அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
முருகன் அருள் முன்னிற்க, தினம் ஒரு முருகன் ஆலயம் என்ற தொடர் பதிவில் முருகப் பெருமான் ஆலயம் , திருப்புகழ் என முருகப் பெருமான் பற்றி சிந்தித்து வருகின்றோம். இந்த ஆண்டு கந்த ஷஷ்டி இன்னும் ஒரு வாரம் கழித்து (தீபாவளி பண்டிகை) வர உள்ளது. இந்த ஆண்டில் இன்னும் மிக மிக சிரத்தையாக கந்த ஷஷ்டி விரதம் அனுஷ்டிக்க முருகப்பெருமானிடம் வேண்டுகின்றோம். நம் தளத்தின் சேவைகளில் இடைவிடாது தினசரி நீர் மோர் சேவை நடைபெற்று வருகின்றது. இந்த நவம்பர் மாதம் முதல் ரூ.200/-க்கு நீர் மோர் சேவை தினமும் குருவருளால் நடைபெற்று வருகின்றது. மழைக்காலம் என்பதால் ரூ.300 லிருந்து ரூ.200/- என்ற அளவில் நடைபெற்று வருகின்றது. சரியாக 31.10.2023 அன்று இருநூற்றி எட்டாம் நாள் (208 ஆம் நாள் ) சேவையாக மண்பானையில் நீர்மோர் சேவை சுமார் 50 அன்பர்களுக்கு சின்னாளபட்டியில் குருவருளால் நடைபெற்று வருகின்றது. இங்கு நமக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணங்களே முக்கியம் என்பது தெள்ளத் தெளிவாக இந்த நீர் மோர் சேவையில் நம் அன்பர்களால் உணர்த்தப்பட்டோம். அன்பர்களிடம் வெயில் காலம் முடிந்து விட்டது. நீர் மோர் சேவையை தொடரலாமா ? என்று கேட்டதற்கு, தொடரலாம் என்று விருப்பதைக் கூறி, தற்போது வரை பொருளுதவி செய்து வருகின்றார்கள்.
இது போன்று அனைத்து சேவைகளிலும் நமக்கு பொருளுதவி, அருளுதவி செய்கின்ற அனைவருக்கும் இங்கே நன்றிகளைக் கூறி மகிழ்கின்றோம். முருகன் அருள் முன்னிற்க, தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை அருணகிரிநாதரின் வழியில் 5 திருப்புகழ் திருக்கோயில் தரிசனம் கண்டு வந்துள்ளோம்.
முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!
என்று வேண்டி இன்றைய பதிவில் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் காண உள்ளோம்.
1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ்
3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ்
4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்
5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்
6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
8. திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
9. வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில்
10. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
11. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்
12. தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில்
13. தேனி கணேச கந்த பெருமாள் கோவில்
14. குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா!
புரட்டாசி பௌர்ணமி நன்னாளில் நினைத்ததை நடத்தி தரும் தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் [திருப்புகழ் தலம்] காண உள்ளோம்.
திருப்புகழ் 762 மூல முண்டகனு பூதி (திருநல்லூர்)
மூல முண்டகனு பூதி மந்திரப
ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல்
மூது ரம்பலவர் பீட மந்தமுமி
லாத பந்தவொளி யாயி ரங்கிரண
மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம்
ஓல மென்றுபல தாள சந்தமிடு
சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம்
ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ
சூலி யந்தரிக பாலி சங்கரிபு
ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே
சூர சங்கரகு மார இந்திரச
காய அன்பருப கார சுந்தரகு
காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா
சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே
தேவ ரம்பையமு தீண மங்கைதரு
மான ணைந்தபுய தீர சங்கரதி
யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவில் [TM014522]
நல்லூர்-614208
[திருநல்லூர்-614208]
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: கும்பகோணம் 13 கிமீ, தஞ்சாவூர் 38 கிமீ, பாபநாசம் 5 கிமீ
மூலவர்: கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)
அம்மன்: கல்யாணசுந்தரி (கிரிசுந்தரி)
உற்சவர்: கல்யாண சுந்தரேஸ்வரர்
திருப்புகழ் தெய்வம்: சுப்பிரமணியர்
தேவியர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
புராணப்பெயர்: திருநல்லூர்
வேறு முக்கிய தெய்வம்: அஷ்ட புஜ மகா காளிகாம்பாள்
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: சப்தசாகரம் [ஏழு கடல்]
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர் (1)
தலமகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோவில் நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவிலும், தஞ்சாவூர் நகரத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும், பாபநாசம் வட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும், சுந்தரபெருமாள் கோவில் ரயில் நிலையம் மற்றும் கபிஸ்தலத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் நினைத்ததை நடத்தி தரும் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர் குடியிருக்கும் சிறப்பு மிக்க கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். எனவே ஈசன் இத்திருத்தலத்தில் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இக்கோவிலில் அம்பிகையாக கல்யாணசுந்தரி (கிரிசுந்தரி) வீற்றிருந்து அருள்கின்றார். இத்திருத்தலம் ஒரு சிறப்பு மிக்க கல்யாண பரிகார தலமாகும்.
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமானால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தலங்களில், இது 20-வது தலமாகும். இங்குதான் இறைவன் திருநாவுக்கரசருக்கு (அப்பர் பெருமான்) திருவடி சூட்டியதாக (திருவடி தீட்சை) கருதப்படுகிறது. ஆதலால் பெருமாள் கோவிலைப் போல சடாரி வழக்கம் இங்கு உள்ளது.
தணிகை மணி அவர்கள் இத்திருத்தலம் திருஞானசம்பந்தர் முக்தி பெற்ற தலம் என்று கூறியுள்ளார். அமர்நீதி நாயனார் வாழ்ந்த திருத்தலம் இது. அவரது மடம் கோவிலுக்கருகில் உள்ளது. அமர்நீதி நாயனாரை சிவன் இத்தலத்தில் ஆட்கொண்டார். குந்திதேவி தன் தோஷம் நீங்க இத்தல தீர்த்தத்தில் நீராடினார். அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சியைக் காட்டியருளினார். அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலவரின் பின்புறத்தில் காணலாம்.
அருணகிரிநாதர் திருநல்லூர் திருத்தலத்தில் முதல் சந்நிதியில் வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “மூல முண்டகம்” என்று திருப்புகழ் பாடல் தொடங்கி “தியாகர் வந்து உறை ந(ல்)லூர் அமர்ந்து வளர் – தம்பிரானே” என்று போற்றி பாடியுள்ளார்.
இங்கு சுயம்புவாகத் தோன்றிய மூலவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைப்பார்கள். அகத்தியருக்குத் தம் திருமணக் கோலத்தைக் காட்டி அருளியமையால் கல்யாண சுந்தரர் (கல்யாண சுந்தரேஸ்வரர்) என்பதும் இவரது திருநாமம். அமர்நீதி நாயனார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் ஆண்டார் என்பது மற்றொரு திருநாமம். பேரழகு கொண்டவரானதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் பெயர் கொண்டு விளங்குகிறார்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரவசத்திற்காக வளைகாப்பு நடத்துகின்றனர். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதிருக்கும் ஆண்களும், பெண்களும் இங்கு வந்து கல்யாண சுந்தரேஸ்வரரை மாலை சூட்டி வழிபட்டு, பின் ஒரு மாலையை வாங்கி, அணிந்து பிரகாரம் வலம் வந்தால், திருமணத்தடை அகன்று, திருமணம் விரைவில் நடைபெறுகிறது.
தல வரலாறு:
திருவானைக்கா ஜம்புலிங்கப் பெருமானை முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்டு, அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தார் என்கிறது தல வரலாறு. இவர் சிவபெருமானுக்கு யானை ஏறாத மாடமாக எழுபது கோவில்களை அமைத்தார். அந்த வரிசையில் பெரிய அளவில் அமைந்த கோவிலே திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலாகும். இத்தலத்துப் பெருமானைத் திருநல்லூர் உடைய நாயனார் என்றும், தல விநாயகரை அகம்படி விநாயகர் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 30.08.2013-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
திருநல்லூர் திருக்கோவிலுக்கு முன் சப்தசாகரம் [எழு கடல் சங்கமம்] தீர்த்த குளம் அமைந்துள்ளது. கிழக்கே 7 நிலை மாடத்துடன் கூடிய ராஜகோபுரமும், மேற்கில் சிறிய கோபுரமும் உள்ளது. கொடி மரம், அதிகார நந்தியை தாண்டியவுடன் காசி விநாயகர் கிழக்கு நோக்கி அருள்கின்றார். அடுத்து கருவறைக்கு ஏறி செல்லும் படிக்கட்டுகள் யானை ஏற முடியாத வண்ணம் உள்ளது. இப்படி இருக்கும பல கோவில்களில் இக்கோவில் ஒரு பெரிய மாடக்கோவிலாகும். கருவறையில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) சுயம்பு லிங்கத் திருமேனியாக திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். கருவறை வாசலுக்கு அருகில் அம்பிகை கல்யாணசுந்தரி (கிரிசுந்தரி) தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கின்றார்.
முதல் பிரகாரத்தில் கருவறைக்கு நேர் பின்னால் அருணகிரி பெருமானால் பாடப் பெற்ற திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர் ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு கருணை பொங்க அருள்பாலிக்கின்றார்.
மேலும் முதல் பிரகாரத்தில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், நால்வர், 63 நாயன்மார்கள், உற்சவர், சப்தகன்னியர், கன்னி விநாயகர், பல லிங்க திருமேனிகள், சோமாஸ்கந்த மூர்த்தி, மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஆனந்த நடராஜர், அமர்நீதி நாயனார், குந்தி வழிபடும் கோலம், மங்கயர்க்கரசி, சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் வீற்றிருந்து அருள்கின்றனர். கோஷ்டத்தில் உச்சிஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி அருள்கின்றனர். வெளிப்பிரகாரத்தில் ஆற்றல் மிக்க அஷ்ட புஜ மகா காளிகாம்பாள் தனி சந்நிதியில் 16 திருக்கரங்களுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
மாசி மகம் திருவிழா, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம்
பிரார்த்தனை:
நினைத்தது நடக்க, எல்லா நலம் பெற, திருமணத்தடை அகல, சுகப்பிரசவம் வேண்டி
நேர்த்திக்கடன்:
முடிக்காணிக்கை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-12.30 மாலை 4-9
நலம் தரும் தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரருடன் (பஞ்சவர்ணேஸ்வரர்) சுப்பிரமணியரையும் தரிசித்து பயன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment