட்ட கேள்.'

சுவாமிகள் போய் விட்டார். சொல்லி வைத்தாற்போல் அடுத்த சில நிமிடங்களில் ஒரு பஞ்சு வியாபாரி வெள்ளை கண்டஸா காரில் வந்தார். என் அருகே நின்று ஏதோ ஓரிடத்துக்குப் போக வழி விசாரித்தார். என்னைப் பற்றிப் பேச்சு வர... மூட்டை சுவாமிகள் விவரத்தையும் அவரிடம் சொன்னேன். இரண்டு நாட்களில் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

எதற்கு வரச் சொல்கிறார் என்று தெரியாமல் பஞ்சு மில் அதிபர் சொன்ன நாளில் அவரைச் சந்திக்கப் போனேன். 'கோயிலுக்கு அஸ்திவாரம் முதல் விமான கலசம் வரை நான்தான் பணம் தருவேன்!' என்று உறுதியுடன் சொல்லி, அதுபோலவே செய்தார். அடுத்து, இதே போல் சுவாமிகளின் அருளால் ஒருவர் காம்பௌண்ட் கட்டித் தந்தார். நடப்பது எல்லாமே அதிசயமாக இருந்தது. சுவாமிகளின் அருளுடனும், அந்தப் பகுதிவாசிகளின் ஒத்துழைப்புடனும் அந்தப் பிள்ளையார் கோயிலைக் கட்டி முடித்தேன். கும்பாபிஷேகமும் முடிந்தது. சுவாமிகளும் அதற்கு வந்திருந்தார். கோயில் பணி தொடங்குவதற்கு முன் அவர் என்னிடம் கொடுத்த இரண்டு ரூபாய் நாணயத்தை நினைவாகக் கேட்டு வாங்கிக் கொண்டார்.

ஒரு நாள் இரவு மணி பதினொன்னரை இருக்கும். சுவாமிகள் என்னைக் கூட்டிக் கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச் சென்றார். ஒரு பாறையைக் காண்பித்து அதில் என்னை உட்காரச் சொன்னார். அரை மணி நேரம் ஓடிற்று. 'பதினெட்டு சித்தர்களை உனக்கு தரிசனம் செய்து வைக்கப் போகிறேன். இப்போது நீ உன் கண்களை மூடிக்கொள்' என்றார். அதன்படி மூடிக் கொண்டேன். சுமார் பத்து விநாடிகள் கடந்திருக்கும். 'கண்களைத் திற' என்றார் சுவாமிகள். திறந்தேன். என் கண் முன்னே நான் காணும் காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை. வெவ்வேறு விதமான உடல்வாகுடன் பதினெட்டு பேர் என் முன்னால் காட்சி தந்தனர். இன்றைக்கு இருக்கிற மனிதர்கள் மாதிரி அவர்கள் இல்லை. அவர்களுக்குப் பின்னால் ஒரு வால் தெரிந்தது.

'எல்லாம் ராமாயண காலத்துப் பசங்க' என்று என்னைப் பார்த்துச் சொன்னவர், ஏதோ சைகை செய்தார். அவ்வளவுதான். அடுத்த விநாடி, அந்தப் பதினெட்டு பேரும் அந்தரத்தில் மேல்நோக்கித் தாவித் தாவிச் சென்று காணாமல் போய் விட்டார்கள். அன்றைய தினம் சுமார் இரண்டு நிமிட நேரங்களுக்கு நான் பார்த்த இந்தக் காட்சி இன்னும் என் மனதில் இருக்கிறது'' என்று குரல் ததும்ப நம்மிடம் சொன்னார் கண்ணன்.

மூட்டை சுவாமிகளைப் பற்றி நன்கு அறிந்த ஒரு அன்பர் நம்மிடம் சொன்னது: ''சுவாமிகளைச் சந்தித்து எலுமிச்சம்பழம் வாங்கலாம், அவர் கையால் திருநீறு வாங்கலாம், குழந்தை இல்லாத பிரச்னைக்குத் தீர்வு கேட்கலாம், பையனுக்கு வேலை கிடைக்க தாயத்து வாங்கலாம் என்கிற எண்ணத்துடன் எவரும் இந்தப் பக்கம் வரக் கூடாது. மனிதர்களுக்குள் ஆயிரம் பிரச்னை இருக்கும்தான். ஆனால், இவரது பார்வை நம் மேல் பட்டு விட்டாலே நம்மிடம் உள்ள பிரச்னை நம்மை விட்டு ஓடி விடும்.

