"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 31, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, இதற்கு முந்தைய பதிவில்  தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி அறிந்து கொண்டோம். இன்றைய பதிவில் திருப்புகழ் தலக் கோயிலாக  திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் தரிசனமும், அங்கே பாடப்பெற்ற மூன்று திருப்புகழ் படிக்க உள்ளோம்.

இறவாமற் பிறவாமல், பந்தப்பொற் பார, மனத்திரைந்தெழு என்று மூன்று திருப்புகழ் பாடப்பெற்ற திருப்புகழ் தலமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் அமைந்துள்ளது. முதலில் திருப்புகழ் படித்து மகிழ்வோம்.

திருப்புகழ் 943 இறவாமற் பிறவாமல்  (அவிநாசி)

தனதானத் தனதான தனதானத் ...... தனதான

......... பாடல் .........

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.


திருப்புகழ் 944 பந்தப்பொற் பார  (அவிநாசி)

தந்தத்தத் தானன தானன
     தந்தத்தத் தானன தானன
          தந்தத்தத் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

பந்தப்பொற் பாரப யோதர
     முந்திச்சிற் றாடகை மேகலை
          பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே

பண்டெச்சிற் சேரியில் வீதியில்
     கண்டிச்சிச் சாரொடு மேவியெ
          பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய்

கொந்துச்சிப் பூவணி கோதையர்
     சந்தச்செந் தாமரை வாயினர்
          கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங்

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
     மண்டிச்செச் சேயென வானவர்
          கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே

அந்தத்தொக் காதியு மாதியும்
     வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
          அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி

அங்கத்தைப் பாவைசெய் தாமென
     சங்கத்துற் றார்தமி ழோதவு
          வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
     வெந்துக்கத் தூளிப டாமெழ
          சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
     கொங்கிற்றொக் காரவி நாசியில்
          தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.


திருப்புகழ் 945 மனத்திரைந்தெழு  (அவிநாசி)

தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
     கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
          மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி

வருத்த முந்தர தாய்மனை யாள்மக
     வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
          வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட

எனைக்க டந்திடு பாசமு மேகொடு
     சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
          லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான்

இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
     பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
          இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும்

கனத்த செந்தமி ழால்நினை யேதின
     நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
          கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக்

கடற்ச லந்தனி லேயொளி சூரனை
     யுடற்ப குந்திரு கூறென வேயது
          கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா

அனத்த னுங்கம லாலய மீதுறை
     திருக்க லந்திடு மாலடி நேடிய
          அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா

அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
     நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
          யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.



படம் 1 காசிக்கு நிகரான கேட்டாலே முக்தி தரும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருங்கருணை நாயகி சமேத அவிநாசியப்பர் கோவில்


அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்

அவிநாசி-641654

திருப்பூர் மாவட்டம்

இருப்பிடம்: திருப்பூர் 13 கிமீ, கோயம்புத்தூர் 43 கிமீ

மூலவர்: அவிநாசியப்பர், அவிநாசிநாதர், அவிநாசி ஈஸ்வரர், அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிலிங்கம். பெருங்கேடிலியப்பர்

அம்மன்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி

திருப்புகழ் நாயகன்: முருகப்பெருமான்

தலவிருட்சம்: பாதிரிமரம்

தீர்த்தம்: காசிக்கிணறு, நாகக்கன்னிகை தீர்த்தம், ஐராவத தீர்த்தம்

புராணப் பெயர்: திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி

பாடல்: சுந்தரர், அருணகிரிநாதர் (6 திருப்புகழ் பாடல்)

பழமை: 7-ம் நூற்றாண்டு 

 தலமகிமை:

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களில் முதன்மையான தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி நல்லாற்றின் கரையில் அமைந்துள்ள அவிநாசியப்பர் கோவில் என்பது சிறப்பு. இக்கோவில் 274 சிவாலயங்களில் 205-வது தேவாரத் தலமாகும். இத்தலத்தில் அவிநாசியப்பருடன் கருணையே உருவான பெருங்கருணை நாயகி, திருப்புகழ் பாடல் பெற்ற முருகப்பெருமான், சிறப்பு மிக்க நர்த்தன விநாயகர் ஒருங்கே அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலவிருட்சமான பாதிரிமரம் சித்திரை பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூ பூக்கும். மற்ற சமயங்களில் பூக்காதது என்பது இத்திருத்தலத்தில் மட்டுமே நடைபெறும் அதிசயம். இத்தலத்தில் முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது நம்பிக்கை.

அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இங்கு பாலதண்டாயுதபாணி, சுப்பிரமணியர், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதிகள் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் அருள்கின்றார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் உள்ளது. அருணகிரிநாதர் சுப்பிரமணியர் மீது 6 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.  கோவில் நுழைவாயிலில் ஆனந்தவயப்பட்டு ஆடும் நர்த்தன விநாயகரை தரிசித்தால், வாழ்வு ஆனந்தமயமாகும் என்பது நம்பிக்கை. ஆடல்வல்லானின் மகன் கணபதியை நிருத்த கணபதியாக தரிசித்தால், கலைகளில் தேர்ச்சி பெறலாம் என்பதும் நம்பிக்கை.

சித்திரை பிரம்மோற்சவம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. பூரம் நட்சத்திரத்தன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். 5-ம் நாளன்று 63 நாயன்மார்களுக்கு ஈசன் ரிஷபரூடராக தரிசனம் தருவது சிறப்பு. இக்கோவில் கும்பாபிஷேகம் 1980 ,1993, 2008-ல் சிறப்பாக நடைபெற்றது.     

