"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 14, 2023

திருவையா றகலாத செம்பொற் சோதீ - அப்பர் கயிலாய காட்சி - 16.08.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முதலில் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரக் காற்றுக்கு எத்தனை எத்தனை போராட்டங்கள். எத்தனை எத்தனை இழப்புகள். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். இதற்கு நாம் என்றும் நம் நன்றிக்கடனை செலுத்த வேண்டும்.இதனை மனதில் என்றும் நிறுத்தி,  இன்றைய நன்னாளில் விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட அனைத்து வீரர்களை மதித்து போற்றுவோம்.

குருவருளால் நம் குழு சார்பில் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. மோர் தானம் 100 நாட்களை கடந்து சென்று கொண்டு உள்ளது. வியாழன் தோறும் நம் குழு சார்பில் 10 பேருக்கு அன்னசேவை செய்து வருகின்றோம். இந்த நிலையில் மீண்டும் குருவருளால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருவாசகம் வகுப்பில் இணைந்து திருவாசகத் தேனை பருகி வருகின்றோம். இதனை மன்னார்குடி திரு.ரெங்கசாமி ஐயா அவர்கள் தினந்தோறும் நமக்கு அளித்து வருகின்றார்கள். இதில் நாளைய தினம் அப்பர் கயிலாய காட்சி பற்றிய சிறப்பு சொற்பொழிவு காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆலய தரிசனத்தோடு நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டி அழைக்கின்றோம். நாளை திருவையாற்றில் நடைபெற உள்ள அப்பர் கயிலாய காட்சி நிகழ்வின் நிரலை பதிவின் நிறைவாக காணலாம்.


இன்று ஆடி மாத அமாவாசை. அப்பர் கயிலை காட்சி திருநாள் அதாவது திருநாவுக்கரசு சுவாமிகள் திருவையாற்றில் கயிலைக் காட்சியை தரிசித்த நாள். கயிலை தரிசனம் பெற ஒவ்வொருவரும் ஏங்குவது உண்டு. அந்த கயிலை காட்சி தரிசனம் திருவையாற்றில் நாம் காணலாம். இதனை இன்னும் இன்றைய பதிவில் காண உள்ளோம்.




அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். 

இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிஅமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம். 

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை,தை அமாவாசை,புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும். ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. 

அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன அதிலும் ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. 

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமாரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் ,பவானி , போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும் அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள். தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டார்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர். 

ஆடி அமாவாசையன்று , தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. 

எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம் ராகு - கேது தோஷம் சர்ப்ப தோஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குள வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சவுபாக்கியங்களுடன் வாழ்வர். 




இறைவர்:-
அருள்நிறை பஞ்சநதீஸ்வரர், ஐயாறப்பர், செம்பொற்சோதீஸ்வரர்.

இறைவி:
அருள்தரும் அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.

தலம்:-
திருவையாறு
(இத்தலம் தஞ்சாவூருக்கு வடக்கே பத்து கி.மீ. தொலைவில் உள்ளது, கும்பகோணத்தில் இருந்தும் செல்லலாம்)

தல மரம்:
வில்வம்

தீர்த்தம் :
சூரியபுட்கரணி, காவிரி.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் - மூவராலும் பாடல் பெற்ற தலம்.

மூவர் பெருமக்களும் சேர்ந்து பதினெட்டு திருப்பதிகங்களை பாடி உள்ளனர்.

திருநந்தி தேவர், மகாலட்சுமி, இந்திரன், வருணண், வாலி, சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.

 பெயர்க் காரணம்:-

 திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், திருஐயாறு (திருவையாறு) எனப்பெயர் பெற்றது.

சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)

 நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக "திருவையாறு" என அழைக்கப்படுகின்றது.

 இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம்.

இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

 அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

 சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

 இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.


தேவாரப் பாடல்கள் :
1. சம்பந்தர்

1. கலையார் மதியோடு (1-36),
2. பணிந்தவர் அருவினை (1-120),
3. புலனைந்தும் பொறிகலங்கி (1-130),
4. கோடல் கோங்கங் (2-6),
5. திருத்திகழ் மலைச்சிறுமி (2-32) என ஐந்து திருப்பதிகங்களைப் பாடி உள்ளார்.

2. அப்பர்

1. மாதர் பிறைக்கண்ணியானை (4-3),
2. விடகிலேன் அடிநாயேன் (4-13),
3. கங்கையை சடையுள் (4-38),
4. குண்டனாய்ச் சமணரோடே (4-39),
5. தானலா துலக மில்லை (4-40),
6. அந்திவட் டத்திங்கட் (4-99),
7. குறுவித்த வாகுற்ற (4-91),
8. சிந்திப் பரியன (4-92),
9. சிந்தை வாய்தலு (5-27),
10. சிந்தை வண்ணத்த (5-28),
11. ஆரார் திரிபுரங்கள் (6-37),
12. ஓசை யொலியெலா) (6-38) என 12 திருப்பதிகங்களை பாடியுள்ளார்.

3. சுந்தரர்

  (1)பரவும் பரிசொன் (7-77). (ஒரு பதிகம் பாடியுள்ளார்)

சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

 நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழாவில் இத்தலத்து இறைவன் தனைத்தானே பூசித்தது ஆத்மபூஜை என்ற உத்ஸவம் நடக்கிறது.

சப்தஸ்தான தலங்கள் என அழைக்கப்படும் (1)திருவையாறு, (2)திருப்பழனம், (3)திருச்சோற்றுத்துறை, (4)திருவேதிகுடி, (5)திருக்கண்டியூர், (6)திருப்பூந்துருத்தி மற்றும் (7)திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம்.

சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர்.

இத்தலத்து திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய  பதிகத்திலிருந்து ஒரு பாடல்:-

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.




திருவையா றகலாத செம்பொற் சோதீ தரிசனம் மேலே நாம் பெற முடிகின்றது அல்லவா? அப்படியே அப்பரின் சொல்லை கேட்போமா?


    திருநாவுக்கரசர் கண் முன் கயிலைக் கோயில் காட்சி தோன்றிற்று. மால் அயன் இந்திரன் முதலானோர் போற்றும் ஒலி கேட்டது. \ 1641 \ 5.1.375
    தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர் மாதவர் முனிவர்கள் நிறைந்திருந்தனர். அரம்பையர் முழவு இசைத்துக்கொண்டு அடிப் பாடினர். \  1642 \ 5.1.376
    கங்கை ஆறு ஓடிற்று, கணநாதர்கள், பூத வேதாளங்கள் “போற்றி” என்று இசைத்தன்னர். \ 1643 \ 5.1.377
    வெள்ளிமலை இரண்டு என்பது போல் தோன்றிற்று. திருமால் சிவன் ஏறும் விடையாக நின்றார். நந்தி நடுவில் ஆடினார். \ 1644 \     5.1.378
    மரகதக் கொடி பவள மலையில் படர்ந்திருப்பது போல, மலைமகளுடன் சிவன் நிற்பதைக் கண்டார். \ 1645 \ 5.1.379
    கண்டு ஆடினார் பாடினார் அழுதார். \ 1646 \ 5.1.380
    தாண்டகங்கள் பாடினார். \ 1647 \ 5.1.381
    நாவுக்கரசு திருவையாற்றில் இருப்பதை உணருமாறு கயிலைக் காட்சிகளைத் தொலைவில் தோன்றும்படிச் செய்தார். \ 1648 \ 5.1.382
    கண்டது சிவன் அருள் எஎன உணர்ந்தார். \ 1649 \ 5.1.383
    “மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி” என்று தொடங்கிப் பாடினார். \ 1650 \ 5.1.384


பாடல்

1641 
காணும் அப் பெருங்கோயிலும் கயிலை மால் வரையாய்ப்
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத்
தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க  5.1.375

1642 
தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப     5.1.376

1643 
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கணநாதர்கள் இறைஞ்சப்
பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற    5.1.377

1644 
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக 5.1.378

1645 
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப் பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் 5.1.379

1646 
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்  5.1.380

1647 
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர் 5.1.381

1648 
ஆய ஆறு மற்று அவர் மனம் களிப்பு உறக் கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித்
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ 5.1.382

1649 
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்
செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து
வையம் உய்ந்திட, கண்டமை பாடுவார் மகிழ்ந்து   5.1.383

1650 
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்தமிழ்ச் சொல்லால் குலவு திருப் பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்     5.1.384

    சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்



திருவையாறு அப்பர் கயிலைக்காட்சி பெருவிழா 

திருக்கயிலாய பரம்பரை #தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான பூலோக கயிலாயம் #திருவையாறு #ஸ்ரீ_அறம்வளர்த்தநாயகி உடனாகிய #ஸ்ரீ_ஐயாறப்பர் திருக்கோயிலில், #ஆடி_அமாவாசை அன்று சைவ சமய பெரியார் #திருநாவுக்கரசர் (அப்பர்) பெருமானுக்கு, இறைவன் கயிலைக்காட்சி வழங்கிய அற்புத விழா கீழ்க்கண்டவாறு தருமையாதீன #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் Dharumai Adheenam திருமுன்னர் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது!!!