தெருவில் சுவாமிகள் அவர்பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் உட்காருவார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் உள்ள குறைபாடுகளை அவர் சூட்சுமமாக உணர்வார். வந்திருப்பவர்களின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் வெறும் வாயில் போட்டு மென்று, அதை வெளியே துப்பி விடுவார். சுவாமிகள் சஞ்சரித்துக் கொண்டிருக்கிற உலகமே வேறு. எனவே, அவரின் அருகே போனால் அது அவருக்குத் தொந்தரவு தருவதாகவே அமையும்.

தவிர, சுவாமிகள் சில நேரங்களில் வந்திருப்பவர்களை விரட்டியும் விடு வார். உடனே, அங்கிருந்து அவர்கள் போய் விட வேண்டும். ரொம்ப நேரம் இவரை தரிசனம் பண்ணிக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று இருக்கக் கூடாது. வந்தோமா, தரிசனம் பண்ணினோமா என்று நகர்ந்து விட வேண்டும்.

சிலரை ஏதோ வேலைகள் செய்யச் சொல்வார். என்ன வேலை தெரியுமா? மண்ணை அள்ளிக் குவிக்கச் சொல் வார். சாக்கடைத் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி ஊற்றச் சொல்வார். இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் அவர்களது வினையை சுவாமிகள் விரட்டுகிறார். அதுதான் நிஜம்.

சிங்கப்பூர், கனடாவில் இருந்தெல் லாம் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, கணக்கன்பட்டி வருகிறார்கள்'' என்றவர் தொடர்ந்து சொன்னார்:

''ராசிபுரத்துக்கு அருகே இருக்கிற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவங்களுக்கு சுவாமிகள்தான் குலதெய்வம். வருடத்தில் ஒரு நாள் சுவாமிகளின் ஆசியுடன் அவர்களது கிராமத்தில் விழா கொண்டாடுகிறார்கள். சுவாமிகளின் படத்தை வைத்து அதற்கு ஆராதனம் நடத்தி, விமரிசையாக நடத்துகிறார்கள். அவர்களுக்கு சுவாமிகள்தான் எல்லாமே!


சுவாமிகளின் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்... சுவாமிகளின் படத்தை வீட்டில் வைத்து, அதைப் பிரார்த்தித்து வந்தாலே போதும். இவரை அடிக்கடி நேரில் சந்திக்க வேண்டும் என்பதில்லை. கஷ்டம் வரும் போது இவரை மனமார நினைத்தாலே போதும். அவரது ஆசி கிடைத்து விடும்!'' 
இங்கு ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி, புனர்பூச போன்ற விசேஷ நாட்களில் அபிஷேகம்,ஆராதனை,முற்றோதல் என பழநியில் இருந்து அடியார் பெருமக்கள் செய்து வருகின்றார்கள். சில காட்சிகள் உங்களுக்கு தருகின்றோம்.




மீண்டும் ஒருமுறை சொல்கின்றோம். உங்கள் மனதில் உள்ள ஆணவக் குன்றுகளை நீக்கி,சுவாமிகளின் பாதத்தை பிடியுங்கள். வாழ்வில் சித்தம் உணருங்கள்.






வாழ்க வளமுடன்
நேர்மையாக .....

இது சுவாமிகள் அடிக்கடி கூறும் வாசகம்...

 ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Thursday, March 10, 2022

பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் பற்றி பேசுவதற்கு எப்போதுமே நமக்கு இனிக்கத் தான் செய்யும். அது போல் தான் சித்தர்கள் கொடுக்கும் அருள்நிலையும் என்று தோன்றுகின்றது. சித்தர்களின் வழிபாட்டை நாம் சிறந்த வழிபாடு என்றும் சொல்லலாம். நம் தளத்தில் சித்தர்களைப் பற்றி தொட்டு காட்டி வருகின்றோம். 