 தல வரலாறு:

ஊழிக் காலத்தில் தேவர்கள் அஞ்சி புகுந்ததனால் திருப்புக்கொளியூர் (விநாசம் இல்லாததால்) அழியாத தன்மையுடையது. வாரணவாசியில் (காசி) இருந்து ஒரு கிளை விட்டு தென்பகுதியில் கொங்குவளநாட்டில் காஞ்சிமா நதியின் தென்புறம் வேர் ஒன்று சுயம்பாக அவிநாசியப்பர் என்ற திருநாமத்துடன் வெளிப்பட்டது. சுவாமியின் வேர் வரும்போது கூபம் வடிவில் கங்கை நதி வந்ததாக வரலாறு. பார்வதி தேவி வலப்பாகம் வேண்டி பாதிரி மரம் அடர்ந்த இவ்வூரின் பாதிரி வனத்தில் 1000 ஆண்டுகள் தவமியற்றி பெருங்கருணாம்பிகை என்னும் நாமத்துடன் வலப்பாகம் பெற்றார். பிரம்மன் (100 ஆண்டுகள்) ஐராவதம் என்னும் வெள்ளை யானை (12 ஆண்டுகள்) தாடகை (3 ஆண்டுகள்), நாகக்கன்னி (21 மாதங்கள்) வழிபட்டனர். வியாதவேடர்கள், சங்ககண்ணன், யக்ஞ குப்தன், காகம், தருமசேன மகாராஜா ஆகியோர் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம் இதுவாகும். 


இவ்வூரில் வாழ்ந்த கங்காதரசர்மா வேதபதுமை தம்பதிகளின் குமாரன் அவிநாசிலிங்கம் மற்றும் அவனது நண்பன் தாமரைக்குளம் என்னும் தடாகத்தில் நீராட சென்றபோது அவிநாசிலிங்கத்தை முதலை விழுங்கியது. மூன்றாண்டுகளுக்கு பின் அவிநாசிலிங்கத்தின் நண்பனுக்கு உபநயனம் நடந்தது. அது சமயம் அவிநாசியப்பரை வழிபட சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது பரிவாரங்களுடன் திருப்புக்கொளியூர் அடைந்தபோது, ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. அவிநாசிலிங்கம் பெற்றோர்களை சந்தித்து விவரமறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் குளக்கரைக்கு சென்று `’எற்றான் மறக்கான்’ என்று தொடங்கும் தேவாரப் பதிகம் பாடி மூன்றாண்டுக்கு முன் முதலையுண்ட பாலகனை (அவிநாசிலிங்கம்) மூன்றாண்டு வளர்ச்சியுடன் வரவழைத்து அற்புதம் நடத்திய தலமாகும். இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் 3-வது நாளில் நடைபெறுகிறது. 

தல அமைப்பு:

7 நிலை ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நர்த்தன கணபதி சிலைகள் உள்ளன. மண்டபத் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்த தாண்டவர் மற்றும் தில்லை காளியின் சிலைகள் உள்ளன. இத்தலத்தின் மூலவர் அவிநாசியப்பர். இவர் சுயம்பு  லிங்கமாக அருள்பாலிக்கின்றார். இவருக்கு அவிநாசிநாதர், அவிநாசி ஈஸ்வரர், அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிலிங்கம். பெருங்கேடிலியப்பர் என்ற திருப்பெயர்களும் உள்ளன. அம்பிகை கருணாம்பிகை என்ற பெருங்கருணை நாயகியின் சந்நிதி மூலவரின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் உள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதனால் விஷ ஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. விஷ ஜந்துக்கள் கனவிலோ, நேரிலோ வந்து பயம் கொள்ள வைக்காது.

திருப்புகழ் தெய்வமான முருகப்பெருமான் இத்தலத்தில் சுப்பிரமணியர் என்ற திருபெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக பேரழகு திருக்கோலத்தில் மூலவருக்கு பின்னால் வடமேற்கு கோஷ்டத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். உள்பிரகாரத்தில் கன்னி கணபதி, வட கிழக்கில் காரைக்கால் அம்மையார், 63 நாயன்மார் சிற்பம், பாலதண்டாயுதபாணி, செந்திலாண்டவர், ஆஞ்சநேயர், காலபைரவர், நவக்கிரகங்கள், சந்நிதிகளில் அருள்கின்றனர். நடராஜர் மண்டபத்தில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் உள்ளார். பஞ்ச தாண்டவ தலங்களில் இதுவும் ஒன்று.

திருவிழா:

சித்திரை பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்,   ஆடிப்பூரம், நவராத்திரி, தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி

பிரார்த்தனை;

கேட்டாலே முக்தி பெற, அழிக்க முடியாத சக்தி அருள, பயங்கள் விலக, தோல் நோய்கள், விஷக்கடி குணமாக, சனி தோஷம் விலக, திருமணப்பேறு, மாங்கல்ய பாக்கியம் வேண்டி, குடும்ப பிரச்னை தீர, தொழில், வியாபாரம் செழிக்க, புதிய கணக்கு தொடங்க, பிறவாத்தன்மை, அழியாப்புகழ் பெற, கலைகளில் தேர்ச்சியடைய  

நேர்த்திக்கடன்: 

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 6-1 மதியம் 4-8



படம் 2 - அழியாப்புகழ் கிடைக்க அருளும் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் வள்ளி தெய்வானையுடன் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருங்கருணை நாயகி சமேத  அவிநாசியப்பர் மற்றும் முருகப்பெருமானை ஓருங்கே வணங்கினால் அழியாப்புகழ் பெற்றிடலாம்! 

வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

 திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா - 30.08.2023  - https://tut-temples.blogspot.com/2023/08/30082023.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

No comments:

Post a Comment