நாள்: (16/08/23) - புதன் 

நிகழ்ச்சி நிரல்

காலை 9:00 மணி : -                                             

திருக்கோயில் திருவோலக்க மண்டபத்தில் (உற்சவ புறப்பாடு மண்டபம்) சுவாமி பெரிய வெள்ளி ரிஷப வாகனம், அம்பாள் சிறிய வெள்ளி ரிஷப வாகனம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ தனுசு சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனித்தனி விமானங்களில் சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாரதனையோடு, கோபுர தரிசனம் கண்டு புறப்பாடாகி சிவகண வாத்தியம் முழங்க தெற்கு வீதி பூசை படித்துறை தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளல்!!!! 

காலை 10:00 மணி :-

திருக்கோயில் தெற்கு கோபுர வாயிலின் நேர் எதிரே உள்ள, பூசை படித்துறை தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளி காவிரி ஆற்றில் #ஆடி_அமாவாசை தீர்த்தவாரி!!

மதியம் 12:00 மணி :-

திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள, ஸ்ரீ அபீஷ்ட வரத மஹா கணபதி ஆலயத்தில் சுவாமி அம்பாள் #வெள்ளி_ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்குளத்தில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி!!
( அப்பருக்கு காட்சி கொடுத்த திருக்குளம்)

மாலை 6 மணி :-

திருவோலக்க மண்டபத்தில் திருக்கயிலாய பரம்பரை #தருமபுர_ஆதீன #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் எழுந்தருள, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் ஓதுவாமூர்த்திகள் மற்றும் இசைக்கலைஞர்கள் அப்பர் பெருமானுடைய பதிகங்களை பாராயணம் செய்தல்!!!

இரவு 8:00 மணி :-

பஞ்சமூர்த்திகள், தத்தமது வெள்ளி வாகனங்களில் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெறும்!!!

இரவு 8:30 மணி :- 

பஞ்சமூர்த்திகள், திருக்குளத்தின் அருகே இருக்கும், திட்டிவாசல் கோபுரம் அருகே எழுந்தருளல்!!
நாவுக்கரசப்பெருமான் பாடிய #மாதர்ப்பிறைக்கன்னியானை எனத் தொடங்கும் 11 தேவாரப் பாடல்களை அனைவரும் பாடல்,

இரவு 9:00 - 10:00 மணி :- 

இறைவன் அப்பர் பெருமானுக்கு  #திருக்கயிலைக்காட்சி அளித்தல்

இரவு 10:00 மணி :- 

தென்கயிலை, வடகயிலை வழியாக கயிலாய பிரகாரத்தில் வலம் வந்து கோபுர தரிசனம் முடித்து, பஞ்ச மூர்த்திகள், அப்பர் பெருமான், 63 நாயன்மார்கள் திருவையாறு நான்கு இராஜ வீதிகளிலும்,சிவகண வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா!!

"ஆரூரில் பிறந்தால் முக்தி, திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி "

    அப்பர் பெருமானோடு, சேர்ந்து நாமும், கயிலைக்காட்சியை தரிசித்து,  ஐயாறன் அடிக்கமலம் அடைந்திடுவோம்!!

"அனைவரும் வருக!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ ஐயாறப்பர் அருளை பெறுக!!"

வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் திருவையாறு சென்று கயிலை காட்சி பெருவீராக! இந்த கயிலை காட்சியை நாளைய பிரம்ம முகூர்த்தத்தில் கண்டு இன்புற அனைவரையும் அழைத்து மகிழ்கின்றோம். 

கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதனக் கண்டேன்!! 

குருவருளால் குருவின் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:- 

 நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

 திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023  - https://tut-temples.blogspot.com/2023/07/06082023.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html
சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

No comments:

Post a Comment