அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய குரு நாளில் வழக்கம் போல் அன்னசேவை சிறப்பாக நம் தளம் சார்பில் நடைபெற்றது.மேலும் இம்மாத சேவைகளுக்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுத்துள்ளோம்.தங்களின் பார்வைக்கு கீழே சமர்ப்பிக்கின்றோம்
1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில்
2. திருஅண்ணாமலை அன்னதானம்
3. எத்திராஜ் சுவாமிகள் முதியோர் இல்ல அன்னசேவை
4. தர்ம சிறகுகள் குழு சிறு காணிக்கை
5. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை
6. எண்ணெய் - 1 டின் உபயம்
7. ட்ரீ பேங்க் முல்லைவனம்
8. கிளி சேகர்
இம்மாதம் ஓதிமலை வழிபாடு 09.12.2021, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் ஜெயந்தி 23.12.2021( குறைந்தது சுமார் 5 அகத்தியர் ஆலயங்களுக்கு நம் தளம் சார்பில் சிறு காணிக்கை கொடுப்பது வழக்கம் ) அன்று கொண்டாடபட உள்ளது. இந்த வழிபாட்டிற்கு பொருளுதவி செய்ய வேண்டுகின்றோம்.பொருளுதவி செய்கின்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.இன்று நாம் 18.10.2021 அன்று நடைபெற்ற அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் தரிசனம் பற்றி காண உள்ளோம். சித்தன் அருள் வலைப்பதிவில் இருந்து அப்படியே பகிர்கின்றோம்.
நடந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சென்ற தொகுப்பில் அடியேன் கூறிய "என் இயலாமையை புரிந்து கொண்ட அகத்தியர்............ மறுபடியும் முதலிலிருந்தா, மானசீகமாக என்னால் அது முடியாது என கூறிவிட்டேன், குருநாதரிடம்" என்பதை பல அகத்தியர் அடியவர்களும், தவறாக நிதிநிலைமையுடன் தொடர்புபடுத்தி, உடனேயே அடியேனுக்கு நாங்களும் நிதி தருகிறோம், வழி சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். இது முற்றிலும் தவறு. அடியேனின் உடல் நிலை காரணமாக அதிகமாக உடலால் உழைக்க முடியவில்லை. உழவாரப்பணிக்குத்தான் உதவி தேவை. நிதியால் அல்ல. பூஜையில் பங்கு பெற்று, அருள் பெற்றுக் கொள்ளுங்கள், அது போதும்! எல்லா வருடமும் அகத்தியர் அடியவர்கள் உழவாரப்பணி செய்து பூசையை நிறைவு செய்வதுபோல், இந்த இரண்டாவது பூசையும் நடக்க வேண்டும் என்று ஒரு சிறிய அவா!
பூஜை தினத்துக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளையும் கூறுகிறேன்.
பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோவிலை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒருநாள் அகத்தியப் பெருமானிடம் ஒரு எளிய வேண்டுதலை வைத்தேன்.
"இந்த வருட பூசை மிக சிறப்பாக நடக்க வேண்டும். வரும் அனைவருக்கும் தாங்கள் அருள வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பி, பூசையில் கலந்து கொண்டு மறுபடியும் வீடு சென்று சேரும் வரை தாங்கள் கூட இருந்து காத்தருள வேண்டும்" என்றேன்.
அன்றைய தினம் இரவு பூசையின் பொழுது, அங்கிருக்கும் பூசாரி திரு.சுமேஷ் அவர்களுக்கு நம் குருநாதர் ஒரு உத்தரவை கொடுத்தார்.
"நீ போய் பூசையில் கலந்து கொண்டு, எல்லோருக்கும் கனகத்தை எம் சார்பாக அளித்துவிடு" என்றார். எந்த பூசை? கனகம் என்றால் "தங்கம்" ஆயிற்றே! எதை பற்றி கூறுகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடியேன் அவரை தொடர்பு கொண்டேன். காசை, சித்தர்கள் கானகம் என்றும் கூறுவார்கள். பூசை 18/10/2021 அன்று நடக்கிறது. நிறைய காசை அவரிடம் வைத்து பூசை செய்து கொண்டு வந்து கொடுங்கள்" என்றேன்.
எப்படியெல்லாம் குருநாதர் நம்மை சூழ்ந்து நின்று காக்கிறார் என்பதற்கு, இதுவும் ஒரு உதாரணம்.
அகத்தியர் உத்தரவால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பூசை நாள் வந்தது. இனி நடந்ததை பார்ப்போம்.
அகத்தியப்பெருமானின் அருளால், அன்றைய தினம் ஒரு அர்ச்சகர், திரு.குமார் என்பவர் பூஜைக்கு வந்து சேர்ந்தார். வழியே இல்லை என்று நாம் நினைத்தாலும், நம் குருநாதர் நினைத்தால் எதுவும் நடத்தி தருவார் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு வாரத்திற்கு முன் தாமிரபரணியை கண்டா போகுது, ஓரளவுக்கு ஓடிய நீர், மேலும் வற்ற தொடங்கியது. பெருமாளிடம், அகத்தியரிடம், தாமிரபரணி தாயிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்தேன். அந்தநாள் அன்று நீருக்கு குறைவிருக்கக்கூடாது, என்பதே வேண்டுகோள். முதல் நாள் கூட வற்றிய நிலையில் ஓடிய நதி, அன்றைய தினம் சுழித்துக்கொண்டு ஓடியது. கால் கவனமாக பாதிக்கவில்லை என்றால், கொண்டு போய்விடுவேன் என்கிற வேகம். கண்டதும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.
நிறைய அடியவர்கள், தாமிரபரணி தாய்க்கு விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அனைத்து தாம்பூலமும் நீரை எதிர்த்து ஒரு இடம் வரை சென்றுவிட்டு, திரும்பி நீர் ஓட்டத்தில் சேர்ந்து சென்றது. இதை கண்டவுடன், தாமிரபரணி தாயே, தாம்பூலத்தை வாங்கி, தன இருப்பிடத்திற்கு கொண்டு செல்வதுபோல் இருந்தது. அந்த காட்ச்சியை காணவே இரு கண்கள் போதாது. தன கையினால் தாம்பூலம் கொடுத்தவர்கள், மிக மிக புண்ணியம் செய்தவர்கள், என தோன்றியது.
கோவிலில் நிறைந்த அகத்தியர் அடியவர் கூட்டம். அர்ச்சகர் அபிஷேக பூஜையை மூலவருக்கு முன் நடத்துவதாக தீர்மானம் செய்தார். உள்ளே இடவசதி குறைவாக இருந்ததால் நிறைய அடியவர்கள் வெளியே எப்போதும் அபிஷேகம் நடக்கும் மண்டபத்தில் அமர வேண்டி வந்தது.
நவகும்ப தீர்த்தம் வைத்து ஜெபத்துடன் பூசை தொடங்கியது.
பெருமாளுக்கு தைல காப்பு சார்த்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த எண்ணையை வாங்கிக் கொண்டவர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள். ஏன் என்றால், பாலராமபுரம் அகத்தியப்பெருமான் கோயில் பூஜாரி திரு.சுமேஷ் தன கையால் அனைவருக்கும் கொடுத்தார். அகத்தியர் லோபாமுத்திரையை தொட்டு பூசை செய்கிற கைகள். நம் மீது அவர் விரல் பட்டாலே அகத்தியரை தொட்டு, அவர் சேமித்த அருள், நம் உடலில் பாயும்.
தைலக்காப்புக்குப்பின், அபிஷேகம் தொடங்கியது. பால், தயிர், வாசனாதி தைலப்பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், தேன், இளநீர், பச்சைக்கற்பூரம், என அபிஷேக விதங்கள் நீண்டு சென்றது. உற்ச்சவ மூர்த்தியை கண்டவுடன், அடியேனுக்கு தோன்றியது என்ன வென்றால், ஒரு சின்ன குழந்தையை தலையில் நீர்விட்டு குளிப்பாட்டும்பொழுது, மூச்சு முட்டி கைகளால், முகத்தில் வழியும் நீரை துடைத்துவிட்டு, இன்னும் தலையில் நீர் விட வேண்டும் என சிரித்தபடி பார்க்குமே, அந்த உணர்வுதான் அடியேனுக்கு வந்தது. அத்தனை அழகு.
அபிஷேகம் முடிந்து, அடியவர்கள் கொண்டு வந்த பூக்கள். மாலைகளால் பெருமாளையும், தாயார்களையும், அர்ச்சகர் மிக அழகாக அலங்கரித்தார்.
நான்குவித நிவேதனம் பெருமாளுக்கும், தாயாருக்கும், கொடுக்கப்பட்டு, தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெற்றது.
அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், தீர்த்தம், சடாரி, அபிஷேக மஞ்சள் வழங்கப்பட்டது.
பாலராமபுரம் அகத்தியர் கோவில் சார்பாக, அனைத்து அடியவர்களுக்கும் பூஜாரி திரு.சுமேஷ், "அகத்தியர் படம் பதித்த ஒரு ரூபாய் காசும்", பாலராமபுரம் அகத்தியர் லோபாமுத்திரை படமும், வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக கொடுக்கப்பட்டது.
அனைவருக்கும், அகத்தியப்பெருமான், பெருமாள் சார்பாக, 786,108,354 எங்கள் கொண்ட ரூபாய் வழங்கப்பட்டது.
கூடவே, அகத்தியர் அடியவர்கள் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களும், ப்ரசாதத்துடன் கொடுக்கப்பட்டது.
பூசையை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்டபொழுது, அவரே அங்கிருந்ததாகவும், அடியவர்கள் ஏற்பாடு செய்த பூசையை பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதியாக வந்திருந்து மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டதாகவும், கூறியுள்ளார். அனைவரையும், ஆசிர்வதித்ததாகவும் உரைத்துள்ளார்.
இந்த பூஜையை மிக சிறப்பாக செய்ய உதவிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், குருநாதர் உத்தரவின் பேரில் முன் நின்று நடத்திய திருமதி.லக்ஷ்மி குழுவினருக்கும், கோவில் நிவாகத்திற்கும், லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கும், நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இரண்டாவது அபிஷேக பூசையை பற்றி குருநாதரிடம், நாடியில் ஒரு சில விஷயங்களை கேட்டுள்ளோம். அவர் கண் அசைவுப்படி, விஷயங்கள் நடக்கும். உரிய நேரத்தில் அனைவருக்கு தெரிவிக்கிறோம்.
ஒரு சிறு குறிப்பு:-
"ஏன் அய்யா! உங்களுக்கு மட்டும் இந்த வருடம் இரண்டு பிறந்தநாள் பூசையா? அதன் விசேஷம் என்ன? என வினவியதற்கு, பெருமாளுக்கும் இரண்டாவது பூசையை செய்யச் சொல்கிறார். இதில் என்னவோ ஒரு சூட்சுமம் உள்ளது. அதை பற்றி மேலும் அகத்தியப்பெருமானிடம் கேட்டுள்ளேன். பதில் வந்ததும் தெரிவிக்கிறேன். அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம் டிசம்பர் 23, 2021 அன்று வருகிறது. கொண்டாட விரும்புகிறவர்கள், தயாராகலாம்.
நம்முடைய அனுபவங்களை இனிவரும் பதிவுகளில் தொடர குருவிடம் வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment