"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 7, 2021

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) - ஸ்ரீ ஓதியப்பர் வழிபாடு - 09.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு வழிபாடும் நம்மை இறை நோக்கி ஈர்க்கும். இதில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளும் வழிபாடு நம்மை ஈர்த்து ஆட்கொள்ளும் விதத்தில் அமைந்து வருகின்றது. இதனை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். நம் குருநாதர் இம்மாதம் முழுதும் சில வழிபாடுகளை லோக ஷேமத்திற்காக செய்யும் படி உத்தரவு தந்துள்ளார். இதற்கு முந்தைய பதிவில் கோடகநல்லூர் வழிபாடு பற்றி ஏற்கனவே கூறி இருந்தோம். இன்றைய பதிவில் மேலும் சில வழிபாடுகள் பற்றி குருவருளால் இங்கே கூறுகின்றோம்.

குருதாதர் அருளின்படி, இம்மாதம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ள வழிபாடுகள்.

1. ஓதிமலை - 09.12.2021 - வியாழன்

2. கோடகநல்லூர் - 12.12.2021 - ஞாயிறு

3. உத்தரகோசமங்கை - மார்கழி திருவாதிரை

4. ஶ்ரீ அகஸ்தியர் ஜெயந்தி - 23.12.2021 - வியாழன் - கூடுவாஞ்சேரி மற்றும் அனைத்து ஶ்ரீ அகத்தியர் கோவில்கள்

5. பாபநாச ஸ்நானம் - 16.12.2021 முதல் 13.01.2022க்குள் வருகிறது. 

இங்கு குறிப்பிட்ட நாள்களை பார்த்து கிடைத்தற்கரிய இந்த வழிபாட்டில் இணைந்து குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம். 

 

 மலைக்கு மேலே செல்ல சுமார் 1,880 படிக்கட்டுக்கள். வாகனங்கள் மேலே செல்ல வசதி இல்லை. எனவே, வாகனங்களைக் கீழே நிறுத்தி விட்டு, படியேறிச் சென்றே முருகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். வழியில் விநாயகரைக் கடந்து, கோயிலை நெருங்குவதற்கு முன்பு வரை சற்றே செங்குத்தாக உள்ளது. மற்றபடி, சுலபமான பயணம்தான். மலையில் தண்ணீர் வசதி கிடையாது; கடைகளும் இல்லை.

மிகப் பழைமையான ஆலயம். சுமார் 1,800 வருடங்களுக்கு முற்பட்டதாம். சேரமான் பெருமாள், மனுநீதிச் சோழன், வஜ்ரங்கபாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் காலத்தில் ஆலயத்தின் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றதாம்! அப்போது புண்ணிய நதிகள் பலவற்றிலும் இருந்து கலசத்தில் நீர் சேகரித்து வந்து, குடமுழுக்கு வைபவம் நடந்ததாம். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஓலைச் சுவடிகளில் இருக்கின்றவாம். செங்கற்களால் ஆன இந்த ஆலயம், 1932-ல் கருங்கல் ஆலயமாக திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக வைபவம் அரங்கேறியதாம்.

சிறிய கோயில். ஆலயத்தில் ஸ்ரீவிநாயகர், நாகர், இடும்பன், விஸ்வநாதர், விசாலாட்சி, ராஜராஜேஸ்வரி, சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதி உண்டு. இதை அடுத்து, ஸ்ரீகுமார சுப்ரமண்யரைத் தரிசிக்கிறோம். 28 சிவாகமங்கள் மற்றும் குமார தந்திரம் ஆகியவற்றில் விளக்கப்படாத திருமேனி இது. ஐந்து திருமுகங்கள் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமானின் பின்புறம் மயில் வாகனம். சூர சம்ஹாரத்துக்கு முன்பு அமைந்த தலம் என்பதால், இந்திரனே இங்கு மயிலாக அமர்ந்துள்ளானாம்.

குழந்தை முகம்... அலட்சியம் செய்த பிரம்மனை மிரட்டியதால் முகத்தில் அதிகார தோரணை தென்படுகிறது. ஒரு காலைச் சற்று முன்னே எடுத்து வைத்துக் காணப்படுகின்ற தோற்றம் (இதைச் சற்று கூர்ந்து கவனித்தால்தான் தெரியும்)... அதாவது, 'எதையும் நான் சாதிப்பேன்... உங்களுக்கு உதவுவதற்காக புறப்பட்டு வருகிறேன்' என்பது போல் பக்தர்களுக்கு உதவ முன் வரும் வடிவம்! வலக் கரங்களில் ஒன்று அபய முத்திரையில் இருக்க... மற்ற மூன்று கரங்களில் கத்தி, அம்பு, வஜ்ஜிரம் ஆகியவையும், இடக் கைகளில் ஒன்று வரத முத்திரையில் இருக்க... மற்ற மூன்று கரங்களில் கேடயம், வில், பாசம் ஆகியவையும் காணப்படுகின்றன. அலங்கார சொரூபனை உளமார தரிசிக்கிறோம்.


பிற ஆலயங்களில் இருப்பது போல், பெரிய பீடம் இல்லை. இங்கு திருகு பீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகுமார சுப்ரமண்யர். தரையோடு தரையாக இருக்கும் பீடம் இது!
சிவபெருமானுக்கு ஓம்காரத்தின் பொருளை விளக்கிய நிகழ்வு, மூன்று யுகங்களுக்கு முன்பு  நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பல தலங்களில் தரிசித்திருந்தாலும் ஓதிமலையில் முருகப்பெருமானை தரிசித்து திரும்பும்போது ஏற்படும் பரவச அனுபவம், ஆனந்தமானது; அனுபவித்துப் பாருங்கள், புரியும்!


ஸ்ரீகுமார சுப்ரமண்யரிடம் பூ வைத்து வரம் கேட்டல் எனும் பிரார்த்தனை இங்கு விசேஷம். இல்லறம், திருமணம், தொழில், விவசாயம், வெளிநாட்டு உத்தியோகம் ஆகியவை குறித்து முருகப் பெருமானிடம் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துகின்றனர், இந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள்.வெள்ளை மற்றும் செவ்வரளிப் பூவை, முருகப் பெருமானின் சிரசின் மேல் மேல் ஆலய அர்ச்சகர் வைப்பார். அப்போது அந்தப் பூ, முருகப் பெருமானின் வலது பக்கத்தில் விழுந்தால், அவர் உத்தரவு கொடுத்து விட்டதாக எடுத்துக் கொள்கின்றனர். இடப் பக்கத்தில் விழுந்தால், சிறிது காலம் காத்திருக்க வேண்டுமாம். பூ வைத்து உத்தரவு கேட்பதற்காகவே விசேஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.




ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை. 

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக இப்பொழுதும் கூட கந்தன் அங்கு சுற்றித் திரிகிறான் என்பேன் நல் முறையாக அமர்கிறான் என்பேன் அவனுக்குப் பிடித்த இடம் அங்கே இருக்கின்றது அங்கே சென்று அவன் அமர்ந்த இடத்தில் அமர உங்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பேன். அடுத்த வாக்கில் அந்த இடத்தைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே நல் முறைகளாக யானே சொல்வேன் பொறுத்திருக. 

ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன்  நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன் அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள் அப்பனே அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட .

அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும் பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு. 

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வாறு நல் முறைகள் ஆக பல பெரிய பெரிய அரசர்களும் இவ்வாறு செய்து பல சித்துக்கள் பெற்று விளையாடினார்கள் என்பேன்.

இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் நல்லோருக்கு நான் எப்பொழுதும் உதவிகரமாக இருப்பேன் என்பேன் இச் சூட்சுமத்தை இப்போது யான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு.

அப்பனே எவை என்று கூற அப்பனே நல் முறைகளாக இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே ஓதியப்பனே அங்கிருந்து (ஓதிமலை) நடைபயணமாக பழனிக்கு வருவான் என்பேன் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட இதனை சாந்தி தானம் என்பார்கள் அது ஒரு நாள் மட்டும் நடக்கும் அங்கு எப்பொழுது நடக்கும் என்று கூட யான் சொல்லி விடுகின்றேன் அப்பொழுது நடைபாதையில் நீங்களும் மேலிருந்து கீழே இறங்கினால் அவன் தன் பார்வையில் நீங்கள் பட்டுவிட்டால் அற்புதம் மகன்களே.

அப்பனே ஏன் எதற்கு இதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே போகன் கர்ம நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பொழுது அப்பனே அங்கு வந்து அமர்ந்து விட்டான் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் என்ன செய்வது என்பது கூட தெரியாமல் போய் விட்டது போகனுக்கு.

அதனால் முருகனே வந்து பின் போகனே நீ இவ்வாறு அமர்ந்து இருக்கின்றாயே உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க

போகன் அப்பனே முருகா எந்தனுக்கு ஒன்றுமே தெரியவில்லை இவ்வுலகத்தில். 

எதை எதையோ சாதிக்க நினைத்தேன் பின் எதையும் அனுபவிக்காமல் போய்விட்டேன் உலகத்தை ஆளும் என் தாயவள் புவனேஸ்வரி  அவளும் என்னை கைவிட்டு விட்டாள் என்றெல்லாம் போகன் சொல்ல.

அப்பனே போகா என் தாய் உன்னை கைவிடவில்லை என்று முருகனும் கூற உந்தனக்கு என்ன தேவை என்பது எந்தனுக்கு தெரியும் .

இங்கிருந்து போ அதோ அங்கே ஒரு மலை தென்படுகின்றது அவ் மலைக்கு சென்று வா அங்கே என்னுடைய ஸ்தலத்தை அமைத்துக் கொள் யானும் அதற்கு உதவிகரமாக நிற்பேன் என்று நல் முறையாக முருகனும் வாக்கு உரைத்துவிட்டான். 

ஆனாலும் போகனுக்கு புரியவில்லை எந்தனுக்கு ஏதும் தெரியவில்லை முருகா எங்கு அவ் மலை இருக்கின்றது.

ஆனாலும் முருகன் பின் சொன்னான் அப்பனே என் தந்தையும் நல் விதமாக ஆசிர்வாதம் கொடுத்துவிட்டான் என் தாய் அவளையும் நீ நேசித்து நேசித்து வணங்கி வந்தாய் பின் அவளே என்னிடத்தில் அனுப்பி விட்டாள். 

அதனால் யான் முன்னே செல்கின்றேன் நீ பின்னே வா என்று சொல்ல பின் அன்றைய நாள் மட்டும் இங்கிருந்து நல் முறைகளாக முருகன் பழனிக்கு செல்வான் நடைபயணமாக நடைபாதையில் அப்பொழுது போகனும் கூடவே செல்வான் அந்நாளை யானும் சொல்கின்றேன் எந்த தேதி என்றும்கூட தைப்பூசம் என்கின்றார்களே அதன் முந்தைய தினம் தானப்பா. அதையும் இப்போதே சொல்லிவிட்டேன்.

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே போகன் குழந்தை வேலப்பரை  இங்கு (பூம்பாறை)  செய்து முடித்தான்.

ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.

அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்

ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.

அப்பனே ஆனாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே போகன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஒரு யுகத்தில் பழனியிலும் சமாதி அடைந்து விட்டான். பின் மறு யுகத்திலும் கூட குழந்தை வேலப்பன் முருகன் அடியிலேயே அவன் இருக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் இதுவரை யாரும் உணர்ந்ததில்லை.

அப்பனே அங்கு செல்ல நல் முறையாக முருகனை வணங்க முருகன் வடிவிலேயே போகனையும் வணங்கலாம் என்பேன்.

அப்பனே இது எதனால் வந்தது என்று நீங்கள் கேள்வியும் கேட்கலாம் என்பேன்

இவைதனை உணர அப்பனே பின் நல் முறைகள் ஆகவே  அப்பனே முருகனும் கூறிவிட்டது என்னவென்றால்

யானும் வந்துவிட்டேன் நலன்களாக   செய்துவிட்டேன். மீண்டும் உந்தனக்கு என்ன வேண்டும் போகா என்று கேட்க

பின் நல் முறைகள் ஆகவே போகனும் முருகனிடத்தில் எப்பொழுதும் உன் காலடியிலேயே இருக்க வேண்டும் என்று பணிந்து நின்றான் அதனால் தான் முருகன் தேர்ந்தெடுத்தான் என் காலடியிலேயே இரு அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இரு என்று.

இங்கு வருபவர்கள் அனைத்து நோய்களையும் சீர் படுத்திக் கொள்வார்கள் என்பேன் அப்படி சீர்படுத்தி முடியாவிட்டாலும் சில மூலிகைகள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன். அவ் மூலிகைகளை  பயன்படுத்திக்கொண்டு வாழுங்கள் அப்பனே.

அப்பனே பலமுறை உரைத்தது உண்டு அப்பனே இதுதானப்பா எவ்வாறு என்பதையும் கூட

பழனியப்பன் அப்பனே முறையாய் ஓதியப்பன் பின் வேலப்பன் இதனையெல்லாம் கூர்ந்து பார்த்தால் ஓர் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் இதன் திறமையை.

அப்பனே கூர்ந்து நோக்கினால் பழனி லிருந்து தொடங்கினால் ஒரு வளையம் போல் வரும் இதில்தான் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே! இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் கூர்ந்து கவனித்தால் பக்கத்தில் இருக்கும் திருத்தலங்கள் கூட ஓம் என்று சொல்கின்றார்களே அந்த ஓம் வடிவத்தில் இருக்கும் என்பேன்.

இதனையும் பார்த்து அப்பனே இப்பொழுதும் கூட சொல்கின்றேன் புதிதாக குக்கே சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர் அவ்விடத்திலிருந்து கவனித்தால் அப்பனே தெரியும் வேல் வடிவமாக.

அப்பனே நல் முறைகளாக பல சூட்சமங்கள் உண்டு என்பேன்.

அப்பனே நல்லாசிகள் அனைவரும் ஆறாவது அறிவிற்கு நல் முறையாக வாருங்கள் அனைவருக்கும் நல் முறையாக ஆசிகள் இதன்  சூட்சுமத்தை அடுத்த வாக்கில் சொல்கின்றேன் பலமாக அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

ஓதும் கிரி அது ஓதிய கிரி - ஓம் ஓதிமலை ஆண்டவரே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_16.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

No comments:

Post a Comment