"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 30, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, இன்றைய குரு நாளில் இன்று முதல் தினமும் ஒரு முருகன் ஆலய தரிசனம்,தல புராணம், தினம் ஒரு திருப்புகழ் என காண இருக்கின்றோம்.  இதற்கு உறுதுணையாக கோயம்புத்தூரை சேர்ந்த திரு. முத்துக்குமரன் ஐயாவிற்கு நன்றி கூறி மகிழ்கின்றோம்.  இன்றைய பதிவில் நாம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி காண உள்ளோம். இத்திருத்தலம் திருப்புகழ் தலமாகவும் அமைந்துள்ளது. எனவே வாக்கிற்கு அருணகிரி என போற்றப்படும் திருவலிதாயம் திருப்புகழ் படித்து பதிவை தொடங்குவோம்.

திருப்புகழ் 685 மருமல்லி யார்  (திருவலிதாயம்)

தனதய்ய தானதன ...... தனதான

......... பாடல் .........

மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்

மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்

இருநல்ல வாகுமுன ...... தடிபேண

இனவல்ல மானமன ...... தருளாயோ

கருநெல்லி மேனியரி ...... மருகோனே

கனவள்ளி யார்கணவ ...... முருகேசா

திருவல்லி தாயமதி ...... லுறைவோனே

திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.




குரு தோஷம் போக்கும் திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

தலமகிமை:

சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 4 கிமீ தொலைவில், ஆவடி செல்லும் சாலையில், பாடி லூகாஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள படவேட்டம்மன் கோவிலுக்கெதிரே உள்ள சாலை வழியாகச் சென்றால் குரு தோஷம் நீக்கும் திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவிலை சென்றடையலாம். குரு பகவான், பரத்வாஜர் (வலியன்-கருங்குருவி), மகா விஷ்ணு, பிரம்மா, ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், அக்னி பகவான், நட்சத்திர தேவதைகள் முதலானோர் இத்தல் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார்கள். இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.

தற்போது சென்னையில் உள்ள 'பாடி' என்னும் இடமே 'திருவலிதாயம்' என்னும் பெயர் பெற்ற தலமாகும். இத்திருத்தலம் தேவாரம் (திருஞானசம்பந்தர்) மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில் இது 21-வது தலமாகும். 274 சிவாலயங்களில் இது 254-வது தேவாரத்தலமாகும். அருணகிரியார் இத்தலத்து திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து ‘மருமல்லி யார்குழலின்……மடமாதர்’ எனும் தொடங்கும் திருப்புகழ் பாடலில் “திருவல்லிதாய மதி……லுறைவோனே’ என்று போற்றி பாடியுள்ளார்.

இத்தல தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போது சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் கிட்டும். எனவே இத்தலத்தை குரு பரிகாரத் தலம் என்கின்றனர்.

பிரம்மாவுக்கு கமலி, வல்லி என இரு பெண்கள் தோன்றினர் என்றும், அவர்களை விநாயகர் மணந்து கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் மணக்கோலத்தில் உள்ள விநாயகருக்கு மாலை அணிவித்து வழிபட்டால், நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கியிருந்து, சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வியாழ பகவான் எனப்படும் குரு, தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தார். அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவித்தவர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார். இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார். அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார்; அச்சாபம் நீங்க இத்தலத்து வந்து தீர்த்தம் உண்டாக்கி, இறைவனைப் பூசித்துச் சாபம் நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறு.

தல அமைப்பு:

இக்கோவில் ராஜகோபுரம் 3 நிலைகள் உடையது. இந்த ஆலயத்தின் கருவறையில் மூலவர் வலிதாயநாதர், வல்லீஸ்வரர் என்ற திருப்பெயர்களில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இவருக்கு மேல் உள்ள விமானம் கஜ பிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது. இறைவி தாயம்மை என்ற பெயரில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர், வரசித்தி விநாயகராக அருள்கின்றார். குரு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். மேலும் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சூரியன், சோமாஸ்கந்தர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரத்வாஜ் முனிவர் வழிபட்ட சிவலிங்கம், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்கின்றனர்.

உள் பிரகாரத்தை சுற்றி வருகையில் கருவறையின் பின்புறம் திருப்புகழ் நாயகன் சுப்பிரமணிய சுவாமி ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் வள்ளி, தெய்வானை உடனிருக்க தனி சந்நிதியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருணகிரி பெருமான் இப்பெருமானை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார்.

திருவிழா:

சித்திரை பிரம்மோற்சவம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், குருப்பெயர்ச்சி, பிரதோஷம், பவுர்ணமி

பிரார்த்தனை:

குரு தோஷம் போக்க, வாழ்வில் திருப்பம் பெற, திருமணத்தடை அகல, நோய்கள் நீங்க, ஞானம் சிறக்க, நற்பேறு கிட்ட

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்

திறக்கும் நேரம்:

காலை 6.30-12 மாலை 4.30-8.30

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்

திருவலிதாயம்

பாடி

சென்னை-600050

சென்னை மாவட்டம்

இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 4 கிமீ, சென்னை சென்ட்ரல் 12 கிமீ

மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடைய நாயனார், திருவலிதாயநாதர்

அம்பாள்: ஜெகதாம்பிகை, தாயம்மை

திருப்புகழ் நாயகன்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை மரம்

தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம்

புராணப்பெயர்: திருவலிதாயம்

பாடியவர்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1)

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

திருப்பம் தரும் திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் மற்றும் சுப்பிரமணிய சுவாமியை சென்னி மேல் சூட்டி வணங்குவோம்!

நன்றி: https://muthukumaranbami.blogspot.com

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா - 30.08.2023  - https://tut-temples.blogspot.com/2023/08/30082023.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

No comments:

Post a Comment