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை 
சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்றும் மற்றொரு சித்தர் பற்றி உணர உள்ளோம். நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 கண்டு ஸ்ரீ சக்கரை அம்மாவின் தரிசனம் பெறுவோம்.


"சதா சர்வ காலமும் பேரனந்த நிலையில் இருப்பதான 'முக்தி' அல்லது மோட்சத்தை அடைவது என்பது மனிதனின் கருத்தாக்கத்திற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. இது குறித்து அளிக்கப்படும் எத்தகைய விளக்கங்களும் எளிதில் நம்பி ஏற்கத் தக்கதாகவும் இருப்பதில்லை . நானுங்கூட இப்படிப்பட்ட மனநிலை உள்ளவனாகத்தான் இருந்தேன், அதாவது மிகவும் எளிமையாகவும், எழுத்தறிவின்றியும் இருந்த ஒரு பிராமண விதவையைக் (ஸ்ரீ சக்கரை அம்மா) காணும் வரை அவ்வாறான மனநிலையே எனக்கு இருந்தது. அவர் எந்நேரமும் நிரந்தரமாக 'முக்தி' என்பதன் மெய்ப்பொருளாகிய பேரானந்தத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர் என்பதே அவருக்குரிய சிறப்பாகும். படித்தவர், படிக்காதவா, ஏழை, பணக்காரர், மேன்மக்கள், சாதாரணமானவர்கள் என எந்த நிலையில் உள்ள மக்கள் மத்தியிலும் அவரைப்போல் முக்தி என்னும் பேரானந்தத்தைத் தன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் எப்போதும் அனுபவித்துக் கொண்டு, அதனைப் பிறருக்கும் உணர்த்தும் நிலையினை எய்தியவர்களை நான் கண்டதுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை." -ஸ்ரீ சக்கரை அம்மாவைப் பற்றி அவரது பிரதான சீடர் டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ்




சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற 'சக்கரை அம்மாள்'.

சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் 'ஶ்ரீ சக்ர அம்மா' என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி  'ஶ்ரீ சக்கரை அம்மா' வானது.








விவரம் தெரியும் வயதுக்கு வருமுன்பிருந்தே அவள் தன் வயதுப் பெண்களைப் போலன்றி, வித்தியாசமாகத்தான் இருந்தாள். தமிழ் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 ஆம் ஆண்டு பிறந்த ஆனந்தாம்பாளுக்குச் சிறு வயதிலிருந்தே மணிக் கணக்கில் பொழுதை இனிமையாகக் கழிப்பதற்கு மிகவும் பிடித்த இடம் தங்கள் ஊருக்கே நடு நாயகமாக அமைந்த ஸ்ரீ பெரிய நாயகி அம்மையின் திருக் கோயிலின் உட்பிரகாரத்தில் மேற்குப் பகுதியோரம் கருவறையை நோக்கியவாறு தன்னந் தனியாக அமர்ந்திருப்பதுதான். அவள் பிறந்தது 'ஆனந்த' என்கிற தமிழ் ஆண்டில். எனவே அவளுக்கும் ஆனந்தாம்பா என்று பெற்றோர் பெயரிட்டுவிட்டனர். அது அவளுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

சிவபிரானின் ஒரு பாகமாக சக்தி சொரூபமாய் விளங்கும் உமையம்மைதான் பெரிய நாயகி என்ற நாமத்துடன் ஊர் நடுவே கோயில் கொண்டுள்ளாள். இதற்குப் பொருத்தமாக ஊரின் பெயரும் 'தேவிகாபுரம்' என, 'இது அம்மவின் பூமி' என்று பிரகடனம் செய்வதுபோல அமைந்துவிட்டது.

ஆனந்தாம்பாவின் வீடு கோயிலுக்கு வெகு அருகாமையிலேயே இருந்தது. மேலும், அவளது தந்தை சேக்ஷ குருக்கள் ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தார்.

எனவே ஆனந்தாம்பாவுக்கு ஆலயமே தன் வாசஸ்தலம் போல, நினைத்த மாத்திரத்தில் சென்று வெகு நேரம் பொழுதைக் கழிப்பது எளிதாக இருந்தது. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கோயிலில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யும் பழக்கம் நீரில் விட்ட மீன் தானாகவே நீந்தித் திளைப்பதுபோல் அவளுக்கு மிகவும் சுலபமாக ஏற்பட்டுவிட்டிருந்தது. தந்தையார் கற்பித்த சிவ ஸ்துதியை ஜபித்தவாறு தியானம் செய்வதில் அலாதியான அமைதியும் இன்பமும் கண்டாள், சிறு பெண் ஆனந்தாம்பா. அதனால் அவள் வயதுச் சிறுமிகள் அனைவரும் வேடிக்கை விளையாட்டுகளில் மகிழ்ந்திருக்க, இவள் மட்டும் அமைதியாக தியானம் செய்வதிலேயே விருப்பம் மிக்கவளாக இருந்தாள். 

அக்கால வழக்கப்படி ஆனந்தாம்பாவுக்கு ஒன்பது வயதாகும்போதே திருமணம் செய்து வைத்துவிட்டனர். அவளுக்குக் கணவனாக வாய்த்தவர் சென்னையில் தற்சமயம் புதுப்பேட்டை என்று அறியப்படும் கோமளிஸ்வரன்பேட்டையில் இருந்த சட்டநாத மடம் என்ற மடத்தின் அதிபதி. அந்த மடம் செட்டியார் வகுப்பில் ஒரு பிரிவினரின் குரு மடமாகும். இந்த மடத்தின் அதிபதிகள்தான் அந்தப் பிரிவு செட்டியார் குடும்பங்களில் உபநயனம் விசேஷ பூஜை முதலியவற்றை நடத்தி வைப்பார்கள். சிவாசாரியார் என அழைக்கப்படும் மடாதிபதிகள் அந்தண குலத்தவராக இருப்பதோடு இல்லறத்தாராகவும் இருப்பதுண்டு. ஒன்பது வயது ஆனந்தாம்பாவின் கணவருக்கு அவளைத் திருமணம் செய்யும்போதுபோது வயது இருபத்து நான்கு மேலும், முதல் தாரத்தை இழந்துவிட்டிருந்த அவருக்கு ஆனந்தாம்பா இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். 

உரிய வயது வந்ததும் ஆனந்தாம்பா தன் கணவனுடன் வாழ கோமளீஸ்வரன் பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவள் கணவர் அவளை வெறும் வீட்டு வேலைக்காரியைப் போலவும் தனக்குப் பணிவிடை செய்யும் சேவகியாகவும்தான் நடத்தினார். இது ஒருவகையில் ஆனந்தாம்பாவுக்கு நன்மையாகவே தோன்றியது.அக்கால நாட்டுப் பெண்களுக்கு இணங்க வீட்டு வேலைகள் அனைத்தையும் முறைப்படிச் செய்து முடித்தபின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒரு திண்ணை மேடையில் அமர்ந்து தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டாள், ஆனந்தாம்பா. அடிக்கடி அருகாமை யில் உள்ள கோமளீஸ்வரன் கோயிலுக்கும் சென்று பொழுதைக் கழிக்க லானாள்.

கணவர் சாம்பசிவ சிவாசாரியார் மனைவியுடன் இல்லறம் நடத்துவதைவிட, வேறு வெளியிடத்துக் கேளிக்கைகளில் ஈடுபடுவதிலேயே கவனமாக இருந்தார். முறைகேடான வாழ்க்கை நடத்திய சாம்பசிவம், விரைவிலேயே தீராத நோய்வாய்ப்பட்டு, அற்ப ஆயுளில் மரணமடைந்தார். ஆக, ஆனந்தாம்பா இருபது வயதிலேயே விதவையாகிவிட்டாள்! இளமையிலேயே தான் விதவையாக நேர்ந்ததையும் ஒரு நல்வாய்ப்பாகவே ஆனந்தாம்பா கருதினாள். எவ்வித இடையூறுமின்றி தியானத்தில் மூழ்கிக் கிடக்க வாய்ப்புக் கிட்டியதாக எண்ணி மகிழ்ந்தாள். விதவையான மகளைச் சொந்த ஊரான தேவிகாபுரத்திற்கே அழைத்துச் சென்றார், ஆனந்தாம்பாவின் தந்தை. அங்கு சில நாட்களைக் கழித்த பின் அருகில் தன் சகோதரன் வசித்து வந்த போளூருக்குச் சென்றாள் ஆனந்தாம்பா. அங்கு 'நட்சத்திரக் குன்று' என்று அழைக்கப்பட்ட சிறு குன்றில் வசித்து வந்த நட்சத்திர குணாம்பா என்ற யோகினியின் பரிச்சயம் ஆனந்தாம்பாவுக்குக் கிடைத்தது. குணாம்பா ஆனந்தாம்பாவை மிகவும் நேசித்தார். அச்சமயம் போளூரில் வசித்து வந்த விட்டோபா என்ற சித்தரின் கவனமும் ஆனந்தாம்பா வுக்குக் கிட்டியிருக்கக்கூடும். 

மேலும் அருகாமையில் உள்ள சித்தர்களின் உறைவிடமான திருவண்ணாமலைக்குப் போளூர் வழியாகச் செல்லும் அல்லது திருவண்ணாமலையிலிருந்து திரும்பும் சித்தர்கள் பலரையும் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பும் ஆனந்தாம்பா வுக்குக் கிடைத்தது. ஆனந்தாம்பாவுக்கு நட்சத்திர குணாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது போலவே குணாம்பாளுக்கும் ஆனந்தாம்பாவிடம் ஓட்டுதல் ஏற்பட்டது. ஆனந்தாம்பா மீண்டும் சென்னைக்கே திரும்பிச் செல்ல நேர்ந்தபோது, "இனி நினைத்த மாத்திரத்தில் உங்களை எப்படிச் சந்திப்பேன்? நானோ ஒரு விதவை. மேலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள். கட்டுப்பாடுகள் மிக்க வட்டத்திற் குள்ளேயிருந்து எப்படி என்னால் வெளியே வந்து உங்களைக் காண இயலும்?" என்று ஏக்கத்துடன் கூறினாள். 

அதைக் கேட்டு, ”கவலை வேண்டாம். நீ விரும்பும்போது என்னை வந்து காணலாம். அதேபோல் நீ யாரையெல்லாம் காண விரும்புகிறாயோ அவர்களையும் சென்று காணலாம்” என்று நட்சத்திர குணாம்பாள் ஆறுதல் கூறித் தேற்றினார். இதையொட்டியே 'லஹிமா' என்ற உடம்பை லேசாக்கிக் கொண்டு ஒரு பறவையைப் போல வானில் பறந்து செல்லும் சித்து ஆனந்தாம்பாளுக்குக் கிட்டியிருக்க வேண்டும். ஆனந்தாம்பாள் ஒரு பறவையைப்போல வானில் பறந்து செல்வதைப் பலரும் கண்டுள்ளனர். அவர்களுள் சிறந்த தமிழ் அறிஞரும் தேச பக்தருமான திரு. வி. கலியாண சுந்தரனார் தாம் எழுதிய 'உள்ளொளி' என்ற நூலில் அம்மாவின் பறக்கும் ஆற்றலைப் பதிவு செய்துள்ளார். திரு.வி.க. தமது 'உள்ளொளி'யில் பின் வருமாறு எழுதுகிறார்: சென்னை கோமளீஸ்வரன்பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப்போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விருஞானியா பலர் சூழ்ந்துகொண்டு அம்மையார் நிலையை ஆராய்வர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த இருந்த ஓர் ஐரோப்பியரால் (டாக்டர் எட்கர் தர்ஸ்ட ன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பறவைக்குரிய கருவி, கரண அமைப்புகள் சில உள்ளன என்றும் ஊர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டது. அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. யான் தேச பக்தன் ஆசிரியராக இருந்த போது நஞ்சுண்ட ராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்.”

ஆனந்தாம்பாளிடம் செலுத்திவிட்டே தமது ஸ்தூல உடலைத் துறந்திருக் கிறார் என்றும் கருத இடமுள்ளது. ஏனெனில், பிற்காலத்தில் ஸ்ரீ சக்கரை அம்மா தம்மை நட்சத்திர குணாம்பாள் என்றே வெளிப்படுத்தியதுண்டு.

கோமளிஸ்வரன்பேட்டைக்குத் திரும்பிய ஆனந்தாம்பாள் மடத்தின் மொட்டை மாடியிலிருந்த திண்ணை மேடையில் அமர்ந்து முன்னிலும் தீவிரமாக தியானத்தில் ஈடுபடலானார். அச்சமயம் அவர் ஊண் உறக்கமின்றி ஸ்ரீ சக்கர உபாசனையை மேற்கொண்டிருக்க வேண்டும். பத்தாண்டுக் கால மும்முர சாதனையின் பலனாக ஒரு நாள் ஓர் ஒளி வெள்ளம் அவரை மூழ்கடித்தது. தானே ஒளியுடல் பெற்றுப் பிரகாசிப்பதாக அவர் உணர்ந்தார் அக்கணத்தி லிருந்து அவர் பேரானந்தப் பெருவெளியில் மிதக்கலானார். எந்நேரமும் களிப்பில் திளைத்து, அந்த மகிழ்ச்சியில் வாய்விட்டுப் பெரிதாக நகைக்கவும் தொடங்கினார். மடத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் அவருக்கு சித்தப் பிரமை பிடித்துவிட்டதாகவே முடிவு கட்டிவிட்டனர். ஆனந்தாம்பா கோமளீஸ்வரன்பேட்டைக்குத் திரும்பியபோது அவருடன் அவரது சகோதரர் அருணாசலமும் கோமளீஸ்வரன்பேட்டைக்கு வந்துவிட்டார். மடத்தின் தலைமைக்கு சரியான வாரிசு இல்லாததால் அவரே மடத்தின் அதிபதியாகப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டார்.

இந்தச் சமயத்தில் அருணாசல சிவாசாரியார் உடல் நலம் குன்றியபோது டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ் அவருக்கு சிகிச்சையளிக்க கோமளிஸ்வரன் பேட்டைக்குச் செல்ல நேர்ந்தது. ஒருமுறை அவர் அருணாசலத்திற்கு சிகிச்சை வருவதைக் கேட்டு அதுபற்றி விசாரித்தார். 



மாடியில் ஒரு பெண் பைத்தியம் இருப்பதாகவும் அதுதான் இப்படி வேளை கெட்ட வேளைகளில் எல்லாம் அர்த்தமின்றிப் பெரிதாகச் சிரிப்பதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறினார்கள். டாக்டர் நஞ்சுண்ட ராவ் சிறந்த தேசபக்தராகவும் இருந்ததோடு, ஆன்மிக நாட்டம் மிக்கவராகவும் இருந்தார். சமூக நலப் பணிகள் பலவற்றில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும் மருந்துகளும் வழங்கி வந்தார். எனவே சென்னை நகரிலும் பிற நகரங்களிலும் அவர் மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.

ஆனந்தாம்பாள் சில சமயங்களில் மடத்திலிருந்து வெளிப்பட்டுக் கோமளீஸ் வரர் ஆலய கோபுர வாசலிலும் தரையில் அமர்ந்து வருவோர் போவோரை யெல்லாம் பார்த்து உலகியலின் அபத்தத்தை எள்ளி நகையாடுவதுபோல் சிரித்துக் கொண்டிருப்பது வழக்கம். ஒருமுறை அதனைக் கண்ட டாக்டர் நஞ்சுண்ட ராவ், அனைவரையும் போல் தாமும் ஆனந்தாம்பாளை புத்தி பேதலித்தவராகவே எண்ணிவிட்டார். ஆனால் மறுமுறை ஆனந்தாம்பாளைக் கண்டபோது ஆனந்தாம்பாள் கண்களின் தீட்சண்யத்தையும், முகத்திலும் விழிகளிலும் ஒளிரும் பிரகாசத்தையும் உற்று நோக்கி, அவருடன் பேசிப் பழக முனைந்தார்.

ஆனந்தாம்பாளை அணுகிய டாக்டர் ராவ், எதற்காக அவர் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டேயிருக்கிறார் என்று கேட்டபோது. எந்நேரமும் ஆனந்தமாக இருப்பதுதான் ஆன்மாவின் இயல்பு என்றும், மகிழ்ச்சியோ துன்பமோ ஸ்தூல, சூட்சும உடல்களைத்தான் பாதிக்குமேயன்றி, உள்ளுறையும் ஆன்மாவை அவை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் இந்த உண்மையை உணராமல் இன்ப துன்பங்களில் உழன்று சலிக்கும் மனிதர்களைக் கண்டுதான் சிரிப்பதாகவும் அவர் கூறினார். அக்கணமே டாக்டர் ராவ் ஆனந்தாம்பாவின் சிறப்பை உணர்ந்து அவரைத் தமது குருவாக ஏற்றுப் பணிந்தார். அவரிடம் மேலும் நெருங்கிப் பழகி, அவர் ஸ்ரீ சக்கர உபாசனை செய்து பக்குவம் பெற்றுள்ளார் என்றும் தெரிந்துகொண்டார். அது முதல் அவரை ஸ்ரீ சக்கரத்தம்மா என்றே குறிப்பிட்டு எங்கும் அவரது பெருமையை எடுத்துக் கூறலானார். இப்பெயர் விரைவில் மக்கள் மொழியில் சக்கரை அம்மா என வழங்கத் தொடங்கி, இதுவும் மிகப் பொருத்தமே என்று, டாக்டர் ராவும் அவ்வாறே குறிப்பிடலானார்.

டாக்டர் நஞ்சுண்ட ராவ் பிரபல பிரமுகராகவும் மெத்தப் படித்தவராகவும் இருந்த போதிலும், சிறிதும் தயக்கமின்றி எழுதப் படிக்கத் தெரியாத ஓர் எளிய பிராமண விதவையான அம்மாவைத் தமது குரு என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயங்கவில்லை . அதன் பயனாக மேலும் பலர் அம்மாவின் பெருமையினை உணர்ந்து அவரை குருவாக ஏற்றனர்.

டாக்டர் ராவ் தமது சொந்த விவகாரங்களிலும் பொதுக் காரியங்களிலும் ஸ்ரீ சக்கரை அம்மாவின் அறிவுரையைக் கேட்டு அதன் பிரகாரமே நடந்து வந்தார். அதனால் அவர் மேற்கொண்ட பணிகள் யாவும் வெற்றி பெற்றன. டாக்டர் ராவ் அம்மாவைக் காசி உள்ளிட்ட பல புண்ணியத் தலங்களுக்கும் தம்முடன் அழைத்துச் சென்றார். ஒருமுறை அவர் அம்மாவைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று அப்போது ஸ்கந்தாசிரமத்தில் இருந்து வந்த பகவான் ஸ்ரீ ரமணரை தரிசித்தார். அப்போது ரமணரிடம் தமக்கு முக்தியளிக்குமாறு அம்மா வேண்ட, உங்களுக்கு ஏற்கனவே முக்தி பிராப்தியாகிவிட்டது என்று ரமணார் கூறினாராம். அம்மாவைப் பற்றிப் பின்னர் ஸ்ரீ ரமணரும் மிக உயர்வாகத் தம் சீடர்களிடம் பேசியதை, தேவராஜ முதலியார் என்ற ஸ்ரீ ரமணரின் சீடர் 'அனுதினமும் பகவானுடன்' என்ற தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

1901 ஆம் ஆண்டு ஸ்ரீ சக்கரை அம்மா டாக்டர் ராவ் மற்றும் சில சீடர்களுடன் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டார். அப்போது, தம் சீடர்களுக்கு என்றென்றும் அருள் பாலித்து வருமாறு அவர் வேண்டிக்கொண்டார். திரும்பி வரும் வழியில் திருவான்மியூரிலேயே ஓர் சவுக்குத் தோப்பைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தை வாங்குமாறு தமது பிரதான சீடரான டாக்டர் ராவிடம் கூறினார். டாக்டரும் அதற்கு சம்மதித்துப் பின்னர் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்புள்ள அந்த இடத்தை வாங்கினார். அம்மா அத்துடன் அமைந்துவிடவில்லை. விரைவில் தாம் தமது ஸ்தூல சரீரத்தைத் துறந்துவிடப் போவதாகவும் அறிவித்தார். தமது உடலை திருவான்மியூரில் தாம் சுட்டிக் காட்டிய இடத்தில் அடக்கம் செய்யுமாறும் டாக்டர் ராவிடம் கூறினார். 

டாக்டர் ராவ் அதனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதெப்படி உங்களால் எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய்விட முடியும் என்று விளையாட்டாகக் கேட்டார். ஆனால் ஸ்ரீ சக்கரை அம்மா தாம் கூறியதை உறுதி செய்ததோடு, தம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் சமாதி எழுப்புமாறு கூறி அங்கிருந்தவாறு தமது சீடர்களுக்குத் தொடர்ந்து ஆசி வழங்குவதாகவும் உறுதி வழங்கினார். தமது சமாதி ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்றும் அதன் பிறகு அதன் மகிமையினை உணர்ந்து பக்தர்கள் திரள் திரளாக அங்கு வந்து கூடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ சக்கரை அம்மா தாம் கூறியது போலவே 1901 ஆம் ஆண்டே பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மாலை 3:30 மணிக்குத் தமது ஸ்தூல உடலைத் துறந்தார். அம்மா தான்சொன்னபடியே மகா சமாதியடைந்து விட்டது குறித்து டாக்டர் ராவ் சொல்லொணா வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தார். பிறகு ஒருவாறு தம்மைத் தேற்றிக்கொண்டு, அம்மாவின் ஸ்தூல உடலை ஊர்வல மாக எடுத்துச் சென்று தாம் வாங்கியிருந்த இடத்தில் அடக்கம் செய்து அதன் மீது சமாதி ஆலயமும் அமைத்து முறைப்படி கும்பாபிஷேகம் செய்து நித்திய

பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார். எனினும் அம்மா சொன்னது போலவே சரியாக ஒரு நூற்றாண்டு கழிந்தபின் 2001-ல் ஸ்ரீ சக்கரை அம்மா ஆலயம் புனருத்தார ணம் செயப்பட்டு 2002-ல் மஹா கும்பாபிஷேகமும் செய்விக்கப்பட்டு, அது முதல் சிறிது சிறிதாகப் பிரபல மடைந்து, ஊடகங்களிலும் ஸ்ரீ சக்கரை அம்மாவின் பெருமைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மக்கள் அவற்றின் மூலமும், மற்றவர்கள் சொல்லக் கேட்டும் திரள் திரளாக ஸ்ரீ சக்கரை அம்மா வின் ஆலயத்திற்கு வந்து அம்மாவின் அருளைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். தம் சீடர்களிடம் வாக்களித்ததற்கு இணங்க, தம்மை நாடி வருவோர்க்கெல்லாம் தமது சமாதியிலிருந்தவாறே தாய்மைப் பரிவுடன் அருள் பாலித்து வருகிறார், ஸ்ரீ சக்கரை அம்மா.

சக்கரை அம்மா சமாதி சென்னை திருவான்மியூரில் கலாட்சேத்திரா சாலை இலக்கம் 75 இல் காமராசர் சாலை கூடும் இடத்தில் உள்ளது. காலை 6 - 10 மணி வரையும் மாலை 4 - 8 மணி வரையும் திறந்திருக்கும். 

இத்தகு சிறப்பு மிக்க ஸ்ரீ சக்கரை அம்மா அவர்களின் குரு  பூஜை 11.03..2022 காலை முதல்  சிறப்போடு  நடைபெற்று வருகின்றது. சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அம்மாவின் ஆசி பெற அன்போடு வேண்டுகின்றோம்.



ஸ்ரீ சக்கரை அம்மா ஆலயம்,
75,கலாஷேத்ரா சாலை,
திருவான்மியூர் 
சென்னை - 41
வலைத்தள முகவரி: https://maps.google.com/?cid=11646644663322697209

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html